பொருநை விழா, வினாக்கள் எதிர்பார்ப்புகள்

லக்ஷ்மி மணிவண்ணன்

ஆனந்த் குமார்

அன்புள்ள ஜெ,

பொருநை விழா பற்றிய முகநூல் குறிப்புகளைக் கண்டிருப்பீர்கள். லக்ஷ்மி மணிவண்ணன் அங்கே அளிக்கப்பட்ட மதிப்புறு ஊதியங்களில் பாகுபாடு இருந்ததாக அறிவித்திருக்கிறார். அங்கே போதிய ஆட்களைக் கூட்ட முடியாமல் அரங்குகளை உயர்நிலைப்பள்ளி மாணவர்களைக் கொண்டு நிறைத்து நவீன இலக்கிய உரைகளைச் செய்யவைத்துள்ளனர். சபரிநாதன் பேசிய கூட்டத்தில் அனேகமாக எவருமே இல்லை என்று ஆனந்த் குமார் எழுதியிருக்கிறார்.

மொத்தமாகவே அவ்விழா ஒரு தோல்வி என்பது முகநூலில் பலர் எழுதும் கருத்துக்களில் இருந்து தெரியவருகிறது. பல கடுமையான எதிர்வினைகள் வந்துள்ளன. அந்த விழா பற்றி கருத்துச் சொல்லும் எழுத்தாளர்களை உபி கூட்டம் இழிவு செய்து எழுதுகிறது. உங்கள் கருத்து என்ன? இந்த விழாக்களை விஷ்ணுபுரம் அமைப்பு நெடுங்காலமாகவே செய்து வருகிறது. இவற்றை சிறப்பாக நடத்த என்ன வழி?

ஆனந்த் எம்

*

அன்புள்ள ஆனந்த்,

பொருநை இலக்கியவிழாவின் குளறுபடிகள், போதாமைகள் எதிர்பார்க்கத் தக்கவையே. இவ்வாறு ஒரு விழா அரசு சார்பில் முன்னர் நடைபெற்றதில்லை. ஆகவே இப்பிழைகள் நிகழாமலிருக்க வாய்ப்பில்லை. இவற்றில் இருந்து என்னென்ன கற்றுக்கொள்ளவேண்டும் என்பதை மட்டும் கூற விரும்புகிறேன். சம்பந்தப்பட்டவர்கள் கவனித்தால் இந்நிகழ்வுகளை மேம்படுத்தலாம்.

முதலில் இவ்விழாக்களில் உள்ள முக்கியமான அம்சத்தை எழுத்தாளர்கள் கவனிக்கவேண்டும். இதில் இலக்கியம், இலக்கியவாதிகள் மேல் இந்த அரசுக்கு இருக்கும் நல்லெண்ணம் வெளிப்படுகிறது. தமிழகத்தின் சென்ற எழுபதாண்டுக்கால வரலாற்றில் அரசு நவீன இலக்கியத்தை நேரடியாக ஆதரிப்பது இதற்கு முன் நடைபெற்றதில்லை. எந்த வகையான ஊக்கமும் அளிக்கப்பட்டதில்லை. அவ்வகையில் இந்த முயற்சி முன்னோடியானது, மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமானது, பாராட்டப்படவேண்டியது.

அந்த நல்லெண்ணத்துக்கு நவீன இலக்கியச் சூழல் கடமைப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதி என்னும் வகையில் நான் அரசுக்கு நன்றி சொல்லவேண்டியவன்.  முதல்வர் ஸ்டாலின் மற்றும் கல்வி-  பண்பாட்டுத்துறை அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு நன்றி.

இத்தகைய விழாக்களில் நிகழும் முதல்சிக்கல் என்னவென்றால் அரசு அதிகாரிகளிடம் விழாவை நடத்தும் பொறுப்பை முழுமையாக விட்டுவிடுவதுதான். அரசதிகாரிகளில் மிகச்சிலர் தவிர அனேகமாக எவருக்கும் இலக்கியம், நவீன இலக்கியம் எதுவுமே தெரியாது. அவர்கள் அறிந்ததெல்லாமே ‘நடைமுறை மரபு’ (புரோட்டோக்கால்) மட்டுமே. அவர்களுக்கு எந்த நவீன இலக்கிய ஆளுமையையும் தெரிந்திருக்காது. எந்த இலக்கிய அரங்கையும் பார்த்திருக்க மாட்டார்கள்.

ஆகவே இத்தகைய அரங்குகளை இலக்கிய ஆர்வம் கொண்ட அதிகாரிகளை சிறப்புப் பொறுப்பில் நியமித்து, அவர்களுக்கு நிதிப்பொறுப்பும் அதிகாரமும் அளித்து ஒருங்கிணைக்கவேண்டும். அவருக்கு உதவ உள்ளூர் இலக்கியவாதிகளின் ஒரு நல்ல குழுவையும் உருவாக்க வேண்டும். வழக்கமான அதிகாரிகளிடம் இது செல்லக்கூடாது.

கல்பற்றா நாராயணன் போல பிறமொழி எழுத்தாளர்கள் கலந்துகொள்ளும் அரங்குகள் இப்படி பொறுப்பில்லாமல் அமையும்போது தமிழகம் மீது தவறான உளப்பதிவு உருவாகிறது. இது குளிக்கப்போய் சேற்றைப் பூசிக்கொண்டதாக அரசுக்கு அமையும். 

சாமானிய அதிகாரிகளிடம் பொறுப்பு சென்றால் என்ன ஆகும் என்பதற்கு எனக்கு ஓர் அனுபவம் உண்டு. ஒருமுறை தஞ்சை தமிழ்ப்பல்கலையில் நான் அழைப்பின்பேரில் கல்லூரி ஆசிரியர்களுக்கு இலக்கிய வகுப்பெடுக்க சென்றிருந்தேன். மாணவர்களான கல்லூரி ஆசிரியர்கள் அனைவருக்கும் வசதியான உயர்தர அறைகள் அளிக்கப்பட்டன. ஆசிரியனாகச் சென்ற எனக்கு கடைநிலை ஊழியர்களுக்கான அறை.

ஏனென்றால் நடைமுறை மரபின்படி கல்வித்தகுதி, பதவி இரண்டின் அடிப்படையில் அறைகள் ஒதுக்கப்படவேண்டும். எனக்கு கல்வித்தகுதி உயர்நிலைப்பள்ளி அளவுதான் (பட்டப்படிப்பை முடிக்கவில்லை) எனக்கு பதவியும் இல்லை. நான் என்னை அழைத்தவர்களை தொலைபேசியில் அழைத்தேன். தொடர்பு கொள்ள முடியவில்லை. இயக்குநர் பாலாவின் திரைப்பட நிறுவன நிர்வாகியை அழைத்து எனக்கு ஒரு நட்சத்திர விடுதியை தஞ்சையில் அமர்த்திக்கொண்டு, வண்டி வரச்செய்து கிளம்பிச் சென்று அங்கே தங்கி காலையில் வகுப்புக்கு வந்தேன்.

இதுவே இங்கும் நிகழ்ந்துள்ளது. அரசில் எந்த பதவியில் இருக்கிறார்கள் என்று பார்த்து அந்த அடிப்படையில் கௌரவஊதியம் வழங்கியுள்ளனர். கௌரவ ஊதியம் என்பது அனைவருக்கும் நிகராகவே அளிக்கப்படவேண்டும் என்பது உலகம் முழுக்க வழக்கம். இப்போது புகழ்பெற்ற பினாங்கு ஜார்ஜ்டவுன் இலக்கிய விழாவில் கலந்துகொண்டு திரும்புகிறேன். எனக்கு ஒரு சிறப்பு அமர்வும், என் நூல் (Stories of the True) வெளியீடும் இருந்தது. அருண்மொழி நங்கை அதில் துணைநிகழ்வாக நடைபெற்ற சிங்கை  எழுத்தாளர் பி. கிருஷ்ணன் மொழியாக்கம் செய்த ஷேக்ஸ்பியர் நாடகங்களின் வெளியீட்டில் ஒரு பேச்சாளர். ஆனால் மதிப்புறு ஊதியம் நிகரானதே.

எங்கும் இலக்கியவிழாக்களில் நிகழ்வது இதுதான். தமிழக அரசு நடத்தும் இலக்கியவிழாவின் முக்கியத்துவம் என்ன என்பதை ஒரே உதாரணம் கொண்டு சுட்ட விரும்புகிறேன். இதே சென்னையில் ஹிந்து லிட் ஃபெஸ்ட் என ஓர் சர்வதேச இலக்கியவிழா பற்பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. உலகம் முழுக்க இருந்து இலக்கியவாதிகள் வந்து கலந்துகொள்கிறார்கள்.அவர்கள் எவருக்கும் தமிழில் நவீன இலக்கியம் என ஒன்று உள்ளது என்பதே அறிமுகப்படுத்தப்படுவதில்லை. ஏனென்றால் அங்கே முக்கியமான தமிழ்ப்படைப்பாளிகள் அழைக்கப்படுவதில்லை. முழுக்க முழுக்க ஆங்கிலம்பேசும் சென்னை மக்களின் விழா அது. அம்மக்கள் அதிகம்போனால் கல்கி, சுஜாதா, பாலகுமாரனை அறிந்தவர்கள்.

ஹிந்து லிட்ஃபெஸ்ட் நிகழ்வுக்கு க்ரியா, காலச்சுவடு ஆகிய அமைப்புகளுடன் தொடர்புடைய ஓரிருவர் அவ்வப்போது அழைக்கப்படுவார். எந்த அரங்கையும் எவ்வகையிலும் கவனிக்கச்செய்யும் தகுதி கொண்ட முதன்மைப் படைப்பாளிகளாக அவர்கள் இருப்பதில்லை. அவர்களுக்கு அளிக்கப்படும் அரங்கும் எப்போதுமே ஒதுக்குபுறமானதாக இருக்கும். உள்ளூர்க்காரர்கள் பத்துபேர் அரங்கில் அமர்ந்திருப்பார்கள்.

ஹிந்து லிட் ஃபெஸ்டுக்கு  வந்த இலக்கியவாதிகளை பின்னர் மும்பையில் அல்லது திருவனந்தபுரத்தில் சந்திக்கையில் அவர்கள் தமிழில் நவீன இலக்கியமே உருவாகவில்லை என்றும், ஒருசிலர் சமூகசீர்திருத்த எண்ணத்துடன் எழுதும் சில எழுத்துக்களே உள்ளன என்றும், அவை கல்வியறிவில்லா தமிழர்களால் எதிர்க்கப்படுகின்றன என்றும் மனப்பதிவு கொண்டிருப்பதை பலமுறை கண்டிருக்கிறேன். நான் தமிழில் எழுதுகிறேன் என்றால் திகைப்பார்கள்.

இதுவரை நான் ஹிந்து லிட்பெஸ்டுக்கு அழைக்கப்பட்டதில்லை. இம்முறை என்னை அங்கிருந்து ஓர் அம்மாள் கூப்பிட்டு அவ்விழாவுக்கு அழைத்தார். இலக்கியவாதியாக என்னை அழைக்கவில்லை. மணி ரத்னம் ஓர் அரங்கில் பொன்னியின் செல்வன் பற்றி பேசுவார் என்றும், அதை நான் அவரிடம் கேள்விகேட்டு நடத்தவேண்டும் என்றும் கோரினார். (தமிழில் நான் அருவருக்கும் ஆளுமைகளில் ஒருவர் அந்தப் பெண்மணி, பொய்யே உருவான வம்பர்) மேற்கொண்டு எதன்பொருட்டும் என்னிடம் தொடர்புகொள்ளலாகாது என்று எச்சரித்து தொடர்பை முறித்தேன்.

இச்சூழலில்தான் இந்த பொருநை விழா முதலியவை நடைபெறுகின்றன. நிகழ்வு ஒருங்கமைவில் போதாமைகள் இருக்கலாம். ஆனால் ஓர் இலக்கிய விழாவில் நவீன இலக்கியவாதிகள் ஏறத்தாழ அனைவருமே அரசால் அழைக்கப்படுவதென்பதே முக்கியமான ஒரு நிகழ்வு என நான் நினைக்கிறேன். இதை நாம் மேம்படுத்தலாம். நல்லெண்ணத்துடன் செயல்பட்டு ஓர் அறிவியக்கமாக, ஒரு சமூக இயக்கமாக ஆக்கலாம். அரசு நமக்கு ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கிறது.

இதைப்போன்ற நிகழ்வுகளுக்கு இயல்பாகவே கூட்டம் வருவதில்லை. கூட்டம் வரவில்லை என்று அரசை அல்லது அதிகாரிகளைக் குறைசொல்வதில் பொருளில்லை. நிகழ்ச்சியை விளம்பரம் செய்தால் மட்டும் கூட்டம் கூடிவிடாது. தமிழ்ச்சமூகத்திற்கே இலக்கிய ஆர்வமும், இலக்கியம் மீதான மதிப்பும் மிகமிக குறைவு. அதை உருவாக்கவே அரசு முயல்கிறது. தானாகவே வந்து அரங்கை நிறைக்கும் அளவுக்கெல்லாம் நம்மிடம் இலக்கிய ரசிகர்கள் எங்குமில்லை.

ஆகவே கொஞ்சம் முயற்சி செய்துதான் அரங்கை நிரப்பியிருக்கவேண்டும். சற்று ஒருங்கிணைப்பு இருந்திருந்தால் அதைச் செய்திருக்கலாம். அப்பகுதியின் கல்லூரிகளுக்கு அழைப்பு அனுப்பியிருக்கவேண்டும். அங்கிருந்து வந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு ஒரு சான்றிதழ் அளித்திருக்கலாம். தமிழ்த்துறைகளில் இருந்து மாணவர்கள் கண்டிப்பாக வரவேண்டும் என ஓர் அரசாணை அளித்து அவர்களுக்கு வருகைப்பதிவும் சான்றிதழும் அளித்திருக்கலாம். அவர்களின் கல்விக்கு மிக உதவியான மேலதிகக் கல்வியை அளிப்பவை இந்த அமர்வுகள். இது பற்றிய புரிதல் இல்லா நிலையிலேயே தொடக்கப்பள்ளி மாணவர்களை கொண்டுவந்து அமரச்செய்யும் அபத்தம் நடைபெற்றிருக்கிறது.

இந்நிகழ்வின் செலவில் ஒரு பகுதியை ஒதுக்கி தமிழகத்தின் எப்பகுதியில் இருந்தும் நிகழ்வில் கலந்துகொள்ள வருபவர்களுக்கு பேருந்துக் கட்டணம், பொதுத் தங்குமிடம் ஆகியவற்றை அளித்திருக்கலாம்.  இலக்கிய ஆர்வலர் வந்து கூடியிருப்பார்கள். விழா மிகச்சிறப்பாக நடைபெற்றிருக்கும். ஏதேனும் ஓர் அரசுக்கல்லூரிக்கு விடுப்பு அளித்து அவர்களின் மாணவர் விடுதிகளை இரண்டு நாட்களுக்குப் பயன்படுத்தியிருந்தாலே போதுமானது.

இத்தகைய நிகழ்வுகளில் ஏராளமான நிகழ்ச்சிகளையும் அரங்குகளையும் அமைக்கக்கூடாது. எதிலும் கூட்டமில்லாமல் ஆகிவிடும். அரங்குகள் கலவையாக இருக்கவேண்டும்.பொதுரசனைக்கு உரிய புகழ்பெற்ற ஆளுமைகளின் அரங்கும் சிறுவட்டத்திற்குள் செயல்படும் இலக்கியவாதிகளின் அரங்கும் கலந்தே அமைந்திருக்கவேண்டும். ஒரே சமயம் இரண்டு அரங்குகளுக்கு மேல் நிகழாமலிருப்பது நல்லது.

சற்று திட்டமிட்டிருந்தால் களையப்பட்டிருக்கக்கூடிய பிழைகள்தான். நெல்லை பொதுவாகவே இலக்கியத்திற்கு பெரிய அளவில் கூட்டம் வராத சிறுநகரம். உண்மையில் அதற்கு நகரம் என்னும் இயல்பே இல்லை. கடந்தகாலத்தில் உறைந்துவிட்ட ஒரு பகுதி அது. அங்கே மேலதிக முயற்சி இருந்திருக்கவேண்டும். அடுத்தடுத்த நிகழ்வுகளில் இப்பிழைகளை சீர்செய்யலாம்.

ஜெ

முந்தைய கட்டுரைஆ.சிங்காரவேலு முதலியார்
அடுத்த கட்டுரைஊர் திரும்பல்