அடேலா மற்றும் கெப்பியின் அமைதி
லோசி எங்களுக்காக ஒரு கொண்டாட்ட விருந்தை சமைத்துக்கொண்டிருந்தாள். ஹோக்சோ, மோனாவுடன் அந்த மூங்கில் வராந்தாவில் உட்கார்ந்து, நெருக்கமாக அமைந்த வீடுகளிலிருந்து எழும் விறகுப் புகைகள் மூண்ட மாலையைக் காணும்போது, நான் வாசிக்க மட்டுமே முடிந்த உலகங்கள் எல்லாவற்றையும் இந்த புழுதி படிந்த, ஒற்றைச் சாலையுடைய கிராமத்தில் உருவாக்கிவிட முடியும் என்று எண்ணினேன். இங்குள்ள அன்பையும், பிறப்பையும், விபத்துக்களையும், அவை அனைத்தும் ஊரிலும் காட்டிலும் நடந்தாலும், அவற்றை வேறெங்கும் நடத்திக்காட்ட முடியும்தானே? எங்கும் மக்கள் மன அமைதியை பல வழிகளில் உருவாக்கிக்கொள்கிறார்கள், விதி வந்து வெட்டிச் சாய்க்கும்வரை அல்லது தூக்கி உயர்த்தும்வரை சமாளித்துக்கொள்கிறார்கள்.
ஹோக்சோவும் அவனது அம்மாவும் அரிசிக் கள்ளை எங்களுக்கென எடுத்து வந்து மோனாவுக்கு அருகே அமர்ந்தார்கள்.அவர்களுக்கிடையே ஏற்கனவே ஒரு விநோத உறவு உருவாகியிருந்தது. மோனா ஏதோ ஒன்றால் ஆழமாகப் பாதிக்கப்பட்டிருந்தது தெரிந்தது. ஹோக்சோவின் அம்மா என்னைப்பார்த்து ‘நமது விருந்தினரைப்பற்றிச் சொல், அவள் ஒரு தாயா?’ எனக் கேட்டபோது மோனா புரிந்துகொண்டாள். அவள் சொன்னாள் என் மகளுக்காக செபிக்கச் சொல்.’
மோனா ஒரு அரபிய-கிரேக்கக் கலவை அவளது கணவன் ஜூல்ஸ் பிரெஞ்சு நாட்டவன். அதிகார வர்க்கம், எந்த மதிப்பீட்டின்படியும் வெற்றிகரமான தம்பதிகள் – அவன் ஒரு புகழ்பெற்ற அறிவியல் ஆய்வாளர் அவள் ஒரு உயர்வகை பத்திரிகையின் முதலாளி, ‘உலகின் நாட்குறிப்பு’ (டைரி ஆஃப் தெ வோர்ல்ட்), வழக்கத்துக்கு மாறான உண்மைக்கதைகளை உள்ளடக்கியது அது. இருவரும் ஒரு நாடோடி வாழ்க்கை வாழ்பவர்கள், நாடுகள் கண்டங்கள் கடந்து வாழ்பவர்கள். இப்போது தில்லியில் ஒரு சிறிய பணிக்காக வந்துள்ளார்கள்.
ஜூல்ஸ் மோனாவை விட அதிகம் பயணிப்பவன். அவன் நீண்ட சுற்றுப்பயணம் ஒன்றில் இருக்கையில் மோனா, வீட்டில் தனிமையில்,, திடீரென அவளின் மூன்று வயது மகளிடம் ஏதோ குறையுள்ளதை உணர்ந்தாள். அவர்கள் ஒரு பணிப்பெண்ணை நியமித்திருந்தனர், கர்வாலிலிருந்து ஒரு நடுத்தர வயது கைம்பெண், மாடியில் புகைபோக்கியை ஒட்டி கட்டப்பட்டிருந்த அறை ஒன்று அவளுக்கு தரப்பட்டிருந்தது. வலுவான பெண், வேலைகளில் குறையில்லை. மோனாவின் மகள் அடெல்லா அவளுடன் நெருக்கமாயிருந்தாள், அவர்கள் இருவரும் நெருக்கமாயிருந்ததால் மோனா அதிக நேரம் வெளியில் செல்ல ஆரம்பித்தாள், தாள்களை அலசவும், கணினியில் அலையவும். பின்னர் ஒரு நாள் அவள் மகள் பேச மறுத்துவிட்டாள்.
மோனா அவள் முன் மண்டியிட்டு அவளை ஒரு வார்த்தை பேச வைக்க முயன்றாள், அந்தச் சிறுமி அவளை ஒரு நீண்ட நிமிடத்திற்கு வெறித்துப் பார்த்தாள் பின்னர் அவளை முன்பு அறிந்திராததைப்போல திரும்பிக்கொண்டாள்.
அடுத்த சில நாட்கள் மோனா தன் குழந்தையுடன் போராடினாள்.
“என் குழந்தையே! சொல்! சொல் உனக்கு என்னவானது!” அழுதாள், எதிர்பார்ப்புடன் குழந்தையை உலுக்கினாள்.
மருத்துவர்களிடம் சென்றாள், உறவினர்களை நண்பர்களைக் கேட்டாள். அம்மாவை தொலைபேசியில் அழைத்து குடும்ப சரித்திரத்தை ஆராய முயன்றாள். இல்லை. அதுபோல் முன்னெப்போதும் இல்லை. எந்தப் பின்னணியும் இல்லை, குடும்பத்தில் ஆஸ்துமாவோ, ஆட்டிசத்துடன் தொடர்புடைய அணுசிதைவு நோயோ பரம்பரையில் எதுவுமில்லை, ஆனால் அடெல்லா இப்போது ஒரு விநோதமான ஆட்டிசக் கோளாறால் அவதியுறுகிறாள் என்றது மருத்துவ ஆய்வு.
ஜூல்ஸ் திரும்பினான் கசப்பான வாய்ச்சண்டைகளிட்டனர்.
‘இவள்தான் ஏதோ செய்திருக்க வெண்டும்!’ மோனா சீறினாள், முழங்காலில் நின்று அழுத பணிப்பெண்ணை நோக்கி.
‘இப்போது அதைச் சொல்லி என்ன பயன்!’ ஜூல்ஸ் அவளைக் கடிந்தான்.
அந்த வார்த்தைகள் மோனாவை முகத்தில் அறைந்தன. ஜூல்சின் நடவடிக்கைகளும் தொனியும் அவள்தான் குற்றம் செய்ததைப்போல் இருந்தன. கோபத்தில் அவனது முகத்தில் உமிழ்ந்துவிட்டு என்றென்றைக்குமாய் வீட்டைவிட்டு வெளியேறிவிட நினைத்தாள்.
‘அவன்தான் எப்போதும் உலகம் முழுவதும் பயணத்தில் இருந்தான். பல நேரங்களில் அவனால் ஒரு சந்திப்பை தவிர்க்க முடிந்திருக்கும் ஆனால் அவன் செய்யவில்லை.’ அந்த மோசமான நாட்களை நினைக்கும்போதெல்லாம் அவள் கோபம் பொங்கி அழும் நிலையில் இருப்பாள்.
ஆடெலாவை ஒரு ஆட்டிசக் குழந்தைகளுக்கான பள்ளியில் சேர்த்தனர். தங்கள் குழந்தை ஒரு எழுதுமேசையின் முன் உட்காரவைக்கப்பட்டு அவளுக்கு ஒரு தாளும் வண்ணமெழுகுக் குச்சியும் தரப்பட்டபோது அவர்கள் பயத்திலும் துக்கத்திலும் நடுங்கினர். மேற்பார்வையாளப்பெண் அவர்களைப் போல பலரும் உள்ளனர் என தைரியம் சொன்னாள்.
நான் முடித்தபோது மோனா சொன்னாள்-‘என் குழந்தை எனக்குத் திரும்பவும் வேண்டும்’. ஹோக்சோவையும் அவனுடைய அம்மாவையும் பார்த்தாள், அவர்கள் அவளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதைப்போல. ‘நான் மீண்டும் ஒரு தாயாக விரும்புகிறேன்.’ அவள் எதையாவது கீழே போட்டுவிட்டாலோ, ஒரு மேசையை இடித்துக்கொண்டாலோ அல்லது அழுதாலோ அவள் குழந்தை சிரித்தது, எந்த உணர்வும் இன்றி.
ஹோக்சோ அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தவர் இப்போது சொன்னார் ‘சில விஷயங்கள் திரும்பப் பெறமுடியாதவை, அவை எப்போதும் நிகழ்கின்றன. நாம் தயாராய் இருப்பதே சிறந்தது.’
பிறகு கிட்டத்தட்ட சிறுமி அடெல்லா உலகத்திலிருந்து விலகிக்கொண்ட அந்த காலத்தை ஒட்டி கேரான் டோகும் குடும்பத்தைச் சூழ்ந்த சோகத்தைக் குறித்துச் சொன்னார்
பக்கத்து கிராமமான யப்கோவின் விளையாட்டு மைதானத்தில் அது நிகழ்ந்தது. டோகுமின் மகன் இரண்டு வயதை அப்போதுதான் கடந்திருந்தான். ஒருவித இருமல் அவனது மார்பை உலுக்கிக்கொண்டிருந்தது, அவனது அன்னை அவனை அவரது அப்பாவின் கம்பளியில் சுருட்டி அவர்களுக்கு உதவி செய்ய பணித்திருந்த இளம் பெண்ணின் முதுகில் போட்டிருந்தாள். பத்து பன்னிரண்டு வயதிருந்த அப்பெண்ணின் முதுகில் அவன் வசதியாக இருப்பதாகத் தோன்றியது. அந்தச் சிறுமி கொஞ்சும் சத்தங்களை எழுப்பியபடியே மைதானத்தில் நின்றுகொண்டிருந்த பிற குழந்தைகளுடன் நின்றுகொள்ளச் சென்றாள், அவர்களும் குழந்தைகளை முதுகில் கம்பளியில் கட்டியிருந்தார்கள். அவர்கள் துள்ளிக் குதித்தார்கள், குழந்தைகள் செய்ய வேண்டிய எல்லா சேட்டைகளையும் செய்தார்கள். பலா இலையில் சுழலும் காத்தாடியைச் செய்தனர், வீடுகளுக்கிடையே ஓடினர், மண்மீதும் கற்கள் மீது பந்தயம் வைத்தனர்.தன் ஒளிகுறைந்த வீட்டில் பருத்தி நூற்றபடியே இருக்கும் வயதான விதவை டாஜெர் மட்டும்தான் அவர்களது உற்சாகத்தால் எரிச்சலடைபவள்.
‘பார்த்து விழுந்துவிடாதே’ அவள் கோபத்தில் கத்தினாள்.
பின்னிரவில் குழந்தைக்கு காய்ச்சல் கொதித்தது. தாயும் மகனும் அந்த நிம்மதியற்ற இரவில் நெருப்பிற்கு அருகில் உறங்கினர் காலையில் அக்குழந்தை எவ்வளவு உறைந்திருந்தது என்பதை அவள் கவனித்தாள். அவள் நடைமுறை தெரிந்தவள் என்பதால் மருத்துவமனைக்கு ஓடவில்லை. குழந்தைகளுக்குப் பல நோய்கள் வரும், அவள் அதை அறிந்திருந்தாள், இரு பெண்களை வளர்த்தவள் அவள். ஆனால் அவள் கவலையுற்றாள். குழந்தையின் நிலைமை முன்னேற்றம் காணாமல் இருந்ததால் பெற்றோர் பிகோவிலிருந்த மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முடிவு செய்தனர். அதிகாலையிலேயே அவர்களது குன்றின் அடிவாரத்தில் வரும் ஒரே பேருந்தில் கிளம்பினர். ஊரை அடைய நண்பகல் ஆனது. வழக்கமான மருத்துவர் இல்லை, புதிய மருத்துவரைக் காண காத்திருந்தனர். அவர்களின் முறை வருவதற்குள் நேரம் ஆகியிருந்தது. ஆனால் மருத்துவர் கனிவுடையவர். மாத்திரைகளை எழுதினார் தாதியிடம் சிறுவன் கெப்பிக்கு ஒரு ஊசியையும் போட சொன்னார். ஒரு வாரத்திற்கு அவனை படுக்கையில் கதகதப்பாக வைத்திருந்து பின்னர் அழைத்துவரச் சொன்னார்.
கெப்பி அதற்குப் பின் முன்னேற்றமடைந்ததாகத் தோன்றியது. அவன் அம்மா அவனுக்கு மசித்த சோறும் சுடு நீரும் கொடுத்தாள் அவன் வாயைத் திறந்து அவள் தந்த அனைத்தையும் உண்டான். ஆனால் இரவில் அவன் உரக்க அழுதான் அது அவளை பயத்தில் உறையச் செய்தது. ஒரு காலை அவனது தந்தை டோகும் அவனது தோளுக்கருகே கையில் ஒரு கரிய வடுவைக் கண்டார். அது எப்போதும் அங்கே இருந்திருக்கலாம் குழந்தை பெட்டியில் கட்டப்படும்போது ஏற்பட்ட தடம் என்று கருதினார்கள், கூடவே அவனை மருத்துவமனைக்கு எடுத்துச்செல்வதும் கவனித்துக்கொள்வதும் என அந்தக் வடுவை பெரிதாய் எடுத்துக்கொள்ளவில்லை. டேஜர் கிழவி பார்க்க வந்தபோது குழந்தைகள் விளையாடிய விதத்தைப் பார்க்கும்போது அவர்கள் குழந்தையை கீழே போட்டிருக்கவும் வாய்ப்புண்டு என கோபத்துடன் சொன்னாள். பணிப்பெண்ணை அவர்கள் கேட்டபோது அவள் வழுக்கி விழுந்ததாகவும் ஆனால் குழந்தை வெளியே விழவில்லை எனவும் சொன்னாள். அவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் தட் என கீழே விழுந்ததாகவும் சொன்னாள். அவ்வளவுதான்.
டோகும் அவரது மனைவியிடம் அந்த நாள் முழுவதும், இரவிலும் பேசவேயில்லை, தன்னை அந்த சோகத்திற்கு பொறுப்பாக்குவது குறித்து அவள் கடிந்துகொண்டது வரை பேசவில்லை. மறு நாள் காலை அவள் கையின் மேல் தன் கையை வைத்தார், எதுவும் பேசவில்லை, அவள் அவருள் மறைந்திருந்த பயத்தைப் புரிந்துகொண்டாள், அவரை மன்னித்தாள்.
ஆரவாரமின்றி, மெதுவாக நாட்கள் நகர்ந்தன. ஒரு குடும்பத்தின் உயிரோட்டம் குழந்தைகள்தான், எல்லோரையும் பயம் பீடித்திருந்தது. குழந்தை வாயை அகலத் திறந்து சத்தமற்ற கூக்குரலை எழுப்பியதை பார்த்துக்கொண்டிருந்த பெற்றோருக்கு ஆதரவாக கிராமத்தில் அனைவரும் செயல்பட்டனர். கெப்பியின் அம்மா அழுதாள், உணவு ஊட்டும்போது அவனது உதட்டின் தீண்டலில் பயந்தாள். டோகும் போதையூட்டப்பட்டவனைப்போல அலைந்துகொண்டிருந்தார், வருவோருக்கெல்லாம் தலையசைத்தபடியே. உறவினர்களின் அறிவுரையின்பேரில் பல சடங்குகள் செய்யப்பட்டன. டோகும் புகழ் வாய்ந்த மந்திரவாதிகளைத் தேடி நெடுந்தூரங்கள் அலைந்தார். ஒரு வருடம் கழிந்தது. குழந்தை நகரவில்லை, அழுதது, உண்டது, உறங்கியது, அதன் மேலுடல் முறுகி இறுகி அசைவின்றியிருந்தது. அவனை எங்கும் தூக்கியே சென்றார்கள். யாரோ சொன்னார்கள் ஒரு சிறப்பு சடங்கைச் செய்யவேண்டும் என, அது இப்போது வழக்கத்தில் இல்லை, ஆனால் ஒரு பாம்பின் ஆவி குழந்தையைச் சுற்றியிருந்தால் அதைத்தான் செய்ய வேண்டும்.
ஹோக்சோதான் அந்தச் சடங்கை நடத்த அழைக்கப்பட்டார். அவருக்கு அது இப்போது தெளிவாகத் தெரிந்தது என்று எங்களிடம் சொன்னார். காட்டுக்கு நடுவே வழக்கமாக மரம் வெட்டும் மரக்கிடங்கிற்கு ஒரு வெய்யில் காலை ஒன்றில் டோகும் சென்றார். மரத்தடிகள் இன்னும் குவித்துதான் வைக்கப்பட்டிருந்தன. அவற்றை மேலே அடுக்கி வைக்க ஒரு யானை ஒரு நாள் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தது. மரத்தடிக்கள் பின்னர் அளந்து அறுக்கப்படும். வேலையாட்கள் சத்தமாகப் பேசிக்கொண்டே மரக்குவியலை நோக்கி நகர்ந்தபோது யானை சட்டென உறைந்து நின்றது. கெஞ்சினாலும், தூண்டினாலும், மிரட்டினாலும் அது ஒரு அடிகூட முன்வைக்கவில்லை. எரிச்சலடைந்த வேலையாட்களுக்கு அப்போதுதான் மரக்குவியலில் ஒரு பாம்பு குடிபுகுந்திருக்கலாம் எனத் தோன்றியது. நினைத்தமாத்திரத்தில் அவர்கள் அனைவரையும் கொல்லும் பலம் கொண்ட ஒன்பது அடி உயர யானையை வேறு எது பயமுறுத்தும்?
டோகும் அது ஒரு ராஜ நாகமாக இருக்கலாம் என நினைத்தார். அவர்கள் எதையும் பார்க்க முடியவில்லை எனவே அவர்கள் மரங்களை தூக்க முயலவில்லை. நாகத்தின் வீரியம் அனைவரும் அறிந்ததே அது தூண்டப்படாமலே தாக்கும் என்பது தெரிந்ததே. பலமுறை அது சட்டென எழுந்து பாவப்பட்ட எவனோ ஒருவனை துரத்தியதுண்டு. அதன் விஷப்பற்கள் உள்ளிறங்கியதும் அது தாடைகளை அசைத்து இயன்ற அளவில் விஷத்தை உள்ளே ஏற்றிவிடும்.
இரவு முழுவதும் டோகும் மரங்களையும் யானையையும் நினைத்தபடி விழித்துப் படுத்திருந்தார். அவர் மனைவி பெருமூச்சு விட்டபோது சலசலப்பொன்றை அவர் கேட்டார். முழு நிலவு எழுவதைக் கண்டார். தான் என்ன செய்ய வேண்டும் என்று வினவிக்கொண்டார். எல்லாவித விலங்குகளும் வாழும் காடு சூழ அவர்கள் வாழ்ந்துவந்தனர், ஆனால் அவரது பல நண்பர்களையும்போல வேட்டையாடும் அனுபவம் அவருக்கு இல்லை, கொல்வதையும் அவர் விரும்பவில்லை. உண்மையிலேயே தடிகள் நடுவே பாம்பு இருக்குமானால் அந்த இரவே அது விலகிச் செல்ல வெண்டும் என செபித்தார்.
மறுநாள் காலை அவரது பழைய தொப்பியை அணிந்துகொண்டு தன் குறுந்துப்பாக்கியை விருப்பமின்றி எடுத்துக்கொண்டார். அதைப் பயன்படுத்தும் தேவை வரக்கூடாது என நினைத்துக் கொண்டார். இரண்டு சுற்று ரவைகளை மட்டும் எடுத்துக்கொண்டார்.
யானையை மீண்டும் தூண்டினர் அது படிய மறுத்தது. டோகும் தயார் நிலையில் மரங்களுக்கு அருகில் முழங்காலிட்டார். எந்த அசைவுமில்லை. மற்றவர்களும் யானையும் விலகி நிழலில் நின்றனர், டோகமின் முதுகு எரிந்ததை அவர் உணர்ந்தார். திடீரென அவரது கண்கள் வண்ணம் மாறும் ஒளிக்கீற்றொன்றால் ஊடுருவப்பட்டன. தங்க நிறம், பச்சை, கரிய ஊதா, சொல்லமுடியா அழகுடன் அது மாறிக்கொண்டும் ஒளிர்ந்துகொண்டுமிருந்தது. ஒரு கணத்தில் சூரிய ஒளியில் பொதியப்பட்டு திடீரெனத் தன்னை வெளிப்படுத்திய அந்தக் காட்சியை நோக்கிச் சுட்டார். அவரது பார்வை மங்கியது. ஒரு மரம் சிதறியதில் மரத் துகள்கள் எல்லா திசைகளிலும் பறந்தன. வேலையாட்கள் ஓடி வந்தனர் ஆனால் அந்தக் ஒளிக்காட்சி மறைந்துவிட்டிருந்தது. அவர்கள் மீண்டும் காத்திருந்தனர். அசைவெதுவும் இல்லை, எல்லாம் அசைவற்று அமைதியாக முன்பைப்போல இருந்தன. இப்போது அவர்கள் பொறுமையிழந்து உணர்ச்சியின் விளிம்பிலிருந்தனர்.
‘கட்டைகளை நகர்த்துவோம் வாருங்கள்’ என்றான் ஒருவன், சபித்தபடி துப்பியபடி அவர்கள் மரத்தடிகளை தூக்க ஆரம்பித்தனர், டோகும் துப்பாக்கியை எடுத்து மீண்டும் குறிபார்த்தார். அவரது உடலின் ஒவ்வொரு நரம்பும் தசையும் இறுக்கமடைந்திருந்தன. எந்தச் சிந்தனையும் இன்றி, தயாராகக் காத்திருந்தார், தவறிவிடக் கூடாது என வேண்டிக்கொண்டார். அப்போது அவர் ஒரு பயங்கர காட்சியைக் கண்டார். மரங்கள் ஒவ்வொன்றாக அசையும்போதும் சுற்றியிருந்த மலைப்பாம்பு ஒன்று தன்னை சுருள் சுருளாக தீவிரமாக விடுவித்துக்கொண்டிருண்தது. டோகும் பின்னர் என்றைக்கும் நினைவில் வைத்திருந்த பயங்கரம் என்னவென்றால் அந்தப் பாம்பின் முழுமுற்றான அமைதி. அதன் உடல் துப்பாக்கிச் சூட்டால் நடுவில் கிழிந்திருந்தது, இன்னும் போராடிக்கொண்டிருந்தது, மதியத்தின் ஒளி அதன் செங்குத்தான மஞ்சள் விழித்திரையில் ஒளிர்ந்தது. டோகும் மூச்சைப் பிடித்து நின்றார். அவர் தலைமுடி குத்துவதை உணர்ந்தார், சுழன்றுகொண்டிருந்த தலை நோக்கி ஒரு வேகத்தில் சுட்டார். அவருக்கு அதிஷ்டம் இருந்தது. தலை சிதறிப்போனது. உடல் வளைந்துகொண்டிருந்தபோதும் அந்த வியத்தகு ஒளிவண்ணம் மங்கிப்போவதை டோக்கம் கண்டார், சூரியனும் பசும் காடும் மங்கி மறைவது போல இருந்தது.
‘இதனால்தான்’ ஹோக்சோ தொடர்ந்தார் ‘சர்ப்பச் சடங்கு செய்யப்படவேண்டியிருந்தது. ஆனால் சிலவற்றிற்கு காலம் தேவைப்படுகிறது.’ இரவு முழுவதும் அவர்கள் மந்திரமிசைத்தும் ஆவிகளுடன் சமரசம் செய்தும் அக்குழந்தையை குணமாக்க வேண்டிக்கொண்டார்கள், ஆனால் ஆவிகள் அழைக்க முடியாத இடத்துக்குச் சென்றுவிட்டன. ‘திரும்பி வராத ஆன்மாக்கள்தான் அதிக ஆபத்தானவை’ என்றார்
மோனாவும் நானும் கேட்டுக்கொண்டிருந்தோம். கதை பிற கிராமவாசிகளைப் போல எனக்கும் நன்கு தெரிந்ததுதான். ‘இவையெல்லாம் எப்போதும் நடந்துகொண்டிருக்கின்றன.’ ஹோக்சோ சொன்னார் ‘நமக்கு நடக்கும்போதுதான் நாம் அறிந்துகொள்கிறோம்’.
ஹோக்சோ இப்படியே பேசிக்கொண்டிருந்தார். அவர் காலமற்ற தூரப் பகுதி ஒன்றில் வாழ்வதைப்போலிருந்தது. வீட்டில் அவரது பச்சை காக்கி அரைக்கால்சட்டையில் இருந்தபடியே, மனிதர்களின், விலங்குகளின், தாவரங்களின் வாழ்க்கையில், பிரபஞ்சத்தின் துவக்கங்களில் தனக்கிருந்த ஆர்வத்தை பழக்கிக்கொண்டார், அல்லது எப்படி ஒரு சிறந்த சதுரங்க ஆட்டக்காரர் ஆவது என யோசித்தார். மனிதனின், விலங்கின் எந்த ஒரு நிலைமையை அல்லது செய்கையைக் கண்டும் அவர் ஆச்சர்யமடைவதில்லை. அடெல்லாவின் ஆட்டிசம் குறித்து நான் பேசியபோது அவர் கவனித்தார் புரிந்துகொண்டார் அவரது வருத்தங்களை மோனாவிடம் அமைதியாக தெரிவிக்கவும் அவரால் முடிந்தது. ஆனால் அவள் முதலில் சொன்னபோது நான் நூலகத்தில் தேடவேண்டியிருந்தது. அவளது சோகத்தைப் பகிர்வது கொந்தளிப்பானதாய் இருந்தது.
இரு குழந்தைகளுக்கும் ஒரு பொதுவான குணமிருந்தது: அவர்கள் இருவருமே இசையை விரும்பினர். பெருநகரத்தில் ஆட்டிசக் குழந்தைகளுக்கான மையத்தில், மோனாவும் ஜூல்சும் அசைவற்று நின்றிருந்தனர், குழந்தைகளின் குரல் எழுந்து ஒரு இசைவற்ற வினோத ஒலியாகத் தடுமாறி ஒலித்தது. அவர்கள் கண்களில் அது கண்ணீரை வரவழைத்தது. பின்னர் அவர்களது மகள் ஒரு சிறிய கொட்டை முழக்கினாள், சரிந்த சிரிப்பொன்றை உதிர்த்தாள், அவர்கள் நிறைவடைந்தார்கள். கிராமத்தில் டோகமின் சிறு பையன் நாள் முழுவதும் படுக்கையில் இருந்தபடி வீட்டின் மூலை முடுக்கெங்கும் எதிரொலித்த வானொலி கேட்டான். அவனது சகோதரிகளும் நண்பர்களும் அவ்வப்போது அவன் முன் நின்று கேலிமுகம் காட்டிச் சென்றனர், அவ்வப்போது அவனைச் செல்லமாய்த் தட்டினர். அவற்றை அவன் உணர்ந்தானா என அவர்களுக்குத் தெரியவில்லை.
அந்தக் குடும்பத்தை சந்திக்க நான் வரும் ஒவ்வொரு நேரமும் ஒரேபோலத்தான் இருந்தது. அவர்களை சந்திக்க மோனாவை அழைத்துச் சென்றேன், வானொலி ஒலித்துக்கொண்டிருந்தது, அந்தப் பையனின் அம்மா புன்னகையுடன் வரவேற்றாள். இளமையாகவும் வலுவாகவும் இருந்தாள். ஒல்லியாகவும் கறுப்பாகவும் இருந்த டோகும் மூலையிலிருந்து சிரித்தபடியே எழுந்து வந்து பணிப்பெண் சில நாட்கள் வீட்டுக்குச் சென்றிருப்பதால் அவர்தான் தாதி என்றார். கசப்பான தேனீரை அருந்தினோம். அவரது மனைவி அனைத்தையும் செய்தார், கெப்பியின் சகோதரிகள் வளர்ந்து ஒல்லிக்கால்களையுடைய பதின்மவயதுப் பெண்களாகியிருந்தனர், அவர்கள் அலைந்து மோதிக்கொண்டிருந்தனர், நாங்கள் இடைஞ்சலில்லாமல் பேசுவதற்காக அம்மா அவர்களை அதட்டி வெளியே போகச் சொன்னார்.
அவர்களது நாட்கள் எப்படி கடந்து சென்றன என்பதை நான் மீண்டும் கண்டேன். கணப்படுப்பில் ஒளிர்ந்தெரியும் நெருப்பு, தழலின் அருகே சுருண்டுகிடந்த நாய்கள், மூலையில் கட்டில் என வாழ்க்கை மிக இயல்பாக சென்றுகொண்டிருந்தது, உலகெங்கிலும் ஒளிமங்கிய பல மூலைகளிலும் இருப்பவர்களைப்போலவே அவர்களும் தங்கள் வலியை மறைத்துக்கொ ண்டார்கள், பருவங்கள் மாறிக்கொண்டேயிருந்தன.
தமிழில் சிறில் அலெக்ஸ்