தேகம் ஓர் எளியவாசிப்பு – கடலூர் சீனு

சாரு எழுதிய  தேகம் குறுநாவலை அறிமுகம் செய்வது என்பது, மற்றொரு வகையில் சாருவை அறிமுகம் செய்வதாகவும், பின்நவீனத்துவத்தை அறிமுகம் செய்வதாகவும் அமையும். தனிப்பட்ட முறையில் தமிழில் வந்து இறங்கிய பின்நவீன கோட்பாட்டுப் பார்வைகள், அதன் வழியிலான புனைவுகள், அவற்றின் கலைப்பெறுமதி இவை சார்ந்து எனக்கு மாற்றுக் கருத்துக்கள் உண்டு எனினும், அந்த சார்பின் அடிப்படையில் உருவான அறிமுகம் அல்ல இது என்பதை இங்கே தெளிவு படுத்தி விடுகிறேன்.

பொதுவாக இன்றைய வாசிப்பு சூழலில் பெருமளவு தேவைப்படும் ஒன்று, புனைவுகள் மீது தனது சார்பை விடுத்த, மதிப்பீட்டு விமர்சன நிழல் விழாத அந்தப் புனைவை விரித்துப் பொருள்கொள்ள, அதன் ஆழ் பிரதியின் கதவைத்திறக்க சில சாவிகளை அளிக்கக்கூடிய அறிமுகங்கள். அப்படி ஒரு அறிமுகம் வழியே அப்புனைவுக்குள் நுழையும் ஒரு வாசகன் அதன் பிறகு தனது தொடர் வாசிப்புப் பின்புலம் கொண்டு, அதற்கும் தனது சொந்த வாழ்வுக்குமான தொடர்பைக் கொண்டு தனதேயான பார்வை வழியே அப்புனைவின் திறனை  ஆய்வு செய்யலாம்

இத்தகு வசதிகள் மேலை நாட்டில் உண்டு என்று அறிகிறேன். பால்ய காலத்தில் நிற்கும் வாசகருக்கு, பதின் பருவத்தில் நிற்கும் வாசகருக்கு, இளம் பருவத்தில் நிற்கும் வாசகருக்கு என ஒவ்வொரு வயதிலும் உலக இலக்கிய க்ளாசிக்குகளுக்குள் அவர்கள் நுழைய, மேலைச் செவ்வியல் இசைக்குள் நுழைய , ஆசிரிய விமர்சன சார்பற்ற பல அறிமுக நூல்களை இணையத்தில் கண்டேன்

அத்தகு வசதிகள் தமிழில் தீவிரத் தமிழ் இலக்கியத்தின் எல்லா அழகியல் ஓடைகளைச் சேர்ந்த புனைவுகள் சார்ந்தும் பெருக வேண்டும். இல்லாவிட்டால் என்ன நிகழும்? தமிழ் நிலத்தில், தமிழில் வாசிக்கும் இளம் தலைமுறை என்பதே அருகிக்கொண்டு வருகிறது. அதில் விதி விலக்காக சமூக ஊடக, மெய்நிகர் மாயைகளை கடந்து தமிழில் வாசிக்க நுழையும் இளம் மனம் இன்னும் அறிது. அப்படி உள்ளே வரும் ஒருவன் சாரு எனும் பெயர் அறிந்து அவரது புனைவு ஏதேனும் ஒன்றை வாசிக்க முடிவு செய்து, அப்புனைவு மீதான அறிமுகம் ஏதேனும் உண்டா என்று தேடினான் எனில் கிடைப்பது இரண்டே நிலைதான். ஒன்று சாரு ஒரு எழுத்தாளரே இல்லை என்று துவங்கும் முற்ற முழுதான புறக்கணிப்பு. அல்லது சாருவினுடையதை தவிர வேறு எதுவும் எழுத்தே இல்லை எனும்படி துவங்கும் விதந்தோதல். இந்த இரண்டு நிலைகள் வழியாக சாரு என்றல்ல எந்த எழுத்தாளரையும் அணுகுவது பிழையான முன் முடிவுகளில் அந்த வாசகன் சிக்க வழி வகுக்கும். அதில் இருந்து வெளியேறுவது  கடினம்.

இந்த இரண்டு எல்லைக்கும் வெளியே நின்று சார்பு நிலை அற்று ஒரு இளம் வாசகன் சாரு வின் புனைவுலகுக்குள் நுழைய ஒரு அறிமுகமாக, சாருவின் பிற புனைவுகளை விடுத்து தேகம் குறுநாவலை நான் அறிமுகம் செய்ய முதல் காரணம், பின்நவீனத்துவ கோட்பாடுகள் சார்ந்த எந்த வாசிப்பு அறிமுகமும் இன்றி, இந்த நாவல் வழியே இதன் வாசகன் பின்நவீன நோக்கின் தார்மீகம் எதுவோ அதை சென்று தொட்டுவிட முடியும் என்பதே. சாருவின் பிற நாவல்களை விடவும் இந்த நாவல் அந்த அம்சத்தில் வலிமையானது.

இரண்டாவதாக இந்த நாவல் கொண்டிருக்கும் கூறுமுறை சார்ந்த, வடிவம் (கொலாஜ்) சார்ந்த போதம். பின்நவீன புனைவுகளின் பொதுவான கூறு இது. அநேர்கோட்டு, மையமற்ற, கதைகள்சொல்லல் முறையில் வாசகனை தான் ஒரு நாவலை வாசித்துக் கொண்டிருக்கிறோம் எனும் போதத்திலேயே வைத்திருப்பது. பிற பின்நவீன எழுத்தாளர்களின் புனைவுகளில், ஒன்று இந்த கூறுமுறை, போதம், கோட்பாட்டு அடவுகள், எல்லாம் மிதமிஞ்சி வன்முறையாக அந்த புனைவில் மேல் ஏறி அமர்ந்திருக்கும், (உதாரணம் பிரேம் ரமேஷ் இணையர் எழுதிய மழையைப் பற்றிய இசைக் குறிப்புகள் போன்ற புனைவுகள்) அல்லது வெறும் பின்நவீன உத்தி விளையாட்டுக்களை நிகழ்த்திக் காட்டும் ஜோடனை நாவல்களாக இருக்கும். (உதாரணம் எம் ஜி சுரேஷ் நாவல்கள்) சாருவின் பிற நாவல்கள் போலவே இந்த இரண்டு நிலைகளுக்கும் வெளியே நிற்கும் போதம் எதுவோ அதை கொண்டிருக்கும் நாவல் இந்த தேகம்.

மூன்றாவதாக இந்த நாவல் உள்ளிட்டு தனது பிற நாவல்களிலும் சாரு கைக்கொள்ளும்  சரளம் கொண்ட நடை மற்றும் புன்னகை கொள்ள வைக்கும் பகடிகள். பிற எல்லா தமிழ்ப் பின்நவீன எழுத்தாளர்களின் புனைவையும் ஒப்பிட்டே இதை அறியலாம். வாசகன் வாசிக்காமல் தவிர்க்க ஒரே ஒரு பேரா கூட சாரு நாவலில் இருக்காது எனும் வகைக்கு உதாரணம் இந்த தேகம் குறுநாவல்.

நான்காவதாக சாரு தனது புனைவுகளுக்குள் பழக்கி எடுத்த மொழி. சு ரா ஒரு நேர்காணலில்கதையில் மொழி எப்டி இருக்கணும் தெரியுமா? சும்மா புது செவன் ஓ க்ளாக் பிளேடு மாதிரி ஷார்ப்பா இருக்கணும்என்பார். சாரு தனது புனைவுகளுக்குள் மொழியை நீர் போல ஆக்கினார். உறைந்து நிற்கும் பனிக்கட்டியாக, உடைந்து ஓடும் நீராக, எழுந்து மறையும் ஆவியாக, என்று நீரின் அத்தனை குணங்களிலும் தனது மொழியை மாற்றினார். முதல் வரியில் அருவருப்பை கிளப்பி, அடுத்த வரியிலேயே கருணைக்கு ஏங்கி நெகிழ்த்தி,அதன் அடுத்த வரியிலேயே பகடி கொண்டு மேற் சொன்ன இரண்டு உணர்வையும் உடைத்து என தனது மொழி வழியே வாசக உணர்ச்சிகளை சட் சட்டென பகடை எண்கள் போல உருட்டி விளையாடுவார். அதன் சிறந்த உதாரணமாக இந்த தேகம் புனைவில் சில பகுதிகள் உண்டு.

ஐந்தாவதாக பிற பின்நவீன எழுத்தாளர்களிடம் இல்லாத சாருவிடம் மட்டும் காணக்கூடிய, தமிழின் பின்நவீன அழகியல் சார்ந்த பார்வைக்கோணம். உதாரணமாக போர்ஹேஸ் மார்க்வஸ் என்றெல்லாம்இங்கே‘  கொண்டாடிக்கொண்டிருக்க, அந்த இருவரும் தனது முக்கிய ஆக்கங்களின் உள்ளடக்கம் உத்தி இரண்டையுமே இங்கே உள்ள மகாபாரதத்தில் இருந்து அடைந்தவர்கள் என்பதை, (பிறர் தவற விட்டு அதை) தனது சீரோ டிகிரி புனைவுக்கு பிறகான வளர்ச்சியில் சாரு கண்டு கொண்டவர். அதன் தாக்கங்கள் அடங்கிய புனைவு இந்த தேகம் குறுநாவல்.

ஆறாவதாக சாரு தனது புனைவாக்க செயல்களை (காலம் கடந்தேனும்) தமிழின் முன்னோடிகளுடன் இணைத்து, நவீன தீவிரத் தமிழ் இலக்கியம் எனும் பிரவாகத்தின் முக்கிய அழகியல் ஓடைகளில் ஒன்றாக  அடையாளம் காண்பது. சாரு அளவுக்கு தமிழின் இலக்கிய முன்னோடிகளை அடுத்த தலைமுறைக்கு அறிமுகம் செய்து பேசிய எழுதிய பின்நவீன எழுத்தாளர்கள் எவருமே இல்லை. அந்த போதமும் இணைந்த குறுநாவல் இது.

(2)

ஜெயமோகன் எழுதிய விஷ்ணுபுரம் நாவலில் 10 ஆம் நூற்றாண்டில் நடக்கும் முதல் பகுதியில், ஒரு சித்தன் வருவான். தனது குட்டி சிஷ்யனை அழைத்துக்கொண்டு பாதாள தளம் ஒன்றை நோக்கி செல்வான். இப்போது அவர்களின் தலைக்கு மேல் பேருருவம் கொண்ட விஷ்ணு, விண்ணைத்தொடும் கோபுரம் கொண்ட பேராலயம், உபரி உருவாக்கிய மாபெரும் நகரம், கலைகள், காவியங்கள், மதங்கள், தத்துவங்கள், முப்பத்து முக்கோடி தேவர்கள், விழாக்கள்,சடங்குகள், உறவும் பிரிவுமான வாழ்வு பண்பாடு எல்லாமும். இந்த பாதாள குகையோ நூற்றாண்டுகளாக திறக்கப்படாதது. அதில் நூற்றாண்டுகள் சூரிய ஒளியே படாத, தேங்கிய அமில நீர் கொண்ட குளம். குடலை அறுக்கும் துர்நாற்றம். எங்கிருந்தோ மெல்லிய ஒளி கசிந்து அந்த நீர்பரப்பில் விழ, மெல்ல மெல்ல அந்த நீர்ப்பரப்பில் காட்சிகள் துலங்கும். அதில் முற்றிலும் கந்தலாக வேறொரு விஷ்ணுபுரம். முக்காலம் உட்பட எல்லாமே ஒன்றன் மேல் ஒன்று விழுந்து படிந்து ஒரு மாபெரும் சிதைவாக முற்றிலும் வேறொரு விஷ்ணுபுரம் துலங்கும். மேலே உள்ள விஷ்ணுபுரத்தின் ஒளியில், வாசத்தில், ஒழுங்கில், அதன் காரணமாகவே காண இயலாது போகும் ஒன்றை, இந்த பாதாளத்தில் இருளில், சிதைவில், துர்நாற்றத்தில், வைத்து சித்தன் தனது இளம் சீடனுக்கு காட்டுவான்.

இந்த பாதாளக் குளத்தின் இருளின் நாற்றத்தின் மாபெரும் கையாஸ் ஸின் வழியாக மட்டுமே பார்க்க முடிந்த அந்த ஒன்றை காட்ட வந்ததே, இதே போன்ற வடிவ உள்ளடக்கம் கொண்ட (சீரோ டிகிரி, தேகம் போன்ற இன்னபிற) பின்நவீன பிரதிகள் கொண்ட பணி என்று பொதுவாக வரையறை செய்யலாம்

விஷ்ணுபுரம் நாவலின் அந்த தருணத்தில், தலைக்கு மேலாக வித விதமாக கட்டமைக்கப்பட்டு, வித விதமாக கட்டுடைக்கப்பட்ட விஷ்ணு எனும் தொன்மத்தின், இதற்கு வெளியிலான விஷ்ணு உருவம் ஒன்றை சித்தன் தனது சீடனுக்கு காட்டுவான். அந்த விஷ்ணுபுரம் நாவலில் பல்வேறுவிதமாக கட்டமைக்கப்பட்டு, கட்டுடைக்கப்படும் விஷ்ணு வைப்போல, இந்த குறுநாவல் உடைத்து பரிசீலித்துப் பார்ப்பது தேகம் என்பதன் இருப்பை. தேகம் எனில் ஆண் பெண், பன்றி நாய் போன்ற எல்லா தேகமும்தான். குறிப்பாக நாவலின் நாயகனான தர்மா வின் தேகம். நாவலின் எல்லா அலகுகளையும் தொடுவதை விடுத்து மிகச்சில முக்கிய அம்சங்களை மட்டும் தொட்டு இந்த நாவலை அறிமுகம் செய்யலாம் என நினைக்கிறேன்.

கிழக்கு வெளியீடாக கோபி கிரிஷ்ணன் எனும் பால் புதுமையாளர் எழுதிய மறைக்கப்பட்ட பக்கங்கள் என்றொரு நூல் உண்டு. அதில் ஆண் பெண் எனும் மையம் கொண்ட இரு உடல்களுக்கு இடையே விளிம்பில் இருக்கும் குறைந்தது 10 உடல்கள் குறித்தும், அதில் ஒருவரது பால் அடையாளம் எதுவாக இருந்தாலும் அதற்குள் அவர் தேர்வு செய்ய எத்தனை விதமான பாலியல் தேர்வுகள் உண்டு என்பதை அறிவியல் பூர்வமான தரவுகள் கொண்டு அதில் நூலாசிரியர் விவரித்திருப்பார். இந்த சிக்கலில் இருப்பவன்தான் தேகம் நாவலின் நாயகன் தர்மா. உடலால் வெளியே அவன் ஆணாக இருந்தாலும் உள்ளே பாலியல் தேர்வில் அவன் யார்? அவன் கொண்ட காமம் அவனை எவ்வாறெல்லாம் ஆட்டிவைக்கிறது? இந்த பரிசோதனையில் உருவாவதே இந்த நாவலில் தர்மாவின் ஸ்தாயி பாவம். அவன் ஒரு கோழை, அவன் ஒரு தோற்றுப்போன நக்சலைட், அவன் ஒரு போதை மருந்து கடத்தல்காரன், அவன் ஒரு பிக்பாக்கெட், அவன் ஒரு பெண் பித்தன், அவன் ஒரு துரோகி, இத்யாதி இத்யாதி எல்லாம் இந்த நாவலில் அவனது விஷய பாவம்.

( எந்த சூழலிலும் மாறாதிருப்பது ஸ்தாயி பாவம், சூழலுக்கு ஏற்ப வெளிப்படுவது விஷய பாவம் என்று பொதுவாக வரையறை செய்யலாம்).

பன்றி மேய்த்து, ஊரார் பீயள்ளிப்போட்டு வாழும் வாழ்க்கை கொண்ட தொம்பச்சேரியில் இருந்து படிப்பு வழியே வெளியேறி, கூலிக்கு கொலை செய்யும் கூட்டத்தோடு இணைந்து வாழ்வைத் துவங்கி, அரசு பணியில் குமாஸ்தாவாக சேர்ந்து மீனா எனும்குடும்பப்பெண்ணை திருமணம் செய்து செட்டில் ஆவது வரையிலான தர்மாவின் வாழ்வை, அநேர்கோட்டு வடிவில், சாரு எனும் நாவலாசிரியர் எழுதிக்கொண்டிருக்கும் மார்க்கி டி சேத் அழகியல் சாரம் கொண்ட நாவல் வடிவாக, வாசகனுக்கு வாசிக்கக் கிடைக்கும் பிரதியே இந்த நாவல்.

(3)

குறைவான கதாபாத்திரங்கள் வழியே இக்குறுநாவல், உளவியல், உறவு நிலைகள், சமூக அடுக்கின் அதிகார நிலைகள், உள்ளிட்டு பல விஷயங்களை பரிசீலித்தாலும் இதன் உணர்வு நிலை பெரிதும் கவனம் குவிப்பது மூன்று நிலைகளில் ஒன்று காமம், அடுத்து குரோதம், மூன்றாவது பைத்திய நிலை.

முதல் பார்வையில் இதன் பல பாலியல் நடவடிக்கை சித்தரிப்புகள்  ஒவ்வாமை அளிக்கலாம். எது சொல்ல இயலாததோ, எது சொல்ல முடியாததோ,எது சொல்லக் கூடாதோ அதை சொல்வதும் இலக்கியத்தின் பணிகளில் ஒன்றுதான்.

அதே அளவு ஒவ்வாமை இந்நாவலில்  தர்மா செய்யும் டார்ச்சர் பகுதிகளும் அளிக்கும். சேடிசம் என்பதன் வேர் எங்கிருக்கிறது என்பதன் மீதான பரிசீலனை கொண்ட பகுதிகள் அவை. தர்மா செய்யும் முதல் டார்ச்சர் பன்றிகள் வசம் நிகழ்கிறது. விரிவாக இடம்பெறும் அந்த சித்தரிப்புகளில் முக்கியமான இடம், பன்றியின் மூக்கில் ஓட்டை போட்டு கயிறு விட்டு வாயை சுற்றி கட்டு போடும் இடம். (பன்றியின் உடற்கூறியல் குறித்து வாசிக்கையில் அறிந்தேன், பன்றி உடலிலேயே மிக மிக உணர்ச்சிகரமான பாகம் என்பது மூக்குத்தான். யானைக்கு எல்லாமுமாக தும்பிக்கை இருப்பதை போல. பன்றி எதையும் உண்ணும். தன் மலம் தவிர. பன்றி மனித உணவு தேவையை 8000 வருடமாக உடன் நின்று தீர்த்துக்கொண்டிருக்கிறது. பன்றிகள் ஏன் வெறுக்கப் படுகின்றன என்று மெர்வின் ஹாரிஸ் ஆய்வு நூல் ஒன்றும் தமிழில் உண்டு.)

இரண்டாம் டார்ச்சர் ஒரு இளம் பெண்ணை வன்கலவி செய்து பின்னர் அவள் முகத்தில் ஆசிட்டும் ஊற்றிவிட்டு போகும் ஒருவனை பிடித்து வைத்து தர்மா செய்வது. ரிச்சர்ட் ஸ்டாரஸ் இன் ஃபயர் ஃபெமைன் ஒபேரா கேட்டபடியே அந்த வதையை நிகழ்த்துகிறான் தர்மா. அவன் மூக்கிலேயே கோணி ஊசி கொண்டு குத்தி எடுத்து தைக்கிறான். தான் பால்யத்தில் உழன்ற பீ வண்டி வாழ்வில் இருந்து கொஞ்சத்தை அவன் வாயில் கரைத்து ஊற்றுகிறான். உயிர் மட்டும் எஞ்சும் நடைபிணமாக அவனை ஆக்குகிறான். டார்ச்சர் முடிந்ததும் அந்த பணியை தர்மாவுக்கு அளித்தவன், தர்மாவை கட்டி அணைத்து நீ தெய்வம் தெய்வம் என்று சொல்லி கொஞ்சுகிறான். தர்மா பன்றி கொலை முடித்து வந்ததும் அவன் அம்மா அவனைப் பார்த்து சொல்லும் அதே சொல்.

நாவலின் கவனம் குவிவது இரண்டு பைத்திய நிலைகளில். ஒன்று காடை குணா. தர்மாவால் தொட்டு தொட்டு தர்மாவின் குரோதம் தாங்காமல் ஆகும் பைத்திய நிலை. இரண்டு தர்மாவை நீங்கி காமம் தாளாமல் தர்மாவால் தொடப்படாமல் நேஹா ஆகும் பைத்திய நிலை. நேஹாவின் பைத்திய நிலையின் உளரல்கள் . குறிப்பாக உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் எனும் பழமொழி வேறாக மாறும் விதம், நேஹா தான் பைத்தியம் இல்லை என்பதை நிரூபிக்க கோர்வையாக சொல்லும் கதை, கிருஷ்ணா உன்னை பெத்தவ நான் சொல்றேன் எனும் வார்த்தை என இந்த நாவலின் மொழி வாசக உணர்ச்சிகளுடன் விளையாடும் பகடையாட்ட சித்தரிப்பு இங்கே நிகழ்வது

கவித்துவ மிஸ்டிக் தருணங்களும் சில இந்த நாவலில் உண்டு, குறிப்பாக இரண்டு இடங்கள் ஒன்று தர்மா பிக்பாகெட் தொழிலை கைவிடும் தருணம். இரண்டு தர்மாவின் பெயரை வெளியே சொல்லாதே என்று நேஹா ஷியாம் வசம் ஆங்காரம் கொள்ளும் தருணம்.

இவ் உடல், இந்த பூமியில், இந்த வாழ்வில் எய்த வந்தது என்ன? இந்த பிறழ்வுகள் ஏன்இன்பமும் வதையும் கொண்டு, இந்த காம க்ரோத பைத்திய தருணங்கள் வழியே உடல் கொண்ட தேடல் முடிவுக்கு வந்ததா? அவை நிறைவு கொண்டதா? அதுவே தேகம் கொள்ளும் தேடல்.

(4)

எந்த அழகியல் கொண்ட நாவல் எனினும் அதை வாசித்து முடித்ததும் அதன் வாசகன் தனக்குள் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள் இரண்டு. ஒன்று இந்த நாவலின் உணர்வுநிலைகளுக்கு ஆத்மீகமான பெறுமதி என்ன? இரண்டு இந்த நாவல் பேசும் நிகழ்வுகள் வாழ்வு இவற்றுக்கு வரலாற்றில் பெறுமதி என்ன

இந்த கேள்விகளை இந்த நாவல் மேல் வைத்தல் முதல் கேள்விக்கான, அதன் பின்னான பயணம் நோக்கிய திசை வழிகளை இந்த நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் வரும் கீதை, உபநிஷத ஆப்த வாக்கியங்கள் அளிக்கிறது. உதாரணமாக செளந்தர்ய லகரியில் தேவின் ஸ்தானங்கள் அமுதம் வழங்கும் குலுக்கைகளாக உன்னதமேற்றி வர்ணிக்கப்பெரும் வரிகள் களுக்கு பிறகு துவங்கும் அத்யாயம் ஒரு பெண் தனது ஐந்தாம் வகுப்பிலிருந்து தொடர்ந்து பாலியல் துஷ்ப்ரயோகம் செய்யப்போடுவதை, அவை எப்போதும் முலைகளில் இருந்தே துவங்குவதை அந்த பெண்ணின் தன்னுரையாக சித்தரிக்கிறது.  (பேருந்தில் அத்துமீறும் தர்மாவை ஹை ஹீல் கொண்டு தாக்குபவளும் இவளே) இப்படி ஒவ்வொரு அத்தியாயத்திலும் பிரம்மம் ஆத்மா மரணம் இத்யாதி குறித்து உள்ள துவக்க வரிகளே அதன் பின்னர் வரும் சம்பவங்களே, இந்த நாவல் இந்த வாழ்வின்  ஆத்மீக சாரம் நோக்கி வைக்கும் ஸ்டேட்மெண்ட்.

நாவலின் நாயகன் பெயர் தர்மா, அவனை வழி நடத்தும் நீதி ஒரு கூலிக் கொலைகாரன். தர்மாவின் துணை வரும் பாஸ்கருக்கு பட்டை பெயர் நாய். பாரத கதையில் தனது துணையாக இதுவரை தொடர்ந்த நாயை விட்டு நான் சொர்க்கம் நுழைய மாட்டேன் எனும் தர்மர் முன்னர் நீதி தேவன் தோன்றி ஆசி அளிப்பான். இதன் நேர் தலைகீழ் அம்சம் என இந்த நாவலை சொல்லலாம். நீதி வழிகாட்ட நாயுடன் நரகம் நுழையும் தர்மன்.

இரண்டாம் கேள்விக்கான பதிலை இந்த நாவல் வழியே தேடினால் அதன் திசைவழிகள் இன்னும் நீள்வது. உண்மையில் வதை இல்லாத மானுட பண்பாட்டு, வரலாறு என்பது சாத்தியம்தானா? அதிகாரத்தின் தலைகீழ் வடிவம்தானா அன்பு? வதை இல்லாது நிலைபெறும் அதிகாரம் என்ற ஒன்று உண்மையில் உண்டா

இவற்றுக்கு மேலே இந்த நாவலின் நாயகனின் குணாம்சத்தை அடிக்கோடிடும் முக்கிய அம்சம் மற்றொன்று உண்டு. அது அந்த தர்மா ஒரு எழுத்தாளன் என்பது. எனில் அவனில் இருந்து எழும் படைக்கும் திறனுக்கும் வதைக்கும் திறனுக்கும் என்ன உறவுதி கிட் படம் எடுத்த சார்லி சாப்ளின் குறித்து மார்லன் பிரண்டோ சொன்னது, சாப்ளின் சிறந்த வதையாளர் அவர் மகனை அவர் நிம்மதியாக இருக்க விட்ட நாள் என ஒன்றில்லை. இந்தியாவில் மிக உயரிய விருது பெற்ற பாடகர் குறித்து அவரது மகன் இதே புகாரை சொல்லி இருக்கிறார். பாடும் போது அவர் தெய்வம் மிச்ச பொழுதுகளில் அவர் சாத்தான். இது என்ன நிலை

டேவிட் அட்டன்ப்ரோ ஆவணம் ஒன்றில் ஒரு அழகான பறவையின் வாழ்வு குறித்து கண்டேன். அழகான பறவை. மிக மிக அழகான குரல். தன் ஜோடியை இணை சேர அழைக்கயில் அதன் பாடல் தெய்வீகம். அதே பறவை சில சமயம் வழக்கமாக சாதாரணமாக தான் உண்ணும் பூச்சிகளை பிடித்து, அதை முள் ஒன்றில் குத்தி வைத்து, அது வலியில் துடிக்க துடிக்க கொஞ்சம் கொஞ்சமாக, அந்த பூச்சியை விண்டு ஊன்டு முடிகிறது. பறவை நினைத்தால் எப்போதும்போல ஒரே கொத்தில் அந்த பூச்சியை விழுங்க முடியும். இருந்தும் ஏன் இந்த சாடிஸம்

அந்த நிலையில், இத்தகு கேள்விகளை எல்லாம் எழுப்பிக்கொள்ளும் வகையில், தாள இயலா ஒவ்வாமை கொண்ட சித்தரிப்புகள் வழியே நகரும் சாரு வின் இந்த குறுநாவல் அவரது புனைவுலகுக்குள் ஒரு அறிமுக வாசகர் நுழைய சரியான வாசல் என்றே சொல்வேன்.

முந்தைய கட்டுரைபாண்டித்துரை தேவர்- பாண்டியப் பேரரசர்
அடுத்த கட்டுரைஒரு கண்டனக் கடிதம்