வேட்டையின் கதைகள்

விலங்குக் கதைகள், வேட்டைக் கதைகளில் எனக்கு எப்போதுமே ஒரு தனி ஆர்வமுண்டு. தமிழில் அதிகமாக விலங்குகள் வரும் கதைகளை எழுதியவன் நானாக இருக்கலாம். விலங்குகளைச் சார்ந்து எழுதுவதன் முதன்மைக் காரணம் அவை வெறும் உயிர்கள் அல்ல, ஆளுமைகள். அதேசமயம் நம் உள்ளத்தில் அவை படிமங்கள். மனிதர்களை அன்றாடத்தின் வரையறைகளை கடந்து படிமங்களாக ஆக்குவது கடினம். விலங்குகள் இயல்பாகவே அன்றாடத்திற்கு அப்பால் உள்ளன. ஒரு கதையில் சரியானபடிச் சொல்லப்பட்டாலே விலங்கு கவித்துவமான குறியீடாக ஆகிவிடும். அஸ்வத்தாமா குறியீடாவது அரிது, அஸ்வத்தாமா என்னும் யானை மகத்தான குறியீடு. யுதிஷ்டிரர் ஓர் ஆளுமைதான். விண்ணுலகு வரை அவரை பின் தொடர்ந்து சென்ற நாய் அழியாத படிமம்.

வேட்டையும் அதேபோலத்தான், தன்னளவிலேயே அது வாழ்க்கையின் குறியீடு. வேட்டை நடைமுறையில் இன்று இல்லாமலாகிவிட்டது, வேட்டை என்னும் சொல்லை நாம் முழுக்கமுழுக்க குறியீடாகப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டிருக்கிறோம். வேட்டல் என்றால் விரும்புதல். வேள்வி அதிலிருந்து எழுந்த சொல். விழைவு உச்சம் கொள்ளுமிடமே வேட்டை. எந்த எழுத்தாளனுக்கும் அது ஒர் அரிய கருப்பொருள். மானுட விழைவும், அதை சூடிக்கொண்ட ஆளுமைத்திறனும் கூர்கொண்டு நின்றிருப்பது வேட்டைத்தருணத்தில். வேட்டையை எழுதிவிட்டால் வாழ்க்கையை எழுதியவர்களாவோம். வேட்டையில் மனிதன் தானும் விலங்கு ஆக மாறுகிறான். இரு விலங்குகள் தங்கள் நுண்ணுணர்வால், புலனுணர்வால் இருத்தலின்பொருட்டு போராடுகின்றன.
இத்தொகுதியில் என் புகழ்பெற்ற விலங்குக் கதையான மத்தகம் உள்ளது. அதைவிட புகழ்பெற்ற கதையான ஊமைச்செந்நாய் உள்ளது. பல ஆண்டுகளாக வெவ்வேறு இயக்குநர்கள் ஊமைச்செந்நாய் கதையை படமாக்க விரும்புவதாகச் சொல்லி வருகிறார்கள். படமாகக்கூடும். அது இந்திய வரலாற்றின் ஒரு சித்திரமும் கூட. அந்த யானை நான் என்றும் திகைப்புடன் வழிபாட்டுடன் பார்த்து வரும் இந்தியா என்னும் ‘தேவதாத்மா’
இக்கதைகள் என் இணையதளத்தில் வெளிவந்தன. முதல் பதிப்பை மனுஷ்யபுத்திரனின் உயிர்மை பதிப்பகம் வெளியிட்டது. அதன்பின் கிழக்கு பதிப்பக வெளியீடுகள் வந்தன. இப்போது விஷ்ணுபுரம் பதிப்பகம் வெளியிடுகிறது. அவர்கள் அனைவருக்கும் நன்றி
ஜெ
முந்தைய கட்டுரைஇராம. கண்ணபிரான்
அடுத்த கட்டுரைஅழைப்பை எதிர்நோக்கியா?