பனிநிலங்களில். கடிதம்

அன்புள்ள ஜெ,

நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.

தங்களது ஸ்கேண்டிநேவிய பயணம் நல்லபடியாக முடிந்து, எதிர்பார்த்தது போலவே பயணத்தொடர்  வந்து கொண்டிருக்கிறது. ஆர்வமாக வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன்னர் பணி நிமித்தம் காரணமாக எனக்கு ஸ்வீடனின் கோதன்பர்க் நகரில் ஒரு வருட காலம் போல் வசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. குடும்பம் இங்கிலாந்தில் இருக்க, நான் மட்டும் கோதன்பர்க் நகரில் தங்கியிருந்து மாதம் இரண்டு அல்லது மூன்று முறைகள் இங்கிலாந்து வீட்டிற்கு வந்து போய்கொண்டிருந்தேன். திங்கள் காலை 7:10 மணிக்கு லண்டன் ஸ்டன்ஸ்டட் விமான நிலையத்தில்  விமானம் பிடித்தால் கோதன்பர்க் காலை 10 மணி மீட்டிங்கிற்கு போய்விடலாம் (லண்டனின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்கு செல்ல சில சமயங்களில் இதை விட அதிக நேரம் ஆகிவிடும்!).

அன்று அந்த நிலக் காட்சிகள் அளித்த பரவசங்கள் இன்னும் நினைவிருக்கிறது.  பூமத்திய ரேகையில் இருந்து வெகுவாக விலகியிருக்கும் இப்பிரதேசங்களின் கால நிலைகளும் அவை மாறும் போது அதன் நில விளைவுகளும் நமக்கு, வருடம் முழுவதும் காலை 6 மணிக்கு சூரியன் எழுந்து மாலை 6 மணிக்கு மறையும் நிலத்திலிருந்து வரும் நமக்கு, மிக வித்தியாசமாக, புதிராக அமைகின்றன.

இங்கிலாந்து வந்த புதிதில் இங்குள்ள ஆங்கிலேயரிடம் இதை (வருடம் முழுவதும் சூரிய உதய/அஸ்தமனம் ஒரே நேரத்தில்)  என்று சற்று பெருமையாக (!) சொன்னபோது Oh that must be boring என்றார். முதலில் சற்று திகைத்தேன்!

முக்கியமாக பனிக்காலத்தையும் கோடைக்காலத்தையும் மென்மையாக இணைத்துக்கொள்ளும் வசந்த காலமும் இலையுதிர் காலமும் இம்மாற்றங்களை தெளிவாக காட்டுகின்றன. எனக்குப்பிடித்த பருவங்களும் கூட. ஒரு வருடத்தின் அனைத்துப் பருவங்களையும் ஸ்வீடனில் கழித்ததில் எனக்கு மிக திருப்தி!

ஸ்வீடனில் எனக்கு முதலில் பளிச்சென பட்ட விஷயம், மிகக்குறைந்த மனித நடமாட்டம்… கிட்டத்தட்ட நம் ஊர்களின் “பந்த்” நாட்களைப் போல்! ஷாப்பிங் மால்களிலும் விளையாட்டு அரங்களின் உள்ளும் நகர் மத்தியிலும் மானுடர்கள் நிறைந்திருந்தாலும் வெளியே மனித நடமாட்டம் மிகக் குறைவு. அங்கிருந்து திரும்ப செம்ஸ்போர்ட்டிற்கு வந்தால் கிட்டத்தட்ட சென்னை துரைசாமி சப்வேற்கு அருகில் வந்தது போல் இருக்கும்.

முதன் முறையாக கோதன்பர்க் நகரின் சிட்டி ஏர்போர்ட்டில் இரவு 9.30 மணி போல் இறங்கி வெளியே வந்தால் கடும் காடு. என்னைத் தவிர யாருமே டாக்ஸிக்கு காத்திருக்கவில்லை. கிட்டத்தட்ட “துணிவே துணை” ஜெய்சங்கர் போல் விழித்து விட்டு, சரி ஏர்போர்ட்டிற்குள் நுழைந்து டாக்ஸி பற்றி விசாரிக்கலாம் என்று திரும்ப வாயிலுக்கு வந்தால்…ஏர்போர்ட்டைப் பூட்டிவிட்டார்கள். காலை 6 மணிக்குத்தான் திறக்கப்படுமாம்…  பின்னர் அரை மணி போல் காத்திருந்து (“நம்பிக்கைத்தானே வாழ்க்கை”!) வழி தவறி வந்து நின்ற டாக்ஸியின் வலது பக்க கதவை வழக்கம் போல் திறந்து ஸ்டீயரிங் வீலைக் கண்டு திகைத்து, வழிந்து, எதிர்ப் பக்கம் போய் அமர்ந்த சென்ற பொழுதில் இருந்து அடுத்த ஒரு வருடம் வாழ்நாளில் ஓர் மிக அற்புதமான அனுபவமாக இருந்தது.

வித்தியாசமாக உணர்ந்த இன்னொன்று – ஸ்வீடனில் அலுவலகத்திலும் வெளியிலும் என்னை நிற வேறுபாடு இல்லாமல் உணர்ந்தேன். பிரிட்டனில் என்ன இருந்தாலும், எத்தனை வருடங்கள் வாழ்ந்திருந்தாலும் சின்ன “அந்நியன்” ஹாஷ்டேக், மெல்லிய நோட்டு வெள்ளிக்கம்பி  போல் உணர்வோம். ஸ்வீடனில் அப்படியில்லை…

அதாவது, ஆரம்பத்தில் அப்படியில்லை! ஆனால் கொஞ்ச காலம் கழித்து, நிச்சயம் உணர்வோம். நாம் மிக சிறுபான்மையினராக இருக்கும் வரை, மதிப்பும் புதியவர்களுக்கு உதவும் மனப்பான்மையும் உண்டு. Mini indisk ஆக இருக்கும் வரை. அது மாறும் போது உள்ளூரார் மெல்ல பதற்றமும் எதிர் வினைகளை கொள்வது தெரியவரும். அது இயல்புதான்.

அமெரிக்க மற்றும் ஸ்வீடிஷ் தமிழர்கள்/இந்தியர்களை உங்கள் அனுபவத்தில் ஒப்பிட்டு எழுதியிருந்தீர்கள்.முன்னேறிய நாடுகளை ஆங்கிலத்தை தாய் மொழியாக கொண்டவை (அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் போன்ற) மற்றும் ஆங்கிலம் அல்லா தாய்மொழியைக் கொண்ட நாடுகள் என பிரித்துக் கொள்ளலாம்.
இரண்டாம் வகையில் வரும் இம்மாதிரியான ஸ்கேண்டி நேவி நாடுகளின் தாய்மொழியே குடியேற்றவாசிகளின் முதல் தடை. ஸ்டாக்ஹோம், கோபன்ஹேகன், கோதன்பர்க் போன்ற பெரிய நகரங்களில் ஆங்கிலத்தை வைத்து ஓரளவிற்கு சமாளித்துவிடலாம் என்றாலும் உள்ளூர் மொழி அவசியம். பத்து வருடங்களுக்கு முன் பெரும்பாலான உள்ளூர் இணையதளங்கள், அரசாங்கத்திடமிருந்து வரும் கடிதங்கள், மருத்துவமனைகள் எல்லாம் ஸ்வீடிஷ் மொழியில் மட்டுமே இருந்தது மிக சங்கடத்தை கொடுத்திருந்தது. (சூப்பர் மார்க்கெட்டில் பால் வாங்க போய் தயிர் வாங்குவதும், தயிர் வாங்கப்போய் பால் வாங்கிவருவதும் (இரண்டு அட்டைப்பெட்டிகளிலும் பசு இருந்ததே!). இன்று நிலைமை முன்னேறியிருக்கும். அன்று நான் பணிபுரிந்த வால்வோ கார் நிறுவனத்தின் தலைமையகத்தில் பணிபுரிய வந்திருந்த டர்பன் சீக்கியருடன் உணவு கூடத்தில் புகைப்படம் எடுத்துக்கொள்ள சிறு வரிசையை கண்ட நினைவிருக்கிறது.

நீங்கள் குறிப்பிட்டது போல் அமெரிக்காவுடன் ஒப்பிட இங்கு இந்தியர்கள்/தமிழர்கள் மிகக் குறைவு.  அதற்கு முதன்மையான காரணம், சமீபகாலமாகத்தான், இரண்டாயிரத்திற்கு பின்னர்தான், தகவல் தொழில்நுட்பத்துறையிலும் ஆய்வுத்துறையிலும் நம்மவர்கள் வர,வாழ ஆரம்பித்திருக்கிறார்கள்.
அமெரிக்கா, பிரிட்டன் போல் 60 களிலிருந்து இல்லாமல் இங்கு குழந்தைகள் பெரும்பாலும் முதல் தலைமுறை. எனவே படிப்பிற்கான பரபரப்பு/பதற்றம் இன்னும் இல்லை. இருந்தும் எனக்குத் தெரிந்தே நிறைய குடும்பங்கள் குழந்தைகளின் எதிர்கால படிப்பிற்காக இங்கிலிஷ் அல்லாத ஐரோப்பிய நாடுகளிலிருந்து பிரிட்டனுக்கோ/அமெரிக்கா/ஆஸ்திரேலியா போன்ற இங்கிலிஷை முதன்மொழியாக கொண்டநாடுகளுக்கு குடியேற்றம் செய்திருக்கிறார்கள்/வாய்ப்பிற்கு காத்திருக்கிறார்கள். நானுமே ஓர் உதாரணம்தான். ஸ்வீடனுக்கு நிரந்தரமாக குடியேறியிருக்கலாம்; மகனின் மேல்நிலை/கல்லூரிப் படிப்பை உத்தேசித்துதான் பிரிட்டனில் தொடர்வது எனும் முடிவை ஏதோ ஒரு கணத்தில் எடுத்தோம்.

இன்னொரு காரணம், ஒருவேளை இந்தியாவிற்கு திரும்பி செல்லும் சூழ்நிலை அமைந்தால், ஆங்கில வழி கல்வியில் தொடர குழந்தைகளுக்கு வசதியாக இருக்கும் என்பதே.

தங்களின் நம் அமெரிக்க குழந்தைகள் தொடருக்கான கடிதங்களில் திரு.நியாண்டர் செல்வன் என்பவர் குறிப்பிட்டிருந்தது போல (“சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே”) எந்த பெற்றோருக்குமான கவலை/எதிர்பார்ப்பு. அமெரிக்காவில் ஹார்ட்வேர்ட் எனில் பிரிட்டனில்/ஐரோப்பாவில் ஆக்ஸ்பிரிட்ஜ் (Oxford/Cambridge). எல்லா பெற்றோர்களுக்கும் இருக்கும் எதிர்பார்ப்புதான் இது,

மற்றபடி, எல்லோரையும் போலவே, இங்கும் தாண்டியா ஆர்த்தி, தீபாவளி போன்ற சீசனல் கொண்டாட்டங்கள், ரஜினி பட ரிலீஸ், கிரிக்கெட் (குளிர்காலத்தில் உள்ளரங்கில்!)…

தங்களின் பயணக்கட்டுரையின் மூலம் எனது பழைய அனுபவத்தை சற்று நினைவு கூர்ந்தேன்! நான் தங்கியிருந்த அபார்ட்மெட்ண்டின் எதிரில் சற்றே பெரிய குன்று – ஏறி இறங்கி சுற்றி வர ஒரு ஆறு மைல்கள் பிடிக்கலாம்.

என்னுடன் பணிபுரிந்து/வசித்துகொண்டிருந்த தமிழ், தெலுங்கு நண்பர்கள் வார இறுதி நாட்களில் படு பிஸியாக, இன்டர்நெட்டில் லேட்டஸ்ட் தமிழ், தெலுங்கு திரைப்படங்களை தரவிறக்கி (இணையத்தின் வேகம், அதி வேகம்) பார்த்துக்கொண்டிருக்க, எனது வார இறுதி காலைகள் அக்குன்றில்தான்.
பெரும் மான்கள், அவற்றை விட சற்றே குறைந்த அளவிலான முயல்கள், இன்னும் சற்று குறைவான காளான்கள் கொண்ட அப்பிரதேசத்தில் வேறு யாரும் இருக்க மாட்டார்கள். “காடு” நாவலின் பாதியை அங்குள்ள மரத்தின் அடியில் அமர்ந்து வாசித்தது இன்றும் பசுமையாக நினைவிருக்கிறது.

செப்டம்பர்/ அக்டோபர் மாலை மதியங்களின் வானங்கள் அத்தனை வண்ணமயமானவை. பார்த்துக்கொண்டிருக்கவே சிவப்பும், மஞ்சளும் நீலமும் கலந்து ஏதோ ஒரு பூமியை விட்டு இன்னொரு கிரகத்தில் இருக்கும் கிறக்கத்தைக் கொடுப்பவை. நான் மட்டுமே அதற்கு சாட்சி(என் பழைய மொபைல் போனும்!). Contact Ellie போல் எனக்கு மட்டுமேயான அனுபவங்களாக வைத்துக் கொண்டிருக்கிறேன். சில படங்களையும் இணைத்திருக்கிறேன்.

ஸ்வீடன் போன்ற நாடுகளின் பொது மனநிலை என்பது பண்பாட்டுத் தாராளவாதமே. அந்த மனநிலையுடன் உரையாடும் தமிழ், இந்தியப் பண்பாட்டுக் கூறுகளைக் கண்டடைந்து அவற்றை வளர்த்துக்கொள்வதே இன்று அவசியமானது. அவ்வண்ணம் ஓர் உண்மையான பண்பாட்டு செயல்பாடு ஐரோப்பியத் தமிழர்களிடையே நிகழ்ந்து, அதன் விளைவான ஓர் அடையாளம் அங்கே அவர்களுக்கு உருவாகுமென்றால் அதுவே நாம் இன்று காணத்தக்க பெருங்கனவு.

aம், பெருங்கனவு… எந்த நிலப்பரப்பிலும் குடியேறிய முதல் தலைமுறை எதிர்நோக்கிய சவால்கள் அதிகம். முதல் குழந்தையை வளர்த்து அதன் அனுபவங்கள்/தவறுகள் மூலம் குழந்தை வளர்ப்பைக் கற்றுக்கொள்ளும் பெற்றோர்கள் போல் அந்த முதல் தலைமுறை தட்டுத் தடுமாறி விழுந்து எழுந்து நின்று கற்றுக்கொண்டவை ஏராளம். மற்ற தேசங்களைப் போலவே இந்த நிலத்திலும் இந்த தலைமுறை வேரூன்றி ஆரோக்கியமாக வளரும் என்று நம்புவோம்.

பயணக்கட்டுரைகளுக்கு மிக்க நன்றி ஜெ

பின்குறிப்பு:

இப்போதுதான் படித்தேன் – பனி நிலங்களில் -6. துருவ ஒளியை பார்க்க முடியவில்லை என்பது நிச்சயம் ஏமாற்றம் தான் இருக்கும். . துருவ ஒளி- என் கனவுப் பயணப் பட்டியலில் உண்டு; அண்டார்டிக்கா பயணமும் . நிச்சயம் ஒரு நாள் இவைகளைப் பார்த்து விடுவோம் ஜெ!

சிவா கிருஷ்ணமூர்த்தி

பனிநிலங்களில் -8

பனிநிலங்களில்- 7

பனிநிலங்களில்-6

பனிநிலங்களில்- 5

பனிநிலங்களில்-4

பனிநிலங்களில் -3

பனிநிலங்களில்- 2

பனிநிலங்களில்- 1

முந்தைய கட்டுரைஷேக்ஸ்பியர், அருண்மொழி உரை- கடிதம்
அடுத்த கட்டுரைஈழத்துப் பூராடனார்