ஒன்றும் செய்யாமலிருப்பதன் கலை

செந்தில்குமார்

அன்புள்ள ஜெ

நலமா?

தொடர்ச்சியாகப் பயணக்கட்டுரைகள். டிசம்பரில் நீங்கள் கோவையில் அவ்வளவு பெரிய விழாவை ஒருங்கிணைக்கிறீர்கள். அழைப்பாளர்களை திரட்டுவது முதல் அரங்குவரை ஏகப்பட்ட வேலைகள். நண்பர்களை ஒருங்கிணைப்பதே பெரிய வேலையாக இருக்கும். ஆனால் சம்பந்தமே இல்லாதவர் போல பயணம் செய்கிறீர்கள். எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். கூல் ஆக இருப்பது எப்படி என உங்களிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும் போலிருக்கிறது

ரவிச்சந்திரன் எம்

அன்புள்ள ரவி,

பெங்களூரில் சந்தித்ததில் மகிழ்ச்சி.

நான் சங்கர் பயிற்சிநிலைய உரையாடலில் ஒரு முக்கியமான விஷயம் சொல்லியிருந்தேன். மணி ரத்னத்தின் நிர்வாகம் பற்றி. அதுவே சிறந்த நிர்வாகம். ஒன்றும் செய்யாமலிருப்பதன் வழி அது. நான் அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசென்றவன். அவருக்காவது எவை எப்படி நிகழவேண்டும் என்று ஒரு திட்டம் உண்டு. அதற்குரிய வழிகாட்டலை அளிப்பதும், விளைவுகளை கண்காணிப்பதும் உண்டு. என்னுடைய வழி என்பது அதற்குரிய நபர்களை தெரிவுசெய்தபின் அப்படியே விலகிவிடுவது. தெரிவுகூட செய்வதில்லை. அவர்களே வந்தமைகிறார்கள். அவர்களே நடத்தி அவர்களே திருப்திப்பட்டுக்கொள்கிறார்கள்.

கோவை விழாவில் நான் பங்கேற்பாளன் மட்டுமே. உங்களைப்போல. என் பணி என அனேகமாக எதுவுமே இல்லை. முதன்மை ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் அல்லது குவிஸ் செந்தில். அவருடன் ராஜகோபாலன், ராம்குமார், நடராஜன், விஜய் சூரியன், மீனாம்பிகை, சுதா ஸ்ரீனிவாசன், ஸ்ரீனிவாசன், செல்வேந்திரன், பூபதி துரைசாமி, நரேன் என ஓர் அணியே உள்ளது. நான் எதற்கு வம்பு என அந்தப்பக்கமாக செல்வதே இல்லை. விழா சம்பந்தமாக அவர்கள் ஸூம் செயலியில் பல சந்திப்புகளை நடத்தினர். எதிலுமே கலந்துகொள்ளவில்லை. என்ன பேசினார்கள் என்றும் கேட்டுக்கொள்வதில்லை. அவர்கள் என்னிடம் அதிகபட்சமாக எதிர்பார்ப்பதும் தலையிடாமல் இருப்பதை மட்டும்தான்.

நம் வழி தனீ வழி

ஜெ

முந்தைய கட்டுரைஅதிகார எந்திரத்தில் பிழியப்படும் கண்ணாயிரம் பெருமாள் -கணேஷ் பாபு
அடுத்த கட்டுரைஅ.வெண்ணிலா சிறுகதை  வாசிப்பனுபவம்.