கலைத்தலின் நுட்பங்கள்- சி.பழனிவேல் ராஜா

அன்புள்ள ஜெ,

சில மாதங்களுக்கு முன்பு இந்திய தலைநகரின் மையப்பகுதியில் சுமார் 100  அடி உயரமுள்ள இரட்டைக் கட்டிடங்கள் “waterfall implosion” என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தரைமட்டமாக்கப்பட்டன. அது சாதாரணமான இடித்து நொறுக்கி எடுத்த பணி அல்ல. அந்த கட்டிடத்தைக் கட்டுவதற்குத் தேவையான தொழில்நுட்பத்தை விட மேலான, பல பொறியியல் நிபுணர்களால் திட்டமிட்டு, மிக நுட்பமான கணக்கீடுகளுக்குப் பின் செயல்படுத்தப்பட்ட அறிவியல் அற்புதம். விளைவாக எது உடைய வேண்டுமோ அது மட்டும் உடைந்தது. எப்படி உடையவேண்டுமோ அப்படியே உடைந்தது.

நகரின் மையத்தில் இருந்த மிகப்பெரிய கட்டுமானமாக இருந்தாலும் அதன் உடைப்பினால் அருகில் இருக்கும் சிறிய கட்டிடங்களுக்கோ மனிதர்களுக்கோ பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. மாறாக ஒரு சிறிய மண் சுவரை உடைப்பதற்கு இத்தகைய திட்டமிடல் தேவையில்லை.பெரிய தொழில் நுட்பமோ, அறிவியல் கணக்கீடுகளுக்கோ அவசியம் இல்லை யாரும் செய்யக்கூடிய ஒன்றுதான் அது.

சமூகத்தில் குறிப்பாக இந்தியா போன்ற கலாச்சார வேறுபாடுகள் நிறைந்த சமூகத்தில், அனைவருக்கும் பொதுவான கலாச்சார, பண்பாட்டுக் கட்டுமானங்கள் மிக மெதுவாக ஏற்படுகின்றன. பனி நிலத்தின் குளிரில் கொஞ்சம் கொஞ்சமாக உறையும் பனிக்கட்டி பாறைக்கடினம் கொள்வதுபோல அங்கு நிகழும் கலாச்சார கட்டுமானங்கள் மிக இறுக்கமாக, உடைப்பதற்கு இயலாததாக, கட்டிப்பட்டே உருவாகி அமைகின்றன. அப்படி உருவாகிவரும் கடினமான கட்டுமானம் அந்த நாட்டின் பொதுப் பண்பாடாக எதையும் தாங்கி நிலைபெறும் அமைப்பாக அமைகிறது.

இத்தகைய கடினமான அமைப்புகள் அது உருவாகிவரும் பண்பாட்டுக்கு செய்யும் நன்மையின் காரணமாகவே நீண்டகாலம் நின்று நிலைபெற்று இறுகி அமைகிறது. ஓடும் நீர் கங்கையைப் போன்றே புனிதமானதாக இருந்தாலும் அதுவே தேங்கும் போது கெட்டுவிடுவது போல மாற்றமில்லாத பண்பாட்டு இறுக்கங்கள் காலத்தின் நீட்சியில் கேடாக திரிபு கொள்ள ஆரம்பிக்கின்றன. எனவே காலஓட்டத்தில் தொடர் மாற்றங்கள் அவசியமாகின்றன.

அன்றெழுந்து மறையும் சிறிய பண்பாடுகள்போல அல்லாமல் இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டின் பண்பாட்டில் அமையும் மாற்றங்களுக்கு மேலே சொன்ன பெரிய கட்டிடங்களை உடைக்கும் நுண்மை போல தேர்ந்த தொழில்நுட்பம் தேவைப்படுகிறது. எடுத்தோம் மாற்றினோம் என்ற செயல்பாடுகள் மிக தீமையை உருவாக்குவதற்கு சாத்தியங்கள் இருக்கின்றன. அதற்குத்தான் சாரு போன்ற எழுத்தாளுமைகள் உருவாகி வருகிறார்கள். அவர்கள் இந்த சமூகத்தை கட்டியெழுப்பும் எழுத்தாளுமைகள் போலவோ அல்லது அதைவிட மேலாகவோ முக்கியமானவர்கள்.

****

இந்திய சமூகத்தில் புரையோடியிருக்கும் தீமைகளில் மிக முக்கியமானது சாதி. இன்று நாம் பார்க்கும் சாதி எதிர்ப்பாளர்கள் சிலர் பொதுவெளியில் சாதி இல்லை என்று பிரச்சாரம் செய்தாலும் தன்னளவிலும் தன் குடும்ப அளவிலும் சாதியை விட்டு வெளிவர முடியாத நிலையிலேயே இருக்கின்றனர். என்னுடன் பணிபுரிந்த, பொதுவுடைமை பேசும் நண்பர் ஒருவர், அவர் சந்திக்கும் ஒவ்வொருவரையும் மேல் சாதி இல்லை என்று தெரிந்துகொண்டுதான் மேற்கொண்டு “நெருங்க” ஆரம்பிப்பார். ஆனால் அவர் வீட்டில் பிள்ளைகளுக்கு திருமணம் நடந்த போது மனைவியின் “சொந்த விருப்பம் அது அவரது சுதந்திரம்” என்று சொல்லி மிக ஆச்சாரமாக நடத்தினார். இவர்கள்தான் சாதியை ஒழிப்பவர்கள் என்று மேடை தோறும் பேசித் திரிகிறார்கள்.

“”இந்தியப் பொதுவுடமை இயக்கத்திலும் உயர்சாதியினரின் ஆதிக்கம்தான் இருந்துவருகிறது. இவர்களால் பறையரின் உளவியலைப் புரிந்துகொள்ள முடியவில்லைஇவர்கள் மொண்ணையாக சாதி இல்லை என்கிறார்கள். ஓர் உயர்சாதியைச் சேர்ந்தவன் தன் சாதியை மறந்து விட முடியும்சாதி கிடையாது என்று சொல்ல முடியும். ஒரு பறையனால் அது முடியவே முடியாது. பல படித்த பறையர்கள் தம் சாதி குறித்த தாழ்வு மனப்பான்மையினால் பிராமணராகி விடுகிறார்கள். இதுதான் கூடாது என்கிறார் ராஜன். நான் பறையன் என்று சொல்தலை நிமிர்ந்து சொல்இச்சமூகத்தின் அடிச் சக்தியாக இருந்து இயக்குவது எமது உழைப்புதான் என்று சொல். இப்படித்தான் நான் பறையனானேன். இது அனைவருக்கும் ஒரு சமூகக் கடமை. “”

“”நீங்களும் உங்கள் நண்பர்களும் சாப்பாடு வரவழைத்த போது மாடசாமி தனது சாப்பாட்டு டப்பாவைத் திறக்க முனைந்ததும் ஏதோ மாடசாமி ஒரு தகாத செயலைச் செய்து விட்டதுபோல் மிக அவசரத்துடன் அவரைத் தடுத்தது மட்டும் அல்லாமல் அதற்குப் பிறகும் அவரை மிக மோசமாக நடத்தியிருக்கிறீர்கள்.

இது மனதில் இருக்கும் நுண்ணிய சாதிய ஏற்றத் தாழ்வு மனப்பான்மையை சுட்டிக்காட்டுகிறது. மாற்றம் தனிமனிதனில் இருந்து அவர்களின் அன்றாட பிறப்பு வளர்புச் சூழலில் இருந்து தொடங்கவேண்டும் என்கிறது. இங்குதான் எழுத்தாளரின் நுண்மை செயல்புரிகிறது. இதை வாசிக்கும் வாசகனுக்கு உள்ளூர அந்த மாற்றம் நிகழ்கிறது. அவனுக்கு அந்த வேற்றுமையை உடனடியாக புரிந்துகொள்ள முடியும். இதுவே எழுத்தாளரின் சாதனை.

****

நாவல் இப்படி ஆரம்பிக்கிறது.

“”பொதுவிடங்களில் மூக்கு நோண்டவோ காது குடையவோ கூடாது, கண்களில் பீழையுடன் இருக்கக் கூடாது””  என்று பலவிதமான நல்ல பழக்கங்களை சொல்லி லலிதமாக இருக்க கற்றுக் கொள்ளுமாறு ஆரம்பிக்கும் நாவல் அதன் அடுத்த பக்கத்திலேயே  “ஊர்த் தொம்பர்களில் ஒருவனான குருசாமியிடம் லலிதத்தை எதிர்பார்க்க முடியாது” என்கிறது. இது அதன் எதிர் உண்மை. ஒரு பிரச்சாரம் இலக்கிய உண்மையாக மாற்றம் பெரும் தருணம் இது.

இவையெல்லாம் நல்ல விஷயங்கள் இவை அல்லாதவை கெட்டவை என்று சொல்வது பிரச்சாரம். அதுவே ஊர்த் தோம்பர் குருசாமியிடம் அந்த பழக்கத்தை எதிர்பார்க்காதே என்று காரணம் சொல்லும்போது பிரச்சாரத்தை தாண்டி இலக்கியவாதிகள் காணும் எதிர் உண்மையை நாவல் தொட்டுவிடுகிறது.

மற்றொரு தருணத்தில் “நீரஜா”  என்ற எழுத்தாளர் எழுதிய “தேடல்” என்ற நாவலின் கதாநாயகன் மனித வாழ்வு கலாபூர்வமானதாக இருக்கவேண்டும் இதற்கு மனம்பூராவும் இசையாக வேண்டும். அது அவனுடைய எல்லாச் செயல்களிலும் வெளிப்படும். பலபேர் தங்கள் நகத்தில் ஊர் அழுக்கைச் சேர்த்து வைத்திருக்கிறார்கள். எவன் நகத்தை சுத்தமாக வைத்திருக்கிறானோ அவனே உண்மையான கலைஞன் என்றதும் அதை எதிர்த்து சீற்றம் கொள்கிறார், இம்மாதிரி எழுதுபவர்கள் சமூக விரோதிகள் என்கிறார்.

ஆனால் அதே பெண் எழுத்தாளர்  சிகரெட் பெட்டியைப் பார்த்து “எடுத்துக் கொள்ளலாமா?” என்று கேட்ட போது நிச்சயமாக என்று பெட்டியுடன் கொடுக்கிறார். மேலும் சிகரெட்டை பற்ற வைக்க உதவியிருக்க வேண்டும் என்று நினைக்கிறார். அதாவது அவருக்கு அப்படி எழுதும் தகுதி இருக்கிறது என்று அந்த கணத்தில் நீரஜாவை மிகவும் நேசிக்கிறார்.

****

சிறிய வயது சூர்யாவின் பாலியல் அனுபவங்களை உள்ளபடியே வெளிப்படையாக சொல்வதன் வழியாக சமூகத்தில் இறுகி இருக்கும் பாலியல் சார்ந்த நடைமுறைகளை உடைத்து எறிகிறார் (இரண்டாவது நாவல் “ஜீரோ டிகிரி”யை விட பாலியல் வெளிப்பாடுகள் இதில் குறைவுதான்). நாவலின் பகுதி ஒன்று மற்றும் இரண்டில் சொல்லப்படும் உறவுகளை பற்றிய பார்வைதான் அதன் உச்சம்.

மனித உறவுகளின் இடியாப்பச் சிக்கல்கள். அபத்தங்கள். வெறும் காமத்திற்காக, பணத்திற்காக உறவுகளையும் சுற்றத்தையும் சீரழிக்கும் அற்பங்கள். மனிதமே இல்லை என சொல்ல வைக்கும் அவ நம்பிக்கைகள். அந்த பகுதிகளை வாசித்து முடித்த போது இறுதியில் கிடைத்த எண்ணம், “என்ன உறவுகள், இவை, இவற்றின் அர்த்தம் என்ன, இவை எதற்கு, இங்கு எதற்காக இவை இருக்கின்றன என்று தோன்றியது. இதுதானோ இந்த நாவலின் நோக்கம். அப்படியென்றால் உறவின் உன்னதம் என்ன என்ற கேள்வி எழுகிறது.

இதற்கான பதிலாக நான் காண்பது, எக்ஸிஸென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் நாவலின் இரண்டாம் பாகம் என்று சொல்லத்தக்க “ஜீரோ டிகிரி”யின் 34 வது அத்தியாயம்.

ஜெனஸில் என்ற மகளுக்கான கடிதங்கள். முழுமையான சுத்தமான அன்பை மட்டும் வெளிப்படுத்துபவை. ஒரு புலம்பலாக, எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாதவையாக, பிதற்றலாக, கடவுளின் தோற்றமாக, பீத்தோவனின் சிம்பொனியாக தோன்றுபவை. உண்மையான அன்பின் வெளிப்பாடுகள் இப்படித்தான் இருக்கவேண்டுமோ ?. இப்படித்தான் வெளிப்படுத்த வேண்டுமா?.

***

சாருவை வாசிக்கும்போது மனதிற்குள் ஒரு விலக்கம் வருவதை வாசகனால் தவிர்க்க முடியாது. ஏனென்றால் அது உள்ளத்தில் மறைந்திருக்கும் ஒன்றை சுட்டிக்காட்டிவிட்டு நகர்கிறது. அது அந்த வாசகன் தனிமையில் தடவிப்பார்த்து இன்பம் கொள்ள அவன் உருவாக்கி வைத்திருக்கும் மாளிகை. தன் மனம் ஒளியால் மட்டுமே நிறைந்திருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கும் சாதாரண வாசகனின் இருள். அதில் இருப்பதே தெரியாமல் அவன் அவ்வப்போது அங்கு அமர்ந்திருந்தான். வாசிப்பின் வழியாக அதன் இருள் மூலைகள் சுட்டிக்காட்டப்பட்டதால் அதற்குமேல் அவன் அதை அங்கு வைத்திருக்க முடியாது.

இருளை கண்டு சொல்லியவர் என்ற காரணத்தினால் அவர்மீது இயல்பாக விலக்கம் எழுகிறது. ஆனால், பத்தாம் வகுப்பு ஆசிரியர் பிரம்பு நொறுங்க அடித்த அடி இனிமையாகும் தருணம் ஒன்று இருக்கிறது. அதற்கு அவனது பெண்ணோ பிள்ளையோ கைப்பிடித்து வளரும் பருவம் வரும் வரை காத்திருக்கும் நீண்ட காலம் பிடிக்கிறது. அப்போது அவர்மீது எழுந்த விலக்கம் மரியாதையாக மாற்றம் பெறுகிறது.

அன்புடன்,

சி. பழனிவேல் ராஜா.

முந்தைய கட்டுரைபி.கிருஷ்ணன் அரங்கு உரைகள்
அடுத்த கட்டுரைஅயோத்திதாசர்