சாருவின் ‘முள்’- கோ. புண்ணியவான்

என் மனைவி மார்க்கெட் போனால் அவள் வாங்கிவரும் மீன்வகை திருக்கையும் சுறாவுதான். எனக்கு அந்த வகை மீன்களின் மேல் ஒவ்வாமை அதிகம். நான் முள் உள்ள மீன்களையே வாங்கி வருவேன். பிற மீன்கள்  போலல்லாமல் சமைத்ததும் திருக்கையிலும் சுறாவிலும் வழ வழப்புத் தன்மை அதிகரித்து மிக மிருதுவாகிவிடும். திருக்கை சுறா வகை மீன்களில் முள் அறவே இருக்காது. மாறாக  மென்மையான நடு எலும்பு மட்டுமே இருக்கும். அவள் வாங்கி வரும் அவ்விரு மீன் வகைகளால் எங்களுக்குள் பிரச்னை துவங்கிவிடும்.

ஒரு நாள் நான் என் மனைவியைக் கேட்டேன். “ஏன் முள் மீன்களை வாங்கிவராமல் பிடிவாதம் பிடிக்கிறாய்?” என்று.

“சின்ன பிள்ளையா இருக்கும் காணாங்கெலுத்தி மீன் முள் தொண்டையில் குத்தி மாட்டிக்கிட்டு ரெண்டு நாளா அவத்திப்பட்டேன், அன்னியிலேர்ந்து இந்த முள் மீன்களைத் தொடுவதில்லை என்று சபதம் எடுத்துக் கொண்டேன்” என்றாள்.

“அடிப்பாவி உன் சபதத்த ஏன் எம்மேல திணிச்சி என்னையும் சாப்பிடவிடாம செய்றியே” என்றேன்.

“போகப் போகப் பழகிரும், சாப்பிடுங்க” என்பாள். மனைவி சொல்லே மந்திரமில்லையா? எளவு பழகித்தான் போச்சி. ஆனாலும் முள்மீன்கள்தான் சுவையானவை. அதிலும் உடம்பெல்லாம் முள்ளாய் இருக்கும் உல்ல மீன்கள் மிகச் சுவையானவை. அவற்றுக்குள் முட்கள் பேன் சீப்பின் பற்கள் போலப் பின்னிக்கிடக்கும்.ஒவ்வொரு முறை வாயில் வைக்குபோதும் மிகக் கவனமாக நாக்கில் துழாவித் துழாவி நீக்கும் லாவகம் தெரியாதவர்கள் அந்த மீனை மறந்துவிடுவதே நல்லது. ஆனால் அதன் குழம்பு அலாதியான சுவை கொண்டது.

மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சனும் மீன் என்ற தலைப்பில் கதை எழுதியிருக்கிறார். தினசரி மீன் உணவே பரிமாறப்படுவதால் உண்டான வெறுப்பையும் சலிப்பையும் அங்கத தொணியில் சொல்லிச்சென்றார். அது பிரபஞ்சநின் முத்திரக் கதைகளில் ஒன்று.

சாருவின் முள் கதையைப் படித்தவுடன் இந்த நினைவளைத் தவிர்க்கமுடியவில்லை.

சாருவின் கதையிலும் முள் தொண்டையில் சிக்கி அவதிப்படும் ராஜா ஒரு மையக் கதாப்பாத்திரமாக வருகிறார். அப்பாத்திரமே கதையை நகர்த்துகிறது. பதினைந்து நாட்களாக  மீன் முள்ளோடு சிக்கித் தவிக்கிறான். கதையை வாசித்துக்கொண்டே போகும்போது தொண்டையில் சிக்கி அறுவிக்கொண்டிருப்பது உள்ளபடியே மீன்முள்தானா அல்லது வேறொன்றைச் சொல்ல அதனைப் பயன்படுத்துகிறார என்ற சந்தேகம் உண்டாகிறது. அவர் அந்த முள்ளை அவன் தொண்டையில் குத்தவைத்து அதனைக் குறியீடாக வைத்து அவனின் அலைக்கழிவை அழுத்தமாக சொல்லிச் செல்கிறார்.

சாருவின் இக்கதை இளம் வயதில் கதை சொல்லியான ராஜாவுக்கு உண்டான பாலியல் கிளர்ச்சியைச் சொல்கிறது. ராஜாவுக்கு வயது பதிமூன்று அல்லது பதினான்கு இருக்கலாம் என்றே நம்மை யூகிக்க வைக்கிறார். பதின்ம வயதினருக்கே இயல்பாக தொல்லைதரும் பாலுணர்ச்சி  பற்றிய அபிப்பிராத்தைச் சொல்வதன் வழி அவன் வயதைத் தோராயமாக பதின் மூன்று பதினான்குக்குள்தான் அடங்கும் என்று யூகிக்கத் தோணுகிறது. ராஜாவுக்குப் பெண் உடல் மீதான கூர்ந்த ஈர்ப்பை மையச் சரடாகக் கொண்டுள்ளது முள்.

அந்த ஈர்ப்பை மெல்ல மெல்ல கதையில் வளர்த்துச் செல்கிறார். ராஜா காய்ச்சல் கண்டபோது அவள் அவன் நெற்றியைத் தொட்டுப் பார்க்கிறாள் அவன் அத்தை. பின்னர் அவன் அவள் கைகளோடு கோர்த்து கரிசனம் காட்டுகிறாள். இந்த வகைத் தொடுதல்களால் அவனைப் பாலியல் உணர்ச்சியால் அலைக்கழிய வைக்கிறது என்று வாசகனுக்கும் மறைமுகமாக சொல்கிறார். ராஜாவின் அப்போது ‘இந்தத் திண்ணை இருட்டில் இப்படிக் கிடைத்த அத்தையின் இந்த அண்மைக்காக அப்படியே நான் எரிந்து போகவும் தயார்” என்று அவன் சிந்தனை கட்டுக்கடங்காமல் போவதை எழுதுகிறார். அத்தை உடல் மீதான பதின்ம வயதின் ஈர்ப்பை, அந்த ஈர்ப்பினால் அவனுக்கு உண்டான மனக்குழப்பத்தையும் நாம் புரிந்து கொள்கிறோம். இந்தச் சுயதொல்லையைத்தான் “தொண்டையில் குத்தி அறுவும் முள்” என்று சொல்கிறார் சாரு.

மிகவும் வெளிப்படையாகச் சொல்லாமல், ராஜாவின் உடல் மீதான அத்தையின் ஈர்ப்பையும் கதையில் ஆங்காங்கே  சில இடங்களில் வைக்கிறார். அவள் பதினைந்தே நாட்கள்தான் அவன் வீட்டில் இருக்கப்போகிறார். அந்த நாட்களில் அவள், அவன் வெளியே போவதைக்கூட விரும்பாமல் எந்நேரமும் தன்னுடன் இருப்பதையே விரும்புகிறாள். அவள் கணவன்கூட ராஜாவை வெளியே சுற்ற அழைத்துச் செல்வதைக் கூட அவள் அனுமதிக்கவில்லை. ”ராஜாவுக்கு உடல் சரியில்லை அது வராது” என்று அவள் சொல்லும்போது அவன் எந்நேரமும் தன் பார்வௌகுள்ளேயே இருப்பதையே விரும்புவதாகக் காட்டுகிறது. சாரு அத்தை பாத்திரத்தைப் படைக்கும்போது சாரு மிகக் கவனமாக சொற்களைக் கையாள்வதாகப் படுகிறது. அவள் ராஜாவை கரிசனத்தோடு அணுகுவதை பல சந்தர்ப்பங்களில் பார்க்கிறோம். அப்போதெல்லாம் அவள் அன்பை மட்டுமே சொரிகிறாள். ராஜாவின் உடல் மீது அவளுக்கு ஈர்ப்பு இல்லை என்று சொல்லவும் வாய்ப்பு உண்டு. ஏனெனில் ராஜாவை மிகச் சிறிய வயதிலிருந்தே அவள் அறிவாள். நீ யாரைத் திருமணம் செய்துகொள்வாய் என்று கேட்கும்போது நான் அத்தையைத்தான் கட்டிக்குவேன் என்று தன் விபரம் அறியாப் பால்ய வயதிலேயே சொன்ன சொல்லால் அத்தை அவன் மீது அளப்பரிய பாசத்தை காட்டுகிறாள் என்றும் எடுத்துக்கொள்ளலாம். அந்த இடங்களை மிக நுணுக்கமாகத் தொட்டுச் செல்கிறார் சாரு.

அத்தை அவன் வீட்டில் தங்கியிருந்த 15 நாள்களிலும் குத்திய முள் அறுவியபடி இருக்கிறது என்று எழுதும்போது ராஜாவின் அத்தையின் தேகம் மீதான ஈர்ப்பை அவதானிக்க வைக்கிறது. ஏன் குறிப்பாக அந்த 15 நாட்களுக்கு மட்டும் முள் அறுவவேண்டும் என்ற வாசகன் வினவே கதையைத் த்றந்து காட்டுகிறது.

நண்பன் பேபி அழைக்கும்போது ராஜாவுக்கு அவனோடு இணைந்து கொள்ள விருப்பமில்லாமல் அத்தையின் அணுக்கத்தையே பெரிதும் விரும்பி அவளோடு இருப்பதையே விரும்புகிறான். ஆனால் அந்த எண்ணம் பேபியின் முகம் பிதிபலிக்கும் தீவிரத்தினால்தான் அவனுடன் செல்லவேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகிறது. அந்த சீரியஸான முகத்தை பேபி காட்டியிருக்காமல் இருந்திருந்தால் ராஜா அத்தையுடன்தான் இருந்திருப்பான். அத்தையின் அணுக்கம் அக்கணத்தில் அவனுக்குத் தேவையாக இருந்தது.

முள் தொண்டையில் அறுவிக்கிட்டே இருக்கு என்று ராஜா பேபியிடம் சொல்ல , பேபி ஒரு வேளை ஒன்னோட பிரம்மையாகவும் இருக்கலாம் என்று சொல்லுமிடத்தில் சாரு அவனின் பாலியல் உண்ர்ச்சியால் தூண்டப்பட்டுக் கொண்டே இருப்பதை மறைமுகமாகச் சொல்லிவிடுகிறார். அத்தையும் மாமாவும் பதினைந்து நாட்கள் கழித்து தங்கள் ஊருக்குக் கிளம்பும் நேரத்தில், அத்தை அழுகிறாள்.

‘இப்ப உனக்குத் திருப்திதானே ராஜா… இவ்வளவுதான் நீ என்னத் தெரிஞ்சுக்கிட்டது…”

-எனக்கு என் மேலேயே வெறுப்பு ஏற்பட்டது. எவ்வளவு மென்மையான மனசைப் புண்படுத்தி இருக்கிறேன்’ என்று அத்தை சொல்லும்போது அத்தைக்கும் ராஜா உடல் மீதான ஈர்ப்பு இருந்ததோ என்ற எண்ணமும் எனக்கு உண்டானது. அவள் அப்படியொன்றும் வயதானவள் இல்லை. ராஜாவுக்கும் அவளுக்கும் பத்து வயது வித்தியாசம்தான். இயல்பாகவே ஆண்களைப் போல பெண்களுக்கும் தன்னைவிட இளம் வயது ஆண்களின் மேல் பாலியல் ஈர்ப்பு உண்டாவதை பல கதைகளில் வாசித்திருக்கிறோம். வாழ்வியல் நடப்பும் அவ்வாறுதான் இருக்கிறது. இங்கே சாரு இந்தக்கதையில் வரும் அத்தையின் போக்கு குறித்த உண்மையை உணர்ந்துகொள்ள வாசகனிடமே விட்டு விடுகிறார் என்று படுகிறது.

இது சாரு எழுதிய முதல் சிறுகதை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விடலைப் பருவத்தில் இயல்பாக உண்டாகும் அதீத பாலியல் தூண்டல் பற்றிய முதல் கதையே அபாரமாக வந்திருக்கிறது. அதனை விவாதத்துக்குரிய கதையாக்கி  தமிழ் இலக்கியத்துக்குள் அட்டகாசமாக நுழைந்த சாரு இன்றுவரை அதுபோன்ற வகைமை எழுத்தை கைவிடாமல் எழுதிவருகிறார். அவரின் இந்தப் போக்கு அவர் ஒரு வித்தியாசமான எழுத்தாளர் என்பதை நிரூபிக்கிறது. இம்முறை அவருக்கு வழங்கப்படும் விஷ்ணுபுர விருதுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

கோ.புண்ணியவான், மலேசியா.

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விழா-இன்றைய அமர்வுகள்
அடுத்த கட்டுரைமமங் தாய்- கடிதங்கள்