வானத்திலிருந்து விழுந்த பையன்.
ஹோக்சோ முதன்முதலில் இந்த உலகை நோக்கி தன் கண்களைத் திறந்தபோது பச்சை நிறத்தைக் கண்டான். சுவர்போன்று எழுந்த பச்சை மரங்களும், மூங்கில்களும். அவன் கன்னத்தில் திவலைகளைத் தெறித்து, அவனை நோக்கி கையசைப்பதாய்த் தோன்றும் ஒரு பெரும் பெரணி செடியை கழுவியபடி விழும் ஒரு பசும் நீர்வீழ்ச்சி.
அவர்கள் விரைந்துகொண்டிருந்தனர். அவன் பின்னாளில் தந்தை என அழைத்த ஒருவனின் தோளில் சுமந்துசெல்லப்பட்டான். அவனுக்கு அக்கணத்தில் தெரிந்தது தான் வியர்வை நாற்றமடிக்கும் கடினமான பெட்டி ஒன்றில் பிணைக்கப்பட்டிருக்கிறோம் என்பது மட்டுமே. சத்தமின்றி, தெரியாத நிலமொன்றின் வழியே சென்றுகொண்டிருந்தபோது அம்மனிதனின் உடலுரத்தை அவனால் உணர முடிந்தது; பரந்த முதுகில் தன் தலையை சாய்த்து பெரிய இதயத்தின் துடிப்பைக் கேட்டான்.
பெரும் மரங்களுக்கிடையேயான பயணத்துக்கு முந்தைய நிகழ்வுகளை ஹோக்சோ மீட்டுக் கொண்டதில்லை. உலகைப் பற்றி பேசும்போது, மனிதர்களைப்பற்றி, காட்டைப்பற்றி பேசும்போது உப்பையும் நிணத்தையும் சுவைப்பதாக நினைத்தான், கீழே விழுந்துகொண்டிருப்பதன் அதிர்ச்சியையும் உணர்ந்தான். ஆனால் அது ஏன் என்று அவனுக்கு உறுதிப்படவில்லை. அவனது கனவுகளில் ஒரு எரிந்தொளிரும் சூரியன் பூமியை நோக்கி சுழன்றுவருவதையும் அது செந்தீயாக வெடிப்பதையும், சாம்பலையும் நிணத்தையும் கொண்டு அவன் கண்களைக் குருடாக்குவதையும் அவன் கண்டான். அதனால்தான் ஒருவேளை அவன் கண்கள் இறுக மூடப்பட்டுள்ளதோ என அவன் நினைத்தான், பயங்கரமான ஒளியைவிட இருளையே அவன் விரும்பியதைப்போல அது அமைந்திருந்தது.
பசுமை நிறம் அவனை எப்போதும் சாந்தப்படுத்தியது. அது விடுதலையின், தனிமையின் நிறமாகியிருந்தது. எதிலிருந்து அவன் விடுதலை பெற்றான் அல்லது எப்போது என்று அவனால் சொல்ல முடியவில்லை அதேபோல காட்டுக்குள் நடந்து சென்று தனியாயிருக்கும் தேவை அவனுக்கு ஏன் இருக்கிறது என்பதையும் அவனால் புரிந்துகொள்ளமுடியவில்லை.
குன்றின் உச்சியில் இருந்த வீட்டை அவர்கள் அடைந்தபோது. ஒரு பெண் அவர்களை வரவேற்று ஓடிவந்தாள். அவள் இனிமையானவள், நல்லவள் என்று அக்கணமே அவன் அடையாளம் கண்டான். அவள் உயரமாகவும் இளமையாகவும் இருந்தாள், அவள் முகம் அன்பாலும் எதிர்பார்ப்பாலும் மலர்ந்திருந்தது.
“ஓ.கடவுளே!” அவள் சொன்னாள் ’ஆண் குழந்தை!’
பெட்டியிலிருந்த அவனை உயர்த்தினாள். இன்றுவரை ஐம்பது ஆண்டுகள் கடந்த பின்னும் அந்தத் தொடுகைக் கணத்தின் இனிமையை விட பெரிய மகிழ்ச்சி எதுவும் ஹோக்சோவின் நினைவில் இல்லை.
வீட்டில் வேறெந்த குழந்தையும் இல்லை என்பதை உடனே உணர்ந்தான் ஹோக்சோ. தனக்கு எத்தனை வயதாகிறது என்பது அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. யாரும் எதுவும் சொல்வதில்லை மேலும் யாரும் அவனிடம் ஒருபோதும் உனக்கு அப்பாவைப் பிடிக்குமா அல்லது அம்மாவைப் பிடிக்குமா என்று பிற குழந்தைகளிடம் கேட்பதைப்போல கேட்பதுமில்லை. பள்ளியில் சேர்ந்தபோது குழந்தைகள் அவனை வெறித்துப் பார்த்தனர். யாரும் அவனை வரவேற்கவில்லை, எதிர்நோக்கும், ஆர்வமும் நிறைந்த தன்னுடைய நிச்சயமற்ற புன்னகை மட்டுமே அவனுக்கு நினைவிருந்தது. ராக்குட் அவனது முதல் தோழன்.
‘இந்தா, பிடி!’ ராக்குட் ஒரு கல்லை அவனுக்கு எறிந்தான், அது அவர்களுக்கிடையே ஒரு அரைவட்டத்தில் எழுந்து சென்றது. ஆற்றிலிருந்து தட்டையான ஒரு கல்லை அவர்கள் விளையாட ராக்குட் குறிப்பாகத் தேர்ந்தெடுத்திருந்தான். அவர்களிடையே ஆச்சரியமான விதத்தில் நட்பிருந்தது. ஹோக்சோவின் அம்மா சோற்றுக் கேக்குகளைச் சமைக்கும்போது அவனது நண்பர்களை அழைத்தால் ராக்குட்தான் முட்டாளைப்போல இளித்துக்கொண்டு முதலில் வந்து நிற்பான், ஹோக்சோவோ தன் பெற்றோர்களின் வள்ளல்தன்மையில் மகிழ்ச்சியும் பெருமிதமும்கொண்டு குறைவாகவே சாப்பிடுவான். ஒருமுறை அவன் தந்தை ஒரு சிவப்பு அணிலை வீட்டுக்கு கொண்டுவந்தபோது ஹோக்சோ ராக்குட்டின் வீடுவரைக்கும் உச்சக் குரலில் அதைப் பார்க்க வரும்படி அழைத்தபடியே ஓடினான். ஒவ்வொருநாளும் அவர்களுக்குப் புதிதாக ஏதேனும் கிடைத்தது. ஒவ்வொருநாளும் அவர்கள் ஊரிலிருந்து தூரம் தூரமாய் குன்றின் மேல் சென்றலைந்தார்கள். பலவருடங்களாக, ஒவ்வொருநாளும் தங்கள் விருப்பத்திற்குரிய மலையில் ஏறிவிட்டு மரங்களுடனும், மூங்கில் புதர்களுடனும் துல்லிய கோடை வெளிச்சத்துடனும் தங்கள் சிந்தனைகளைப் பேசிக்கொண்டே கீழ்நோக்கி தங்களை விடுவித்துக்கொள்வார்கள்.
ஒருநாள் ஹோக்சோ ராக்குட்டின் வீடுவரை ஓடிச்சென்று வித்தியாசமான சத்தம் ஒன்றை கேட்கவரும்படி அவனை அழைத்தான். வீட்டைச் சுற்றி சத்தமின்றி நடந்து சென்று மூங்கில் இடுக்கில் எம்பி நின்று பார்த்தார்கள்.
‘உண்மதான். நான் சொல்றேன்ல’ ஹோக்சோவின் தந்தை பேசிக்கொண்டிருந்தார் ‘தண்ணி தெறிக்கிற சத்தம் கேட்டுச்சு. திரும்பி பாத்தா ஆத்தோட கர எழும்பிச்சு, அந்த பளபளப்பான மீனுக்குப் பின்னாடி தண்ணி விழுந்துகிட்டிருந்துச்சு.. அல்லது பாம்பாக்கூட இருக்கலாம்… எதுனாலும்… உடனே அது போயிடுச்சு. ஆனா நான் அதப் பாத்தேன்.. சொல்றேன்ல!’
‘ஹா.. அதெப்டி!’
‘நான் சொல்றேன்.. பாத்தேண்ணு’
‘எப்டி இருந்துச்சு?’
‘அதுக்கு கொம்பு வச்ச தல இருந்துச்சுண்ணு நினைக்கிறேன்’
‘என்னது!’
அங்கே இருந்த அனைவருக்கும் பிரிபிக்கின் கதை தெரியும், நீர் சர்ப்பம். பல தலைமுறைகளாய் அதை முதலில் பார்த்தவரின் பெயரை யாருக்கும் நினைவில்லை ஆனாலும் அந்நிகழ்வு அவர்களின் கூட்டுநினைவில் நிலைத்திருந்தது. கனமழை இரவொன்றில் ஒரு மீனவன் ஆற்றில் தன் வலைகளை விரித்துவிட்டு தனித்திருந்தபோது அது நடந்தது. தண்ணீர் விலகிய நேரம் விரையும் சத்தம் ஒன்றை அவன் கேட்டான். திடீரென அவன் நின்றிருந்த மரத்தின் கிளைகளில் பற்றிச் சுருண்டு தன் பழங்காலக் கண்களைக்கொண்டு அவனைப் பார்த்துக்கொண்டிருந்த சர்ப்பத்தை அவன் கண்டான். கொம்பு வைத்த அதன் தலைதான் அவனை அதிகம் அதிரச் செய்தது. உயிர்ப்பயத்தில் அம்மீனவன் ஓடினான், ஊரை நோக்கி, ஆனால் அந்தக் கொடுங்காட்சியின் விளைவிலிருந்து அவன் மீள முடியாது என எவராலும் யூகிக்க முடியும். ஒரு வருடத்தில் அவன் இறந்துபோனான், உடலுருக்கும் ஒரு நோயால்.
சகுனங்களை ஆராயும் எவருக்கும் மாயமான ஏதோ மீண்டும் நடக்கவிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது அதுவும் ஹோக்சோவின் தந்தை அதைப் பார்த்துவிட்டார். காட்டுக்கு நடுவே இருக்கும் இந்த சிறு வெளிகளில் மக்களுக்கு தீர்க்கதரிசனங்கள் கிடைத்தன. பெண்கள் கனவுகளைக் கண்டார்கள். இயல்புக்கு மாறாய் மான் குட்டிகளைப்போல அல்லது சிங்கக்குட்டிகளைப்போல வேகமாக வளரும் குழந்தைகள் பிறந்தார்கள். கிழவிகள் கொடிகளைப் பின்னலிட்டு நல்மரணத்திற்காக வேண்டினர்.
எனவே ஹோக்சோவின் தந்தை சிறிதுகாலத்திலேயே ஒரு வேட்டை விபத்தில் இறந்துபோனபோது யாரும் ஆச்சர்யமடையவில்லை. ஒரு சோக நிகழ்வு எதிர்பார்க்கப்பட்டதுதான். துப்பாக்கிகள் அந்தக் குன்றுகளுக்கு வந்த பின்னர் வேட்டை ஒரு வேட்கையாக மாறியிருந்தது. ஒரு நாளில் திடீரென ஒருவன் எழுந்து நிற்பான், சோம்பல் முறிப்பான், தன் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு காட்டிற்குள் நடப்பான். பல வேட்டைக்காரர்களும் பல நாட்களாய் காட்டுக்குள் காணாமல் போயினர், பரண் மீது படுத்துக்கொண்டு அல்லது ஒரு பரந்த கிளையில், விழிப்புடன், படுத்துக்கொண்டு நாட்களை கடத்தினார்கள். ஊரைவிட்டுத் தள்ளியிருந்த காட்டில், வேட்டைக்காரர்கள் பிரிந்து சென்று வேட்டையாடும்போது ஹோக்சோவின் தந்தை ஒரு இரை விலங்கென்று தவறாகக் கணிக்கப்பட்டார். மானா? கரடியா? அவரைச் சுட்ட மனிதனால் பெருந்துயரின் மத்தியில் சரியாகச் சொல்ல முடியவில்லை. அவன் ஒரு அசைவை மட்டும் நினைவில் வைத்திருந்தான், ஒரு கரிய வடிவம், அது நிச்சயமாக மனித உரு இல்லை என சத்தியம் செய்தான். ஊடுருவும் ஒரு அதிர்ச்சிக் கதறலையும் கோபக் கூக்குரலையும் கேட்டான் பின்னர் தலைதெறிக்க முள்ளடர்ந்த பகுதி நோக்கி ஓடினான், அங்கே தன் நண்பன் தாடைக்கும் கீழே குண்டடிபட்டுக் கிடப்பதைக் கண்டான். இரத்தம் கொப்பளித்தது அவன் கண்கள் விரிந்து நிலைத்திருந்தன.
‘ஏ..நான் கொல்லப்பட்டுவிட்டேன்!’ தரை நோக்கிக் குனிந்திருந்தார் அவரது துப்பாக்கி தரை நோக்கித் தாழ்த்தப்பட்டிருந்தது. அது அவரது தோளில் சாய்த்துவைக்கப்பட்டிருந்தது ஏனென்றால் அவரது வலதுகையும் சுடப்பட்டிருந்தது.
அவரது நண்பன் காட்டுக்குள் பைத்தியம் போல ஓடியபடியே சத்தமிட்டான், அழுதான். ‘உதவி! உதவி!’ அவன் கூக்குரல் ஊரில் ஒரு அதிர்ச்சியை பரப்பியது. எல்லோரும் வெளியே விரைந்தனர். ‘இவரது உடலை எடுத்துச் செல்ல உதவுங்கள்’.
இரவு முழுவதும் செயல்பட்டு, இறந்தவர் உடலை தூக்கி சுமந்து காட்டின்வழியாக, இழுத்தும், தள்ளியும், சாபமிட்டும், அழுதும், மலையிறக்கத்தில் ஈர இலைகளின் மீது சறுக்கியும், சேற்றில் புரண்டும் சென்றனர். ஊரை அடையும் நேரத்தில் அவர்கள் கிழிபட்டு காயமடைந்து சேற்றின், இறந்தவர் இரத்தத்தின் கறைபடிந்து நின்றனர். அக்காட்சி பயமூட்டியது. ஹோக்சோவின் அம்மா கதறியபடியே வெளியே ஓடி வந்தாள். உறக்கம் கலைந்து எழுந்த இளம் ஹோக்சோ அவள் காற்றில் ஒரு வெப்ப ஒளிப்பிழம்பாய் ஒளிர்ந்து மறைந்ததாய் கண்டான். அவனுக்கு எல்லாம் புரிந்தது, அந்த ஒரு கணத்தில் அவள் அந்த அசைவற்ற உடலை அணைத்து தன் கன்னத்தை சிதைந்த தலையின் மீது வைத்தபோது காதலின் இரகசியம் தன்னை அவனுக்கு வெளிப்படுத்தியது.
பின்பு அவள் சொன்னாள் ‘அவரை மூடுங்கள். எடுத்துச் செல்லுங்கள்.’
ஒரு மனிதனைக் கொன்றதற்குத் தண்டனை மரணம், உடனே ஒரு கூட்டம் கூட்டப்பட்டு பாதிக்கப்பட்டவர் சமரசத்துக்கு ஒப்புக்கொண்டால் விதிவிலக்குண்டு. அந்த இரக்கத்துகுரிய நண்பன் ஒரு மாதம் காட்டுக்குள் விலங்கைப்போல தலைமறைவாய் வாழும்படி தண்டிக்கப்பட்டான். நெருங்கிய உறவினர்கள் சமைக்கப்பட்ட உணவுகளைக் கொண்டுசெல்ல அனுமதி உண்டு, ஆனால் அவர் எப்படிப்பட்ட உணவை உண்ணவேண்டும் என்பதில் பல கட்டுப்பாடுகள் இருந்ததால் அவர்களை அப்படியே விட்டுவிடுவது வழக்கம். எவரும் தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, குறிப்பாக ஒரு மனிதனை இரை விலங்காகக் கருதிவிட்ட விதி கொண்ட அம்மனிதன், எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.
அப்போதும் அல்லது பின்னர் எப்போதும் யாராலும் விளக்க முடியாத ஒரு விஷயம் இறந்தவனின் சட்டைப்பையில் கண்டுபிடிக்கப்பட்ட சிறிய மீன். அது வழுவழுப்பான மீன், சிதைந்துபோயிருந்தது, அவன் சட்டை பிய்த்தெடுக்கப்பட்டு இரத்தம் துடைக்கப்பட்டபோதும் அதன் செதில்கள் அவர் தோலில் ஒட்டியிருந்தன. ஒருவேளை அங்கிருந்த சிறு ஓடை ஒன்றில் அவர் பிடித்த மீனாக இருக்கலாம். ஒருவேளை அவர் அதை ஹோக்சோவிற்காக எடுத்துவந்திருக்கலாம். அல்லது அது வேறொன்றின் பூத வெளிப்பாடாயிருக்கலாம். யாரால்தான் இவற்றையெல்லாம் சொல்ல முடியும்?
அப்படியே ஆனது, ஐடா குடியின் புகழ்பெற்ற தலைவன், வானத்திலிருந்து விழுந்த பையனின் தந்தை லுட்டரின் மரணம். தூரப்பரப்புகளிலும் துக்கம் கடைப்பிடிக்கப்பட்டது. ஹோக்சோவின் அன்னையும் ஊரில் இருக்கும் மேலும் ஒரு விதவையாகிப் போனாள், வேட்டை விபத்துக்களில் தன் கணவனை இழந்த பல இளம் பெண்களின் மத்தியில்.
கேலன் எனும் வேட்டைக்காரன் குறித்த வினோதம்.
பெருநகரத்துக்குச் சென்ற பயணம் ஒன்றில், பேச்சுவாக்கில் இந்தக் கிராமத்தைக் குறித்து என் தோழி மோனாவிடம் குறிப்பிட்டேன். அவள் ஒரு பத்திரிகை ஆசிரியர், எப்போதும் ஒரு சுவையான கதையை எதிர்நோக்கியிருப்பவள். அவள் உடனேயே என்னுடன் நான் வசிக்கும் இடமான குருடம் ஊருக்கு வர முடிவெடுத்தாள். அங்கிருந்து நாங்கள் விதவைகளின் கிராமத்துக்குச் செல்லலாம் எனவும் பேசிக்கொண்டோம்.
மோனாவும் நானும் டுயாங்கை அடைந்தபோது கோடையின் துவக்க காலம், அது என் அம்மாவின் மூதாதையரின் கிராமம். நாங்கள் மலையேறி ஹோக்சோவையும் அவன் குடும்பத்தையும் சந்திக்கச் சென்றோம். ஹோக்சோவின் வீடு, என் நினைவில் இருந்த மட்டும், எப்போதும் ஆட்களால் நிறைந்திருந்தது. அவனது இரு மகன்களும் அவர்களின் மனைவியரும் இருந்தனர், இப்போது அவர்களின் ஐந்து குழந்தைகளும், கூடவே நண்பர்கள், சகோதர சகோதரிகள் உறவினர்கள் என்று எப்போதும் யாரேனும் வந்து போயினர், வெறுமனே பேசுவதற்கும், வம்பளப்பதற்கும், அல்லது திண்ணையிலிருந்து கடுந்தேனீரும் அரிசிக் கள்ளும் குடிப்பதற்கு. அங்கு இரவும் பகலும் நெருப்பு எரிந்துகொண்டிருந்தது, கனமான மூடிகளையுடைய பானைகளும் சட்டிகளும் எப்போதும் நிறைந்தோ அல்லது இன்னும் பத்துபேர் உண்ணும் அளவுக்கு மீதங்களைக் கொண்டோ இருந்தன. அழுக்கடைந்து பயணத்தின் கதைகளைச் சுமந்துகொண்டு, குழுவிழுந்த சாலைகள், படகுப் பயணங்கள், அழிந்துவரும் காடுகள் வழியே தீடீரென வரும் விருந்தினர்களும் உண்பதற்கு எப்போதும் உணவு இருக்கும்.
குன்றின் மீது ஏறி வீட்டை அடைந்தபோது ஒரு பெண் எங்களை நோக்கி ஓடிவந்து வரவேற்றாள். அது லோசி. இறந்துபோன என் அம்மா ஹோக்சோவையும் அவளையும் குறித்த கதைகளைச் சொல்லியிருக்கிறார், அவர்கள் எப்படி சந்தித்தார்கள் பின்னர் எப்படி திருமணம் செய்துகொண்டார்கள்… வானத்திலிருந்து விழுந்த பையனும், ஆற்றுப் பெண்ணுக்குப் பிறந்த சிறுமியும். லோசி குறித்த அனைத்துமே அதாவது அவளது நடவடிக்கை, புன்னகை, கண்கள், அன்பையும் களங்கமின்மையையும் குறித்தன. பின்னர் ஹோக்சோவின் அம்மா நேரடியான சூரிய வெளிச்சத்தில் கண்களைச் சுருக்கிக்கொண்டு வந்தார். ஹோக்சோ முதலில் அவளைக் கண்டதைப்போலவும், என்னைப்போலவும் மோனா உடனடியாக அந்த அம்மாவின் மந்திரத்தில் வீழ்ந்தாள். அவளுக்கு இப்போது வயதாகியிருந்தது ஆனால் அவளது புத்தி கூர்மையானதாகவும் விழிப்புடனும் இருந்தது. கிராமத்தின் கதைகளைக் குறித்து மோனாவுக்கு இருந்த ஆர்வத்தைச் சொன்னபோது ஹோக்சோவின் அம்மா அமைதியாக இருந்தாள். பின்னர் ஆமோதித்தபடியே அதுதான் நம் விருந்தினருக்கு விருப்பமென்றால் அவள் தன் பேரன் போடாக் சொல்லும் கதையைக் கேட்கலாம் என்றாள். இப்படியாகத்தான் நாங்கள் கேலன் குறித்த வினோத கதையைக் கேட்டோம்.
அது அண்மையில்தான் நடந்திருந்தது, இரகசியக் குரலில் மட்டுமே அதைக் குறித்து பேசிக்கொண்டிருந்தனர். கேலன் மலேரியாவால் சில வாரங்கள் அவதிப்பட்டுக்கொண்டிருந்தான். ஒவ்வொருமுறை காய்ச்சல் பீடித்தபோதும் அவன் கோபத்தில் சத்தம் போடுவான். இந்தக் காய்ச்சலை முறியடிக்க ஒரு மருந்தைக் கண்டுபிடிக்கிறேன் பார், காத்திருங்கள் என்று கத்துவான். பின்னர் படுக்கையில் சுருண்டு படுப்பான், உடல் அதிரும் வியர்த்து ஊற்றும். காய்ச்சல் நின்றபின்பு சாந்தமான கண்களைத் திறந்து நோட்டமிடுவான். ஒரு நாள் ஆண்கள் சிலர் வேட்டைக்குப் போக முடிவெடுத்தனர். கீழே விழுந்த காட்டுப் பழங்களைத் தின்ன மான்கள் வரும் ஒரு இடத்தை பல நாட்களாக நோட்டமிட்டு வைத்திருந்தர்கள். அது ஒரு மிதமான கோடையின் காலை கேலனும் தனக்கு உடற்பயிற்சியும் புதிய காற்றின் சுவாசமும் தேவை என்று சொல்லி அவர்களுடன் புறப்பட்டான்.
கிருக்(வேட்டை) விதிகளை பின்பற்றி அவர்கள் வேட்டையாடினர், தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர் ஒரு இடத்திலிருந்து விலங்குகளை துரத்தி அடிப்பார்கள். பிறர் காத்திருந்து தாக்குவார்கள், துப்பாக்கிகள் தயார் நிலையில் இருக்கும். மதிய நேரத்துக்கருகில் ஆற்றோரமாய் குரங்குகள் கிரீச்சிட்டு, பரபரத்துக்கொண்டு கிளைகளை ஆட்டுவதை அவர்கள் கண்டார்கள். வேட்டைப்பகுதியின் எல்லையை அது குறித்தது. அது வழக்கத்திற்கு மாறான காட்சி, குரங்குகள் ஆற்றின் எதிர்போக்கில் போனபடியே, மரத்துக்கு மரம் தாண்டிக்கொண்டு அவர்களை நோக்கி கையசைத்து அவர்களை அழைப்பதுபோல இருந்தது. வேட்டைக்குழு பரந்து சென்று அவற்றைப் பின்தொடர முடிவு செய்தனர். செல்வதா நிற்பதா என்ற முடிவை யார் எடுத்தார்கள் என்பது தெளிவாயில்லை, ஆனால் போடாக் எல்லோரும் ஒரே நேரத்தில் வலப்பக்கக் கரையோரமாக எதிர்ப்போக்கில் நகரத்துவங்கினர் என்றார். எனவே திடீரென ஆற்றின் மறுகரையில் குரங்குகள் இருந்த பகுதியில் புதர்கள் நடுவிலிருந்து கேலன் தோன்றியது அவரை ஆச்சர்யப்படுத்தியது.
போடாக் பின்வாங்க ஆரம்பித்தார் ஆனால் கேலன் அவரை அமைதியாக இருக்கும்படி சைகை செய்தான். கேலன் தனது பழைய உரோமத் தொப்பியை அணிந்திருந்தை போடாக் பார்த்தார், ஒருவேளை அவன் இப்போதுதான் காய்ச்சல், வலிப்பிலிருந்து மீண்டிருப்பதால் இருக்கும், அவனுக்கு ஒரு தனித்துவமான, சவால்விடுவதைப்போன்ற புன்னகை இருப்பதையும் போடாக் கவனித்தார் – என்னை யாராலும் தடுக்க முடியாது என்று சொல்வதைப்போல. அவன் குரங்கு மாமிசம் இரத்தத்துக்கு நல்லது மலேரியாவைக் குணமாக்க வல்லது எனும் நம்பிக்கையைக் குறித்து யோசித்துக்கொண்டிருப்பான் என்று போடாக் யூகித்தார். எனவே அப்போது அவர் எதுவும் சொல்லவில்லை, அவனை சீக்கிரம் ஆற்றைத் தாண்டி வர வேண்டுமென அவசரப்படுத்தினார். கேலன் அவரைச் செல்லுமாறும், தான் உடனே வருவதாகவும் சைகை செய்தான். சிறிது நேரத்திற்குப் பின் மதிய ஒளி சட்டென மங்கியது. குரங்குக்கூட்டம் மறைந்துபோனது. காட்டில் புதைந்திருந்த வெம்மை ஆவியாய் மேலெழுவதை போடாக் உணர்ந்தார், ஒடுக்கும் அமைதி அதன்மேல் பரவியது.
பிறழ்விதி கொண்ட அக்கூட்டத்தின் வேட்டைக்காரர்கள் ஒவ்வொருவரும், இடி இடித்து அமைதியைக் குலைத்தபோது ஆச்சர்யமுற்றதாகப் பின்னர் கூறினர், மழை வீசி அறைந்தது. ஒரு கணத்துக்கு முன்புதான் வானம் தெளிவாயிருந்தது. மறைவிடங்களை நோக்கி ஓடுகையில் அவர்கள் ஒரு கூக்குரலைக் கேட்டார்கள், எதோ கெட்டது அவர்களுக்கு நேர்ந்துள்ளது என்பதை அவர்கள் அப்போதே உணர்ந்தார்கள். போடாக் சத்தம்போட்டு எல்லோரையும் கவனமாய் இருக்கும்படியும், தங்கள் இருப்பிடத்தைக் கூறும்படியும் கத்தியதை நினைவு கூர்ந்தார். எல்லோரும் அங்கே இருந்தனர், கேலனைத் தவிர. லோமா தான் அப்போதுதான் எதிர்கரையிலிருந்த குரங்கைச் சுட்டதாகக் கூறினான். எதுவும் சொல்லாமல் போடாக் நதிப்போக்கில் ஓடினார், அவர்கள் அவரைப் பின் தொடர்ந்தனர். வெறித்தனமான வேகத்துடன் அவர்கள் சலசலத்த நதியைக் கடந்து சென்றபோது அங்கே கேலன் ஒரு மரத்தில் சாய்ந்திருப்பதைக் கண்டார்கள். மழை வலுத்திருந்தது, இரத்தம் பெருக்கெடுத்து வழிந்தது. உடலின் உள்ளே சென்று வெடித்த ரவைகளால் அவனது உடல் சின்னாபின்னமாகியிருந்தது. அவர்கள் தங்களால் முடிந்ததைச் செய்தார்கள், செய்வதற்கு அதிகம் இருக்கவில்லை. ஓட்டக்காரன் ஊருக்கு செய்தி செல்ல ஓடிக்கொண்டிருக்கையில் மற்றவர்கள் கேலனைத் தூக்கி ஆற்றின் பாதையிலிருந்த மூங்கில் பாலத்துக்குக் கொண்டு வந்தார்கள், அதன் வழியே முடிந்தவரை சேதமில்லாமல் உடலை ஊருக்குக் கொண்டுவர முடியும்.
இறந்த ஒருவனின் உடல் எத்துணை அசைக்கமுடியாததாகவும் பயங்கரமாகவும் இருக்கும் என்பதை கற்பனை செய்ய முடியாது என்று போடாக் சொன்னார். உடல் வழுக்கிக்கொண்டேயிருந்தது. அவர்கள் விக்கித்து நடுங்கினார்கள், கிழிந்த உறுப்புக்கள் கையோடு வந்துவிடும்போல இருந்தது. அவர்கள் பாலத்தை அடைந்த பின்னர் போடாக்கும் லோமாவும் உடலைச் சுமந்தார்கள் மற்றவர்கள் பின்னால் துப்பாக்கியுடனும் கேலனின் தொப்பியுடனும் தொடர்ந்தார்கள். போடாக் பாலத்தைக் கடந்ததும் பாலத்தின் கட்டு அவிழ்ந்தது, நடுவில் தளர்ந்த பாலம் பின்வந்தவர்களை ஆற்றில் கவிழ்த்தது. அது ஒரு சபிக்கப்பட்ட மதியம். ஊரார் மூங்கில் பந்தங்களை ஏற்றி காத்திருந்தனர். வேட்டைக்குப் போனவர்கள் நலிந்தும் மயக்கத்திலும் தீய ஆவிகளின் பிரதேசத்திலிருந்து வருபவர்களைப்போல திரும்பி வந்தனர்.
கேலனின் மனைவி, ஓமும், இப்போது அவளது பெற்றோருடன் வசிக்கிறாள். அவளுக்கு இரு சிறு குழந்தைகள் இருந்தன, இருபதுகளின் மத்தியைக்கூட அவள் எட்டியிருக்கவில்லை. நாங்கள் சந்தித்தபோது அவள் இன்னும் கூந்தலை ஒரு ஜிம்னாஸ்ட்டைப்போல பின்பக்கமாக வண்ணப் பட்டைகளால் கட்டியிருந்தாள். தண்ணீர் எடுத்துவந்தாள், மாலைக்கான நெருப்பை ஏற்றினாள், பன்றிகளுக்கும் கோழிகளுக்கும் உணவிட்டாள், வருத்தங்களைச் சொல்லவோ கோபத்தில் முறையிடவோ நிறுத்திக்கொள்ளாமல் தன் வாழ்க்கையைத் தொடர்ந்தாள்.
அந்த கிராமமும் ஓமுமைப்போலவே இயல்பாகவே இருந்தது, ஆழ்மனதில் மீண்டெழும் சக்தி கொண்டதாக, அதற்காக பழக்கபடுத்தப்பட்ட ஒன்றைப்போல இருந்தது. காயங்கள் மரணங்களுக்கு மத்தியிலும் புதிய தம்பதிகள் வீட்டை விட்டு கோபமாக வெளியேறினர், குழந்தைகளைக் கைவிட்டுவிட்டு, ஒருவர் ஒருவர்மீது வசை பொழிந்துகொண்டு, வாழ்வதும் உறவாடுவதும் தற்காலிகமான ஏற்பாடு என்பதைப்போல. ஒன்றோ இரண்டோ மாதங்கள் தாண்டி திரும்பி வந்தனர், தயக்கத்துடனும், கீழ்ப்படிதலுடனும், பின்னர் கனமான நிச்சயமற்ற குடும்ப வாழ்வில் சபித்தும் சிரித்தும் நிலைகொள்கின்றனர்.
ஆயினும் அங்கே சிலர் திரும்ப வராமலும் போயினர். அவர்களது கோபமும் குழப்பமும் அவர்களை நெடுந்தூரம் தூக்கிச் சென்றது, மலைகளைத் தாண்டி, ஆற்றின் போக்கில், அவர்களால் விட்டுச் செல்லப்பட்டவர்கள் அவர்களின்றி வாழக் கற்றுக்கொண்டார்கள். சில நேரம் அவர்கள் பாடல்களிலும் கதைகளிலும் நினைவுகூரப்படுவார்கள், இறந்தவர்களைப்போல.
தமிழாக்கம் சிறில் அலெக்ஸ்