13 டிசம்பர் 2022 காலை நாகர்கோயிலில் இருந்து திருவனந்தபுரத்திற்கு நானும் ஷாகுல் ஹமீதும் என் காரில் கிளம்பினோம். ஷாகுல் காரை ஒட்ட பேசிக்கொண்டே சென்றோம். திருவனந்தபுரத்திற்கு ரயில் தவிர எப்படிச் சென்றாலும் எனக்கு தலைசுற்றும். இந்தியாவிலேயே நெரிசலான சாலை. அதை மேம்பாலம் கட்டி மேலும் நெரிசலாக ஆக்கிவிட்டிருக்கிறார்கள்.
திருவனந்தபுரம் மஸ்கட் ஓட்டலில் தங்குமிடம் ஏற்பாடு செய்திருந்தனர். மஸ்கட் நாடுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. 1919ல் திருவனந்தபுரத்தில் இருந்த பிரிட்டிஷ் ரெஸிடெண்ட் முதல் உலகப்போரில் பங்கேற்ற ராணுவ அதிகாரிகள் தங்குவதற்காகக் கட்டிய விடுதி இது. கர்னல் மஸ்கட் (Coloniel Mascot) பெயர் சூட்டப்பட்டது. பின்னர் திருவிதாங்கூர் அரசரின் விருந்தினர் மாளிகையாக இருந்தது. இப்போது கேரள சுற்றுலாத்துறையின் ஐந்து நட்சத்திர விடுதி.
சற்று பாழடைந்திருக்கும் இந்த கட்டிடத்தை 25 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கவிருக்கிறார்கள். (தி இந்து செய்தி) திருவனந்தபுரத்தின் பெருமிதங்களில் ஒன்றாக இந்த மாளிகை கருதப்படுகிறது.
சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுத்து ஐந்தரைக்கு கலாபவன் அரங்குக்குச் சென்றோம். அங்கே கல்பற்றா நாராயணன் வந்திருந்தார். அவருடனும் இயக்குநர் ரஞ்சித் (கேரள அரசின் திரைப்பட நிறுவனத்தின் தலைவர், திரைவிழாவை இந்த அமைப்பு நடத்துகிறது) ஆகியவர்களைச் சந்தித்தேன். நண்பர் சாம்ராஜ் வந்திருந்தார்.
விழாவில் பத்துநிமிடம் டி.பி.ராஜீவனைப் பற்றிப் பேசினேன். பின்னர் பாலேரி மாணிக்கம் ஒரு பாதிரா கொலபாதகத்தின்றே கதா சினிமாவை பார்த்தேன். நாவல் பலவகையான பகடிகள் கொண்டது. சினிமா நேரடியான குற்றப்புலனாய்வாக அமைந்திருந்தது. மூன்று கதாபாத்திரங்கள் நடுவே வேறுபாடு காட்டி நடித்திருந்தார் மம்மூட்டி.
ரஞ்சித் உறுதியான இடதுசாரி ஆதரவாளர். ஆனால் பாலேரி மாணிக்கம் இடதுசாரிகளை விமர்சிக்கும் நாவல், படமும் அப்படித்தான். 1956 ல் முதல் கேரள அரசு பதவிஏற்றபோது எப்படி அடித்தள மக்களின் கனவுகள் சிதைந்தன, எப்படி பழைய நிலப்பிரபுத்துவம் உருமாறி நீடித்தது என்றுதான் அந்தப்படம் பேசுகிறது. அதனால் ரஞ்சித்தை எந்த இடதுசாரியும் அங்கே வசைபாடவில்லை. அவருக்கு பதவி கிடைக்காமலும் இல்லை.
பாலேரி மாணிக்கத்தை இன்று தமிழில் எடுக்க முடியுமா? அதில் நிலவுடைமையாளர், அடக்குமுறையாளர், பெண்களைச் சூறையாடுபவர் ஓர் இஸ்லாமியர். ஹாஜியும் கூட. ஒடுக்கப்படும் மக்களின் சாதிப்பெயர்கள் சாதாரணமாக படம் முழுக்க வருகின்றன. தமிழில் ஒடுக்குமுறையாளராக பிராமணரை மட்டுமே காட்டமுடியும், அல்லது சாதியற்றவராகக் காட்டலாம். இல்லையேல் இங்குள்ள அரைகுறை அரசியல் கும்பல் கடித்து கீறி படைப்பாளியைச் சிதைத்துவிடும்.
கலைக்கு இருக்கும் சுதந்திரத்தை அனுமதிப்பதனால்தான் கேரளத்தில் இந்தியாவின் தலைசிறந்த திரைவிழா நிகழ்கிறது. திரைவிழாவில் தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு செல்வதுபோல கெட்டுகெட்டி நோன்பிருந்து தமிழ் சினிமா ரசிகர்கள் சென்று குவிகிறார்கள். இங்கே அப்படி ஒன்று நிகழமுடியாதென அவர்களுக்கு தெரியும்
படம் முடிந்ததுமே கிளம்பி தாகூர் தியேட்டருக்குச் சென்று இன்னொரு சினிமா பார்த்தோம். Triangle of Sadness . சுமாரான படம்தான். கலைப்படங்களுக்குரிய சுதந்திரத்தை பயன்படுத்தி கொஞ்சம் இலக்கு தவறி அலைந்தது. கலையின் ஒருமையும் முழுமையும் கைகூடாத உதிரிக் காட்சிகளின் தொகுப்பு, குழப்பமான முடிவு.ஆனால் மெல்லிய – ஆனால் நுட்பமற்ற – பகடி அதை பார்க்கச் செய்தது.
இன்றைய திரைவிழாக்களில் நல்ல படங்கள் அரிதாகிவருகின்றன. சென்ற ஆண்டு அருண்மொழி சென்று பதினெட்டு படங்களைப் பார்த்து பதினெட்டும் மட்கும்குப்பை என சொல்லி இவ்வாண்டு செல்லவேண்டாம் என முடிவெடுத்தாள்.
உலகளவிலேயே கலைப்பட இயக்கம் சோர்வுற்றிருக்கிறது. (நம்மூரில் ‘உலகசினிமா’ பார்ப்பவர்களாக சொல்லிக்கொள்பவர்கள் பார்ப்பதெல்லாம் மேலைநாட்டு வணிகப்படங்களைத்தான். நான் அவற்றைச் சொல்லவில்லை). உலகக் கலைப்பட இயக்கத்திற்கான பெருநிகழ்வுகளாக இருந்த கேன்ஸ், டோக்கியோ திரைவிழாக்களில் பெரும்பாலும் சுமாரான படங்கள் அரங்கேறுகின்றன. வெனிஸ், கார்லேவாரி பற்றி பேச்சே இல்லை. கேன்ஸ் திரைவிழாவில் வணிகசினிமா ஆளுமைகள் கொண்டாடப்படுகிறார்கள்.
பல காரணங்களில் முதன்மையானது சென்ற இருபதாண்டுகளாக உலக அளவில் இலட்சியவாதத்தின்மேல் விழுந்த அடி, அதன்விளைவான அவநம்பிக்கை. இன்று இருவகை சினிமாக்களே வருகின்றன. ஒன்று வழக்காமன இடதுசாரி அரசியல் கொள்கைகளை அப்படியே விழுங்கி அப்படியே கக்கும் படங்கள். எந்தவகை புதுமையும் அற்றவை. தனிப்பார்வை அற்றவை. மூன்றாமுலக அரசியல், பெண்ணிய அரசியல் என்றெல்லாம் எளிய முத்திரைகள் கொண்டவை. அந்த முத்திரைகளை மட்டுமே படைப்பில் தேடுபவர்களுக்கு அவை உதவலாம்.
அத்தகையவர்கள் இன்று உலகமெங்கும் கலையிலக்கியத்தில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். ஏனென்றால் சோவியத் வீழ்ச்சிக்குப் பின் இடதுசாரிகளை ஆபத்தானவர்களாக எந்த அரசும் கருதவில்லை. இடதுசாரித்தனம் என்பது ஒரு வகை எளிய ‘மோஸ்தர்’ மட்டுமாக ஆகிவிட்டது. ஆபத்தற்ற ஒரு பாவலா. பெரும்பணம் புழங்கும் உயர்கல்வி, உயர்கலாச்சாரத் தளங்களில் அந்த ஆடம்பரம் மற்றும் சுகபோகம் பற்றிய குற்றவுணர்வின்றி அவற்றில் திளைக்க அந்த பாவனை உதவுகிறது. ஃபைவ்ஸ்டார் ஹோட்டல் மார்க்ஸிஸம். காடாத்துணிச் சட்டை, தடித்த கண்ணாடி, தாடி, கலைந்த தலை,தோள்பையுடன் நட்சத்திரவிடுதிகளில் ஷாம்பேன் அருந்தியபடி பேசப்படுவது.
ஆனால் துரதிருஷ்டவசமாக இவர்கள் கல்வி, கலாச்சாரத் துறைகளை கைப்பற்றியிருப்பதனால் இவர்களுக்கு புரியும் எளிய முத்திரைகளுடன் வராத படைப்புகள் ஏற்கப்படுவதில்லை, அசட்டுத் தயாரிப்புகள் மேடையேறுகின்றன. உலகளாவிய கலையிலக்கியச் சரிவுக்கு இவர்கள் முக்கியமான காரணம்.
இன்னொரு வகை படங்கள் வன்முறை, காமம், உளச்சிக்கல் ஆகியவற்றைப் பேசுபவை. ‘கச்சாவான’ படங்கள். கலை என்றுமே கனவுகள், இலட்சியங்கள் சார்ந்தது. உயர் உணர்வுகளை நாடுவது. எதிர்நிலை கொண்ட கலை கூட அதன் உச்சத்தில் மானுடம்பேசுவதே. இன்று அவ்விழுமியங்கள் ஐரோப்பாவின் Snobbery சூழலில் மையப் பேசுபொருளாக இல்லை. விளைவாக வன்முறையும் காமமும் பகடியுமே பெரும்பாலான படங்களில் உள்ளன. ரசிகனை அதிர்ச்சிக்குள்ளாக்கும் கொடூரச் சித்திரங்கள். அவை நிறையவே இணையத்தில் கிடைப்பதனால் அதிர்ச்சி உருவாவதுமில்லை.
உலகு பிரம்மாண்டமானது, விரிந்து பரவிய உலகப் பண்பாட்டுவெளியில் இருந்து ஐரோப்பாவின் சோர்வுச்சூழலை நிகர்செய்யும் புதுமையான படைப்புகள் வரலாமே என்று கேட்கலாம். வருவதில்லை. காரணம், இன்றைய கலைப்பட இயக்கமே ஐரோப்பாவை மையமாக்கியது. ஏற்பு ஐரோப்பாவில் இருந்தே வரவேண்டும். உள்ளூரில் அதற்கு பார்வையாளர்களே இல்லை. ஐரோப்பிய வரவேற்பு மட்டுமே ஒரு கலைப்படத்திற்கு மதிப்பை உருவாக்கும். முதலீட்டையும் திரும்பத் தரும். ஆகவே உலகமே ஐரோப்பாவுக்காக சினிமா எடுக்கிறது. கொரியாவானாலும் சரி, ஜப்பான் ஆக இருந்தாலும் சரி, இந்தியாவாக இருந்தாலும் சரி. ஆகவே அவற்றில் வெளிப்படுவது ஐரோப்பிய ரசனைதான்.
இந்த எல்லைகளைக் கடந்து கலை செல்லவும்கூடும். கலைக்கு எப்போதுமே அந்த மீறல்தன்மை உண்டு. அத்தகைய படங்கள் நிகழும் தருணங்களையே சலிக்காமல் எதிர்பார்க்கிறோம். 2018 திரைவிழாவில் பார்த்த ரோமா (Roma) ஆகா (Aga ) ஆகிய படங்கள் அத்தகையவை. இம்முறை அத்தகைய அரியநிகழ்வுகள் ஏதும் நிகழ்ந்தனவா என்று தெரியவில்லை.
இரவு 1130 க்கு ஓட்டலுக்கு வந்தேன். அங்கே கேரள தொழில் வளர்ச்சித்துறை உயரதிகாரி உமேஷ் இ.ஆ.ப (N.S.K.Umesh I.A.S) வை சந்தித்தேன். சிலநாட்களுக்கு முன்புதான் அறம் வாசித்ததாகச் சொன்னார். அவருடைய மனைவி விக்னேஸ்வரிதான் கேரள சுற்றுலாத் துறை இயக்குநர்.
காலை எழுந்ததுமே திரும்ப நாகர்கோயில் கிளம்பிவிட்டோம். கே.பி.வினோதின் படப்பிடிப்பு அரங்குக்குச் செல்லலாம் என நினைத்தோம். ஆனால் அவர் இன்று சாலையில் காரில் இருந்தபடி படப்பிடிப்பை நடத்துவதாகச் சொன்னார். ஆகவே திரும்பி நாகர்கோயில்.