தூசி,கடிதங்கள்

தூசி – ரம்யா  

ஆசிரியருக்கு,

தூசி‘ – எத்தனை பெரிய படிமம்! என்றும் நிலைத்திருக்கும் ஒன்று, ஒரு கட்டத்தில் எல்லாவற்றின்மேலும் படிந்து மூழ்கடிக்கக்கூடியது. ஆனாலும் சில அரிய மனிதர்கள் தம் செயல்கள்மூலம் இந்த இயற்கையின் நெறியை மீறும் ஆற்றலும், விடாயும் கொண்டிருக்கிறார்கள். மையப்புலத்தில் இல்லையென்றாலும் எங்கோ ஒரு புலப்படாத மெல்லிய சரடின் வழியாக மொழியின், பண்பாட்டின், கலைகளின் தொடர் இயக்கத்தை நம்மிடம் கடத்திக்கொண்டே இருக்கிறார்கள்.

ஒரு சூழலை, அதன் உண்மையை, ஆளுமைகளை புனைவாக வாசிக்கையில் நம் அகம் எத்தனை உணர்வெழுச்சியை அடைகிறது என்பதற்கு மிகச் சிறந்த ஒரு சான்று இந்தச் சிறுகதை. அறம் கதைகளின் கதைமாந்தரை நினைவுறுத்தியது சுப்பிரமணியம் ஐயாவின் கதாப்பாத்திரம். கதையின் சில பகுதிகளை கண்ணீருடன் வாசித்தேன். பெரியசாமித் தூரனும், ஜெயமோகனும் சிந்தையில் உதிக்கிறார்கள்.

நான் செத்தால் ரேடியோவிலே கூட சொல்லமாட்டாங்களே ராமசாமி” என்று சுந்தர ராமசாமியிடம் கண்ணீர் விட்ட பெரியசாமித் தூரனின் மனதை உலுக்கும் பிம்பத்தை, காலத்தின் அழியாத ஒரு ஆளுமையாக தமிழ் விக்கி நிலைநிறுத்தியிருக்கிறது எனும் உண்மையின் மூலம் ஆற்றுப்படுத்திக்கொள்கிறேன்.

தமிழ் விக்கி, நீலி இணைய இதழ், எழுத்து என எல்லாத் தளங்களிலும் தீவிரமாக இயங்கிவரும் சகோதரி, எழுத்தாளர் ரம்யாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

அன்பும் நன்றியும்,

பாலாஜி ராஜூ

*

அண்ணா

வணக்கம். ரம்யாவின் தூசி கதையை வாசித்தேன்.  நீலத்தாவணியில் இருந்து தூசிக்கு நூறுகால் பாய்ச்சலில் சென்றிருக்கிறார். தூசி அறம் கதையின் வரிசையில் வைக்கப்படவேண்டியது.

பரவால்ல தம்பி. இன்னும் இருபது வருஷம் இருந்தா மறுபடியும் பண்ணிடலாம். இந்தா இப்ப முப்பிடாதியும், சொடலையும் இருக்கானுவ. பத்து வருசத்துல செஞ்சிடலாம்என்று சொல்லிவிட்டு அந்தப் பொருளடக்கம் இருந்த புத்தகத்தைத் தன் மடியில் முழுவதும் படியும்படி வைத்துக் கொண்டு கைகள் நடுங்கியபடி ஒவ்வொரு பக்கமாகப் புரட்ட ஆரம்பித்தார்.”

இருட்டில் தெளிந்து வரும் வெளிச்சம்போல இருந்தது இந்த வாசகம்.  ரம்யா இன்னும் இது போல நிறைய கதைகளை எழுதவேண்டும். வாழ்க  வளமுடன்.

அன்புடன்

பன்னீர் செல்வம் ஈஸ்வரன்  

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருந்தினர், கடிதம்
அடுத்த கட்டுரைஎம்.சி.ராஜா – கடிதங்கள்