இந்தத் தலைப்பு ஒரு முரண்.
காவிய மரபும் பின் நவீனத்துவமும் ஒன்றுக்கொன்று நேர் எதிரானவை. காவியங்கள் ஆயிரக்கணக்கான வாழ்க்கைகளை ஒற்றையாய்த் தொகுத்து சாராம்சமாய் உரத்து ஒலிக்கும் ஒற்றை தரிசனத்தோடு வருகிறவை. பின் நவீனத்துவம் அறிவியல், பண்பாடு, கலை, பொருளாதாரம், மானிடவியல், தத்துவம் என்று எல்லாவற்றிலும் ஒற்றையாய் வைக்கப்படும் எல்லா தரிசனங்களையும் மறுப்பது. மார்க்சியத்தையும், நவீன உளவியலையும், நவீன மருத்துவத்தை நம் உடல் மீதான அறிவின் ஒரே விளக்கமாகவும் ஏற்றுக்கொள்ள மறுப்பது. சரித்திரம் ஒரு நீளமான படிப்படியாய் நிலை நிலையாய்த் தாவி வரும் ஒற்றைக்கோடு என்பதை மறுப்பது.
சாரு நிவேதிதா தமிழில் பின் நவீனத்துவம் என்ற இந்த பலகுரல் போக்கின் எல்லா அமசங்களையும் பிரதிபலிக்கும் ஒரே எழுத்தாளர். அவருடன் பின் நவீனத்துவ எழுத்தாளராக அறியப்பட்ட பலரும் பின்னர் ஏதோ ஒரு அரசியல் பெரும்போக்கின் முகவர்களாக மாறிவிட்ட நிலையில் சாரு மட்டுமே இன்றுவரை அதன் ஒரே குரலாக எஞ்சுகிறார்.
நான் மேற்கண்ட இரண்டு பத்திகளிலேயே பல முரண்களைச் சேர்த்துக் கட்டியிருக்கிறேன். பின் நவீனத்துவம் மரபை மறுப்பது. meta narratives எனப்படும் பெருங்கதையாடல்களை மறுப்பது. அதை ஒரு மரபாய் வகுப்பது ஒரு வகையில் அதனை ரத்து செய்வது. ஆனால் பின் நவீனத்துவத்தில் இந்த முரண் எப்போதும் உண்டு. சாருவின் படைப்புகளிலும் அது உண்டு. அதீதத் தன்னிலை கொண்ட மனிதர்களை சாருவின் படைப்புலகில் தொடர்ந்து காணலாம். இவர்கள் தங்கள் காலத்தில் சாலையில் செல்லும் எந்தப் பேரணியிலும் கலந்துகொள்ளாத உதிரிகள். ஆனால் எல்லாவற்றையும் கூர்ந்து உற்று நோக்கும் நுட்ப உணர்வு உடையவர்கள். இவர்கள் கும்பலின் ஆவேசத்தை அதன் பாசிசத்தன்மையைப் பார்த்திருப்பவர்கள். புதியதொரு கும்பல் புதியதொரு கூட்டுப் படுகொலையைத்தான் செய்யப்போகிறது என்பதை உணர்ந்தவர்கள். பெரும்பாலான மக்களின் வரலாற்று மறதி கொண்டவர்கள் அல்ல. ஆகவே தொடர்ந்து அவர்களால் லும்பன்கள் என்று வசை பாடப் படுகிறவர்கள். மதங்களை பதிலீடு செய்து வந்த மார்க்சியம், பிராய்டியம், டார்வினிசம், வர்க்க அரசியல், சாதி அரசியல், நிற அரசியல், தேசிய அரசியல், மொழி அரசியல், பெண்ணியம் போன்ற கதையாடல்களும் பெருங்கதையாடல்களாக மாறி தனி மனிதர்களின் மானுடத்தின் கழுத்தை நெறிப்பவையாக மாறிவிடும் அசுர சக்தி கொண்டவை என்பதை உணர்ந்தவர்கள். பழைய பூசாரிகள் மீது மட்டுமல்ல இவர்கள் இந்த புதிய கோடாங்கிகள் மீதும் விலக்கமும் கேலியும் கொண்டவர்கள். விடுதலை என்கிற முத்திரையிட்டு வரும் இந்தப் புதிய சங்கிலிகள் எதிலும் மாட்டிக்கொள்ள மறுப்பவர்கள். இதனாலேயே புதிய பொன்னுலகங்களை உருக்கியடித்துப் பிரதிமை செய்து தரும் தட்டான்களால் ஆழமாய் வெறுக்கப்படுகிறவர்கள். பின் முதலாளித்துவத்தின் கள்ளப்பிள்ளைகள் என்று அடையாளமிடப்படுகிறவர்கள் (ஃப்ரெட்ரிக் ஜேம்சன்)
மதங்களும் இசங்களும் தெய்வங்களும் புரட்சிக்காரர்களும் மகாத்மாக்களும் களிமண் கால்களொடிந்து வீழ்ந்தபோது சமகால மனிதனுக்கு தற்கொலை செய்துகொள்வது அல்லது தன் கையில் ஒரு லாட்டரி போல் கிடைத்திருக்கும் உடலைக் கொண்டாடுவது என்ற இரண்டு பாதைகளே உள்ளன என்று உணர்ந்தவர்கள்.
சாருவை அவரது படைப்புலகை இந்தப் பாதையற்ற பாதையில் செல்லாமல் பொருத்திப் பார்க்காமல் நம்மால் புரிந்துகொள்ள முடியாது. எந்தவொரு லட்சியவாதமும் மயக்காத ஆளுமை அவருடையது. அதனால்தான் தனிப்பட்ட தன்னைக் குறித்த எழுத்துகளில் தொடர்ந்து ஒரு அதிபோகவாதியாக சொல்லிக்கொள்கிற அதே நேரத்தில் துறவியாகவும் அவர் முன்வைக்கிறார். மூளைச் சோர்வு கொண்டோர்க்கு இந்த இசங்கள் தருகிற ஆசுவாசங்கள் தேவைப்படக்கூடும். தனக்குத் தேவை இல்லை என்று அவர் தொடர்ந்து தனது எழுத்துகள் மூலம் சொல்லிக்கொண்டே வந்திருக்கிறார்.
சாருவைப் புரிந்துகொள்கிற சாவிகள் அவரது படைப்புகளிலேயே தரப்பட்டுள்ளன. அவரது முதல் நாவலான எக்சிஸ்டென்ஷியலிசமும் பேன்சி பனியனும் நூலிலேயே அதன் பின்பு அவர் வாழப்போகும் வாழ்க்கைக்கான எழுதப்போகும் நூற்றுக்கும் அதிகமான நூல்களுக்கான விரிவான விளக்கங்கள் உள்ளன. இந்த தீர்க்கதரிசனம் என்று நாம் தேய்ழக்காக்கி வைத்திருக்கும் முன்கூறும் தன்மை இன்று அதைத் திரும்ப வாசிக்கையில் வியக்கத்தக்கது. பொதுவாகவே தமிழ்ச் சமூகத்தில் பின்னால் நிகழ்ந்த பல கலாச்சார மாற்றங்களை அவர் முன் உணர்ந்து சொல்லியிருக்கிறார். அவர் சமகால எழுத்தாளர் அல்ல. காலத்தில் முன் நகர்ந்து செல்லும் எழுத்தாளர். அறிவியல் புனைகதையாசிரியர்களில் மட்டுமே நாம் இதுபோன்ற மாதிரிகளைக் காணலாம். அதுவும் தமிழில் அல்ல.
விதம் விதமாக தலைமயிரை வெட்டிக்கொண்டு பேன்சி பனியனைப் போட்டுக்கொண்டு திரிகிற dandyist ஆக சாரு முதல் நாவலிலேயே தன்னை வெளிக்காட்டிக்கொண்டி விடுகிறார். ஜிப்பாவும் கதரும் முரட்டுப் பருத்தியாடைகளும் வேண்டுமென்றே ஆலைத் தொழிலாளிகள் போல உடுத்திக்கொண்டு காட்டிக்கொண்டு திரிந்த இந்திய அறிவுஜீவி வர்க்கத்தின் இரட்டை வேடத்தின் மீதான விமர்சனமாகவும் தன்னை தன்னுடலை வியந்து மகிழ்ந்துகொள்ளும் ஒரு செயலாகவும் அது இருக்கிறது. இரண்டு உலகப் போர்களுக்குப் பிறகு ஸ்டாலினியக் கொடுமைகளுக்குப் பிறகு உலகு மிகப்பெரிய ஆன்மீக வறுமைக்குள் வீழ்ந்தது. சாருவின் முதல் நாவல் எழுதப்பட்ட இரண்டு ஆண்டுகளிலேயே சோவியத் யூனியன் உடைந்து சிதறியது என்பதை நினைவில் கொண்டால் சாருவின் படைப்புமனதின் பின்புலம் பற்றிய ஒரு சித்திரம் நமக்குக் கிடைக்கும். அதற்கு சில ஆண்டுகளுக்கு முன் வந்த சுராவின் ஜேஜே சில குறிப்புகள் நாவல் ஏன் ஒரு போலி நாவல் என்று சாருவால் கடுமையாகத் தாக்கப்பட்டது என்பதும் விளங்கும். சுந்தரராமசாமியின் நாவல் ஸ்டாலினிய கொடுமைகள், கம்யூனிசத்தின் முற்றதிகார இச்சை போன்றவற்றை விமர்சித்தாலும் சுதந்திர மானுடவாதம் என்கிற பெயரில் உண்மையை நேரிடாமல் கொழகொழத்துப் போய்விடுகிறது என்று சாரு நினைத்ததற்கான அடையாளங்கள் அவரது முதல் நாவலிலேயே தெரிகிறது. சுந்தர ராமசாமி மொழிபெயர்த்த அகரீதியாக தட்டையான தகழியின் தோட்டியின் மகனுக்கு எதிராக எதிராக சாரு தன் படைப்புகளில் நிறைய தோட்டியின்(தொம்பர்) மகன்களை நிறுத்தினார். ஒருவகையில் பார்த்தால் இந்த இடதுசாரிகளும் லிபரல் ஹூயுமனிஸ்டுகளும்தான் சோஷலிசம், மானுடவாதம் போன்ற பேன்சி பனியன்களைப் போட்டுக்கொண்டு திரிகிறவர்கள் என்பது போன்ற விமர்சனம் சாருவின் படைப்புகளில் உட்கிடையாய் உண்டு. இங்கு பேன்சி பனியன் என்பது அவ்வப்போது டிரெண்டில் இருக்கும் லட்சியவாதப் போக்குகளைக் குறிக்கிறது. ஓஷோ காந்தியை எதிர்கொண்ட அதே பாணியில் தான் சாரு சுந்தரராமசாமியையும் அவர் வழிவந்த ஜெயமோகன் உட்பட பிற எழுத்தாளர்களையும் நேரிட்டார். இது ஒரு கருத்துப் போர்முனை. நாம் இதில் ஏதோ ஒரு தரப்புடன் இணக்கம்கொண்டு ஏதோ ஒரு தரப்புடன் மாறுபடலாம். ஆனால் நாம் இவற்றை தனி மனிதப் பூசல்களாக மட்டும் புரிந்துகொண்டால் பல விஷயங்களை இழந்துவிடுவோம்.
மலமள்ளுகிறவனின் பாலியல் விருப்பங்கள் என்னவாயிருக்கும்? என்பது நமக்குத் தேவை இல்லையா? என்பது ஒரு சங்கடமான கேள்வி. நாம் அவனை நமது தர்மகர்த்தா மன நிலையின் ஒரு பகுதியாக பயனாளியாக மட்டும் பார்க்கிறோமோ?
எனக்கு தனிப்பட்ட அனுபவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. அவர் கலாச்சார ரீதியாக ஒடுக்கப்பட்ட ஒரு சாதியைச் சேர்ந்தவர். அந்த அனுபவங்களை அவர் கவிதைகளாக எழுதி ஒரு புத்தகமாக வெளியிட்டு அது நல்ல வரவேற்பைப் பெற்றது. இடதுசாரிகள் அதைக்க் கொண்டாடினர். ஆனால் அவர் அதன்பிறகு அவரது இரண்டாவது புத்தகத்தை எழுதவே இல்லை. நான் அவரைச் சந்திக்கும்போதெல்லாம் அது பற்றிக் கேட்பதுண்டு. அவர் ஒரு நாள் சொன்னார். ‘நான் என் வாழ்க்கை வரலாற்றை ஒரு நாவலாக எழுதிவிட்டேன். ஆனால் அதை வெளியிட முடியாது. அதில் என் பாலியல் விவகாரங்களும் காதல் விவகாரங்களும் வருகின்றன. இவர்கள் என் துயரங்களைப் பற்றி மட்டுமே பேசவேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள்’
இது இன்னொருவிதமான அகமழிப்பு, அடையாளமழிப்பு என்பதை சாரு தன் படைப்புகளில் தொடர்ந்து முன்வைத்துவருகிறார்.
சாருவின் படைப்புலகை முதல் முதலாக நேரிடுகிறவர்க்கு ஏற்படுகிற உணர்ச்சி பெரும்பாலும் ஒரு disorientation. திசையழிந்த திகைப்பு. மரபான கதைகளை, கதை சொல்லும் முறைகளைக் கேட்டு வாசித்து வளர்ந்தவர்க்கு ஒரு ஒவ்வாமை. ஏதோ ஏமாற்றப்பட்டாற் போன்ற உணர்வு. எனக்கும் முதலில் அதுவே ஏற்பட்டது. நான் அப்போது மதுரையில் கோரிப்பாளையம் பகுதியில் தங்கிப் படித்துக்கொண்டிருந்தேன். போகிற வழியில் கார்முகில் பதிப்பகம் மற்றும் வாடகை நூலகம் என்கிற ஒன்று இருந்தது. அதன் காட்சிப் பெட்டகத்தில் எக்ஸிச்டென்ஷியலிசமும் ஃபேன்சி பனியனும் நூலைப் பார்த்தேன். அதன் வழக்கத்துக்கு மாறான தலைப்பும் மனித எலும்புக்கூடு ஒன்று இளிக்கும் அட்டைப்படமும் என்னை ஈர்த்து அதைப் பெற்றுப் படிக்கத் தொடங்கினேன். எனக்கு முதலில் ஏற்பட்ட உணர்வு இந்த திசையழிந்த உணர்வு. கொஞ்சம் அருவருப்பு. கொஞ்சம் கிளர்ச்சி. பிறகு விவரிக்க முடியாத ஒரு விடுதலை உணர்வு. நான் அதுவரை படித்துக்கொண்டிருந்தவை ஒருபக்கம் இடதுசாரி இலக்கியப் பிரதிகள் எனில் இன்னொருபக்கம் கணையாழி போன்ற ஆச்சாரம் மிக்க பத்திரிகைள். அங்கே சுஜாதாதான் மிகப்பெரிய மீறல்களை நிகழ்த்திக்கொண்டிருந்த எழுத்தாளர். சுஜாதா சாருவின் எழுத்தை ‘நதியில் மிதந்து செல்வது’ என்று வரையறுத்தார்.
அந்த நூலில் பேசப்ப்பட்டவை எல்லாம் எனக்கு அப்போது புரிந்துவிட்டிருந்தது என்று சொன்னால் அது ஒரு பொய்யாக இருக்கும். ஆனால் அந்தப் பிரதி பல விஷயங்களிலிருந்து அதற்கு முன்பு நான் படித்த பல பிரதிகளிலிருந்து என்னை விடுவித்தது என்று நிச்சயமாக சொல்ல முடியும். சாரு தமிழ் இலக்கியத்துக்கு செய்த பணிகளுள் முக்கியமானது இது. பல்வேறு விஷயங்களில் அது செய்துகொண்டிருந்த பாசாங்கை நீக்கியது. இதை சாருவுக்கு முன்பு கரிச்சான் குஞ்சு, தி ஜானகிராமன், தஞ்சை பிரகாஷ், ஜி நாகராஜன் போன்றவர்கள் செய்திருக்கிறார்கள் என்றாலும் சாரு அளவுக்கு வன்மையாக காவியப்பூச்சு இல்லாமல் செய்ததில்லை. ஜி நாகராஜன் வேசிகளைக் காப்பாற்றும் அறத்துக்குள் சிக்கிக்கொள்கிறார் எனில் தி ஜா அம்மா வந்தாளில் அலங்காரத்தம்மாளுக்கு எல்லா சுதந்திரங்களையும் அனுமதித்துவிட்டு இறுதியில் அவள் பாவங்களை எல்லாம் எரித்து நீறாக்கிப் புடம்போட காசிக்கு அனுப்பிவிடுகிறார். கரிச்சான் குஞ்சுவின் பசித்த மானுடத்தைப் படிக்கிற ஒருவருக்கு ரத்தக்கண்ணீர் எம் ஆர் ராதாவின் நினைவு ஒரு கணமாவது வராமல் இருக்காது. பாவத்தின் சம்பளம் மரணம், காமத்தின் சம்பளம் நோய் என்கிற மரபார்ந்த மனமே இவர்களிடமும் செயல்படுகிறது. ஒப்பிட தஞ்சை பிரகாஷ் மட்டுமே காமத்தைப் பற்றிய பெரிய குற்ற உணர்வு எதுவும் இல்லாதவர்.
நவீன தமிழ் இலக்கியத்துக்கு சாருவின் முக்கியமான பங்களிப்பு நீண்ட காலமாக அது அணிந்துகொண்டிருந்த அதன் கோஷாவை விலக்கியது. முழுமையாக உடுத்திக்கொண்டே குளித்துக்கொண்டிருந்த புணர்ந்துகொண்டிருந்த ஆண் உடல்களையும் பெண் உடல்களையும் அவற்றைச் சுற்றியிருந்த சவச்சீலைகளிலிலிருந்து விடுவித்தது.
இந்த விடுதலை என்ற சொல்லை இன்னும் சற்றுக் கூர்ந்து பார்க்கலாம். எல்லா மதங்களும் இசங்களும் இந்த விடுதலை என்கிற சொல்லைப் பாவிக்கின்றன. ஒவ்வொன்றும் இந்த விடுதலை என்கிற பதத்துக்கு வெவ்வேறு விளக்கங்களை அளிக்கின்றன. கிறித்துவம் நமது உடலெனும் பாவச்சிறையிலிருந்து விடுதலையை வாக்களித்து கடவுளின் வலது பாரிசத்தில் ஒரு இடத்தை நீட்டுகிறது எனில் இந்திய மதங்கள் பிறவிச் சுழற்சியிலிருந்து வெளியேற்றத்தை விடுதலையாக முன்வைக்கின்றன. இறந்தபின் உலகங்களை மறுக்கும் மார்க்சியம் போன்ற மதங்கள் வர்க்க விடுதலையை ஒரு மானுட லட்சிய மாதிரியாக முன்வைக்கின்றன. இவை எல்லாமே இந்த விடுதலைக்குப் பகரமாக நமது சுதந்திரத்தைக் கேட்கின்றன என்பது வேடிக்கையானது! பின் நவீனத்துவத்தின் முக்கிய அம்சமாக முதலில் இந்த மரபார்ந்த விடுதலை குறித்த கோட்பாடுகளிடமிருந்து நம்மை விடுவிப்பது என்பதை நாம் காணலாம். இதைப் புரிந்துகொண்டாலொழிய சாருவினைப் புரிந்துகொள்வது கடினம்.
நம்மில் பெரும்பகுதி இந்த மரபார்ந்த சிந்தனை மரபுகள் தரும் விடுதலை குறித்த விளக்கங்களுக்கு வாடிக்கையாளர்களாக இருக்கிறோம். சிலர் வாழ்நாள் முழுவதும் இருக்கிறோம். அதிலிருந்து சிலர் விடுபடுவதே இல்லை. நானும் அப்படி சில பேன்சி விடுதலைத் திட்டங்களுக்கு வாடிக்கையாளராகவே இருந்தேன். ஆகவே சாருவை எனது அக உலகத்துக்குள் ஒரு குறிப்பிட்ட எல்லை வரையே அனுமதித்திருந்தேன். ஆனால் எனது இயல்பான மறுபுறம் என்ன நடக்கிறது? என்று அறிகிற ஆர்வம் காரணமாக அவரைப் படித்துக்கொண்டிருந்தேன். அவரது படைப்புகளில் தெரியும் பாலியல் உறவுகள் குறித்த அதிகக் கவனமும் ஒரு காரணம். இது ஒருவகையில் உலகத் திரைப்பட விழாக்களில் வெளியிடப்படும் சிறந்தப்படங்களை அவற்றின் நிர்வாணக் காட்சிகளுக்காக மட்டுமே பார்க்கும் விடலை மன நிலைதான். ஆனால் அவை மிகச்சிறந்த படங்களும் கூட என்று எனக்கு மெதுவாகப் புரிய ஆரம்பித்தது. அதீதம் என்றும் ஆபாசம் என்றும் நான் நினைத்தவை வாழ்க்கையின் ஒருபகுதி என்றும் அந்த ஒருபகுதி மானுட வாழ்வின் மிக முக்கியமான பகுதி என்றும் நான் மெல்லப் புரிந்துகொண்டேன். மதங்களின், கோட்பாடுகளின், சித்தாந்தங்களின் முக்கியமான வேலை இந்த உண்மையை மனிதத்திரளிடமிருந்து மறைப்பது என்ற புரிதலுக்கு வந்தேன். நம்முடைய மதம், அரசியல், பண்பாடு எல்லாமே துன்பத்தின் பின் செல்பவவை. துன்பமும் துன்ப நீக்கமுமே இவற்றின் குவிமையங்கள். துன்பத்தில் எண்ணம் குவியக்குவிய அது பெருகிக்கொண்டே செல்வதை நான் பார்த்திருக்கிறேன். அது சமூகத் துன்பமாய் இருந்தாலும் சரி தனி மனிதத் துன்பமாய் இருந்தாலும் சரி. இலக்கியமும் இதற்கு விதிவிலக்கல்ல. தீவிர இலக்கியம் இன்னும் இன்னும் என்று தீவிரமாய் துயரத்தைத் தேடிச் செல்கிறது. தன் புண்ணைக் கடித்துக் கடித்துப் பெரிதாக்கி ஒரு மாபெரும் புண்ணாக மாறி வாழ்ந்து மடிந்து போகும் தெருநாய்களைப் போல் நாமாகிவிட்டோம், இருளைக் கூர்ந்து கூர்ந்து பார்ப்பதால் ஒளி பிறந்துவிடும் என்று நம்பும் குருடர்கள் போல் நாம் இருக்கிறோம். சாருவின் படைப்புகள் இந்த துன்பமைய நோக்கிலிருந்து நம்மை விடுவித்துச் செல்பவை. தனித்துவமானவை. இதை உணர்ந்த பொழுதில்தான் நான் எனக்கு போகன் என்கிற புனைப்பெயரை சூடிக்கொண்டேன். இந்த பார்வை மாற்றத்துக்கு தமிழில் தி ஜானகிராமன், லா ச ரா மற்றும் சாருவுக்கு பங்குண்டு. ஹெடோனிஸ்ட் என்ற பதத்துக்கு தமிழில் இம்மூவரையே நாம் மாதிரியாகக் காட்டமுடியும். முதலிருவரிடமும் கவித்துவம் ஓங்கி நிற்கும். அவர்களிடமிருந்தது காவிய அழகியலின் தொடர்ச்சிதான். சாருவே நவீன மனதுக்கு நெருக்கமான ஒரு உடல் கொண்டாடி.
ஆனால் வாழ்வில் துன்ப நோக்கை நீக்கி இன்பத்தை மட்டுமே இலக்காய்க் கொள்வது எளிதல்ல என்று எனக்குப் பிறகு தெரிந்தது. அது கடும் மனப்பயிற்சியையும் பழைய பழக்கங்களின் அழிப்பையும் வேண்டுவது.
இதே போன்ற ஒரு நகை முரண்தான் நக்சல்பாரிக் கிளர்ச்சியின் நாயகர்களில் ஒருவரான சாரு மஜூம்தாரின் பெயரின் ஒருபகுதியையும் பிரம்மச்சாரி ஸ்வாமி விவேகானந்தரின் பிரதான சிஷ்யையான நிவேதிதாவின் பெயரை அறிவழகன் என்கிற எழுத்தாளர் சூடிக்கொண்டது. என்னைவிட அவருக்கே இந்தப் பெயர் பொருத்தமாக இருந்திருக்கும்.
மனித உடல் ஒரு அடிப்படையான அரசியல், சமூக அலகு. இதைக் கைப்பற்ற தேவர்கள், அசுரர்கள், அரசியல்வாதிகள், அரசர்கள், மத குருக்கள் எல்லோரும் முயல்கிறார்கள். குறிப்பாக இந்த அலகுகளின் பாலியல் தேர்வுகள், விருப்பங்கள் இவர்கள் கைப்பற்ற விழையும் விசைகளாக உள்ளன. இவற்றின் மேல்தான் மற்ற மேல் கட்டுமானங்களான குடும்பம், அரசு, மதம், சாதி, இனம், வர்க்கம் எல்லாமே கட்டப்பட்டுள்ளன. எனவே இந்த அடிப்படைத் தேவைகளின் மீது சுமத்தப்படும் விலங்குகளைத் தகர்க்காமல் விடுதலையை அதன் முழு அர்த்தத்தில் அடையமுடியாது என்பது சாரு திரும்பத் திரும்பத் தன் படைப்புகளிலும் பேச்சிலும் முன்வைக்கிற ஒரு கருத்தாகும்.
சாருவுக்கான முன் மாதிரிகள் தமிழ் இலக்கியத்தில் இல்லவே இல்லை என்றே சொல்லிவிடலாம். அவருக்கு முன் மாதிரிகளை தேட நாம் ஐரோப்பிய இலக்கியத்துக்கு குறிப்பாக பிரஞ்சு இலக்கியத்துக்குத்தான் செல்லவேண்டும். அவர் தமிழில் எழுதும் ஒரு பிரஞ்சு எழுத்தாளர் என்றால் தவறல்ல. இது ஒரு குறையாகப் பலரால் சொல்லப்படுகிறது. அவர் ஒரு டவுன்லோடு எழுத்தாளர் என்றெல்லாம் இகழப்பட்டிருக்கிறார்.
உண்மையில் நவீன இலக்கியமே ஒட்டுமொத்தமாக ஒரு மேற்கத்திய இறக்குமதிதான். நவீன இலக்கியம் மட்டுமில்லாமல் நவீன சிந்தனையே ஒரு மேற்கத்திய இறக்குமதிதான். உலகமயமாக்கலுக்குப் பிறகு நம் வாழ்வு மேலும் மேலும் மேற்கத்திய சாயல் கொண்டதாக மாறிவருகிறது. இன்னும் மாறும். சாருவின் எழுத்துகளைப் படிக்கிறவர்களில் பலர் இளம் தலைமுறையைச் சார்ந்தவர்களாக இருப்பதன் காரணம் இதுவே. அவரது எழுத்து இனிவரும் காலங்களில்தான் அதன் முழுமையான வாசகப் பரப்பைச் சென்று அடையும்.
நாம் நம்முடைய காவிய மரபின் மீது அளவுக்கதிகான மதிப்பும் விருப்பமும் கொண்டிருக்கிறோம். மேற்குலகம் அதன் கிரேக்கக் காவியங்கள் மீது கொண்டிருந்தது போல. ஆனால் மரபான காவியங்களின் காலம் முடிந்துவிட்டது என்று 17ம் நூற்றாண்டிலேயே அவர்கள் உணர்ந்துவிட்டார்கள். இனி நாம் அதைத் தொடர விரும்பினால் mock epic எனப்படும் பகடிக் காவியங்களாகவே செய்யமுடியும் என்பதை செர்வாண்டிஸ் தனது don quixote நாவல் மூலம் உரக்கச் சொன்னார். நவீன நாவல் என்பது இந்த பகடிக் காவியங்களின் தொடர்ச்சிதான்.
நமக்கு எந்தச் செய்தியுமே மிகத் தாமதமாகவே வந்து சேர்ந்திருக்கிறது. இந்த காவியத்தின் மரணம் பற்றிய செய்தி போலவே. ரோலாண்ட் பார்தஸ் இதை இன்னும் முன் நகர்த்தி நாவலின் மரணம் என்று சொன்னார். அவர் சொன்ன ஆசிரியனின் மரணம் மட்டுமே இங்கு விவாதிக்கப்பட்டிருக்கிறது.
சாருவின் நாவல்களில் காணப்படும் மையமின்மைக்கு இது ஒரு முக்கிய காரணம். நாவலின் காவிய மரபு ஹேங் ஓவரிலிருந்து மேற்கத்திய நாவல்கள் எப்போதோ தங்களை விடுவித்துக்கொண்டு விட்டன. அது நவீன வாழ்வைப் பிரதிபலிக்கப் போதுமானதாக இல்லை என்று உணர்ந்துகொண்டுவிட்டன. சாருவின் புகழ்பெற்ற நாவலான சீரோ டிகிரி என்கிற தலைப்பு ரோலாண்ட் பார்த்ஸ் எழுதிய writing zero degree என்ற இலக்கிய விமர்சன நூலின் கருத்துகளோடு தனக்குள்ள ஒத்திசைவை வெளிப்படுத்துகிறது.
இந்த நூலில் அவர் மரபான ‘பள்ளிக்குழந்தைகள் போல அடக்க ஒடுக்கமாக நடந்துகொள்ளும் புரட்சியாளர்களின் நாவல்மொழியைப்’ பற்றிக் கேலி செய்கிறார். புதிய விஷயங்களை புதிய வடிவில் புதிய நடையில் புதிய மொழியில்தான் சொல்ல முடியும். அவை நிச்சயமாக மரபாக வார்த்தைகளுக்கும் மொழிக்கும் பெரும்பான்மையினர் கொடுத்திருக்கும் அர்த்தங்களைக் குலைப்பதாகதான் இருக்கும். நிலைகுலைவை ஏற்படுத்தத்தான் செய்யும். பூக்கோ இதை அங்கீகரிக்கப்பட்ட சரித்திரங்கள், விலக்கப்பட்ட சரித்திரங்கள் என்கிறார். விலக்கப்பட்டவர்களின் சரித்திரங்கள், பொது சமூகத்தால் திருடர்கள், தோட்டிகள், வேசைகள், ஒழுக்கம் கெட்டவர்கள் என்றெல்லாம் சொல்லி விலக்கிவைக்கப்பட்டவர்களின் சரித்திரங்கள்.
இவ்வகையில் சாருவை முதல்முதலாகப் படிப்பவர் நீண்டகாலமாக சமதளத்தில் நின்றுகொண்டிருந்த ஒருவர் திடீரென்று ஒரு ராட்சத ராட்டினத்தில் ஏற்றப்பட்டு சுற்றப்படுகிறவர் போல் உணர்வார். அவரது காட்சிக் கோணங்களும் காட்சிகளும் மாறிக்கொண்டே இருக்கும். அவர் எதைப்பற்றிக்கொள்வது என்று திணறுவார்.
இதை பின் நவீனத்துவ பரிபாஷையில் unreliable narrator என்று சொல்வார்கள். நம்ப முடியாத கதை சொல்லி. காவிய மரபில் நம்ப முடியாத கதைகளை நம்பக்கூடிய விதத்தில் சொல்லிக்கொண்டிருந்தார்கள் எனில் இங்கு நம்பக்கூடிய கதை நம்ப முடியாத விதங்களில் கோணங்களில் சொல்ல்ப்படும். சாரு சமீபத்தில் எழுதியிருக்கும் ‘நான் தான் ஒளரங்கசீப்’நாவல் ஒரு சிறந்த உதாரணம்.
இதில் ஒரு பின் நவீனத்துவ நாவலுக்கான எல்லா கூறுகளும் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில் ஒரு அகோரியின் உடல் மூலமாக அவுரங்கசீப்பின் ஆவி எழுத்தாளருடன் பேசுகிறது. நடு நடுவே சமகாலப் பிரச்சினைகள், எழுத்தாளரின் சொந்தப் பிரச்சினைகள், அவரது முந்தைய நூல்கள், இலக்கியக் கோட்பாடுகள், சக எழுத்தாளர்களுடன் ஏற்பட்ட மோதல்கள், சினிமாக்கள், கிசுகிசுக்கள், தனது மொழிபெயர்ப்பாளரின் பால் கூட சாப்பிடாத கடும் சைவ உணவுப்பழக்கம் எல்லாவற்றையும் இருவரையும் பேசித் தீர்க்கிறார்கள். நடு நடுவே எழுத்தாளரை விலக்கிவிட்டு ஒளரங்கசீப்பும் ஒளரங்கசீப்பை விலக்கிவிட்டு எழுத்தாளரும் நேரடியாக நம்மிடம் பேசவும் செய்கிறார்கள். இது பின் நவீனத்துவத்தில் breaking the fourth wall என்றழைக்கப்படுகிற ஒரு உத்தியாகும். நவீன நாடகங்களில் ப்ரெக்ட் போன்றவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு இலக்கியத்துக்குள்ளும் வரித்துக்கொள்ளப்பட்டது. இந்த நாவலில் இது நம் கவனத்தை சிதறடிப்பதற்குப் பதிலாக கூர்மைப்படுத்தும் வினோதம் நிகழ்ந்திருக்கிறது.
கலை மற்றும் கருத்தியல் பார்வையில் சாரு சார்தருக்கும் ரோலாண்ட் பார்த்துக்கும் இடைப்பட்ட ஒரு பள்ளியில் பயணிக்கிறார். சார்தர் இவ்வுலகை அபத்தங்களின் குவிமுனை என்று எடுத்துக்கொண்டாலும் எழுத்தாளன் ஏதோ ஒன்றிற்கு கடப்பட்டவனாக (committed)ஆக இருக்கவேண்டும் என்று சொல்கிறார். ரோலண்ட் பார்த் இந்த சுமைகளை எழுத்தாளன் தன் மீது போட்டுக்கொள்வதை ஊக்குவிப்பதில்லை. அவர் எழுத்தாளன் எழுதியதும் பிரதியோடு அவன் தொடர்பு முடிந்துவிடுகிறது என்பவர். சாருவின் படைப்புலகு இந்த இரண்டு முனைகளுக்கும் ஊசலாடுவது. சாருவின் படைப்புகளில் தொடர்ச்சியாக பாசிசத்திற்கு எதிரான கருத்துகளும் மறுபுறம் அதீதத் தனி நபர் வாதமும் மாறி மாறி வருவதைக் காணலாம். லட்சியவாதத்துக்கு எதிரான அவரது இருத்தலியல் நிலைப்பாடும் மரபான வாசகர்களை அவரோடு ஒன்றவிடாமல் செய்வது. எழுத்தாளன் என்பவன் ஆசிரியனாகவோ களச்செயல்பாட்டாளனாகவோ இருக்கவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு அவர்களுக்கு உள்ளது. இதை ஒரு எழுத்தாளர் சந்திக்கத் தவறும்போது இவர்கள் எரிச்சலடைகிறார்கள். இது ஒரு பழமையான எதிர்பார்ப்பாகும். இந்த விஷயங்களைப் பற்றியும் சாரு அவரது நூல்களுக்குள்ளேயே பேசியிருக்கிறார். பல நேரங்களில் அவரது அதீதத் தன்னைச் சுட்டி நிற்கும் தன்மை வாசகர்களின் அகங்காரத்தைச் சீண்டி விலக்குகிறது. ஆனால் பின் நவீனத்துவத்தின் அடையாளமே இதுதான்.
சாருவின் இந்த நாவலுக்கு உலக அளவில் இணையாக நாம் உம்பெர்டோ ஈகோவின் Name of the rose, Foucalt’s pendulum போன்ற நாவல்களைச் சொல்லமுடியும். தமிழில் தமிழவன் எழுதிய இரு நாவல்களை ஓரளவு சொல்லலாம். ஆனால் இதிலிருக்கும் சரளமான தன்மையும் வாசிப்பின்பமும் அவற்றில் இல்லை. சாருவின் நடையும் மொழியும் தமிழுக்கு அவரது இன்னொரு முக்கியமான பங்களிப்பு. தீவிர இலக்கியம் என்பது தலை முதல் கால் வரை பல்வேறு வேதனைகளை உருவாக்கக்கூடியது என்ற அவப்பெயரை உடைத்ததில் சாருவின் பங்களிப்பு முக்கியமானது.
சாருவின் இந்த நாவலில் அவர் சில சாத்தியமற்றவைகளை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். அவரது முந்திய நாவல்களில் காணப்படும் சிதறல் தன்மை இதில் இல்லாமல் இல்லை. பலருக்கு உட்புகத் தடையாக இருந்த ஒரு விஷயம் அது. இதில் அது குறைவு என்று தோன்றும்படி செய்திருக்கிறார். இந்த நாவலில் அவர் தரும் தகவல்களே மிகுந்த திகைப்பூட்டுகிறவை. அவற்றை அவர் கோத்திருக்கும் விதம் ஒரு மேதைக்குரியது. ஒரு பின் நவீனத்துவ மேதை. பின் நவீனத்தில் எழுத்தாளர்களும் மேதைகளும் இல்லை பிரதிகள் மட்டுமே எஞ்சுகிறவை என்றாலும்.
அந்த வகையில் இந்த நாவலை தமிழின் முதல் பின் நவீனத்துவ காவியம் என்று துணிந்து சொல்லலாம்.
விஷ்ணுபுரம் விருந்தினர்-1: அ.வெண்ணிலா
விஷ்ணுபுரம் விருந்தினர்-2. கார்த்திக் புகழேந்தி
விஷ்ணுபுரம் விருந்தினர் 3- அகரமுதல்வன்
விஷ்ணுபுரம் விருந்தினர்-4- கார்த்திக் பாலசுப்ரமணியன்
விஷ்ணுபுரம் விருந்தினர்-6, கமலதேவி
விஷ்ணுபுரம் விருந்தினர்- 6,விஜயா வேலாயுதம்
விஷ்ணுபுரம் விருந்தினர்: 7 குளச்சல் மு யூசுப்
விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்.போகன் சங்கர்