அ.வெண்ணிலா, தமிழ் விக்கி
அன்புள்ள ஜெ,
அ.வெண்ணிலாவின் எழுத்துக்களை ஒட்டுமொத்தமாக வாசிப்பதற்கான ஒரு வாய்ப்பு இந்த விஷ்ணுபுரம் விருதை ஒட்டி அமைந்தது. அவருடைய எழுத்திற்கு உரிய ஒரு தனிச்சிறப்பைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இது வேறெவரையும் offensive ஆகச் சொல்வதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
நான் அக்காடமிஷியன். எனக்கு தெரிந்து இன்றைய எழுத்தின் மிகப்பெரிய சிக்கலே அகடமிக் ஆக ஒரு definition எல்லாருக்கும் அளிக்கப்பட்டுவிடுகிறது என்பதும் வாசகன் அதைவிட்டு வெளியேபோக மிகவும் கடினம் என்பதும்தான். இலக்கியவிழாக்கள், ஏராளமான ஆய்வுக்கட்டுரைகள் வழியாக இந்த விஷயம் நடைபெறுகிறது. நான் பணியாற்றும் பல்கலை முழுநேரமாக இதையே செய்துகொண்டிருக்கிறது.
நல்லவேளையாக தமிழ்நாட்டில் இது கொஞ்சம் கம்மி. தமிழ்ப்பல்கலையில் இருந்து இதேபோல சமகால எழுத்தாளர்கள் மீது defining and limiting process எதுவும் நிகழ்வதில்லை. அந்த அளவுக்கு எவரும் எழுதுவதில்லை. அவர்களின் அகடமிக் கேரியரின் பாகமாக ஒரு சில ஆய்வெடுகள் எழுதப்படும். அதெல்லாம் அந்த டெம்ப்ளேட்டிலேயே இருக்கும். அதன்பிறகு ஒன்றும் எழுதமாட்டார்கள். எவரும் அதையெல்லாம் படிப்பதுமில்லை. நவீன இலக்கியம் சார்ந்து பல்கலைகளில் பெரிதாக ஒரு ஆக்டிவிட்டியும் நடப்பதுமில்லை.
ஆனாலும் இந்த கட்டாயம் சூழலிலே உள்ளது. குறிப்பாக இந்திய அளவிலோ வெளிநாடுகளிலோ இலக்கியக் கருத்தரங்குகளுக்குச் செல்லும் எழுத்தாளர்களுக்கு இந்த டெம்ப்ளேட் அபாயம் உண்டு. இது சீனாவில் லோட்டஸ் ஃபூட் வைப்பது மாதிரி விசயம். காலை உயிருடன் இரும்புச்செருப்புக்குள் போட்டு வளர்ச்சிகுன்ற வைத்துவிடுகிறார்கள். அதையே அழகு என்று சொல்லி நம்பவும் வைத்துவிடுகிறார்கள். குறிப்பாக பெண் எழுத்தாளர்கள், தலித் எழுத்தாளர்களுக்கு இந்த அபாயம் அதிகம். முற்போக்கு எழுத்தாளர்களுக்கும் உண்டு இந்த மருந்து.
இதனால் ஒரு பெண் எழுதவந்ததுமே பெமினிச முத்திரை வந்துவிடும். அதன்பின் அதைத்தான் எழுதியாகவேண்டும். எல்லா அரங்கிலும் அதையே சொல்லியாகவேண்டும். வேறு எதையும் சொல்லமுடியாது. இந்த கட்டாயத்தை பல பெண் எழுத்தாளர்கள் ஒரு பிரிவிலேஜ் ஆக எடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் சொல்வதையே எழுதினால் பேரும் புகழும் கிடைக்கிறதே. பிறகு ஏன் வேறுமாதிரி எழுதவேண்டும்? தமிழில் எழுதும் பெண் எழுத்தாளர்கள் அத்தனைபேருமே இந்த Snare களிலே சிக்கியவர்கள்தான். என் பார்வையில் தமிழிலே சிறந்த எழுத்தாளர்களிலே ஒருவரான அம்பைகூட இந்த சிக்கலிலே மாட்டிக்கொண்டவர்தான். அது armour என நினைக்கிறார்கள். அது cage என்று தெரிவதில்லை.
இந்தச் சூழலில் அ.வெண்ணிலா தனித்து நிற்கிறார். அவரும் முற்போக்கு முகாமிலேதான் இருக்கிறார் என நினைக்கிறேன். ஆனால் அவர் எழுத்து அதிலே சிக்கிக் கொள்ளவில்லை. அவருடைய தேடல்கள் எல்லா பக்கமும் இருக்கின்றன. கங்காபுரம் மாதிரி ஒரு வரலாற்றுநாவலை எழுதுகிறார். அது சோழர்வரலாற்றுக்குள்ளே செல்கிறது. அதிலுள்ள சாகசம், டிராமா எதையும் கவனிக்காமல் அன்றிருந்த அரசியல்நுட்பங்களுக்குள்ளே செல்கிறது. அது சாதாரணமாகப் பெண்கள் எழுதும் இலக்கியம் அல்ல. உடனே சாலாம்புரி சமகால அரசியலுக்குள்ளே செல்கிறது. trap politics அரசியலின் முகங்களை பேசுகிறது. இப்படி அவருடைய புனைவுகள் சுதந்திர்மாக உள்ளன.
அதேமாதிரி அவருடைய ஆய்வுகளும். தேவரடியார் வாழ்க்கை பற்றிய ஒரு ஆய்வு. இன்னொரு ஆய்வு நீரதிகாரம். அது இன்னொரு பகுதி. ஆய்வுகள், நூல்பதிப்புகள் என்று ஒரு முழுமையான அறிவுஜீவியாகவே செயல்படுகிறார். இந்த தளத்திலே இன்றைக்கு தமிழில் செயல்படும் எழுத்தாளர்களே இல்லை. ஆச்சரியமான ஒரு தீவிரம் இது. அவருடைய எழுத்துக்களுக்கு வாழ்த்துக்கள்
ஸ்ரீனிவாஸ்
விஷ்ணுபுரம் விருந்தினர்-1: அ.வெண்ணிலா
விஷ்ணுபுரம் விருந்தினர்-2. கார்த்திக் புகழேந்தி
விஷ்ணுபுரம் விருந்தினர் 3- அகரமுதல்வன்
விஷ்ணுபுரம் விருந்தினர்-4- கார்த்திக் பாலசுப்ரமணியன்
விஷ்ணுபுரம் விருந்தினர்-6, கமலதேவி
விஷ்ணுபுரம் விருந்தினர்- 6,விஜயா வேலாயுதம்
விஷ்ணுபுரம் விருந்தினர்: 7 குளச்சல் மு யூசுப்