வைக்கம் முகம்மது பஷீர்
பால்யகால சகி வைக்கம் முகம்மது பஷீரின் நாவல். வரலாற்றின் எத்தனையோ சோக காதல்களை பாடும் நாவல்களில் இதுவும் ஒன்று. ஒரு காதலை பாடும் நூல், தன் காதலர்களை கொண்டு காதலென்று இப்புவியில் நிகழும் லீலையை பாடுகையில் சாசுவதமாகிறது. பால்யகால சகி மஜீதுக்கும் சுகறாவுக்குமான காதலை பாடுகிறது. அது அவர்களுடையது மட்டுமல்ல, நம் ஒவ்வொருவருடையதும் கூட.
மஜீதுக்கு ஒன்பது வயதும் சுகறாவுக்கு ஏழு வயதும் இருக்கையில் நிகழும் அவர்களின் நட்பே நாவலின் முதல் அத்தியாயம். நாமனைவரும் பால்யத்தில் உணர்ந்திருப்போம், ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் நோக்கி ஈர்ப்பு கொள்வது மிக இளமையில் நிகழ்வது. அது உடல் வளர்ந்த பின் உருவாவது அல்ல, உயிரான போதே உடன் வருவது. மாம்பழத்திற்காக மஜீதுக்கும் சுகறாவுக்கும் இடையே நடக்கும் உரசல் குழந்தைகளிடையே இயல்பாக நடப்பது. ஆனால் வளர்ந்த பின்னும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் நடப்பது அது தானே. அதன் மகிழ்வும் குரூரமும் கூடலாம், குறையலாம். அந்த விளையாட்டு ஓய்வதில்லை.
மஜீது சுகறாவுக்காக ஏறும் மாமரம் அவர்கள் வாழ்க்கையின் குறியீடாக, நாவலில் ஒரு படிமமாக வளர்ந்து நிலை கொள்கிறது. அம்மரத்தின் சுவைமிக்க கனியை ருசிக்க, முசுறுகளின் கடியை சிராய்ப்பை வாங்கி கொள்ள வேண்டும். அவன் பறித்து வந்த கனியை, இருவரும் சாறு வடிய தின்கையில் காயங்களை பொருட்படுத்துவதில்லை. பால்யத்தில் நீண்ட சுகறாவின் கைகள், முடிவில் அவனில் நிலைத்த அவளது நினைவாய் மாறி விடுகிறது. நாவலின் பெருந்தரிசனங்களில் ஒன்று அது.
நாமும் நம் நேசமும் தனித்திருக்க கடவோம். மண்ணில் பிறக்கும் மானுடர்கள் எல்லாம் தனியர்கள் தான். முடிவில் நாம் கொள்ளும் நேசமும் நம்மோடே தனித்து வரும். உலகம் முழுக்க தோல்வியுற்ற காதல் கதைகள் தான் காவியமாகின்றன. நம் ராமனும் ஒரு மஜீது தான். அவை ஏன் காவியமாகின்றன ? வெற்றியில் நேசம் பிணைந்திருக்கிறது பூமியுடன். தோல்வியில் நம் நேசம் விண்ணில் தனித்து விடுகிறது. முடிவிலாது மனிதனில் எழுப்புகிறது, நேசமென்று, அன்பென்று, காதலென்று அழைக்கப்படும் அது என்ன ? வாழ்வின் பொருளென்று நாமும் உணரும் ஒன்று, அதற்கு அப்பால் தனித்து நிற்பதன் விந்தை என்ன ?
மஜீது மட்டுமே தனித்து விடுவதில்லை. தேசாந்திரியாய் சென்ற காதலனை நினைத்து உருகும் நெஞ்சினாய் நிற்பவள் சுகறாவும் தான். அவனுக்கான எத்தனை இரவுகள் காத்திருந்திருப்பாள். அவன் திரும்பி வருகிறான். ஆனால் அவளை சந்திக்க முடியாமல் நெஞ்சு குமுறுகிறான். பிடிவாதத்துடன் அவர்களின் செம்பருத்திக்கு முன் அமர்ந்துவிடுகிறது. ராஜகுமாரி மீண்டு வருகிறாள். வெண்முரசின் மழைப்பாடலில், “மடமை எனும் பாவனையால் பெண்மைய ஆடுகிறது. அதன்முன் சரணடையும் பாவனையால் ஆண்மை ஆடுகிறது.” என்றொரு வரியுண்டு. அவ்வாடலை நகங்களை வெட்டி, கடிப்பதை நிறுத்தும் ராஜகுமாரியிலிருந்து காத்திருக்கும் கன்னி வரை காண்கிறோம்.
மஜீதின் சித்திரம் நாவலில் வளர்ந்து வரும் விதம் அபாரமானது. அவன் மாவின் உச்சி நுனியில் அமர்ந்து தூரத்து செவ்வானத்தை கற்பனையில் பார்ப்பது ஒரு படிமம். அந்த மரத்தில் ஏறி கனவு காண்பவன். பிற்காலத்தில் அந்த கனவு வீட்டை விட்டு துரத்துகிறது. அவனது அப்பா ஒரு காலகட்டத்தை சேர்ந்தவர். இறுக்கமும் சர்வாதிகாரமுமே தந்தையின் அடையாளம் என கொண்டவர்கள். பலாப்பழத்தை போல். அதை தாண்டி நம் அப்பாக்கள் உடன் நமக்கிருக்கும் உறவென்பது சாரம்சத்தில் ஒன்று தான். பதின் வயதுகளில் சுயநலம் பிடித்தவராக தெரியும் அப்பா, நாம் வளர்கையில் ஒரு எளிய தந்தையாக தெரிகிறார். கனிவு கொள்ள வைக்கிறார்.
அவனொரு கனவு ஜீவி. அறிதலை நோக்கி மட்டுமே பயணிப்பவன். எனவே தான் வீட்டை விட்டு ஓடி விடுகிறான். பத்தாண்டுகள் சுற்றியலைந்த பின் சுகறாவை திருமணம் செய்து கொள்ள ஊர் திரும்புகிறான். அங்கே அவனுக்கு காத்திருப்பது அனைத்தும் விரும்பதகாதவையே. அவனே சொல்வது போல் வாழ்க்கையின் முகத்தில் இருக்கும் சேறும் சகதியும் மறைந்து விடுகிறதா என்ன ? மறந்து விட முடிகிறதா ? இல்லை.
எல்லா இடங்களிலும் வண்ணங்கள் மட்டுமே வெவ்வேறு. ஆண் – பெண் இணைவே சாரம். அது மாறுவதேயில்லை என உணர்ந்த பின்னரே ஊர் திரும்புகிறான். எனினும் திரும்பிய அவன் கொள்ளும் அல்லல்கள் இயல்பாக கேள்விகளை எழ செய்கின்றன. அறிவது வேறு, ஆதல் வேறு. பயணம் பலவற்றை அறிந்து கொள்ள செய்கிறது. மையம் நோக்கி தள்ளுகிறது. வாழ்க்கையிலேயே அவை உணரப்படுகின்றன.
நாவலின் பிற்பகுதி முழுக்க மஜீது மண்ணில் காலூன்ற முயல்வதின் போராட்டமும், இறுதியில் அப்போராட்டத்தின் வழி அவனடையும் சமநிலை கொண்ட தரிசனமும் வெளிப்படுகிறது. அவன் இளமையில் கொண்ட காதலுக்கும் இதற்குமிடையில் பத்தாண்டு கால நடோடி வாழ்க்கை இருக்கிறது. முன்னவை பின்னவற்றை எப்படி பாதிக்கின்றன என்பது வாசகன் கற்பனையில் விரிய வேண்டியுள்ளது.
மஜீது கான் பகதூரை சந்திக்கும் கணம், சுகறாவின் படிப்புக்காக அவன் அப்பாவிடம் கேட்கும் சந்தர்ப்பத்தை நினைவூட்டியது. பஷீர் அதற்காக வலிந்து எதையும் செய்வதில்லை. அவர் இயல்பாக கதை சொல்லி செல்கிறார். கதை சொல்லப்படும் விதத்தால் நம்முள் நினைவுகள் எழுந்து அலைகின்றன. சுகறாவின் படிப்புக்கு செலவு செய்தால் உடன் பிறந்தார் அத்தனை பிள்ளைகளுக்கும் செய்ய வேண்டியிருக்கும் என்று சொல்லி மறுக்கிறார். மேலும் தான் தான தருமமே செய்யாமலா இருக்கிறேன் என்கிறார். கான் பகதூரும் தான் செய்த நல்லவைகளை பட்டியலிட்டு விட்டு காலை இழந்த மஜீதுக்கு அனுதாபம் தெரிவிக்கிறார். வாப்பாவுக்கும் பகதூருக்கும் என்ன வித்தியாசம் ? இருவருமே தங்களுக்கென்று எல்லைகளை வகுத்து கொண்டவர்கள். அதற்குள் நல்லவர்கள், வெளியே சுயநலவாதிகள். ஆனால் சுகாறாவை படிக்க வைக்காமல் ஆன பின் தன் அப்பாவை முற்றாக வெறுத்து ஒதுக்கிவிடவில்லையே. அதே சமநிலையை கான் பகதூரிடமிருந்து வெளி அனுப்பப்படும் போது கண்டடைகிறான். ஆறு லட்சம் ஏழைகளில் தானும் ஒன்று என்ற விவேகத்தின் மூலம்.
ஆனால் பாக்கு தூவலை மென்று செடியின் மேல் தூப்பி, அவன் உம்மாவுக்கொரு செடி சென்று வாப்பா பரிகாசம் செய்வது மனிதர்களின் கீழ்மைக்கு ஒரு சான்று. ஆனால் நாமனைவரும் அதனுடன் தான் வாழ பழகி கொள்கிறோம். அது அவன் வீட்டை விட்டு வெளி செல்ல காரணமான முதல் புள்ளியோ ? இந்த தீமையும் நன்மையும் ஒருவருக்குள் ஒன்றாக உள்ளது. நம் வாழ்வில் அப்படியே ஏற்கவும் செய்கிறோம். மஜீது உலகம் முழுமைக்கும் அந்நேசத்தை விரித்து கொள்கிறான்.
வலது காலை இழந்த பின், சுகறா முத்தமிட்ட கால் காணாமல் போயிற்றே என ஏங்குகிறான். அது முதல் முத்தத்தின் நாளை நினைவூட்டுகிறது. அவன் காலில் ஏற்பட்ட வலி மிகுந்த கட்டி போல் தான் வறுமையும் வாட்டுகிறது. இழந்து போன கால்களுக்கு பின்னும் அவனை உயிர்ப்புடன் வைத்திருப்பது முத்தம் போல் ஆன்மாவில் தித்திக்கும் காதலியின் இருப்பு.
வாழ்க்கையின் ஒவ்வொரு சரடும் ஒன்றுடனொன்று பிணைந்து உருவாகும் சமநிலையான விவேகமே மஜீதை இயக்குவது. அதனால் தான் பொருட்படுத்தும் படி எதாவது இருக்கிறதா என்ற வினாவுக்கு பொருட்படுத்தும் படி எதுவும் இல்லை என்ற ஞானத்தை அடைகிறான். மறுமுனையில் சுகறாவும் உணர்ந்திருப்பாளா ? ஆம் என்றே நினைக்கிறேன்.
காதலின் இணைவை மட்டுமே பேசும் நாவல், அதன் முழுமையை பாடுவதில்லை. தந்தை இறந்து படிப்பை இழந்த சுகறாவிடம் தன் பள்ளி வகுப்புகளை சொல்கையில் புத்தகத்தில் அவள் கண்ணீர் சொட்டுகிறது. அவன் திடுக்கிட்டு பார்க்கையில் நாம் உணர்வது என்ன ? எத்தனை நெருங்கிய பின்னரும் உறவுகளுக்கிடையில் அகழி ஒன்றுள்ளது என்பதை தானே.
காதலியின் இருப்பு காணாமல் ஆகும் கணம் உலகம் நின்று விடுகிறது. ஆம் காதல் காணாமலாகவில்லை என்ற ஞானம் ஞாலத்தை இயங்க செய்கிறது. அத்தனை ஒலிகளும் ஒளிகளும் அவனுக்கு கேட்கின்றன. பெருகி ஊரை புணர்ந்து செல்லும் கால நதிக்கு மேல் அல்லாவின் கருணை நிலவொளியாய் எழுகிறது. தன் தங்க மாளிகையின் உப்பரிகையில் சாரலினூடே வரும் அந்நிலவொளியில் தன் சுகறாவை ஏந்தி அமர்ந்திருக்கிறான் மஜீது. அந்த சாரல் கண்ணீரால் ஆனது, மாளிகையின் அடித்தளம் சேற்றால் நிரம்பியது. சிவந்த கண்களில் புன்சிரிப்புடன் மதுவை அருந்துக. அந்த குவளை சொந்த குருதியால் நிரம்பி வழியட்டும். நம் நேசம் கலந்திருக்கட்டும். இனித்திருக்கட்டும். அந்த இனிமையில் கூறுக நாவே, “கொஞ்சம் பெரிய ஒண்ணு.”
சக்திவேல்