நட்சத்திரவாசிகள், ஒரு வாசிப்பு

உலகமயமாக்கலுக்கு பின்னர் வேலைவாய்ப்பின்மையின் வீதம் பெரிதும் குறைந்துவிட்டதன் விளைவாக,நம் மக்கள் எதிர்கொண்டது மெல்லிய பணவீக்கத்தை.பல்வேறு வித வேலைவாய்ப்புகள் தோன்றியது, பொருளியல் ரீதியாக மக்களை தேற்றினாலும் அதனுடனே அத்தியாவசிய பட்டியலில் பல விஷயங்களும்,பொருட்களும் சேர்ந்து கொண்டன. பொருளாதார மேம்பாடு அடைய கல்வியை கருவியாக பயன்படுத்த தொடங்கிய நம்மக்கள்,அதிகாரத்தை எட்ட உதவும் நோக்கிலும் மிக விரைவாக கல்வியை நகர்த்த தொடங்கினர்.வர்க்க முன்னேற்றம் அடைய கல்வி பயன்படுத்தியது சற்றே பின்னே தள்ளப்பட்ட காலத்தில் வாழ்வதாக நாம் இந்த காலத்தை வரையறுக்கலாம் என்று நினைக்கிறேன்.

பிரபலமாக இருக்கக்கூடிய எதுவும் முன்முடிவுகளுக்கு இடமளிப்பதாகத்தான் இருக்கும். சினிமா, மருத்துவம் என்று பட்டியலிட்டால் மிக நிச்சயமாக தகவல் தொழில்நுட்பத்துறையும் வரும்.அது சூழலில்  ஏற்படுத்தி தாக்கம் என்பது சற்றே பரந்துபட்டது.தோராயமாக ஒரு இளைஞனை அழைத்து பேசினால் கூட மிக நிச்சயமாக அவனுக்கு இத்துறை சார்ந்த நெருங்கிய உறவுகள் யாராவது இருப்பார்கள்.பல்வேறு விதமான வாழ்க்கை சூழலை சார்ந்தவர்கள் சேரும் களமாக இருக்கிறது அத்துறை.அதனாலேயே பல வேறு விதமான வாழ்க்கை முறையை கொண்டயிடமாகவும் அது இருக்கிறது.தமிழ் சமூகத்திற்கு சற்றே விலகிய மக்களையும் அவர்களின் பழக்க வழக்கங்களை இங்கிருந்து எட்டி பார்க்கும் மக்கள் பலவிதமான அகச்சலனங்களை அடைவதை நாம் பார்க்கிறோம்.சிலர் காழ்ப்படைவதும்,அத்துறை சார்ந்த முன்முடிவுகள் உள்ளவர்கள் அதை பற்றின மேலதிகமான பதின்ம கனவும் கொண்டிருப்பதையும் நாம் பார்க்கலாம்.ஊடகம் இதற்கு முக்கிய காரணம் என்று நினைக்கிறேன்.முக்கியமாக சினிமா.

கார்த்திக் பாலசுப்பிரமணியத்தின் இந்த நாவல் தகவல் தொழில்நுட்பத்துறையை பாடுபொருளாக கொண்டிருத்தாலும்,மேலே சொன்ன உலகமயமாக்கல்,கல்வி, நவீன வாழ்க்கை முறை ஏற்படுத்தும் சிக்கல் போன்றவற்றையே அதிகம் பேசுகிறது அல்லது இதை பேசாமல் அவர்களின் வாழ்க்கையை முன் வைக்க முடியாது.நாவலின் தொடக்கத்தில் வரும் ஸ்விகி இளைஞன் தொடங்கி,டெக்சி ஓட்டுனர்,செக்யூரிட்டி என்று இக்கால நெருக்கடியின் மக்களே சூழலை வரைய நாவலாசிரியரால் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.பெருவாரியான பாத்திரங்கள் தமிழ் சமூகத்தை சேர்ந்தது தான்.இதனால் செய்தி தாளில் இடம் பெரும் சம்பவங்களை விடுத்து வலுவான பிரச்சனைகளே வருகிறது.

சிறு சிறு பாத்திரங்களும் அதனதன் வாழ்வில் ஒரு நவீன சிக்கலில் இருக்கிறது.பால்குடி மறவாத குழந்தையை அலுவலகத்தின் கிழே காப்பகத்தில் விடுகிறது ஒரு பாத்திரம்.திட்டமிடாமல் தங்கிய கருவை அணுகுவது பற்றி குழம்பும் பாத்திரம்.மேலதிமான நுகர்வில் உள்ள சிக்கல் என்று பெரும்பாலன பாத்திரங்களின் சிக்கல்கள் புறவயமாக ஆசிரியரியரால் வகுத்தளிக்கப்படுகிறது.ஒருகணம் இந்த நூற்றாண்டின் நாவலாக மட்டுமே இது இருப்பது வெளிபடையாக தெரிகிறது.தத்துவ வீழ்ச்சியையோ, அறவீழ்ச்சியையோ பாடுபொருளாக கொண்ட நாவலை இப்போது கற்பனை செய்வதில் உள்ள அடிப்படை தடைகளில் ஒன்று, அவகளுக்கான தற்காலிக விடுதலையை கோரும் பல வஸ்துகள் நம்மை சுற்றியே சதா காலமும் இருக்கிறது.தன் வாழ்விலிருந்தே வாரம் ஒரு முறையாவது வெளிவரும் மக்களாக தான் இந்த பாத்திரங்களை நாம் புரிந்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

நாவலின் தொடக்கத்தில் கடந்த கால நினைவின் தாபத்தில் உழலும் பாத்திரங்கள் வருகிறது.கடந்த காலத்தை ஒரு பொற்காலமாக கற்பிதம் செய்யும் மனச்சாய்வு கொண்டவர்களாக இருக்கிறார்கள்.உண்மையில் அவர்கள் கடந்த காலத்திலும் அவ்வளவு மகிழ்ச்சியாக வாழ்வை வாய்த்தவர்களாக இருக்கமுடியாது.கடந்த கால பிடிமானம் என்ற பாவனை. நாவலின் தொடக்கத்தில் கார் ஓட்டுனர் தாய்நிலமான தஞ்சையை கற்பனை செய்வது இதற்கு நல்ல உதாரணம்.

முதல் பத்து அத்தியாயங்களில் வரும் பாத்திரங்கள் அனைத்துமே இதே நினையில் தான் இருக்கிறது.பதினான்காவது அத்தியாத்திலிருந்தது தான் நாவலில் தன்னை கண்டறிய தொடங்குகிறார் ஆசிரியர்.அதற்கு பின்னான அத்தியாயங்கள் அனைத்திலும் உள்ள கூர்மை, முற்றுப்பெறாத பாத்திர உணர்நிலைகள் என்று நாவல் வலுபெர தொடங்குகிறது.வலுவான தத்துவார்த்த தளத்தை எட்ட தொடங்கிய தருணம் அதற்கு பின்னர் தான் வருகிறது.உதாரணமாக அங்கிகாரத்தை பேசக்கூடிய அத்தியாயங்களான நித்திலனின் ஆரம்ப கால கதை.வேணுகோபால் சர்மாவுடன் – அங்கிகாரம்(நாற்காலி) மறுக்கப்படுவதும் மீண்டும் மூன்று மாதங்கள் கழித்து வரும்போது அளிக்கப்படுவதும்.

அதிகாரத்திற்கு அடிபணிய நேரும் மனங்கள் தன்னிலையை உதாசீனம் செய்ய பழக என்னென்ன பாவனைகள் செய்யவேண்டும் என்பதை கிட்டதட்ட ஒவ்வொரு பாத்திரமுமே தெரிந்து வைத்திருக்கிறது.இயல்பு என்று ஏற்றுக்கொண்டு நகரும் பாத்திரங்கள் தமிழ் உலவியிலை கீறி காட்டுகிறது.

சாஜு என்ற பாத்திரம் ஒரு கட்டத்தில் அதில் தோற்றுவிடுவதை நாவல் கண்டடைகிறது.அவன் அக உரையாடல் மேலதிகமான அதிகாரத்தை ‘இயல்பு’ என்று ஏற்றுக்கொள்ள முயற்சி செய்து தோற்கும் போது “நடைமுறைக்கும் இயல்புக்கும் ” உள்ள இடைவெளி ஒரு வகையில் வெடிக்கிறது.அதாவது தான் என்ற தன்னிலையை மெல்ல வளைக்க முயற்சி செய்வது நடைமுறை.வளைய முடியாமை இயல்பு.

இயல்பாமவே இலக்கிய பிரதியில் ஒரு அம்சம் மீண்டும் வருகையில்  அது முன்னர் வந்தது போல் இருக்காது.வேணுவிடம் சாஜூ வேலையிழக்கும் போது சொல்லும் அதே வரிகளை பின்னர் வேணு ஸ்ரீபனிடம் சொல்லும் போது ஏற்படக்கூடிய நிதர்சனம் முன்பு இல்லாதது.

நவீன குடும்ப அமைப்பு எதிர்கொள்ளும் சிக்கல்கள் நாவலில் விரிவாக பேசப்படுகிறது.பொருளியல் ரீதியாக குடும்ப அமைப்பு, தருவதும் கேட்பதும் தொடர்ந்து மாறியவண்ணம் இருப்பதால்,பலிகெடாவை  வாங்கிய வண்ணமே அது உள்ளது.இதற்கு காதல் திருமணம் செய்து கொண்ட சாஜூவும் , நிச்சயத்திருமணம் செய்த நித்திலனும் ஒன்று தான்.

நாவலின் பலவீனம் என்பது உறவு சிக்கல் தான் என்று தோன்றுகிறது.வண்ணங்கள் மாறினாலும்,அதன் இருப்பும்,சாரமும் ஆசிரியரின் மெனகெடலை காட்டுகிறது.அங்கு வெளிப்படக்கூடிய ஆழம் சற்றே நயந்துகொண்டும், துறுத்திக்கொண்டும் தெரிகிறது.

உருவகங்களும், படிமங்களும் வாசிப்பை மேலதிக இடத்திற்கு இட்டு சென்றாலும் கூட, நாவலின் கால எல்லை ஆதார கேள்விகளை வலுகுன்ற செய்கிறது.அதாவது சேவைதுறைகள் இல்லாமல் ஆகும் ஒரு காலம் வரும் என்றால், அது நாவலின் பெறுமானத்தை நிச்சயம் கேள்விக்கு உட்பட்டதாக்கும்.

நாவல் வாசித்து சில மாதங்கள் கழித்த பின்னர் சென்னையில் ஒரு முக்கிய மாலிற்கு செல்ல நேர்ந்தது.சினிமா மற்றும் காட்சி ஊடகங்கள் வழியாக அறிமுகமாகியிருந்தது அச்சூழல்.திடுக்கிடும்  ஓர் உண்மையா சொல்லியது.உள்ளே வந்தது முதல் உணவு மேசைகளின் அணி வகுப்பு வரை எங்கும் என் கண்ணில் அகப்பட்டதே ஒன்றேதான்.சிறுவர்கள்/சிறுமிகள்.முதல் நிலையை தாண்டாத மழலைகள்.அவர்களுக்கு உணவு ஊட்டும் தாய்மார்கள், இருகிய ஜீன்சும், டீ – சர்ட்டுமாக.பணிபுரியும் பெண்கள்.குழந்தைகளை வார இறுதியில் வைத்து மேய்க்க முடியாது, மாலுள் சரணாகதியாகியவர்கள்.’நட்சத்திரவாசிகள்’ என்று சொல்லிக்கொண்டேன்.

அ. க. அரவிந்தன்.

விஷ்ணுபுரம் விருந்தினர்-1: அ.வெண்ணிலா

விஷ்ணுபுரம் விருந்தினர்-2. கார்த்திக் புகழேந்தி  

விஷ்ணுபுரம் விருந்தினர் 3- அகரமுதல்வன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-4- கார்த்திக் பாலசுப்ரமணியன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-6,  கமலதேவி 

விஷ்ணுபுரம் விருந்தினர்- 6,விஜயா வேலாயுதம் 

விஷ்ணுபுரம் விருந்தினர்: 7 குளச்சல் மு யூசுப்  

விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்.போகன் சங்கர் 

 

முந்தைய கட்டுரைஅ.வெண்ணிலா, ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைசாரு பற்றி, லட்சுமி சரவணக்குமார்