கொல்லும் வெண்மை

 

வெள்ளையானை வாங்க

வெள்ளை யானை நாவலின் கரு எனக்கு உருவானது அமெரிக்காவில் வால்டன் ஏரியின் கரையில் நின்றுகொண்டிருந்தபோது. அது என் இலட்சியச் சிந்தனையாளர் ரால்ஃப் வால்டோ எமர்சனின் நிலம். தோரோ தங்கியிருந்த குடில் அருகேதான் உள்ளது. அந்த ஏரியில் இருந்துதான் பனிக்கட்டிகள் சென்னைக்கு வந்துள்ளன. மானுட இனத்தின் உயர் இலட்சியங்கள் சில உருவான இடத்தில் இருந்து அந்த பனிக்கட்டிகள் கிளம்பி மிகக்கொடுமையான சுரண்டலும் சாவுத்தாண்டவமும் நிகழ்ந்த மண்ணுக்கு வந்தன. அந்த முரண்பாடு என்னை மூச்சடைக்கச் செய்தது, அதில் இருந்து ஏய்டனை கண்டடைந்தேன்.

ஐரோப்பாவுக்கு அன்றுமின்றும் இரண்டு முகம் உண்டு. ஒரு முகம் சுரண்டலின், ஆதிக்கத்தின், இனவாதத்தின் முகம். இன்னொன்று, நவீனச் சிந்தனையின், உயர்கலையின், ஆழ்ந்த தத்துவத்தின் முகம். வில்லியம் பெண்டிங் பிரபுவும் ஆங்கிலேயர்தான். ஷெல்லியும் ஆங்கிலேயர்தான். பிரிட்டிஷாரை எதிர்த்த பாரதி தன்னை ஷெல்லிதாசன் என அழைத்துக்கொண்டார். இந்த முரண்பாட்டை புரிந்துகொள்ளாத ஒருவரால் காலனியாதிக்கத்தை புரிந்துகொள்ள முடியாது.

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த பெரும்பஞ்சங்கள் பற்றி மிகமிக குறைவான ஆவணப்பதிவுகளே உள்ளன. பெரும்பஞ்சத்திற்குக் காரணமாக அமைந்த உப்புவேலி பற்றி ஆராய்வதற்காக இந்தியா வந்த ராய் மாக்ஸம் இங்கே பஞ்சம் பற்றி அனேகமாக ஆவணங்களே இல்லை என்பதை, அதைப்பற்றிய நினைவுகளும் இல்லை என்பதை கண்டு திகைப்புற்று எழுதியிருக்கிறார். காரணம் எளிது. முறையான ஆவணப்பதிவு நமக்கு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திற்கு முன்னர் இருந்ததில்லை. ஓரளவு இருந்தாலும் அந்த ஆவணப்பதிவுகளைச் செய்த அரசுகள் செயலற்று அழிந்துவிட்டன. ஆவணப்பதிவுகளை செய்தவர்கள் பிரிட்டிஷார். அவர்கள் பஞ்சம் பற்றிய பதிவுகளை மிகக்குறைவாகவே செய்தார்கள். தங்கள் தேவைக்கேற்ப. தங்கள் கோணத்தில். ஆவணங்களை அழித்திருக்கவும் வாய்ப்புண்டு.

அந்தப் பெரும் பஞ்சம் பற்றிப் பேச இன்றுமே பிரிட்டிஷார் தயங்குகிறார்கள். பஞ்சம் இயற்கையாக வந்தது என்றும், தாங்கள் அதற்கு எதிராகப் போராடினோம் என்றும் ஒரு கதையை உருவாக்கி அதை நம்பவே விரும்புகிறார்கள். அமர்த்யா சென், வந்தனாா சிவா, ராய் மாக்ஸம், சசி தரூர், மதுஶ்ரீ முக்கர்ஜி போன்றவர்கள் விரிவாக எழுதியும்கூட அந்த கதையே அவர்களால் நம்பப்படுகிறது. காலனியாதிக்கத்தின் கொடிய முகம் அப்பஞ்சங்களில் வெளியானது. உலகமெங்கும் காலனியாதிக்கம் அதையே நிகழ்த்தியது. இந்தியா பருவமழையின் விளையாட்டால் அலைக்கழிக்கப்படும் நாடுதான். பஞ்சங்கள் என்றும் உண்டுதான். ஆனால் லட்சக்கணக்கில் மக்கள் பஞ்சங்களில் சாவதில்லை. ஏனென்றால் பஞ்சம்தாங்கும் அமைப்புகளும் பல நூற்றாண்டுகளாக உருவாகி வந்திருக்கின்றன. பஞ்சத்தால் மக்கள் இடம்பெயர்வதும் இயல்பான ஓர் சமூகச் செயல்பாடாக இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சி அதன் போர்த்தேவைகளுக்காக போட்ட மிதமிஞ்சிய வரிகள் பஞ்சந்தாங்கும் அமைப்புகளை அழித்தன. மக்கள் இடம்பெயர்வதை பிரிட்டிஷ் அரசின் ஆணைகள் தடுத்தன. சாவு எண்ணிக்கை அந்த அளவுக்குப் பெருகியமைக்கு அதுவே முதன்மைக் காரணம். அப்பஞ்சங்கள் ஒரு கோணத்தில் செயற்கை பஞ்சங்களே. அந்த மரணங்கள் காலனியாதிக்கத்தின் படுகொலைகளே.

ஆனால் பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவுக்கு நவீனக் கல்வியை அறிமுகம் செய்தது. நவீன நிர்வாக முறையை இங்கே செயலாக்கியது. இந்தியப் பண்பாட்டை பேணும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. அது இன்னொரு பக்கம். பெருங்கருணையும் நீதியுணர்ச்சியும் கொண்ட பல பிரிட்டிஷார் இந்தியாவுக்குச் சேவையாற்றியுள்ளனர். இந்தியாவின் எளிய குடிகள் பஞ்சத்தால் கொல்லப்பட்டனர். அந்த இரு பஞ்சங்களும், அதன் விளைவான இடப்பெயர்வும் இல்லாமலிருந்திருந்தால் இந்தியாவில் பாதிக்கும் மேல் தலித் மக்கள் இருந்திருப்பார்கள். இந்தியாவின் பிரதமர் தலித்தாக இருந்திருப்பார். அதன் மறுபக்கமும் முக்கியமானது. அந்த மாபெரும் பஞ்சம்கூட இந்தியாவின் இறுகிப்போன சாதிய மனநிலையை அசைக்கவில்லை. இந்தியாவின் பழைமையான மதநிறுவனங்களை கருணை கொள்ளச் செய்யவில்லை. வள்ளலார், சுவாமி விவேகானந்தர் போன்ற புதிய ஆன்மிக இயக்கங்களே பஞ்சங்களில் சிக்கிய மக்களை தங்களவர் என எண்ணும் கருணை கொண்டிருந்தன. அதன்பொருட்டு அவை பழிக்கவும் பட்டன. அந்த பழமை மூர்க்கத்தை வள்ளலாரும் விவேகானந்தரும், பாரதியும் தாகூரும் ஒரே குரலில் உளக்கொந்தளிப்புடன் கண்டிக்கிறார்கள். அதுவும் உண்மையின் ஒரு பக்கமே. உண்மையை சவரக்கத்தியின் கூர்முனை என சொல்கிறது உபநிடதம். இந்நாவல் அதன் வழியாகச் செல்ல முயல்கிறது.

பஞ்சம் ஓர் உச்சநிலை. மானுடத்தின் சாரம் வெளிப்படும் தருணங்களால் ஆனது. கொடுமையும் கருணையும், தன்னலமும் அறமும் ஒரே சமயம் தங்களை காட்டுகின்றன.இந்நாவல் பேசுவது அந்த தருணங்களையே. இந்நாவலை வெளியிட்ட நண்பர் வே. அலெக்ஸ் நினைவாக ஆகிவிட்டார். மறுபதிப்புகளை கிழக்கு பதிப்பகமும் வம்சி பதிப்பகமும் வெளியிட்டன. இப்போது புதிய பதிப்பை விஷ்ணுபுரம் பதிப்பகம் வெளியிடுகிறது. அவர்களுக்கு நன்றி

இந்நாவல் அமெரிக்கா பென் அமைப்பு நடத்திய உலகளாவிய நாவல் மொழியாக்கப் போட்டியில் , அதில் பங்கேற்ற முந்நூறுக்கும் மேற்பட்ட நாவல்களில், மொழியாக்க பரிசுத்தொகை பெறுவதற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளது. விரைவில் உலகவாசகர்களின் கவனத்திற்குச் செல்லவிருக்கிறது. இதை மொழியாக்கம் செய்த பிரியம்வதாவுக்கும் நன்றி

ஜெ

முந்தைய கட்டுரைகாசி ஆறுமுகம்
அடுத்த கட்டுரைம.நவீனின் ‘தாரா’ வெளியீடு