பனிநிலங்களில் -8

ஸ்வீடனில் எங்கள் கடைசிநாட்களில் பனிபெய்தது. அது வழக்கத்துக்கு மாறான விஷயம். டிசம்பர் மத்தியில்தான் பனிப்பொழிவு இருக்கும். ( இவ்வாண்டு கடந்த ஐம்பதாண்டுகளில் இல்லாத பனிப்பொழிவு இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது). ஸ்வீடன் ரவி அனுப்பிய புகைப்படங்களில் பனி மலையெனக் குவிந்திருக்கிறது. நியூயார்க்கிலும் பனிக்கொப்பளிப்புதான்.

ஃபின்லாந்தில் இருந்து மீண்ட அன்று நான் ரவியின் இல்லத்தில் அறைக்குள் இருந்தேன். குளிர் ஏறி ஏறி வந்தது. வெப்பக்கருவி கொண்டுவந்து வைத்தும் குளிர் விரல்களை கவ்வி தட்டச்சு செய்ய முடியாமலாக்கியது. அரை இருட்டு அறைக்குள். மாலை மணி இரண்டுதான். கீழிருந்து அருண்மொழி கூப்பிட்டு “ஜெயன் வெளியே பாரு, பனி!” என்றாள்.

நான் வெளியே எட்டிப்பார்த்தேன். பனித்துருவல்கள் வானிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தன. இலவம்பஞ்சு வெடிக்கும் பருவத்தில் மரத்தடியில் அப்படி பஞ்சுப்பிசிறுகள் பறந்து இறங்கிக்கொண்டிருக்கும். மிகமெல்ல பெய்யும் வெண்மழை.

நான் ஆடைகளை அணிந்துகொண்டு வெளியே சென்றேன். கையை விரித்துப் பிடித்தால் சோப்புநுரை போல பனிப்பொருக்குகள் நிறைந்தன. கார்கள் எல்லாம் பனிக்குல்லாய் போட்டிருந்தன. அத்தனை பரப்புகள்மேலும் பனிக்குவைகள். அள்ளினால் நுரையை அள்ளும் அதே உணர்வு. ஊதினால் பறக்கும். கைவிரல்களால் அள்ளிப்பற்றி இறுக்கினால் கெட்டியாகி விடும்.

ஒரு மணிநேரம் பனியில் உலவிக்கொண்டிருந்தேன். பனியை உதைத்தேன். பனியை காலால் துழாவினேன். என்ன செய்வதென்றே தெரியவில்லை. சின்னக்குழந்தைகள் மெத்தை தலையணையை வைத்து விளையாடுவதுபோல. அர்த்தமற்ற உற்சாகம்.ஆனால் மெய்யான மகிழ்ச்சிகள் எல்லாமே கொஞ்சம் அர்த்தமற்றவைதான்

அஜியும் சைதன்யாவும் வைக்கிங் அருங்காட்சியகம் சென்று திரும்பும்போது பனிப்பொழிவை பார்த்தார்கள். முதல் பனிப்பொழிவில் ஸ்வீடன் மக்கள் தெருக்களில் நடனமாடியதை அஜிதன் படம்பிடித்து வைத்திருந்தான்.

கண்கூசவைக்கும் வெள்ளை உலகம். ரவியின் இல்லத்துக்குப் பின்னாலிருந்த வயல்வெளி பனியால் மூடி அலையலையாகத் தெரிந்தது. மரங்கள் பனிச்செண்டுகள். பனிக்கு ஓர் வடிவம் இருந்தது. அது நீர் படிகமாகும்போது உருவாகும் அடிப்படை வடிவம். ஒரு சிறுவெண்மலர். ஒரு நுண்ணிய கண்ணாடிச் சிற்பம். அது விண்ணில் மலர்ந்து மண்ணை அடைகிறது.

எல்லா படிகங்களுக்கும் அப்படி ஒரு அடிப்படை பொறியியல் கட்டுமானம் உண்டு. சி.ஜி.யுங் அதைத்தான் ஆர்க்கிடைப் என்பதற்கான உதாரணமாகச் சொல்கிறார். அவற்றின் ஆதாரமான திடவடிவம் அது. அதுவே பலநூறு என பெருகி பனிவெளியாகிறது.  கண்ணாடிச்சில்லுகளில் ஒற்றை பனிப்பொருக்கு ஒட்டியிருக்கையில் வெளியே இருக்கும் ஒளியில் அவ்வடிவை தெளிவாகவே காணமுடியும்.

பனியில் ரவியின் இல்லத்தை திரும்ப கண்டுபிடிக்க முடியாமல் கொஞ்சம் சுற்றினேன். பின்னர் கண்டுபிடித்தபோது என்னையே பாராட்டிக் கொண்டேன். இத்தனைக்கும் ஐம்பது வீடுகள் கொண்ட தொகுப்புதான் அது. ஒவ்வொரு வீடாக கதவை தட்டி ”உங்கள் வீட்டில் ஒரு தமிழ் எழுத்தாளர் தொலைந்துபோயிருக்கிறாரா?” என்று கேட்டால் எப்படி இருக்கும்?

இரவு இலங்கைத் தமிழ் நண்பர்கள் சிலர் பார்க்க வந்திருந்தார்கள். அவர்கள் என்னை ஸ்வீடன் (தனியார்) ரேடியோவில் ஒரு பேட்டி எடுத்தனர். ரவியின் இல்லத்திற்கு மேலேயே ஒலிப்பதிவு நடைபெற்றது. இணையம் வழியாக ஒலிபரப்பான பேட்டியை ‘லைவ்’ ஆக அறுநூறுபேர் கேட்டதாகச் சொன்னார்கள்.

அதில் ஒரு கேள்வி, நீங்கள் வலதுசாரியா இடதுசாரியா? நான் அடிக்கடி பதில்சொல்லும் கேள்வி அது. நான் சொன்னேன். புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன், சுந்தர ராமசாமி என தமிழின் அத்தனை படைப்பாளிகளும் வலதுசாரிகளால் இடதுசாரி என்றும் இடதுசாரிகளால் வலதுசாரி என்றும் வசைபாடப்பட்டுள்ளனர். எழுத்தாளன் எந்த சாரியும் இல்லை, அவனே ஒரு சாரி. ஆகவே அவன் எல்லா சாரிகளுக்கு எதிர்ச்சாரி.

அதன்பின் நானும் ரவியும் பிரகாஷும் கிளம்பி ஸ்டாக்ஹோம் தமிழ்ச்சங்கத்தை நடத்திவரும் நண்பர்களை சந்திக்கச் சென்றோம். அவர்களெல்லாம் அங்கே டிசிஎஸ் நிறுவனம் நடத்தும் கணிப்பொறி நிறுவனத்தின் ஊழியர்கள். பெரும்பாலும் அனைவருமே அருகருகே அடுக்குமாடி இல்லங்களில் குடியிருக்கிறார்கள்.

சென்றமுறை பவா செல்லத்துரை வந்தபோது ஸ்டாக்ஹோமில் ஒரு தமிழ்நூலகம் இருந்தாகவேண்டும் என்று சொன்னதை ஒட்டி ஊருக்கு வந்து நூல்களை வாங்கி வந்து ஒரு சிறுநூலகம் அமைத்துள்ளனர். அதை நான் நாடா வெட்டி திறந்து வைத்தேன். ஒரு சிறு தொடக்கம். அங்கே இருக்கும் பொழுதுகளை அவர்கள் வாசிப்பதற்குச் செலவிடுவார்கள் என்று நம்புகிறேன். அதன்பின் உணவு. அங்கேயே செய்த அதிரசம் தஞ்சையின் சுவை கொண்டிருந்தது. குறிப்பாக என் மாமியார் சரோஜா டீச்சரின் கைப்பக்குவம்.

பேசிக்கொண்டிருக்கையில் ஒரு விவாதம் உருவானது. ஒரு பெண்மணி ஸ்வீடனில் குழந்தைகளைக் கண்டித்து வளர்க்கமுடியவில்லை, கண்டித்தால் அரசு நடவடிக்கை எடுக்கிறது என்று குறைப்பட்டார்.

நான் சொன்னேன். “நீங்கள் ஏன் கண்டிக்கவேண்டும்? உண்மையில் உங்கள் குழந்தைகள் அளவுக்கு நீங்கள் முறையான பண்பாட்டுக் கல்வியோ நடத்தைப் பயிற்சியோ கொண்டவர்களா? ஒரு நவீன நாட்டின், முதன்மையான கல்விமுறையின் வழியாக பயிற்சி பெறுபவர்கள் அவர்கள். நீங்கள் அப்படி அல்ல. மிகப்பிந்தியிருக்கும் ஒரு கல்விமுறையில் பயின்றவர்கள். நம் குடும்பங்களில் பண்பாட்டுப் பயிற்சி என்பதே இல்லை. நமக்கு பொதுநடத்தை பயிற்சியும் இல்லை. அவற்றை நம் குழந்தைகளிடம்தான் கற்கவேண்டியிருக்கிறது. தந்தை கிழித்துபோட்ட குப்பையை கிண்டர்காட்டன் குழந்தை எடுத்து குப்பைக்கூடையில் போடுவதை நான் அமெரிக்காவில் கண்டிருக்கிறேன். நீங்கள் கண்டித்தால் அக்குழந்தைகளை உங்கள் பண்பாட்டுத்தரநிலையை நோக்கி வன்முறையாக இழுப்பீர்கள். அதை ஏன் செய்யவேண்டும்? அவர்களை இந்த நாகரீகத்துக்கு அளியுங்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ளட்டும். நீங்கள் செய்யவேண்டியது அவர்களுடன் உரையாடலில் இருப்பதையும் அவர்களை அறிந்துகொண்டிருப்பதையும் மட்டும்தான்”

அதை புரியவைக்க என்னால் எளிதில் இயலவில்லை. குழந்தைகள் தங்கள் பொறுப்பிலிருக்கும் ‘செப்பனிடவேண்டிய கச்சாப்பொருட்கள்’ என்னும் பிரமையில் இருந்து பெற்றோர் விடுபட முடியாது. (நானும்தான்) “உங்கள் குழந்தைக்கு உடல்நிலை மோசமானால் அவர்களுக்கு நீங்கள் மருந்து தரமாட்டீர்கள். நிபுணர் வேண்டுமென எண்ணுவீர்கள் அல்லவா? அதைப்போலத்தான் கல்விக்கும்” என்றேன்

அங்கேயே உணவுண்டுவிட்டு திரும்பும்போது பல்கலைக் கழகம் சென்று சைதன்யாவை அழைத்துக்கொண்டோம். அவளும் தோழியும் பொழிபனியில் விளையாடியதாகவும் பனிமனிதன் செய்ததாகவும் சொன்னாள்.

இரவு அருண்மொழி பெட்டிகளை கட்ட ஆரம்பித்தாள். நான் அதற்குள் தூங்கிவிட்டேன். மறுநாள் காலையில் எழுந்ததும் கிளம்பி இன்னொரு முறை பனியுலா சென்றோம். வயல்வெளி வழியாக அருகிருக்கும் காடுகள் வரைச் சென்றோம்.

பனியில் மான்கள் உடல் ஒடுங்க நடந்து செல்வதைக் கண்டோம். அவை பனியை மூக்கால் விலக்கி உள்ளே உறங்கிய உறைந்த புல்லை மேய்துகொண்டிருந்தன. அந்தக் குளிரில் தாக்குப்பிடிக்கும் அளவுக்கு அவற்றுக்கு உடலில் மயிர்ப்போர்வையும் இல்லை. உறைநிலைக்குக் கீழே ஐந்து பாகை இருந்தது குளிர்.

அணில்கள் மரக்கிளைகளில் விளையாடிக்கொண்டிருந்தன. கறுப்பு அணில்கள். (அ.முத்துலிங்கம் கறுப்பு அணில் என ஒரு அருமையான கதை எழுதியிருக்கிறார். நானும் நண்பர்களும் நடத்திய சொல் புதிது இதழில் வெளிவந்த கதை அது) அணில் கரிய புள்ளி போல வெண்பனிப்பரப்பில் துள்ளி துள்ளிச் சென்றது. மரங்களில் ரேவன்கள் பனிப்பொருக்குகளை உதிர்த்தபடி அமர்ந்து எழுந்தன. ஆனால் நம்மூர் காகங்கள் போல அவை ஒலியெழுப்புவதில்லை.

பனியை பார்த்துப் பார்த்து சலிப்பதில்லை. நான் பனியை அள்ளி சைதன்யா மேல் பொழிந்தேன். அவள் என்னை துரத்தித் துரத்தி பனியால் அடித்தாள். ஓர் இளம்பெண் பனியை பெரிய உருளையாக உருட்டித் திரட்டிக்கொண்டிருந்தாள். பனிமனிதன் செய்யப்போகிறாள் என்று தெரிந்தது. ஸ்வீடன் மக்கள் எல்லாருமே பனியை கொண்டாடிக்கொண்டிருந்தனர்.

ரவியின் இல்லத்தின் அருகிலேயே ஒரு குறிப்பிடத்தக்க இடம் இருக்கிறது. வானிலிருந்து பார்த்தால் ஒரு கண்போலத் தெரியும்படி அமைக்கப்பட்டிருக்கும்  அது ஓர் இயற்கை ஊற்று.பனியில் உறையாமல் நீலநிற நீர் ஓடையாகச் சென்றுகொண்டிருந்தது. சுற்றிலும் பனிக்காலத்துக்காக கிளைவெட்டப்பட்ட மரங்கள் குச்சிகளக நின்றிருந்தன. (அந்தக்காலத்தில் பள்ளி விடுமுறையில் எங்களுக்கு சம்மர்கட் என்னும் மொட்டையை அடித்துவிடுவார்கள்)

அது கன்ஹில்ட் என்ற பெண்ணின் தொன்மத்துடன் தொடர்புடையது. ஜோன் ஆஃப் ஆர்க் போல அவள் ஒரு ஸ்வீடிஷ் வீராங்கனை. மந்திரசக்திகள் கொண்டவள் என்றும் பேரன்னை என்றும் அவளை வழிபடுகிறார்கள். வைக்கிங்குகளின் குலக்குழுக்கள் இடையே பூசல் நிகழந்தபோது அவள் சமாதானம் செய்து வைத்தாள். பெண்ணுக்கு அந்த அதிகாரம் உண்டா என மூத்தகுடித்தலைவர்கள் சிலர் சொல்ல அவள் தன் வாளை உருவி அந்த மண்ணில் நட்டாள். அங்கிருந்து ஊற்று கிளம்பி வழியத் தொடங்கியது.

பனியில் இரண்டுமணிநேரம் நடந்திருப்போம். அதற்குள் மூச்சுவாங்கியது. கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கண்களை சூடாக்கி மூக்கில் நுழைந்து மூக்குவழியாக வந்து வாயில் பட்டு உப்புக்கரித்தது. ஆச்சரியம்தான். உடலையே மூடிவைக்கிறோம். கண் உறைநிலைக்குக் கீழே திறந்திருக்கிறது. ஏனென்றால் கண் ஓர் ஊற்று. அது உறைவதில்லை.

எங்களுக்கு மதியம் விமானம். ரவியும் அர்ச்சனாவும் விமானநிலையத்திற்கு வந்து ஏற்றிவிட்டனர். நான் சந்தித்த அரிய பெண்மணிகளில் ஒருவர் அர்ச்சனா. உற்சாகமான சிரிப்புடன் ஸ்வீடன் வாழ்க்கையைப் பற்றிப் பேசினார், எதைப்பற்றியும் குறை சொல்லவில்லை. பெங்களூரைச் சேர்ந்தவர். ரவியை காதலித்து மணந்தவர்.

விடைபெற்றுக் கொண்டு உள்ளே சென்றோம். அங்கே விமானநிலைய ஊழியர் நாங்கள் சுவிதா என்ற படிவம் நிரப்பாமல் விமானமேறமுடியாது என்று சொல்லிவிட்டார். அது எங்களுக்கு தெரியாது. நல்லவேளையாக எங்கள் தடுப்புமருந்துச் சான்றிதழ்கள் செல்பேசியில் இருந்தன. அவற்றை அரங்கா வழியாக பயணமுகவருக்கு அனுப்பி இந்தியாவிலேயே சுவிதா சான்றிதழ் பெற்று விமானம் ஏறினோம். ஓர் அரைமணிநேரப் பதற்றம்.

விமானத்தில் நான் மீண்டும் வைக்கிங்குகள் பற்றிய ஒரு படம் பார்த்தேன். (The Northern Man ) அவர்களை கிட்டத்தட்ட காட்டுமிராண்டிகள் போலத்தான் ஹாலிவுட் காட்டுகிறது. கிறிஸ்தவ மரபு அவர்களை பண்படாதோர் (Heathen) என்று சொல்லிவந்த மனநிலை அப்படியே நீடிக்கிறது. ஆனால் அருங்காட்சியகத்தில் கண்ட வைக்கிங்குகளின் பண்பாட்டுச் சின்னங்கள் மிகமிக நுண்ணியவை, அழகியவை, ஆடம்பரமானவை.

வைக்கிங் அருங்காட்சியகம் அவர்களைப் பற்றிய இன்னொரு சித்திரத்தை அளிக்கிறது என்று அஜி சொன்னான். ஆர்ட்டிக் வட்டம் வரை வைக்கிங்குகளின் ஆட்சிநிலம். அவர்கள் கிறிஸ்தவம் உருவான பின்னரும் இணையாக பலநூற்றாண்டுக் காலம் ஆண்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் வணிகமும் நடைபெற்றுள்ளது.

அனைத்தையும்விட முக்கியமானது வைக்கிங்குகளின் பண்பாடு. அது இந்துப் பண்பாட்டுக்கு நிகரான ஒரு இயற்கை மதம் கொண்டது. அவர்களுக்கு இந்தியாவுடன் தொடர்பு இருந்தது. வைக்கிங்குகள் ஆட்சிசெய்த தெற்கு ஆர்டிக் பகுதியில் புத்தர்சிலைகள் அகழ்வாய்வில் கிடைத்துள்ளன. அவர்களின் சிற்பம், ஓவியம், கட்டிடக்கலை, உலோகத்தொழில்நுட்பம் ஆகியவை மிகமிக முன்னேறியவை.

கத்தாரில் கால்பந்து காணவந்த கூட்டம் விமானநிலையம் முழுக்க. கால்பந்து மைதானங்கள் அமைக்க அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் ஊர்திரும்பும் கூட்டம் இன்னொரு பக்கம். இன்னொரு ஆழ்துயில் வழியாக சென்னை வந்து சேர்ந்தேன். மீண்டும் சென்னையின் போக்குவரத்து நெரிசலின் உயிர்ப்பு.

(நிறைவு)

முந்தைய கட்டுரைரசிகன்
அடுத்த கட்டுரைமமங் தாய் கவிதைகள்