ஆயுதமாதல்

உலோகம் மின்னூல் வாங்க

உலோகம் வாங்க 

என் நெருக்கத்திற்குரியவராக இருந்து இன்று இல்லாமலாகிவிட்ட ஓர் இலங்கைப்போராளி என்னிடம் சொன்னார், “அண்ணை நாங்களெல்லாம் யாருக்கோ ஆயுதங்கள் தானே?” மனிதன் ஆயுதமாவது என்னை  பெருந்திகைப்புக்கு உள்ளாக்கியது. அப்போது நான் ஒரு கவிதை எழுதினேன். துப்பாக்கியை பற்றிய கவிதை அது. ஓர் ஆயுதம் தன்னளவில் மிகமிக கள்ளமற்றது. பழிபாவம் அறியாதது. ஆயுதம் உண்மையில் கொலைசெய்வதே இல்லை.

அந்தக்கவிதையை வாசித்துவிட்டு அன்று கிளிநொச்சிப் பக்கம் திருவையாறு என்னும் ஊரில் வாழ்ந்திருந்த என் நண்பர் கருணாகரன் அதை மறுத்து ஒரு கடிதம் எழுதியிருந்தார். போராளியின் கையில் ஆயுதம் பொருள் உடையதாகிறது என்று சொன்னார். அவர் அன்று விடுதலைப் புலிகள் அமைப்பின் வெளிச்சம் இதழின் ஆசிரியர் குழுவில் இருந்தார்.

இப்போது வரலாறு தன்னை பலமுறை புரட்டிக்கொண்டுவிட்டது. மண்ணில் ஓங்கியிருந்த பலவும் புதைந்து வரலாறாக ஆகிவிட்டிருக்கின்றன. இன்று கருணாகரன் என்ன சொல்வார் துப்பாக்கியைப் பற்றி? வெறும் துப்பாக்கிகளாக ஆகிவிட்ட மக்களைப் பற்றி? துப்பாக்கி சுடுபவர்கள் சுடப்படுபவர் இருவரையுமே பலிவாங்குகிறது என இன்று உணர்திருப்பாரா? ஆம் என்றே அவருடைய எழுத்துக்கள் இன்று சொல்கின்றன

இது ஒரு ‘திரில்லர்’ வகை கதை. அடுத்தது என்ன என்னும் எதிர்பாப்பு எப்போதும் உண்டு. ஆனால் ஆங்கில திரில்லர் வகை கதைகளில் போல கதைக்கள, கதைமாந்தரின் உணர்வுகள் ஆகியவையும் கூடவே விரிவாகச் சொல்லப்படுகின்றன. ஒரு ‘லோடட் கன்’ ஆக தன்னை உணர்பவனின் கதை இது. அவனில் ஏற்றப்பட்டிருப்பது ஓரு கருத்தியல். ஒரு ஆழமான மூர்க்கமான நம்பிக்கை.

அந்த நம்பிக்கை அதன் உச்சத்தில் என்னவாகிறது என்பதே இக்கதை. திரில்லர் வகை நாவலாயினும் அந்த இறுதிக்கணம் இலக்கியவாசகர்களுக்குரியது.

இந்நாவலை எழுதும்போது ஒரு திரில்லரை எழுதிவிடவேண்டும் என்னும் எண்ணமே என்னிடம் இருந்தது. நானறிந்த ஒருவர், நானறிந்த இன்னொரு கதை ஆகிய இரண்டையும் இதன்பொருட்டு இணைத்துக் கொண்டேன். வழக்கமான அரசியல்சரிநிலை சார்ந்த பொய்யான கோஷங்கள் இந்நாவலில் இல்லை. இது மானுட உள்ளத்தின் அகவயமான உலகைச் சார்ந்தே இயங்கும் கதை.

கிழக்கு பதிப்பகம் இந்த நாவலை முதலில் வெளியிட்டது. இப்போது விஷ்ணுபுரம் பதிப்பகம் வெளியிடுகிறது. அவர்களுக்கு நன்றி

ஜெ

***

முந்தைய கட்டுரைஇளந்தமிழன்
அடுத்த கட்டுரைமதுத்துளிகளின் கனவு- கடிதம்