அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்
மலேசிய விக்கி அறிமுக விழாவில் பி .கிருஷ்ணன் அவர்களின் ஷேக்ஸ்பியர் படைப்புக்களின் மொழியாக்கம் குறித்த அருணாவின் உரையை கேட்டேன், மிக முக்கியமான உரை அது. நேரடியாக மொழியாக்க படைப்பு குறித்த உரையை துவங்காமல் இளைஞர்கள் நிறைந்திருந்த அந்த அரங்கில் ஷேக்ஸ்பியரின் மூன்று பெரும் படைப்புகள் குறித்து ஒரு அறிமுகம் கொடுத்துவிட்டு பின்னர் மொழியாக்கத்தை குறித்து பேசியது சிறப்பு. அரங்கில் இன்னும் ஷேக்ஸ்பியரை வாசிக்க துவங்கி இருக்காதவர்களும் இருந்திருப்பார்கள்.
முன்னரே வாசித்திருந்தாலும் அருணாவின் உரை மீள வாசிக்க வேண்டும் என தோன்ற வைத்திருக்கும். வழக்கம் போல தன் மனப்பக்கங்களை ஒவ்வொன்றாக புரட்டி அந்தந்த பத்திகளில், வரிகளில் மானசீகமாக நின்றுகொண்டு நிதானமாக பேசினார்.
ஷேக்ஸ்பியரின் இல்லத்தை சென்று பார்த்த தன் நினைவுகளிலிருந்து உரையை துவங்கியது மிக சுவாரஸ்யமாகவும்,பொருத்தமாகவும் இருந்தது. எழுத்தாளரின் மீதிருக்கும் பிரமிப்பை எழுத்துக்களின் மீதும் கொண்டிருக்கும் அருணாவுக்கு வாசிப்பில் இருக்கும் உணர்வுபூர்வமான பிணைப்பு வியப்பூட்டுகிறது.
அருணாவின் நினைவாற்றல் மற்றும் வாசிப்பனுபவம் குறித்த பிரமிப்பு எனக்கு எப்போதும் உண்டு. இந்த உரையிலும் மூன்று பெரும்படைப்புக்களிலும் இருக்கும் மிக முக்கிய வசனங்கள், காட்சிகளை அழகாக விளக்குகிறார். எத்தனை கத்திக்குத்து என்னும் எண்ணிக்கை, எவரெவருக்கிடையில் எங்கு போர், என்ன வசனம் எப்போது யார் யாரிடம் பேசுகிறார்கள், கதாபாத்திரங்களின் பெயர்கள் என சரளமாக சொல்லிக்கொண்டே போகிறார். குறிப்பெடுத்துக் கொண்டு வந்தவற்றை கடைசி நிமிடங்களில் தான் எடுக்கிறார்.
அருணா சொல்லியிருக்கும் //பெரும் படைப்புக்களில் நாம் ஈடுபட்டிருக்கும் காலம் முக்கியம்// என்பது கவனிக்க வேண்டியது. துன்பியல், இன்பியல், துன்ப இன்பியல், பகடி என்று நாடகங்களின் பல வடிவங்களை விளக்கி அவரது பிற படைப்புகளையும் சொல்லி ஷேக்ஸ்பியர் என்னும் பெரும் படைப்பாளியையும் அறிமுகப்படுத்துகிறார்
மேக்பெத்தின் சாராம்சத்தை, தீமையின் உள்முரணை, தீமையின் விதை உள்ளே விழுந்து மெல்ல மெல்ல விஷ விருட்சமாவதை, தீமை என்னும் முதல் படிக்கட்டில் கால் வைக்கும் ஒரு கதாபாத்திரம் அப்படியே முழுக்க தீமைக்குள் சென்று விடுவதை சொல்லி விளக்குகிறார். லேடி மேக்பெத் தனது கட்டுக்குள் எப்படி அவனை கொண்டு வருகிறாள் என்பதை, கதையை துவங்கும் முன்பே மூன்று சூனியக்காரிகள் வருவதன் அவசியத்தை, ’கோரஸ்’ உத்தியை சொன்னதெல்லாம் ஒரு பெரும் படைப்பை எப்படி அணுகுவது என்பதற்கு மிக உதவியாக இருந்தது.
அவ்வப்போது தான் சொல்லிக்கொண்டிருக்கும் கதாபாத்திரமாகவே மாறி எதிரில் இருக்கும் கதாபாத்திரத்திடம் பேசுகிறார், சிரித்துக்கொள்கிறார். உணர்வுபூர்வமான உரை. பல கவிதை தருணங்களை அப்படியே அழகாக கண் முன் நிறுத்துகிறார்.
இரண்டாவதாக ஒத்தெல்லோ எனும் துரோகத்தின் கதையையும் அப்படியே விளக்குகிறார்.
’’தன்னை வஞ்சித்துவிட்டு செல்லும் மகள் உன்னையும் வஞ்சிப்பாள்’’ என்னும் வரிகளின் ஆழத்தை சொல்லிவிட்டு அதை சிலாகித்துக்கொண்டு பின்னர் அடுத்ததை துவங்குகிறார். ஆன்மாவின் மகிழ்ச்சியே, மூர்க்கமான அன்பு போன்ற முக்கியமான வசனங்களையும் அனுபவித்து சொல்கிறார்
மூன்றாவதாக ஜூலியஸ் சீசரையும் நேரமின்மையால் சுருக்கமாக அதன் புகழ்பெற்ற வசனங்களுடன் பேசினார். குறிப்பாக கத்திகுத்து காயங்கள் உதடுகளை போல தங்களுக்கான நியாயங்களை கேட்பதை, குருதி துளி தன்னை குத்தியது யார் என்று பார்க்க வெளிவந்ததை சொல்லுகையில் அருணா அந்த காட்சியின் உள்ளேதான் சென்று நிற்கிறார்
இன்னும் கொஞ்சம் நேரம் அளிக்கப்பட்டிருந்தால் உரை இன்னும் சிறப்பாக இன்னும் முழுமையாக இருந்திருக்கும். அருணா இப்படி பெரும் படைப்புக்களை காணொளியில் அறிமுகப்படுத்தி உரையாற்றி தனித்தனியே வலையேற்றினால் இளம் வாசிப்பாளர்களுக்கு உதவியாக இருக்கும்
அன்புடன்
லோகமாதேவி