பனியும் பண்படலும் – கடிதம்

பனிநிலங்களில் -8

பனிநிலங்களில்- 7

பனிநிலங்களில்-6

பனிநிலங்களில்- 5

பனிநிலங்களில்-4

பனிநிலங்களில் -3

பனிநிலங்களில்- 2

பனிநிலங்களில்- 1

அன்புள்ள ஜெ,

நெடுநாட்களுக்குப் பிறகு பயணக் கட்டுரை. உற்சாகமாக இருந்தது. நார்டிக் நாடுகள், ஸ்காண்டிநேவிய நாடுகள் என்றெல்லாம் அழைக்கப்படும் ஸ்வீடன், டென்மார்க், பின்லாந்து மற்றும் நார்வே இவ்வுலகின் பிற நாடுகளில் இருந்து மானுட சிந்தனை பரிமாணங்களில் பன்மடங்கு முன்னே சென்றவை. இந்நாடுகளில் இருக்கும் தனிமனித வெளி என்பது உலகில் வேறு எங்கும் காணக் கிடைக்காதது. அதே போன்று பணம், உழைப்பு போன்று நம்மை ஓட வைத்துக் கொண்டிருக்கும் வஸ்துக்களைப் பற்றிய அவர்கள் பார்வையும் தனித்துவமானதே. நான் பார்த்த வரையில் குழந்தைகளுக்கு இப்பிராந்தியங்களில் கிடைக்கும் சுதந்திரம் அபரிமிதமானது. என் மகன் ஐந்து வயதாக இருக்கையில் நார்வே சென்றிருந்தோம். தலைநகரான ஆஸ்லோவில் இருந்து எட்டு மணி நேர பயணத் தொலைவில் இருந்த ஒரு மிக மிகச் சிறிய கிராமத்தில் தங்கியிருந்தோம். நாங்கள் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் அவரின் தினப் பயன்பாட்டிற்காக சற்றே பெரிய படகு வைத்திருந்தார். அதில் அவ்வூரின் ஃப்யோர்ட் என்றழைக்கப்படும் நீர்நிலையோடு ஒரு பயணத்தையும் அவர் ஏற்பாடு செய்திருந்தார். என் மகன் தானும் அந்த படகை செலுத்த விரும்புவதாக சொன்னான். ஆம், விருப்பை வெளிப்படுத்தினான், அவ்வளவே. அடம் பிடிக்கவில்லை, அழுது கேட்கவும் இல்லை. சும்மா கேட்பது போல் கேட்டான். அவர் உடனேயே அவனை அழைத்து சுக்கானை இயக்கச் சொல்லிவிட்டார். சற்று நேரம் சென்று பார்க்கையில் என் மகன் தனியாக படகை செலுத்திக் கொண்டிருந்தான். அவர் அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்து அவனுடன் பேசிக் கொண்டிருந்தார். அதிர்ச்சியுடன் அவரை பார்த்தேன். பார்வையைப் புரிந்தவராக ‘அவன் பொறுமையாக, பக்குவத்துடன் செலுத்துகிறான். எனவே நான் சற்று ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறேன்’, என்றார். என் மகன் முகத்தில் அன்று தெரிந்த மலர்வை, உடலில் வெளிப்பட்ட தன்னம்பிக்கையை இந்தியாவில் இன்று வரை மீண்டும் என்னால் கொண்டு வர இயலவில்லை. நானும் அவனை நம்பி காரை இன்னமும் கொடுக்கவில்லை. (அது இங்கே சட்டப்படி தவறு என்பதால் அல்ல என்பதை புரிந்து கொள்ளபவரே நல்ல இலக்கிய வாசகர்!!)

பனி அவர்களை மொத்தமாக வடிவமைக்கிறது எனலாம். இங்கே பிறப்பு விகிதம் குறைவு, எனவே குழந்தைகளுக்கு அவ்வளவு மரியாதை. இந்நாடுகளில் நகரங்கள் குறைவே. நகரங்களுக்கு வெளியே மக்கள் அப்பெரும் பனி நிலங்களில் சிதறி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நார்வேயில் நாங்கள் தங்கியிருந்த கிராமத்தில் மொத்தமே எட்டு வீடுகள் தான். அவற்றில் நான்கில் மட்டுமே மனித வாசம். ஊரின் மக்கட்தொகை எட்டு. ஆம், எட்டே பேர் கொண்ட ஒரு ஊர்.  நான் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் எங்களிடம் எந்த சாவியையும் தரவில்லை.  கேட்டதற்கு வீட்டை பூட்டும் வழக்கம் இல்லை என்றார். அனைத்தும் திறந்த மடம் தான். ஏனெனில் தாங்கள் இல்லாத சமயத்தில் வீட்டிற்கு யாரேனும் வருகை தந்தால் அவர்கள் அனாவசியமாக குளிரில் வெளியே நிற்க வேண்டுமே. அது மிகக் கடினம் என்பதால் அவர்கள் உள்ளே வந்து இருக்க ஏதுவாக பூட்டுவதில்லை என்றார். புரிந்தாலும் மண்டைக்கு உறைக்க கொஞ்சம் தாமதமானது.

அந்த பனிக்கு உடலில் வெப்பத்தை தங்க வைக்க ஊனுணவும், மதுவும் தேவை. பனி அவர்களை ஒன்றிணைக்கிறது. தங்கி வாழ ஒருவருக்கொருவர் உதவியாக வேண்டிய சமூக ஒத்துழைப்பை உத்தரவிடுகிறது. உடல் உழைப்பைத் கோரும் பணிகளை எந்திரங்களால் நிறைவேற்ற அவர்களை முடுக்குகிறது. அவர்களின் உணவு, உடை, உறைவிடம் துவங்கி உறவு, உழைப்பு, உலகியல், ஆன்மீகம் என அனைத்தையும் வடிவமைப்பது பனியே. இன்றும் தானியங்கமாக்கலில் புதுப்புது உத்திகளை, சிந்தனைகளை முன்வைப்பதில் உலகின் முன்னணி நாடுகள் இவையே.

இப்போது இவை தங்கள் மறைந்த பண்பாட்டை, குறிப்பாக வைக்கிங் பண்பாட்டை மீட்டெடுக்க பெரு முயற்சிகளை செய்து வருகின்றன. அதன் ஒரு பகுதியே அந்த மரக்கலத்தைமுழுமையா கடலடியில் இருந்து எடுத்து கண்காட்சி ஆக்கியதும், தோர், ஓடின், லோகி என அவர்களின் தெய்வங்களை அவெஞ்சர்கள் ஆக்கியதும்‌.  நீங்கள் கூறியது போன்று தங்கள் வெற்றிகளை மட்டுமல்லாது தோல்விகளையும் தயங்காமல் முன்வைத்தமை அவர்களை வெற்றி, தோல்வி பற்றி கவலைப்படாமல் புதுமைகளை செய்யத் தூண்டிக் கொண்டேயிருக்கிறது.

இதற்கு நேர் மாறான மறுமுகமும் அவர்களுக்கு உண்டு. பனி எந்த அளவு அவர்களிடையே ஒருங்கிணைவைக் கோருகிறதோ அதே அளவு அவர்களிடையே விலக்கத்தையும் அளிக்கிறது. அவர்கள் பொதுவாக தனியர்கள். மன அழுத்தம் என்பது அங்கு சாதாரணமான ஒன்று. மது விடுதிகளில் சற்று கூடுதலாக குடித்தால் கூட தற்கொலை மனநிலை இருக்கிறதா என பார்ப்பார்கள். இங்கே வெயில் பொழியும் இந்தியாவில் இருந்து செல்பவர்களுக்கு இந்த சிக்கல்கள் எல்லாம் இல்லை. அதிலும் குறிப்பாக மீண்டும் இந்தியா வந்து விடுவோம் என்ற மனநிலையில் வெளிநாடு செல்பவர்களுக்கு இந்த நாட்கள் எல்லாம் சற்றே நீண்ட விடுமுறைக் காலம் போலத் தான் தோன்றும். எனவே இயல்பாகவே ஒரு கொண்டாட்ட மனநிலை கூடி விடும். ஆனால் அங்கிருப்பவர்களுக்கு இது தனிமையின் காலம். தனிமை இன்னமும் அவர்களின் ஆதி உணர்வான வேட்டை மனநிலையை கூர்மையாகவே வைத்திருக்கிறது.

மிக நீண்ட, ஒளியின்மையால் நிறைந்த, பனியால் உறைந்த காலத்தின் பின்விளைவு அது. ஆம் பனி அங்கு காலத்தை கூட உறைய வைக்கும். காலத்தை ஒரு கல்லென தொட்டுவிடலாம் எனத் தோன்ற வைக்கும். உறைந்த காலம் மானுட மனதையும் அசைவின்மை நோக்கித் தள்ளுகிறது. ஆடும் சுடரை அசையாமல் ஆக்கி ஊழ்கம் பயின்ற நம் மண்ணின் ஆன்மிக முதிர்வு இங்கே மலரும் முன்பே கிறித்தவம் காலூன்றி விட்டது. எனவே இன்று அந்த அசைவின்மை அவர்களின் வேட்டையின் போது கைகூட வேண்டிய பொறுமை என்ற அளவிலேயே தேங்கி விட்டது. நார்டிக் நாடுகளில் இன்றும் வேட்டை ஒரு முக்கியமான தொழில், பொழுதுபோக்கு. ஒவ்வொரு வருடமும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் டென்மார்க்கின் ஃபரோய் தீவுகளின் ஆழமில்லா கடற்கரையில் நிகழும் திமிங்கில வேட்டை மிகவும் புகழ்பெற்றது. (இன்று விலங்கு ஆர்வலர்களிடமிருந்து மிகப் பெரிய கண்டனங்களையும், கடுமையான எதிர்ப்புகளையும் பெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்வும் கூட.) ஃபின்லாந்து ஐரோப்பாவிலேயே மிக அதிக வேட்டையாடுபவர்களைக் கொண்ட நாடு.

நீங்கள் கூறிய மற்றொரு கருத்துடனும் நான் முழுமையாக ஒத்துப் போகிறேன். பல முறை வெவ்வேறு நாடுகளுக்குச் சென்று இந்தியா மீண்டவன் என்ற முறையில் நான் சென்று குடியேற விரும்புவதும் இந்நாடுகளில் ஒன்றில் தான். இங்கே தன்னறத்தைக் கண்டுகொண்டவர்கள் முழுமையான நிறைவுடன் வாழ முழு வாய்ப்பும் இருக்கிறது. உங்களுடன் இவ்வுலகில் எங்கேனும் ஒரு பயணம் மேற்கொள்ள வேண்டுமென்றால் நார்வேயில் நான் தங்கிய அந்த மலை கிராமத்தையே தெரிவு செய்வேன். காலம் கைகூடட்டும். நெடுநாட்களுக்குப் பிறகு பனியுடனான என் நினைவுகளை அசைபோட வைத்தமைக்கு நன்றி.

என்றும் அன்புடன்,

அருணாச்சலம் மகராஜன்

முந்தைய கட்டுரைஇன்னொரு சினிமா பேட்டி
அடுத்த கட்டுரைஸதீநாத் பாதுரியின் விடியுமா? – வெங்கி