[ஒரு குறிப்பு: பாலு மகேந்திரா எடுக்கவிருந்த படத்திற்காக நான் எழுதிய கதை இது. ஒரு குறுநாவல். இதை அவர் திரைக்கதை அமைப்பதாக இருந்தது. அந்த தயாரிப்பாளர் பங்குச்சந்தை வீழ்ச்சியில் காணாமல் போனதனால் திட்டம் கைவிடப்பட்டது. அவர் வேறு கதைக்குச் சென்றுவிட்டார்.
முற்றிலும் சொற்சித்திரமாக உள்ள இந்த உணர்ச்சிகரமான கதைக்கு அவர் எப்படி காட்சி வடிவம் அளித்து திரைக்கதை அமைத்திருப்பார் என்ற எதிர்பார்ப்பு எனக்கு இருந்தது. அது நிகழவே இல்லை என்பதில் வருத்தம் என்றாலும் எது நிகழ்கிறதோ அதுவே அது என்று கொள்ள வேண்டியதுதான்]
[ 1 ]
கண்ணாடிக்கதவுகளின் அசைவுகள் உருவாக்கிய அலைகளில் உன் பிம்பம் மிதந்து மிதந்து ஒன்று பலவாகப்பெருகிப்பரவி ஒவ்வொன்றும் என்முன்னால் இதோ விலகி விலகிச் செல்கிசெல்கிறது சுசி. இந்த குளிர்ந்த முன்னிரவின் தனிமையில் மின்னிணைப்பு துண்டிக்கப்பட்ட கருவிபோல முற்றிலும் செயலிழந்தவனாக நின்று மஞ்சள் சுடிதாரின் கடைசித்திவலை அமிழும் உன் கடைசிப் பிம்பத்தை பார்த்துக் கொண்டிருக்கிறேன். உன்னை அனுப்பிவிட்டு தெளிந்த கண்ணாடிப்பரப்பு மெல்ல அசைந்தாடி பிம்பங்களைக் குழைக்கிறது.
அப்பால் நட்சத்திரங்கள் மின்மினித்துப் பரவிய விரிவானின் கீழே, என் அடிவயிற்று ஆவேசம்போல செஞ்சுடர்விழிகள் விழித்து பேரிரைச்சலிட்டு எழுந்துவந்து திரும்புகிறது பிரம்மாண்டமான ஜெட் விமானம். தனிமை என்ற சொல்லை மொழிதோன்றிய நாளில் இருந்து இக்கணம் வரையெனத் துளித்துளியாக உணர்ந்தவனாக இங்கே நிற்கிறேன். இப்புவியில் பிரிந்து செல்பவர்களைப் போல குரூரமானவர்கள் எவருமில்லை சுசி.
நீ செல்லும் விமானம் இருளைத் துழாவி மீன் போல் எழுந்து வானில் ஒளிக்குவியலாக நிறைந்து சுருங்கிக் சுருங்கிச் சென்று பின் இருண்டவெளியில் ஒரு மெல்லிய ஒளிச்சிமிட்டல் மட்டுமென ஆகி மறைந்தபின் நட்சத்திரங்களை மட்டும் பார்த்தபடி வெகுநேரம் நின்றிருந்தேன். பெருமூச்சுகளால் மட்டுமே உயிர்ச்சலனம் கொண்டவனாக.
பின்னர் விமான நிலையம் அடங்கியது. வழியனுப்ப வந்தவர்கள் ஒவ்வொருவராக நினைவுகளுடன் கண்ணீருடன் பெருமூச்சுகளுடன் திரும்பிச் சென்றார்கள். பொருளிழந்த வார்த்தைகள் நெருப்புக்கோடுகளாக சுடர்ந்தோடும் அறிவிப்புப் பலகைகளை பிரதிபலித்தபடி கண்ணாடிக் கதவுகள் அசைவிழந்தன. ஒவ்வொருவராக விலகியபின் நீர் வற்றிய குளம் போல வெறுமை கொண்டது விமான நிலையம். காபிக்கோப்பைகள் சில குப்பைக்கூடை அருகே சிதறிக்கிடந்தன. புத்தகக் கடையில் மஞ்சல் ஒளியில் இளைஞன் ஒருவன் தூங்கிக் கொண்டிருந்தான்.
வெள்ளை உடை அணிந்த ஒரு பெண் மௌனமாக பளிங்குத்தரையைக் கூட்ட ஆரம்பித்தாள். என்னை அவள் நெருங்கினால் கூட்டித்தள்ளிவிடுவாள் என்று அஞ்சினேன். மூச்சை ஊதி ஊதி வெளியே விட்டேன். அங்கிருந்து நான் உள்ளே இழுத்து நிறைத்துக்கொண்ட மனச்சுமையை அங்கேயே விட்டுவிட விழைபவனைப்போல. பின்னர் இறுதிப்பெருமூச்சை அங்கே விட்டுவிட்டு நான் என் காரை நோக்கி நடந்தேன். என் கார் என்னைப் போலவே குளிர்ந்து செயலற்று கல்லில் கடைந்தது போலக் கிடந்தது அங்கே. அதன் பானெட்டில் பனித்துளிகள் வியர்த்திருந்தன.
என் கைச் சாவியை அழுத்தினேன். விழிப்புகொண்ட புலி போல மெல்ல உறுமி கண்விழித்தது. கதவைத்திறந்து ஏறி அமர்ந்துகொண்டேன். என் வழக்கமான ஓட்டுநர் இருக்கையில் என்னுடைய உடலின் தடமும் சூடும் இருந்தது. என் கார் எனக்கு ஒரு கருப்பை போல. இதற்குள் ஒடிந்து சுருண்டு நான் அமர்ந்துகொள்ள முடியும். வெளியே இரைச்சலிட்டுக் கொந்தளிக்கும் பேருலகம் அப்போது வெறும் கண்ணாடிப்பாங்களாக எனக்கு அப்பால் ஓடிக்கொண்டிருக்கும்.
சாவியை திருகி, மீண்டும் மீண்டும் என் காரின் எஞ்சினை இயக்கினேன். அதன் நுனியில் தொங்கிய ஜப்பானிய பலசெயல்பொருள் கொத்தை கையல் ஆட்டி ஆட்டி விட்டேன். அதை எடுத்து என் நகங்களை வெட்டிக் கொள்ள வேண்டும் என்ற அபத்தமான எண்ணம் என்னுள் ஓடியது. சில்லென்று குளிர்ந்திருந்தது அந்த உலோகம். கூர்மை என்பது எப்போதுமே குளிர்ந்தது. குளிர்ந்தவையெல்லாம் ஏனோ மௌனமாக இருக்கின்றன.
கார் உறுமி உறுமி உறுமி அது பற்றிக்கொண்டபோது அதன் நெஞ்சில் முழங்கிய சொல்லை நான் அடையாளம் கண்டுகொண்டேன். பின்பு மரணம் ஒரு சொல்லாக இல்லை. விம்ம் என்று முழங்கிய கரிய சாலையில் விரைந்தது அது. ஆரத்தழுவும் வெறியுடன் ஒளிசுடர என்னை நோக்கிப் பாய்ந்துவரும் மரங்களாக விளக்குக் கம்பங்களாக முழங்கும் வாய்திறந்து கண்கள் எரிய சீறி வரும் வாகனங்களாக இருந்தது.
சுசி, மரணம் என்பதை மிக அருகே உணரும்போது நம் சொற்கள் அடங்கிவிடுகின்றன. பிரமித்த எண்ணங்கள் கால்புதைந்து நின்றுவிடுகின்றன. மரணம் என்பதற்கு மிக அருகே உள்ள சொல் மௌனம். ஆனால் உண்மையில் மரணம் அவ்விரு சொற்களில் இருந்து வெகுதூரத்தில் உள்ளது. மரணத்துக்கு ஒரு சொல்லை அடையாளம் வைப்பதுபோல அபத்தம் என்ன? மரணத்துக்கு இந்தப்பிரபஞ்சத்தையே சமன் வைக்கவேண்டும்.
என் எண்ணங்களின் அராஜகம் எனக்கே அச்சமூட்டியது. ஒருவகையான ஒழுங்குக்குள்ளும் வராத எண்ணங்கள். எண்ணங்கள் என்று அவற்றைச் சொல்வதுகூட பிழை. வெறும் சொற்றொடர்கள். சிலசமயம் சொற்கள். ‘வலது வலது வலது’ என்று மட்டும் என் மனம் பலநூறுமுறை சொல்லிக்கொண்டது. அப்படிச் சொல்வதை உணர்ந்ததும் தலையை உலுக்கிக்கொண்டு என்ன ஆயிற்று என்று பிரமித்தேன். ‘வோட·போன்’ என்ற மின்விளக்கெழுத்துக்களைப் பார்த்தேனா? ஆனால் என் வாயில் வோட·போன் என்ற சொல் இருப்பதை சற்று நேரம் கழித்து கண்டுகொண்டேன். நான் பைத்தியமாகி விட்டேனா என்ன?
இருநூறு கிலோமீட்டர் தொலைவுக்கு என் கார் விரைந்திருப்பதை பாண்டிச்சேரி புறநகரில் சிறிய பூசணிப்பூக்கள் போல எரிந்த மஞ்சள் விளக்குகளுக்கு கீழே அயர்ந்து தூங்கும் கான்கிரீட் வீடுகளைக் கண்டபோதுதான் உணர்ந்தேன். ஏன் இங்கே வந்தேன் என்று எண்ணிக் கொண்டேன். ஒருபோதும் இந்நகரை நான் பொருட்படுத்தியதில்லை. என்றோ ஒருமுறை எவரோ சில நண்பர்களுடன் இங்கு வந்திருக்கிறேன். இங்கே ஒரு முகம் கூட எனக்கு இல்லை. ஒரு தெருவோ வீடோ நினைவில்லை. அனிச்சையாக மனம் தேர்வுசெய்த இந்நகரம் வெறுமொரு தற்செயல்தானா? தற்செயல்களின் கொந்தளிப்பில் ஒரு கொப்புளமா?
நியான் விளக்குகள் உருகி வழிந்து கொண்டிருந்த கரிய தார்ச்சாலையில் ஒரே ஒரு தனித்த பைத்தியம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தது. விளக்குகளுக்குக் கீழே பெயர்களும் அறிவிப்புகளும் அந்த பின்னிரவில் பொருளிழந்த உளறல்கள் போல தெரிந்தன. என்னிடமிருந்தே நழுவி பின்னால் வழிந்து ஓடுவதுபோல சாலை பின்னகர்ந்துகொண்டே இருந்தது.
பின்பு ஒரு எண்ணம் என் காலை தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டபோது பிரேக்கில் காலை வைத்து காரை வலி முனகலுடன் நிற்கச்செய்தேன். ஸ்டீரிங்கைப் பற்றியபடி அப்படியே சில கணங்கள் அமர்ந்திருந்தேன். பின் ஆழ்ந்த பெருமூச்சுடன் உடல்தளர்ந்தேன். முதலில் பிரேக்கை அழுத்திய கால், பின் இடுப்பு, பின்பு கைகள் பின்பு தலை. பின்பு மெல்ல மெல்ல எண்ணங்கள் இறுக்கமிழந்தன. பின்பு ஆழம் தளர்ந்தது. நான் பெருமூச்சுவிட்டேன்.
நான் அந்த சிறிய தங்கும் விடுதிக்கு முன் சாலையில் நிறுத்தியிருந்தேன். ”ராமநாதன் லாட்ஜ்”. சிறிய சிவப்பு குண்டு விளக்குக்கு கீழே கரிய பலகையில் வெள்ளை எழுத்துக்கள். அத்தகைய விடுதிகள் உலகில் இருப்பதையே நான் அக்கணத்துக்கு முன் அறிந்திருக்கவில்லை. அங்கு தங்கும் மனிதர்கள் மண்ணுக்குள் வாழும் புழுக்கள் பூச்சிகள் போல என் எண்ணத்துக்கே வராத உயிர்கள்.
பிரீ·ப் கேஸை எடுத்துக்கொண்டு காரைப் பூட்டிவிட்டு அந்த விடுதி நோக்கிச் சென்றேன். தரைத்தளத்தில் ஒரு மருந்துக்கடையும் மின்பொருள் கடையும் சுருள்கதவுகள் மூடிக்கிடக்க பக்கவாட்டில் ஏறிச்சென்ற இடுங்கிய படிகளுக்கு மேலே வலப்பக்கம் திரும்பும் வாசலுக்கு அப்பால் விடுதியின் வரவேற்பறை இருந்தது. கம்பிக்கதவுக்கு அப்பால் சிவப்பு விளக்குக்கு கீழே தரையில் பாயில் ஒரு முதியவர் தூங்கிக் கொண்டிருந்தார். கைவைத்த பனியன் போட்டிருந்தார். வாய் திறந்திருக்க வெற்றிலைக்காவிப் பற்கள் தெரிந்தன. மூச்சு ஓர் அற்புதம்போல அது பாட்டுக்கு ஓடிக்கொண்டிருந்தது.
நான் கம்பிக்கதவுகளைப் பிடித்தபடி நின்றேன். மரத்தாலான மேஜைக்கு மேல் சாவிக்கொக்கிகள் பதித்த பலகை. மேலே பெரிய பிள்ளையார் படத்தில் மின் விளக்குத்துளிகள் சுடர்ந்து அணைந்தன. அப்போது அது எனக்கு தெரியவந்தது, அங்கே நான் வந்த காரணம். அதுதான் எனக்கான இடம். நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன் கட்டப்பட்டு பல்லாயிரம் மனிதர்களால் புழங்கப்பட்டு எனக்காக பொறுமையாகக் காத்திருந்தது அது.
கம்பிக்கதவைப் பற்றி ஆட்டினேன். கிழவர் விழித்தெழுந்து தலையைச் சொறிந்தபடி பொருள் மனதில் பதியாமல் என்னை பார்த்தார். ”சார் சார்” என்றேன். கிழவர் என்னை அதிர்ச்சியுடன் பார்த்து ”இன்னா சார்? இன்னா ஓணும்?” என்றார். அவரது புருவம் மிக அடர்த்தியாக நரைத்திருந்தது.
”ரூம்” என்றேன்.
”ரூம் காலி இல்லை” என்றார். என் மேலேயே அவரது கண்கள் பதிந்திருந்தன
”நான் வெளியூரு… கார் நின்னுடிச்சு… இப்ப மெக்கானிக்கைத் தேடிப்போகமுடியாது… கொஞ்சம் பாருங்க” என்னால் அவர் மனம் ஓடும் வழியை தெளிவாகவே பார்க்கமுடிந்தது.
அவர் எழுந்து லுங்கியை இடுப்பில் செருகிக் கொண்டார். உள்ளே அரணாக்கயிறு தெரிந்தது. பனியன் மேல் தெரிந்த மார்பின் நரைமுடியை சொறிந்தபடி ”சிங்கிள் ரூம்தான் இருக்கு…. லேடீஸ் உண்டா?” என்றார்.
”சிங்கிள் போரும்… நான் மட்டும்தான்.”
அவர் மேஜைக்கு அப்பால் துழாவி சாவியை எடுத்து பூட்டைத்திறந்து கிரில் கதவை தள்ளி பிளந்து என்னை உள்ளே விட்டார். ”கொஞ்சம் மூட்டையெல்லாம் உண்டு… இது சின்ன லாட்ஜ்…”
நான் ”பரவாயில்லை… விடியிற வரைத்தானே…?” என்றேன்.
”அப்ப சரி”. பழைய பதிவேட்டை எடுத்து பிரித்து வைத்தார். நான் என் பெயரையும் விலாசத்தையும் எழுதினேன். ”போன் எழுதுங்க சார்” செல்பேசி எண்ணை எழுதினேன். அவர் என் விலாசத்தை கூர்ந்து பார்த்தார். அதில் எதையோ கண்டுபிடிக்கப் போகிறவரைப் போல.
அவர் ஒரு விரிப்பை எடுத்துக் கொண்டார். ”வாங்க…மணி மூணாச்சுல்ல?”
அறை அழுக்காக, சிறிதாக, சன்னல்கள் இல்லாததாக, இருந்தது. உள்ளே சென்றதுமே மெத்தை மட்கிய நெடியும் கக்கூஸ் நாற்றமும் கலந்து மூச்சடைக்கச் செய்தன. அவர் கூஜாவில் தண்ணீருடன் வந்து ஜன்னல் மடம்பில் வைத்துவிட்டு ”அப்ப?” என்றார். நான் தலையசைத்தேன்.
கதவை மூடிக்கொண்டதும் நான்குநாட்கள் ஒவ்வொரு கணமும் என்னை அழுத்திய பாரங்கள் அனைத்தும் விலகி அந்தரங்கமானவனாக பாதுகாக்கப்பட்டவனாக நான் என்னை உணர்ந்தேன். இந்த இடம்தானா? எந்த நாவலில் தெரியவில்லை. போர்க்களம் பல்லாயிரம் தலைகளுடன் கொடிகளுடன் விரிந்து பரந்து கிடக்கிறது. ஒரு வீரன் சொல்கிறான். இந்த பரந்த வெளியில் எங்கோ நான் கடைசி மூச்சை இழுத்துவிடும் ஆறடிமண் இருக்கிறது என…. எங்கோ ஓர் இடம் மௌனமாக மனிதர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. எந்த நாவல்?
சப்பாத்துக்களை கழற்றிவிட்டு கட்டிலில் அமர்ந்து காலுறைகளை சுருட்டிக் கழற்றியபோது கால்கள் உணர்ந்த ஆசுவாசத்தை எனக்குள் எங்கும் அறிந்தேன். துருப்பிடித்த வாளியும் மஞ்சள்கறை படிந்த பீங்கானும் கொண்ட கழிப்பறையில் சிறுநீர் கழித்துவிட்டு வந்து சட்டையை கழற்றினேன். பெல்ட்டை உருவி மரநாற்காலியில் வைத்தேன். என்னிடம் வேறு உடைகள் இல்லை. என் உடலில் இருந்து எழுந்த வியர்வை நெடி அந்த அறையை நிரப்பியது.
மெத்தைமீது கறைகள் கொண்ட ஜமக்காளம் போன்ற விரிப்பை விரித்து அதன் மீது படுத்துக் கொண்டேன். மல்லாந்ததுமே ஓர் நிதானம் வந்துவிடுகிறது எண்ணங்களுக்கு. மல்லாந்து படுத்துக்கொண்டு எவரேனும் பரபரப்பாக எதையாவது சிந்திக்க முடியுமா? மெல்ல மெல்ல என் அகச்சொற்கள் அடங்கின. எண்ணங்கள் இன்றி இருந்தது மனம். சற்றுமுன்புவரை மழைப்பெருக்குபோல பொருளில்லா சொற்கள் ஓடிய தடம் எதுவும் என் மனதில் இல்லை. காற்று பரவும் மென்மணல்வெளி போல அத்தனை மென்மையாக அத்தனை நுண்மையாக அது நிகழ்ந்துகொண்டிருந்தது.
மேலே சுழன்ற கறைபடிந்த பழைய மின்விசிறியையே நோக்கிக் கொண்டிருந்தேன். அத்தனை கூர்மையாக நான் என்றுமே என் மனதைக் கவனித்ததில்லை என்பதை உணர்ந்தேன். நாவல்களில் மனதை சித்தரிக்கும் இடங்களைக்கூட பக்கங்களைப் புரட்டி தாண்டிச் சென்றுவிடுவேன். நிகழ்ச்சிகள் மட்டுமே முக்கியமானவையாகப் படும். ஆனால் அப்போது மனம் தவிர எதுவுமே பொருட்டல்ல என்று பட்டது. மனதை கூர்ந்து கவனிக்கும்போதுதான் எத்தனை பயங்கரமான துணை அது என்று தெரிகிறது. விக்ரமாதித்யயன் தோளில் ஏறிய வேதாளம் போல.
ஆம், இது தான். இந்த இடம்தான். அச்சொற்களையே மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டேன். எந்த முகமும் நினைவில் எழவில்லை. எந்த ஊரும் உள்ளே விரியவில்லை. என்னை யாரோ பார்த்துக் கொண்டிருப்பதுபோல ஒரு பிரமை. மிக அன்னியமான யாரோ. ஆனால் என்னை அவருக்கு நன்றாகத் தெரியும். மிக நெருங்கி நின்று இருளுக்குள் பார்த்துக்கொண்டிருந்தார்…
எழுந்து என் சாவிக்கொத்தை எடுத்தேன். அதில் இருந்த சிறிய ஜப்பானியக் கத்தியைப்பற்றி நான் ஏற்கனவே எண்ணியிருந்ததை அப்போது உணர்ந்தேன். என் ஆழ்மனதால் எல்லாமே துல்லியமாக முன்கூட்டி திட்டமிட்டது போலிருந்தது. கத்தியின் முனையை கூர்ந்து நோக்கினேன். சற்றே வளைந்த மிகக் கூரிய கத்தி. அதன் உலோகப் பளபளப்பில் ஒரு சிறிய புன்னகை இருந்தது. இருளுக்குள் அந்தக் கத்தியின் பிளேடு விசித்திரமான மலரிதழ் போல ஒளியுடன் இருந்தது.
அந்தக் கத்தியால் நுட்பமாக, கவனமாக நகங்களை வெட்டினேன். பத்துவிரல்களுக்கும் கால்விரல்களுக்கும் நகம் வெட்டினேன். அப்போது ஏனோ நான் புன்னகைசெய்து கொண்டிருந்தேன். தான் செய்யப்போவதை எவருமே ஊகிக்க முடியாதென எண்ணி ஒரு சிறுவன் கொள்ளும் கள்ளச்சிரிப்பு அது. வெட்டிமுடித்த கால் நகங்களை கையால் மெல்ல வருடியபின் அவற்றைச் சுரண்டிச் சுரண்டி மென்மையாக்கினேன்.
தூரத்தில் எங்கோ கடிகாரம் டிங் என்றது. சரி என்பது போல. அதற்கு அடிபணிபவன் போல கட்டிலில் மல்லாந்து படுத்துக் கொண்டேன். என் இடதுகைமணிக்கட்டை இறுகப்பற்றி நீல நரம்புகளைப் பார்த்தேன். அதில் கத்தியை வைத்தேன். குளிரின் ஒரு சிறு கீற்று என் சருமத்தைத் தொடுவது போலிருந்தது. பற்களைக் கடித்து கண்களை மூடி ஒரே இழுப்பாக இழுத்தேன். சிறிய எரிச்சல். ரத்தம் சூடாக வழிந்து விரல்களை மூடி சொட்டியது. மறுகையால் விளக்கை அணைத்தேன்.
இருளில் ரத்தம் சொட்டும் ஒலியைக்கூட என்னால் கேட்க முடிந்தது. ஒருவேளை பிரமையாக இருக்கலாம். மெல்லிய முத்தத்தின் ஒலிகள் போல. இல்லை ஒரு சிறுபறவை இருட்டுக்குள் மெல்ல நடப்பது போல. அல்லது ஒரு கடிகாரத்தின் டிக் டிக் டிக். ரத்தம் இருட்டுக்குள் நிறமற்று இருந்தது. அல்லது அதன் நிறம் இப்போது கருமையா? நல்ல வீச்சம் அதற்கு. உப்பு கலந்த வீச்சம். அதை வாயில் வைக்க வேண்டும் போலிருந்தது. ரத்தம் ஒரு வகையான நெருப்பு. மனிதனுக்குள் அது எந்நேரமும் தழல் விட்டு எரிகிறது. இப்போது என்னுள் எரிந்த தழல் மெல்ல மெல்ல அணைந்துகொண்டிருக்கிறது.
அந்தச் சொட்டுகள் வழியாக காலம் நகர்ந்தது. என்னுள் இருந்து எல்லா சக்திகளும் வழிந்து சென்றன. என் பதற்றத்தின் சிறகடிப்பு என் துயரத்தின் எடை எல்லாம் வெளியேறின. சுசி, அந்தக் கணத்தில் கண்ணாடிக்கதவுகளில் அலைபாயும் பிம்பங்களாக வந்து வந்து என்னருகே திரண்டு ஒன்றாகி பெண்ணென நின்றாய் நீ. உன் செவ்விதழ்கள் மெல்லக்குவிந்து ‘அருண்’ என்றன. மெல்ல, பனியிருகிவிழும் குளிர்த்துளியாக…. உன்னால் மட்டுமே என்னை அப்படி அழைக்கமுடியும் சுசி.