சாரு நிவேதிதா ஏன் இப்படி  எழுதுகிறார் ?- அனீஷ் கிருஷ்ணன் நாயர்

(அ)

சில நாட்கள் முன்பு “பிரியாணி” என்ற மலையாள திரைப்படத்தை பார்த்தேன். The Great Indian kitchen அளவிற்கு ஊடக வெளிச்சத்தை பெறாத திரைப்படம். திரைப்படத்தின் கருப்பொருள் மற்றும் கதாபாத்திரங்களின் பின்னணி ஆகியவை நமது அறிவு ஜீவிகள் பலருக்கும் ஒவ்வாமையை தருவதாக இருந்ததால் இத்திரைப்படத்தை குறித்து சமூக ஊடகங்களிலும் பெரிதாக உரையாடல் எதுவும் நிகழவில்லை. எனது வட்டத்தில் உள்ள ஹிந்துத்துவ நண்பர் ஒருவரது பதிவினால் கவனம் பெற்று இத்திரைப்படத்தை பார்த்தேன். படத்தின் உச்சக்கட்ட காட்சி கதாநாயகி பிரியாணி விருந்து தயார் செய்யும் காட்சி தான். அக்காட்சியை பார்த்ததும் இதே போன்ற ஒன்றை எங்கோ வாசித்திருக்கிறோமே என்ற எண்ணம் எழுந்தது. சில நிமிடங்களில் பிடிபட்டு விட்டது. சாரு நிவேதிதாவின் ஜீரோ டிகிரீ நாவலில் இதே போன்ற ஒரு பகுதி வரும், பிரியாணி திரைப்படத்தின் இயக்குனரான சஜின் பாபு ஜீரோ டிகிரீ நாவலை வாசித்திருப்பாரா என்ற கேள்வி எழுந்தது. கேரள அறிவு ஜீவி வட்டங்களில் சாருவின் படைப்புகள் கொண்டாடப்படுகின்றன. சஜின் பாபுவின் முந்தைய திரைப்படங்கள் குறித்து வாசித்த போது ஒரு விஷயம் தெளிவானது. சாரு வழியாகவோ அல்லது வேறு வகையிலோ Transgressive கூறுகளை சஜின் உள்வாங்கியிருக்கிறார். இந்தியாவிலும் அயல்நாடுகளிலும் விருதுகளை பெற்ற பிரியாணி திரைப்படம் பலான படமாக கருதப்பட்டு அதன் துண்டுகள் இணையும் எங்கும் சிதறி இருக்கிறது. சாருவின் நாவல்கள் மீது வைக்கப்படும் அதே விமர்சனம் தான் இந்த இயக்குநர் மீதும் பலரால் வைக்கப்படுகிறது. இருவரது படைப்புகள் மீதும் ஒரே வகையான குற்றச்சாட்டுகள்; பாலியல் என்ற ஒரே வார்த்தையில் அவற்றை சுருக்குதல் நடக்கிறது. ஆனால் சஜினின் தரப்பை உடனடியாக புரிந்து கொள்ளக் கூடிய அளவு விரிந்த பார்வை உடைய திறனாய்வாளர்கள் பலர் உண்டு. சாரு எழுதத்தொடங்கிய காலக்கட்டத்தில் அத்தகைய பார்வை தமிழ் இலக்கிய சூழலில் மிக அபூர்வமான விஷயமாகவே இருந்தது. இப்போதும் பெரிய அளவு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று சொல்ல முடியாது.

(ஆ)

சாரு நிவேதிதாவின் படைப்புகளை குறித்து உரையாடும் போதும் பின் நவீனத்துவம் Transgressive எழுத்து போன்ற சொற்களை பயன்படுத்தியே விளக்க வேண்டி வருகிறது. இன்னும் சொல்லப்போனால் பல திறனாய்வாளர்கள் மேற்கண்ட பதப்பிரயோகங்களைக் கொண்டு தான் சாருவின் நாவல்களை விளக்க மட்டும் அல்ல நியாயப்படுத்தவும் முயல்கிறார்கள். அவற்றின் இலக்கிய தன்மையை நிறுவுவதற்கு கூட ஐரோப்பிய மாதிரிகளை சுட்டிக்காட்ட வேண்டி இருக்கிறது. சாருவும் இந்த வகைப்படுத்துதல்களை ஆதரிக்கிறார். ஆனால் இத்தகைய பன்னாட்டு / கோட்பாட்டு நிலைப்புள்ளிகள் எதுவும் இல்லாமலே சாருவின் நாவல்களுக்கு நியாயம் கற்பிக்க முடியும் என்பது எனது நம்பிக்கை. அதற்கான முயற்சியாகவே இக்கட்டுரையை எழுதுகிறேன்.

(இ)

சாரு நிவேதிதாவின் எக்ஸிஸ்டன்ஷியலிஸமும் ஃபேன்சி பனியனும் நாவல் 1989 ஆம் வருடம் வெளிவந்தது. பெருநகரத்தில் தனிப்பட்ட பிரச்சனைகளாலும், தத்துவ சிக்கல்களாலும்  அலைகழிக்கப்படும் வந்தேறி இளைஞனது நினைவு குறிப்புகள் என்று ஒரு தளத்தில் சொல்லலாம். நான் சில வகை நாவல்களை குமாஸ்தா நாவல்கள் என்று விவரிப்பதுண்டு. மேலை நாட்டுக்கல்வி அறிவு பெற்று தலைநகர்களில் குமாஸ்தாக்களாக பணிபுரியும் இந்திய இளைஞர்களுக்கு ஏற்படும் குழப்பங்கள் தனி வகையை சார்ந்தது. ஆதவனது நாவல்களிலும் இக் கூறுகள் உள்ளன. இத்தகைய இளைஞர்களது இருத்தலிய சிக்கல்களை இந்நாவல்கள் காட்சிப்படுத்துகின்றன. எக்ஸிஸ்டன்ஷியலிஸம்… நாவலின்  குறிப்பிடத்தக்க தன்மை என்னவென்றால் கதைச் சொல்லி இரு வேறு  தன்மைகளை தன்னுள் கொண்டிருக்கிறான் என்பது தான், அவன் பூரணமாக அந்நகர ஜோதியில் கலக்கவுமில்லை. அதே நேரம் அந்நகரின் அறிவு சூழல் மீதான மயக்கம் அவனுக்கு தெளியவும் இல்லை. ஆதவனிடம் காணப்படும் கசப்போ அல்லது கரிச்சான் குஞ்சிடம் (அவர்கள் ஒரு மாதிரியானவர்கள் குறு நாவல்) காணப்படும் வெறுப்பேர மட்டும் அல்ல இக்கதைச்சொல்லியிடம் எஞ்சுவது.  அதனையும் தாண்டிய எவ்விதத்திலும் யாருடனும் தன்னை பொருத்திக்கொள்ள முடியாத, இரட்டை வேடங்களை எதிர்கொண்டு எதிர்கொண்டு மனம் வெதும்பிய ஒரு தன்மையை நாம் சூர்யாவிடம் காணலாம். ஒரு பக்கம் நாகூர், குடும்பம் எல்லாவற்றையும் தொலைத்து தலை முழுகி விட்டு டெல்லியில் ஹிந்துஸ்தானி இசை, தூதரக விருந்துக்கள் என்று வாழவும் முடியவில்லை. இன்னொரு பக்கம் டெல்லியை உதறித்தள்ளி விட்டு காவிரி க்ரையில் அக்கடாவென்று இருக்கவும் முடியவில்லை. இவ்வுலகிலம் இருக்கும் போது அவ்வுலகின் நினைவாலும் அவ்வுலகில் இருக்கும் போது இவ்வுலகின் நினைவாலும் சூர்யா அலைக்கழிக்கப்படுகிறான். டெல்லியோ நாகூரோ சக மனிதர்களது வேடங்கள் மட்டுமே மாறாதவையாக இருக்கின்றன. இந்த வேடதாரிகள் மீது ஏற்படும் அருவருப்பே கதைச் சொல்லியின் கச்சாப்பொருள். கதைச்சொல்லி தன்னை ஆதர்ச நாயகனாக முன்வைக்கவில்லை. தன்னிடம் இருக்கும் குறைகளை அவன் உணர்ந்தே இருக்கிறான், அவனுடைய பிரச்சனை என்னவென்றால் கண்ணுக்கு எட்டும் தூரம் வரை உதாரண நாயான்  யாரும் காணக்கிடைக்கவில்லை என்பது தான்.

இந்த நாவலில் சாரு நிவேதிதா ஆவணப்படுத்தியிருக்கும் / சொல்லியிருக்கும் ஒரு சில விஷயங்கள் வியப்பானவை. சூர்யாவின் ஊரில் நிகழ்ந்த ஆர் எஸ் எஸ் செயல்பாடுகளை குறித்த சில வரிகள் ஒரு உதாரணம், எனக்கு தெரிந்து ஆர்எஸ்எஸ் அமைப்பு முதல் முறையாக ஒரு நாவலில் வருவது இங்கு தான், இத்தனைக்கும் மண்டைக்காடு பிரச்சனைகள் நடந்து சில வருடங்களான பிறகு எழுதப்பட்ட நாவல் இது. ஐக்கிய அமெரிக்க அரசு/ கல்வி நிறுவனங்களிடம் இருந்து இடதுசாரி போக்கிற்கு எதிராக இலக்கியம் படைப்பதற்கு மற்றும்உதவித்தொகையை கூசாமல் பெற்றுக்கொண்டவர்கள் கூட ஆர் எஸ் எஸ் குறித்து மூச்சு விட்டதில்லை. ஆனால் சாரு இதைக் குறித்து எல்லாம் கவலைப்பட்டதாக தெரியவில்லை. சாருவின் படைப்புகள் அனைத்திலும் இந்த சொல்லாதன சொல்ல துணிவதை பார்க்கலாம்.

(ஈ)

சாருவின் அடுத்த நாவலான ஜீரோ டிகிரீ இந்திய இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தக்க படைப்பு. எண்ணற்ற பரிசோதனை முயற்சிகளை தன்னுள் கொண்ட நாவல் என்பதைத் தாண்டி எந்த கோட்பாட்டு அடவுகளும் தெரியாத வாசகனுக்கும் வாசிக்கத்தக்கதாக இருக்கும் படைப்பு. இப்பிரதியை எதிர்கொள்ளும் வாசகன் இதனை ஒரு புதிர் பெட்டியாகவும் கருதலாம்; அல்லது ஒரு விந்தை விளையாட்டாகவும் கருதலாம். மரபான கதை சொல்லலை எதிர்பார்க்கும் வாசகன் ஏமாந்து விடுவான் என்று எண்ணுவதற்கு எந்த அவசியமும் இல்லை. வாசித்தல் என்பது வாசகனும் எழுத்தாளனும் இணைந்து நிகழ்த்தும் நிகழ்கலை தான். பழங்குடி கதை சொல்லிகள் கூட இடை இடையே நிறுத்தி கதை கேட்பவர்களை பங்கு பெற வைப்பது உண்டு. காத்திரமான பிரதியை வாசிக்கும் வாசகனும் இடை இடையே நிறுத்தி கதையின் போக்கை குறித்தோ அதற்கும் தன் வாழ்க்கைக்கும் இடையே உள்ள ஒற்றுமைகள்/ வேற்றுமைகள் குறித்தும் சிந்திப்பது உண்டு. ஜீரோ டிகிரியில் சாரு இதனை இன்னும் வெளிப்படையான ஒரு விளையாட்டாக மாற்றுகிறார். சில இடங்களில் குவி மையத்தை வாசகனை நோக்கி திருப்புகிறார். சில்லு சில்லாக சிதறி கிடக்கும் ஆடி அல்ல இந்த படைப்பு. மாறாக நுட்பமாக திட்டமிடப்பட்டு வாசகனை சீண்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வினோத கோலம் இது. “There is a method in his madness” என்ற வரி தான் நினைவிற்கு வருகிறது.

இந்த நாவலிலும் மத்யமரின் எலி வாழ்க்கையுடனோ மேல்தட்டு வர்க்கத்தின் பூனை வாழ்க்கையுடனோ ஒத்திசைய முடியாத இந்த இருமைகள் இடையில் சிக்கி மூச்சு திணரும் சிதைந்த மனதின் இருப்பை காண முடியும், இந்த நாவல் போகிற போக்கில் தொட்டு செல்லும் விஷயங்கள் ஏராளம். அவற்றை மட்டும் கொண்டே செறிவான உரையாடல்களை நிகழ்த்த முடியும். பொன்பரப்பி நிகழ்வு ஒரு உதாரணம். பகடிக்குள் பொதிந்து இருக்கும் வெடிகுண்டு திரிகள் எண்ணற்றவை. பொன்பரப்பி நிகழ்வை குறித்து எதுவும் தெரியாத வாசகனுக்கு கூட  விவாதப்பொருள் என்னவென்று புரியும். “லால் சலாம்” அத்தியாயம்  குறிப்பிடத்தக்க மற்றொரு பகுதி. அரசு, அதிகாரம், அதிகாரிகள், கருத்து சுதந்திரம் ஆகியவற்றை குறித்து விவாதித்திக் கொண்டே இருக்கிறோம். அவ்வாறு விவாதிப்பவர்கள் இந்த பகுதியை வாசிக்க வேண்டும்.

சாரு நிவேதிதா ஜீரோ டிகிரியை எழுதிய காலத்தில் கருத்திற்காக கம்பி எண்ண வேண்டிய துர்பாக்கியம் எல்லாம் எழுத்தாளர்களுக்கும் சிந்தனையாளர்களுக்கும் மட்டுமே விதிக்கபட்ட விஷயமாக இருந்தது, இன்று சமூக ஊடகத்தில் இருக்கும் எந்த குடிமகனும் இந்த தீக்கனவில் இருந்து தப்ப முடியாது. அதனால் அதிகாரத்தின் நகர்வுகளை படம் பிடித்துக்காட்டும் இந்த அத்தியாயம் தவிர்க்க முடியாததாகுகிறது. ஒரு புறம் புரட்சி வேட்கை, இன்னொரு பக்கம் நடுக்கம் என்னும் அவஸ்தை நாவல் முழுக்க நக்கல் செய்யப்படுகிறது. 31 ஆம் அத்தியாயத்தில் வரும் வரிகள் // அவன் பயந்தாங்கொள்ளி. அவன் சொல்வது போல அவனது எழுத்துக்கள் எதுவும் தடை செய்யப்பட போவதில்லை…. உண்மையில் அவன் பஸ் கண்டக்டர்களுக்கும் போலீஸ்காரர்களுக்கும் பெண் எழுத்தாளர்களுக்கும் சிறு பத்திரிக்கைகாரர்களுக்கும்… பிச்சைக்காரர்களுக்கும் ரயில் தண்டவாளங்களுக்கும் வாகனங்களுக்கும் பயப்படுபவன்” இவ்வாறாக நாவல் முழுவதும் முரணனான இரட்டைகள் வருகின்றன.

சாரு நிவேதிதா இந்த நாவலில் பயன்படுத்தியிருக்கும் உத்திகளுக்கு மேற்குலகில் தான் முன்மாதிரிகளை தேட வேண்டும் என்றில்லை. அவற்றில் பலவற்றை அவரது முன்னோடிகளே பயன்படுத்தியுள்ளனர். உதாரணத்திற்கு கதையின் இடையில் மாந்த்ரீக குறிப்பை தருவதை பாரதியார் செய்திருக்கிறார். ஜயந்த பட்டரின் வடமொழி நாடகமான ஆகமடம்பனத்தில் சூத்ரதாரன் (இயக்குநர்) அந்த நாடக ஆசிரியரையே நக்கல் செய்யும் பகுதி உண்டு. இவன் எழுதிய நாடகத்தை எல்லாம் அரங்கேற்ற வேண்டியிருக்கிறதே என்று புலம்புவதாக ஒரு காட்சி இருக்கும். சாரு நிவேதிதா தனது கதையாடலுக்கான கருவிகளை மேல் நாட்டு படைப்புகளில் கண்டடைந்திருக்கலாம். ஆனால் அவை எல்லாம் இம்மண்ணில் இருந்தவையே. இம்மண்ணிற்கு அந்தியமானவை அல்ல. பின்னாட்களில் இதனை உணர்ந்த சாரு பழுப்பு நிற பக்கங்கள் நூலில் ஒரு எல்லை வரையிலும் இதனை ஏற்றுக்கொண்டு ஆவணப்படுத்தினார்.

(உ)

சாரு நிவேதிதாவின் நாவல்களை வசிக்காதவர்கள் எதிலிருந்து தொடங்கலாம் என்று கேட்டால் அவர்களுக்கு நான் ராசலீலாவை பரிந்துரைப்பது வழக்கம். சாதாரணனுக்கு அதிகார மையங்களின்  வீணை வாசிப்பையும் தங்களது பிராண வேதனையும் புரிந்து கொள்ள ஃபூகோவின் உதவி தேவை இராது. அவர்களது வாழ்க்கையை பிரதிபலிக்கும் கண்ணாடி ஒன்றை அவர்கள் முன்பு வைத்தாலே போதும். சட்டென்று புரிந்து கொள்வார்கள். (கோட்பாடு சடுகுடுகள் எல்லாம் கல்வியாளர்களுக்குத்தான் தேவை). ராசலீலை அத்தகைய ஒரு கண்ணாடி. வகையான வகையான வதைகளை குறித்தும் வதை முகாம்களை குறித்தும் சாரு நிவேதிதாவின் நாவல்களில் ஏராளமான சித்தரிப்புகள் உண்டு. அவற்றுள் ஆகச்சிறந்தது இதில் வரும் கீழ் நடுத்தர வர்க்க ஊழியனின் வாழ்க்கை சித்தரிப்பு தான். நரகத்தில் இருக்கிறோம் என்பதையே உணராத நரக வாசிகள்; அல்லது நரகத்திலாவது இடம் கிடைத்ததே என்று ஆறுதலடையும் நரகவாசிகள். இவர்களுடன் வாழ்வது தான் பிரக்ஞை உடையவனுக்கு மிகப்பெரிய சோர்வைத்தரும் விஷயமாக இருக்கும்.

வேதாந்த கதை ஒன்று உண்டு. ஒருவனை புலி துரத்தியதால் கண் மண் தெரியாமல் ஓடி பாழுங் கிணற்றில் விழப்போனான். சட்டென்று விழுது ஒன்றை பிடித்து தொங்கினான். புலி கிணற்றை சுற்றி வருகிறது. பிடித்திருக்கும் விழுதை ஒரு குரங்கு உலுக்குகிறது. ஒரு பாம்பு ஊர்ந்து வந்து கொண்டு இருக்கிறது . கீழே விழுந்தால் அதோ கதி. இத்தனைக்கும் இடையே மரத்தில் இருந்த தேன் கூட்டில் இருந்து ஒரு துளி தேன் நாவில் வந்து விழுகிறது. பிராண அவஸ்தைக்கு இடையேயும் அந்த ருசியை அம்மனிதன் அனுபவிக்கிறான். அதே போலத்தான் ராசலீலையில் வரும் சில கதாபாத்திரங்களின் வாழ்வும் போகிறது. வதை முகாமில் பத்து வருடங்கள் வசித்தால் அங்குள்ள வாழ்விலும் இன்பம் காண முடியும். இத்தகைய வாழ்க்கையை உயிர் வாழ்வதற்கான ஆதார விசையின் வெற்றி என்று சொல்வதா அல்லது மாபெரும் வீழ்ச்சி என்று சொல்வதா என்பது தான் கேள்வி. பல நேரங்களில் அந்த ஒரு சொட்டு தேன் தான் பிடியை விடாமல் இருப்பதற்கான ஊக்கத்தை தருகிறது, வாழ்க்கைக்கு ஏதோ ஒரு பொருளை தருகிறது என்பதையும் மறுக்க முடியாது.

(ஊ)

காமரூப கதைகள் நாவலை 108 குறுங்கதைகளின் தொகுப்பு எனலாம். இத்தகைய வடிவை யுவன் பயன்படுத்தியிருக்கிறார். ஒவ்வொரு கதையும் தன்னளவில் முழுமையானது. அதே நேரத்தில் இக்கதைகளை இணைத்து ஒரே பெரும்படைப்பாகவும் பார்க்கலாம். கதைகளை இணைக்கும் சரடாக ஒரு கதாபாத்திரமோ  ஒன்றிற்கு மேற்பட்ட கதாபாத்திரங்களோ இருப்பார்கள். இந்த நாவல் இணைய தொடராக வெளிவந்தது. இதனை இன்டர்நெட் நாவல் என்கிறார் சாரு நிவேதிதா. இந்த நாவலின் Hypertextuality காரணமாக அதாவது ஒன்றைத் தொட்டு இன்னொன்றாக ஒரு சுட்டியில் இருந்து இன்னொரு சுட்டிக்கு போவது போல இருப்பது காரணமாகவும் இதனை சாரு அவ்வாறு அழைத்திருக்கலாம். ஆனால் hypertextuality digital humanities எல்லாம் தெரியாத இந்திய வாசகன் கூட இந்த படைப்பை எளிதாக வாசிக்க முடியும்; ரசிக்க முடியும், தன்னளவில் முழுமையான ஒரு கதையை சொல்லும் தனித்தனி அத்தியாயங்கள், அதே நேரம் ஒட்டு மொத்தமாக ஒரு மற்றொரு வகையில் படைப்பாக விளங்கும் பாணி மிகத் தொன்மையானது. வேதாள பஞ்சாசத் அதன் முன்னோடி. விக்கிரமாதித்தன் கதைகள் என்ற பெயரில் நாம் அதை தமிழில் வாசித்திருப்போம். பிறகு இதே வடிவம் 1001 அரேபிய இரவுகளிலும் பயன்படுத்தப்பட்டது. க்ஷண சித்தம் க்ஷண பித்தம் என்பது இயல்பாகி போன ஒரு சமூகத்தின்/காலகட்டத்தின் ஆவணம் என இவற்றை கூறலாம்.

(எ)

சாரு தனது நாவல்களில் ஆகச்சிறந்ததாக எக்ஸைலை சொல்வதுண்டு. இந்நாவல் இரண்டாவது (திருத்தப்பட்ட) பதிப்பு புதிய எக்சைல் என்னும்  பெயரில் வெளி வந்தது. குருவாயூர் கேசவனில் தொடங்கி ப்ளாக்கியில் முடியும் இந்நாவல் ஒரு வித ஆவணமும் கூட. அபுனைவாக ஆவணப்படுத்த முடியாது பல விஷயங்கள் புனைவில் வாழும், மாட்டுக்கறியை தின்ன முடியாமல் குப்பையில் மொத்தமாக கொட்டும் மாற்று கலாச்சார பூர்ஷவாக்கள் மாட்டுகறி விருந்து நடத்துவது தொடங்கி ஏராளமான வேடிக்கை வினோதங்கள் நிறைந்த படைப்பு இது.

இந்த நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில் ஊழலுக்கு எதிரான பெரிய எழுச்சி இந்தியாவில் ஏற்பட்டது. ப்ரும்மாண்ட ஊழல்களை குறித்த செய்திகள் இந்தியாவையே உலுக்கியது. பல வழக்குகள் தொடுக்கப்பட்டன (அவற்றில் பலதும் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க முடியாத காரணத்தால் தள்ளுபடி ஆயின / குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டார்கள்). ஊழல்கள் நடந்தனவோ இல்லையோ, இச்செய்திகளை ஒட்டி ஏற்பட்ட மக்கள் எழுச்சியும், நிகழ்ந்த போராட்டங்கள் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமானவை. இலக்கியத்தை அரசியல் கருவியாக காண்பதாகவும் எழுத்து என்பதே ஒரு அரசியல் செயல்பாடு தான் என்று கூறுபவர்கள் பலருடைய படைப்புலகில் மேலே குறிப்பிட்ட நிகழ்வுகளின் தாக்கம் ஏதும் இல்லை. எனக்கு தெரிந்து இந்த கொந்தளிப்புகளுக்கு தமிழ் எழுத்துலகில் எதிர்வினையாற்றியது இருவர் தான். ஒரு ஜெயமோகன். இரண்டாவது நபர் சாரு நிவேதிதா. ஜெயமோகன் தனது அறம் தொகுப்பின் முன்னுரையில் எவ்வாறு அக்காலக்கட்டத்தில் அவருக்கு ஏற்பட்ட மனச்சோர்வில் இருந்து வெளியே வர  அச்சிறுகதை தொகுப்பில் உள்ள கதாநாயகர்களின் நிஜ வாழ்க்கை உதவி புரிந்தது என்று கூறியுள்ளார். அவர்களை குறித்த கதைகளை எழுதுவதின் வாயிலாக தனது நம்பிக்கையை மீட்டு எடுத்ததாக கூறியுள்ளார். சாரு நிவேதிதா இதைப் போன்ற எந்த பிரகடனத்தையும் செய்ததாக நினைவில்லை. ஆனால் எழுத வேண்டியவை அனைத்தையும் எக்ஸைலின் முதல் பதிப்பிலே எழுதி விட்டார். சமூகத்தின் கூட்டு நனவிலியிலிருந்து மறைந்து போனலையும் கூட அந்த இலக்கிய பிரதி வழியாக பிழைத்து இருக்கும். இன்று அந்நாவலை வாசிக்கும் பொது வாசகனுக்கு கூட ஒரு காலகட்டத்தின் குறுக்கு வெட்டு தோற்றம் கிடைக்கும். Rohinion Mistry  இரா.முருகன் போன்ற எழுத்தாளர்கள் அவசர கால நிலையையும் தனி மனித வாழ்வையும் இணைத்து எழுதிய நாவலுக்கு ஒப்பானது இது. Mistry இரா.முருகன் போன்றோர் அவ்வாறான முயற்சிகளை தசாப்தங்களுக்கு பிறகே செய்தனர். எந்த ஒரு விஷயத்தையும் அலசி ஆராய்ந்து பொறுமையாக எதிர்வினையாற்றுவது தான் புத்திசாலித்தனமானது. ஆனால் புத்திசாலிகள் நல்ல எழுத்தாளர்களாக மாறுவது இல்லை. அந்த நிதானம் அவர்களை கட்டுரை ஆசிரியர்களாக, ஏன் சிந்தனையாளர்களாக கூட உருவாக்குமே தவிர படைப்பாளியாக பரிணமிக்க உதவாது. ஒரு அராஜகம் நடக்கிறது என்று கேள்விப்பட்டதும் கொந்தளித்து குமறுவது பாமரத்தனமான விஷயம் என்று தோன்றலாம். ஆனால் அந்த பாமரத்தனம் தான் படைப்பிலக்கியத்தின் அருகில் இருக்கிறது .

(ஏ)

சாரு நிவேதிதாவின் நாவல்களில் சித்ர வதைக் கட்சிகள் கணிசமாக வரும் என்று இக்கட்டுரையின் பத்தி ஒன்றில் முன்னரே சொல்லியிருந்தேன். வதையை, வதைப்பவனை, வதைக்கான நியாயத்தை சுற்றி எழுதப்பட்டிருக்கும் நாவல் தேகம். நாவல் எழுத தூண்டுதலாக இருக்கும் விஷயம் என்னவென்பதை நாவலை வாசிப்பவர்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம். சித்ரவதை செய்வதின் வல்லவனான கதாநாயகனின் பெயர் “தர்மா”. தர்மா என்பதும் சூர்யா போன்று சாரு அடிக்கடி பயன்படுத்தும் பெயர் தான். ஆனால் இந்த நாவலின் நாயகனுக்கு ஏன் தர்மா என்று பெயர் வைத்தார் என்பதில் பெரிய மர்மம் ஒன்றும் இல்லை. எக்ஸைல் போல இந்நாவலும் ஒருவகை எதிர்வினை தான். சாதாரண மனிதனால் ஒரு சில சூழல்களில் சில சாபச் சொற்களையே உதிர்க்க முடியும். எழுத்தாளனால் அதை படைப்பாக மாற்ற முடியும். பாதிக்கப்பட்டவர்களுக்கு அவன் செய்யும் நியாயம் அது.

(ஐ)

ஒவ்வொரு நாளும் ஏராளமான அராஜகங்களை அநியாயங்களை எதிர்கொள்கிறோம்; குறைந்த பட்சம் காண்கிறோம். இவற்றிற்கு எல்லாம் ஏதாவது ஒரு விதத்தில் எதிர்வினையாற்றிய தீர வேண்டும். துணிந்தவர்கள்  தங்கள் வாழ்க்கையை பணயம் வைத்து போராடுகிறார்கள், சாதாரணர் வெளியில் கேட்காத அளவிற்கு வசைகளையோ சாபங்களையோ முணு முணுத்து அவற்றை கடைந்து வர பார்க்கிறார்கள். ஒரு கட்டத்திற்கு பிறகு நம்மில் பலருக்கு அற உணர்ச்சி மரத்து விடும். யாருக்கு என்ன ஆனாலும் சரி, நேரத்தோடு வீடு போய் சேர வேண்டும் என்று மனநிலை வந்துவிடும். இது வரமா சாபமா என்று தெரியாது. ஆனால் ஒரு படைப்பாளிக்கு இந்த வரமோ சாபமோ வாய்ப்பதில்லை. அவனது அற உணர்ச்சி மரத்து போவதில்லை. போதாக்குறைக்கு அவன் நுண்ணுணர்வும் அதிகம். அவன் வெளிச்சத்தை காண்பதை விட இருளையே அதிகம் காண்கிறான். ஆகவே இறுதி வரையிலும் கொந்தளித்தும் குமறியும் வாழும் நிர்பந்தத்தில் இருக்கிறான், அவனது குறைந்த பட்ச எதிர்வினை வகைகளை முணு முணுப்பதாக இருக்காது. அது ஒரு கலைப்படைப்பாகத்தான் இருக்கும். ஒரு படைப்பாளி உதாரண புருஷனாக இருப்பான் என்று உறுதி கூற முடியாது. அவனது தனி மனித அறமே ஆரோக்கியமற்று இருக்கக் கூடும். ஆனாலும் பிறரிடம் காணும் அறமின்மை அவனை இம்சிக்கும். பாவம் செய்யாதவர்கள் மட்டும் கல் எறியட்டும் என்பது எல்லா இடத்திலும் சரியான விஷயமாக இருக்காது. சில நேரங்களில் ஒரு தெருநாயின் குரைப் பொலி கூட நியாயத்தை சொல்லும். காத்திரமான படைப்பாளிகள் அனைவரும் இதனை உணர்ந்திருந்தனர். தங்கள் எழுத்து வழியாகத்தான் எதிர்வினையாற்ற வேண்டும், தங்களை சமநிலைப்படுத்திக் கொள்ள என்று உறுதியாக இருந்தனர். அதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணியை கைக் கொண்டனர். டால்ஸ்டாய் ஜெயகாந்தன் போன்றவர்கள் பிரசங்கிகளின் உடுப்பை தரித்தனர் (இதை சொல்லும் தகுதி தனக்கு இருக்கிறதா என்று டால்டாய் யோசிக்க தொடங்கியிருந்தால் என்ன மிஞ்சியிருக்கும் என்று தெரியவில்லை). புதுமைப்பித்தன் போன்றவர்கள் கசப்பான பகடிகளை ஆயுதமாக கொண்டனர். கரிச்சான் குஞ்சு இருட்டான மூலைகளில் வெளிச்சம் பாய்ச்சினாலே போதும்; கரப்பான் பூச்சிகள் ஒடிவிடும் என்ற எண்ணத்தை கொண்டிருந்தார். இந்த வரிசையில் சாரு தேர்ந்தெடுத்தது இன்னொரு வினோதமான முறையை. தன்னை சுற்றி இருப்பவர்கள் தனக்கு இழைக்கும் அநீதிகளை பொறுக்கவும் முடியாமல் அதற்கு எதிராக வினையாற்ற வலுவும் இல்லாதவன் சில நேரங்களில் தனது நிர்வாணத்தையே எதிர்ப்பாக வைப்பது உண்டு. அத்தகைய ஒரு பதிலடியே சாருவின் எழுத்து வகை . இதனை பிறழ்வு எழுத்து என்று வகைப்படுத்தி தான் விளக்க வேண்டும் என்பதில்லை. ஒவ்வொருவரும் வெவ்வேறு வழிகளில் எதிர்வினையாற்றினாலும் அவர்களை தூண்டிய விசை ஒன்று தான். சாரு நிவேதிதா கதாநாயகனா, வில்லனா இல்லை கோமாளியா என்றெல்லாம் விவாதிக்கலாம். ஆனால் தமிழ் இலக்கிய உலகில் அவர் இருப்பையும் பங்களிப்பையும் எவ்விதத்திலும் மறுக்க முடியாது.

(அனீஷ்கிருஷ்ணன் நாயர் ஆங்கில இலக்கியத்தில் முனைவர்பட்டம் பெற்றவர். இலக்கியக் கோட்பாடுகள் கற்பிப்பவர்.நாகர்கோயிலில் அரசு பொறியியல் கல்லூரி ஆங்கில விரிவுரையாளராகப் பணிபுரிகிறார். தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம், மலையாளம் அறிந்தவர். ஆகமங்கள், தந்த்ரவிதிகள் ஆகியவற்றில் ஆய்வு செய்பவர்.மத்வ மரபைச் சேர்ந்த வைணவர்)

முந்தைய கட்டுரைஅகரமுதல்வனின் பான் கீ மூனின் றுவாண்டா தொகுப்பை முன்வைத்து
அடுத்த கட்டுரைசாங்கோபாங்கர்