வெண்கடல் மின்னூல் வாங்க
வெண்கடல் வாங்க
2022 டிசம்பர் 9 ல் வெளியாகி வெற்றி பெற்றுள்ள திரைப்படம் ரத்தசாட்சி. அதன் மூலக்கதை வெண்கடல் என்னும் இந்த தொகுதியில் அடங்கியிருக்கும் ‘கைதிகள்’. அறம் கதைகளில் ஒன்றாக அதை எழுதினேன். அதன் முதல் வடிவம் அப்போது அதை வாசித்த அரங்கசாமிக்கு பிடிக்கவில்லை. அதில் அறம் கதைகளில் உள்ள ஆழம் இல்லை, உணர்ச்சிகரம் மட்டுமே இருந்தது என நினைத்தார். ஆகவே அக்கதையை தூக்கி வைத்துவிட்டேன். (வெண்கடல் தொகுதியில் இன்னொரு கதையும் திரைப்பட உரிமை அளிக்கப்பட்டுள்ளது)
பின்னர் மீண்டும் அக்கதையை எழுத ஓர் உந்துதல் வந்தது. அந்தக்கதையின் சாராம்சமான நிகழ்வை நான் கேட்டது ஒரு நாட்டுப்புறப் பாடகியின் பாடல் வழியாக. அவள் நினைவில் அக்கதை பதிவாகியிருந்தது. அவளை ஒரு குருவியாக அப்போது உருவகம் செய்தேன். காட்டின் கண் அக்குருவி. அது அறியாமல் அங்கே ஏதும் நிகழமுடியாது. அதனால் ஏதும் செய்துவிடமுடியாது. ஆனால் அது ஒரு மாபெரும் சாட்சி. அதன் சிறகோசை பிழைசெய்தவர்களை விடுவதே இல்லை. அக்குருவி கதைக்குள் வந்ததுமே கதை இன்னொரு தளத்திற்குச் சென்றுவிட்டது. இலக்கியமாகிவிட்டது. இன்று இத்தொகுதியின் முதன்மைக் கதையாக ஆகிவிட்டிருக்கிறது.
இதில் பலவகையான கதைகள் உள்ளன. பலநிலங்களில் பல மனிதர்கள் வழியாக நிகழ்பவை. பெரும்பாலான கதைகள் உணர்ச்சிகரமானவை. மண்ணுக்கும் மனிதர்களுக்குமான பற்றை, வரண்ட நிலத்தில் வாழ்பவர்களின் உயிர்ப்போராட்டத்தை சொல்லும் கதைகள் இதிலுள்ளன. அறம் கதைகளின் உணர்வுநீட்சியாக அமைந்தவை பல கதைகள். அறம் தொகுதியின் நெகிழ்வுநிலையில் இருந்து நான் முன்னகர்வதையும் சில கதைகள் காட்டுகின்றன.
இந்நூலை முதலில் வெளியிட்ட வம்சி பதிப்பகத்திற்கும் இப்போது வெளியிடும் விஷ்ணுபுரம் பதிப்பகத்திற்கும் நன்றி
ஜெ
வெண்கடல் விமர்சனம்- சுஜாதா செல்வராஜ்