மமங் தய் – அருணாச்சல் கதைகள் 3

மமங் தாய் – தமிழ் விக்கி

பின்யார் எனும் கைம்பெண்

அந்தக் கைம்பெண் பின்யார் நானும் மோனாவும் அவளைக் காணச் சென்றபோது நெருப்புக்கு அருகே துணிகளை காயவைத்துக்கொண்டிருந்தாள். வழக்கம்போல முணுமுணுத்துக்கொண்டும் சபித்துக்கொண்டும் ஈரத்துணிகளை கோப விசையுடன் உதறினாள். சடார்! சடார்! இருபத்தைந்தை எட்டும் முன் அவள் விதவையானாள், அதுவும் திருமணமாகி மூன்றாம் மாதத்தில்.  ஒரு நல்ல மனதுடையவனை திருமணம் செய்து புதுவாழ்க்கை ஒன்றை எதிர்நோக்கியிருந்தாள்,

அதற்கு முன்பு அவள் வேறொருவனுக்கு ஒரு ஆண் பிள்ளையைப் பெற்றிருந்தாள், அவனுடன் ஐந்து ஆண்டுகள் வாழ்ந்திருந்தாள். அவன் பெயர் ஓர்க்கா. சிரியம் குன்றுகளைத் தாண்டி  நாட்டின் வட எல்லைக்கப்பாலிருந்து அவன் வந்திருந்தான். அழகான வளர்ந்த மனிதன், சிரிக்கும் கண்கள், இளம் பின்யாரை அவன் வீழ்த்திவிட்டான். அவளது குடும்பம் எதிர்த்தது, ஓர்காவின் குலம் நல்லதல்ல என்று வெளிப்படையாகச் சொன்னது. பின்யாரை எதுவும் அசைக்கவில்லை, ஒரு நாள் அவள் கருவுற்றிருப்பதை தெரிவித்தாள்.

 அவள் குடும்பம் பெரியவர்களை அழைத்து சமரசம் பேசி திருமணத்தை நடத்தச் சொன்னது. தான்தான் தந்தை என்று ஏற்றுக்கொண்டாலும் ஓர்க்கா திருமண விஷயத்தை சமாளிக்கப் பார்த்தான். குழந்தை பிறந்து ஒரு வருடத்தில் இரக்கமின்றி அவளை விட்டு விலகத் திட்டமிட்டான்.

அவர்கள் தங்கள் குழந்தைக்கு கமுர் எனப் பெயரிட்டனர். அவன் தன் கிராமத்துக்குக் கிளம்பியபோது அவன் கமுரையும் அவனுடன் எடுத்துச் சென்றான், ஏனென்றால் அது ஆண் குழந்தை. திரும்ப வருவேன் என்று அவன் சொல்லியிருந்தாலும் அவன் திரும்பவில்லை. பின்யார் அவமானத்தால் தலைகுனிந்தாள். அவளது குலத்தின் அனைத்து சட்டங்களின்படியும் அவள்தான் அந்நிலைக்குக் காரணம், வேறு யாரும் எதுவும் செய்ய முடியாது.

சில வருடங்களுக்குப்பின் லெக்கனின் மனைவியாகிய பிறகு வாழ்க்கை முழுமையடந்ததாயிருந்தது. அவள் குடும்பம் இந்த உறவைப் பேணவும், தன்மையுடன் நடக்கவும் அவளை அறிவுறுத்தினர் ஆனால் லெக்கனை மணம் முடித்த சில நாட்களிலேயே அவன் ஒரு வேட்டை விபத்தில் இறந்துபோனான். 

அது நடந்து இருபது வருடங்களாகிறது. இப்போது பின்யார் தனியாக வாழ்ந்தாள், நாள் முழுக்க கழனிகளில் வேலைபார்த்தாள். எங்கள் கிராமத்தில் ‘கழனி’ என்பது வீடுகளை விட்டுத் தள்ளி மரங்கள் நிறைந்த குன்றுகளுக்கு நடுவே ஆங்காங்கே தென்படும் சிறிய விளை நிலங்கள். ஒவ்வொரு குடும்பமும் காய்கறிகள், செடிகள் வளர்க்க இடம் இருந்தது. இவற்றில்தான் நிலத்தின் சொந்தக்காரர்கள் அதிகாலைதோறும் சென்று களையெடுத்து, ஒதுக்கி, செடி நடுவதை வழக்காமாக்கியிருந்தனர். மதிய உணவை எடுத்துச் சென்று சூரியன் உச்சியில் இருக்கையில் அங்க்கிருந்த நிழற்குடிசையில் அமர்ந்து உண்டுவிட்டு தணலின் அருகே தேனீர் அருந்தி இளைப்பாறுவர். மலைப்பகுதியின் இந்தத் திறந்த வெளிகளின் அமைதிக்கு அடிமையாகிப் போய் சிலர் இரவிலும் தனிக்குடிலில் தங்குவதுண்டு. வீடு திரும்புபவர்கள் அந்நாளின் அறுவடையை , பச்சை மிளகாய், பூசணி, கிழங்கு, இஞ்சி என பெட்டிகளில் கட்டி ஊர் நோக்கிய நீண்ட பயணத்தைத் துவக்குவர்.

அப்படிப்பட்ட ஒரு மாலையில்தான் பின்யார், வெகுநடையாக கைகளை வீசியபடி வீடுதிரும்புகையில், ஒரு இளைஞன் அவளை நோக்கி தலைதெறிக்க ஓடி வருவதைக் கண்டாள். அவன் ஏதோ சத்தம் போட்டுக்கொண்டு வந்தான். எதோ பிரச்சனை என்று புரிந்துகொண்டு அவள் அவனை நோக்கி ஓடினாள். அப்போது அவள் அந்த வார்த்தையைக் கேட்டாள் ‘தீ’. ஐயோ! அவளது வீடு எரிந்தழிந்திருந்தது. 

கூரைவழியே வந்த புகையிலிருந்து ஆரம்பித்தது என்றான் அவன், பின்னர் மூங்கில்கள் பீரங்கிக் குண்டுகளைப்போல வெடித்துச் சிதறின, ஊரையே பற்றி எரித்துவிடுவதைப்போல தீ பறந்தது. ஊரார் சிலர் உதவி செய்ய முயன்றனர். ஆனால் எந்தப் பயனும் இல்லை. அவளது, ‘ஏழைக் கைம்பெண் வீடு’ அழிந்துபோனது.

ஒரு வீடு தீ பிடித்தால் அதன் அதிர்ஷ்டமற்ற உரிமையாளர் ஊரைவிட்டு தள்ளிவைக்கப்படுவார். பின்யார் காட்டின் எல்லையில் ஒரு குடிசையைக் கட்டிக்கொண்டு வாழ்ந்தாள். நான் மோனாவுடன் அவளைச் சந்தித்தபோது அவள் தண்டனை நாட்களைத் தாண்டியிருந்தாள். தண்டைனை நாட்களில் அவளுடன் சேர்ந்து உணவருந்தக் கூடாது, அப்படிச் செய்தால் தீயை உருவாக்கும்  ‘புலி பூதம்’ தூண்டப்பட்டு அவர்களைப் பின் தொடர்ந்து வந்துவிடும் அபாயம் இருந்தது. ‘கெட்ட பசியோடு அந்த நெருப்பு எல்லாவற்றையும் விழுங்கிவிட்டது’ அவள் எங்களிடம் சொன்னாள் ‘என் விதி சபிக்கப்பட்டதாகத் தோன்றுகிறது.’

எங்களுடன் அமர்ந்து எப்படி அவள் புதுவாழ்வின் துவக்கத்தில் இருந்தபோது அவள் கணவன் வேட்டை விபத்தில் தலையில் சுடப்பட்டு கொல்லப்பட்டதை மீண்டும் பகிர்ந்துகொண்டாள். ஆனால் இதெல்லாம் நடக்கும் என்றும் வருடத்தில் குறைந்தது மூன்று ஆண்கள் அங்கே வேட்டை விபத்துக்களில் இறக்கிறார்கள் என்றும் சொன்னாள்.

‘இவை எல்லாம் விபத்துக்கள்தானா?’ மோனா என்னிடம் கேட்கச் சொன்னாள்.

‘இந்த இறப்புக்களைக் குறித்த எந்த சந்தேகமும் இல்லை’ என்றாள் பின்யார். தன் கைகளைக் குனிந்து பார்த்துவிட்டுச் சொன்னாள் ‘ தெரியுமா. நான் அரிசிக் கள்ளுக்கான மாவை தயாரிப்பதுண்டு ஆனால் இப்போது இல்லை’.

பிறகு அது ஏன் என்று சொன்னாள். முன்பொரு காலத்தில் மிட்டி-மிலி எனும் மாய மனிதர்கள் இருந்தனர். இந்தக் குள்ளமான, அமதியான மக்கள்தான் முதன் முதலில் விசித்திரமான சி-ஈ எனும் ஈஸ்ட்டை உருவாக்கினர், அதுதான் அரிசிக் கள்ளை நுரைக்கவைக்க பயன்படுத்தப்படுகிறது.மிட்டி-மிலி குலம் மறையும் முன்பு மாயக் காட்சிகளால் மதியிழந்து அவர்கள் சி-ஈ பொடியை மனிதர்களிடம் தந்து சென்றனர், சி-ஈ சிறப்பு சக்திகொண்டதென்றும், அதை மதிப்புடன் கையாள வேண்டும் என்றும் நம்பிக்கை வலுத்தது. பெண்கள் மட்டுமே அதைக் கையாள அனுமதிக்கப்பட்டனர். பின்யார், அவளே சிறந்த சி-ஈ கேக்குகளை செய்பவள். அவள் அரிசி, கிழங்கு- புளிப்புப் பழங்களை வெள்ளை மாவுடன் கலந்து சிறிய தட்டையான வடிவில் உருவாக்குவாள். ‘ஆனால், அவை வேட்டைக்கு முன்பு உண்ணத் தடைசெய்யப்பட்டவை ஆண்கள் அதை உண்ணும்போது மிட்டி-மிலி மக்களைப்போலவே பிற்ழ்காட்சிகளைக் காண்பார்கள். சில நேரங்களில் சில வீடுகளில் இந்தக் கட்டுப்பாட்டை மீறிவிடுவார்கள் அப்போது எங்கள் ஆண்கள் காடுகளில் இறப்பார்கள்.’

நான் வியந்தேன்.வேட்டையின்போது இன்னொருவனைச் சுட்டவனை யாரும் கொலைக் குற்றம் சாட்டுவதில்லை என்பதை அறிந்திருந்தேன். அவன் துப்பாக்கியை ஒப்படைத்துவிட்டு காட்டுக்குள் ஓடி விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை அனுசரித்தால் நடந்தது விபத்து என்றே கருதப்படும். ஆனால் பின்யார் தந்த விளக்கத்தை நான் கேள்விப்பட்டதில்லை, ஹோக்சோகூடச் சொன்னதில்லை.

பின்யாரைக் கைம்பெண்ணாக்கியவர் இப்போது மிக வயதானவர். பின்யாருக்கு அவரைத் தெரியும், கிராமத்தில் தினம் பார்ப்பவர்தான், ஆனால் அவள் ஒருபோதும் அவரை தன் கெடுவாய்ப்புக்கு குற்றம் சுமத்தவில்லை. ‘சி-ஈ’க்குள் ஒரு கெட்ட ஆவி இருக்கிறது, அது ஆண்களை பைத்தியமாக்குகிறது, அதனால்தான் நாங்கள் துர்மரணம் அடைபவர்களின் கண்களில் அப்பொடியைத் தூவிவிடுகிறோம். எனவே அவர்கள் எதையும் தேடி திரும்பி வரமாட்டார்கள்.’

மோனாவும் நானும் அமைதியாயிருந்தோம். தனது கரிய சாய்வான கண்களைக்கொண்டு அவள் எங்களைப் பார்த்து புன்னகைத்தாள். நீண்ட கொடிய நாட்களைக் கடந்து வந்தாலும் அவள் துடிப்புடன் இருந்ததால், தலைமுடியை ஒரு ஆணைப்போல குட்டையாக வெட்டியிருந்தாள். ஆனாலும் பாரம்பரிய உருளைக் கம்மல்களை அணிந்திருந்தாள், அவளது காதுகளை அவை கீழ்நோக்கி இழுத்தன. இன்னும் தனது எல்லா முத்துக்களையும், வெள்ளிக்காசுக்களையும், தாயத்துக்களையும் அணிந்திருந்தாள். அவள் இளம் மணப்பெண்ணாக அணிந்திருந்தவை அவை. 

பின்யாரின் சோக வாழ்க்கை என்னிடம் ஒரு கேள்வியை எழுப்பியது. ஒரு பெண்ணின் மனது ஆணின் மனதைவிடப் பெரியது இல்லையா? அவளது குழந்தையை எப்படி இழந்தாள், கணவனையும், இறுதியாக அவள் வீட்டையும் இழந்தாள் என்பது எல்லோருக்கும் தெரிந்தது. ஆனால் இன்னொரு கதையை மக்கள் நினைக்கவோ மீட்டவோ விரும்பவில்லை.

ஒரு தூரக் கிராமத்தில், ஓர்க்கா பின்யாரின் மகன் கமுர்  ஒரு இளைஞனாக வளர்ந்தான். கமுர் முன்னேறிவிட்டிருந்தான். அரசு அலுவலகம் ஒன்றில் சிப்பந்தியாக இருந்தான், இதனால் அவன் வேலைபார்த்துக்கொண்டிருந்த பிகோ நகரத்தில் ஒரு செங்கல் வீடு அவனுக்கு வாய்க்கப்பெற்றது. ஒரு நல்ல பெண்ணை மணம்புரிந்திருந்தான், எங்கள் ஊர் பெண், பெண் மழலைக்கும் இரு மகன்களுக்கும் தந்தை. ஒரு மதியம் அவன் இளம் மனைவி சமையலைறையில் இருந்தாள். அவளது  நீண்ட கூந்தல் ஒரு நீண்ட தடிமனான கயிறைப்போல கட்டப்படாமல் அலைந்தது, தோளின் மேல் ஒரு துவாலியை விரித்திருந்தாள். பக்கத்து அறையில் மகள்  ஒரு தாழ்ந்த கட்டிலில் கிடத்தப்பட்டிருந்தாள், அங்கிருந்தபடியே குழந்தையை அவள் பார்க்க முடிந்தது. ஒரு கணம்தான் அவள் திரும்பியிருப்பாள், அப்போது அவள் ஒரு சிறிய சத்தத்தைக் கேட்டள் ஒரு துல்லிய ‘நையெக்! அவள் திரும்பினாள், அவளது கணவன் கட்டில் அருகே நின்றுகொண்டிருந்தான், இரத்தம் வழியும் அரிவாளோடு. 

சத்தமிடாமல் அவள் அடுக்களையின் கதவின் வழியே தாவி ஓடினாள். அவன் அவளைத் துரத்தினான்.

சிறிய தோட்டத்தின் வெளிக்கதவின் கொண்டி பூட்டப்படவில்லை. ஆனால் அதை அடைந்தபோது அவள் முதுகில் வெட்டுபட்டதை உணர்ந்தாள். கதறினாள், அக்கம்பக்கத்து மக்கள் ஓடி வந்தனர். அவள் கணவன் அரிவாளைக் கீழே எறிந்து தரையில் விழுந்து புலம்பினான், அழுதான் ‘என்ன ஆனது? என்ன ஆனது?’ அவன் கேட்டான் ‘என்ன காரியம் செய்துவிட்டேன்!’

அவன்தான் பேரதிர்ச்சி அடைந்திருந்தான். அவன் குழந்தையின் கொலை குறித்து எதுவும் அவனுக்கு நினைவில் இல்லை. எப்படி அவன் பின்தொடர்ந்து சென்று பின்பக்கம் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்த தன் மகனை வெட்டினான் என்பதுவும் நினைவில்லை. பெரிய பையன், பள்ளிக்குச் சென்றிருந்தவன், மட்டுமே தப்பித்தான்.

கமுர் மன்னிப்பை வேண்டினான். தரையில் வேதனித்துத் துடித்தான், அந்தக் கறுப்புக் கணங்களைக் குறித்து எந்த நினைவும் இல்லை என்றான். தான் ஒரு மந்திரக்கட்டில் இருந்திருக்கவேண்டும் என்பதே அவனது காரணமாயிருந்தது. ஒரு கெட்ட ஆவி அவனது உடலில் பாய்ந்துவிட்டது, அந்தக் கொடுங்கணத்தில்.  அவன் தன் பிள்ளைகளை, மனைவியை அந்தத் துருபிடித்த அரிவாளால் வேட்டையாடியபோது, மனைவியின் தளர்ந்த கூந்தல் அரிவாள் வெட்டை தடுத்திருந்தது, இல்லையென்றால் அவன் மனைவியும் இறந்திருப்பாள்.

நகரத்தில் அவளது கதையைக் கேட்ட அனைவரும் காறித்  துப்பிவிட்டு அமைதியாக இருந்தனர். இது போன்றவற்றிற்கு அர்த்தம் என்ன? 

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழா 2022
அடுத்த கட்டுரைபி.கிருஷ்ணன் அரங்கு உரைகள்