ரோவநேமி சாண்டாகிளாஸ் கிராமம் சுற்றுலாவுக்காக உருவாக்கப்பட்டது. ரோவநேமி நகரம் ஃபின்லாந்தின் லாப்லாந்து மாவட்டத்தின் தலைநகர். உலகமெங்குமிருந்து பனிக்காலத்துக் கேளிக்கைகளுக்காக அங்கே பயணிகள் வருகிறார்கள். அதன்பின் வசந்தகாலக் கேளிக்கைகளுக்காக வருகிறார்கள். முழுக்கமுழுக்க சுற்றுலாவுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் இடம் என்றாலும் பெரும்பாலும் சிறுவர்களை உளம்கொண்டே வடிவமைத்துள்ளனர். சூதாட்டமெல்லாம் இல்லை.
ஃபின்லாந்தின் பனிநில மக்களான ஸாமி இனத்தவரின் இல்லங்களின் வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.ஸாமி இன மக்கள் எஸ்கிமோக்கள் அல்ல. (எஸ்கிமோ என்னும் சொல் இப்போது அரசியல்சரி அல்லாத சொல்லாகிவிட்டது. அதை பயன்படுத்தலாகாது. அது பிறரால் ஏளனமாகச் சொல்லப்பட்டதாம்) ஸ்காண்டிநேவிய நிலப்பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து சைபீரிய வட்டத்தில் குடியேறியவர்கள். ஸாமி மக்களின் உணவு, உடை, உறைவிடம் மூன்றுமே ரெயிண்டீரைச் சார்ந்தது. அதுவே ஒரு நல்ல நாவலுக்கான கருப்பொருள். ஒரு சமூகம், ஒரு விலங்கு. தமிழர்களின் பெரும்பாலான பெயர்கள் சாமி என முடிவதனால் அவர்களை தென்னாப்ரிக்காவில் சாமி என்றே அழைத்தனர் என்று காந்தியின் சுயசரிதையில் சொல்லப்படுகிறது.
ஸாமிகளின் இல்லங்கள் சிவப்பிந்தியர்களின் இல்லங்கள் போன்றவை. செங்குத்தான வட்டக்கூம்புக் கூடாரங்கள். பெரிய மரத்தடிகளை முன்று கால்களாக நாட்டி சேர்த்து மையத்தில் கட்டி, தோல்போர்த்து அமைக்கப்பட்டவை. மேலே வட்டத்திறப்பு. அதற்குமேல் ஒரு சிறு கூடை. திறப்புக்கு நேர்கீழே அனல்குளம். அதைச்சுற்றி அமர்வதற்கும் படுப்பதற்குமான ரெயிண்டீர்தோல் இருக்கைமெத்தைகள். அவ்வளவுதான் இல்லமே. (பார்க்க) அந்த அனலில் சுட்டு சாப்பிட்டு அப்படியே படுத்துவிடவேண்டியதுதான். முழுக் குளிர்காலமும் அந்தச் சிறிய வட்டத்திற்குள்தான் வாழ்க்கை.
அந்த வாழ்க்கையின் நினைப்புக்கெட்டாத சலிப்பு அவர்களின் ஆழுள்ளம் வெளிப்படும் பல கனவுநிலைகளை உருவாக்குகிறது. போதைப்பொருள் இல்லாமலேயே போதை. வாரக்கணக்கில் நீளும் அரைத்துயில்நிலை. இன்று எண்ணும்போது வியப்பூட்டும் ஒன்றுண்டு, உலகிலுள்ள எல்லா பழங்குடிகளும் மிகப்பெரிய தொன்மக்கிடங்கை வைத்திருக்கிறார்கள். படிமங்களின் பெருவெளியே பழங்குடிப் பண்பாடு என்பது. மானுட இனம் உண்மையில் வாழ்வதே கனவுகளில்தானோ?
இன்றும் ஆர்ட்டிக் பகுதிக்கு வருபவர்கள் மது அருந்தி, அல்லது போதை நுகர்ந்து, நாட்கணக்கில் தூங்கிக் கழிப்பதையே இன்பமாகக் கொண்டிருக்கிறார்கள். மேட்ரிக்ஸ் படத்தில் வெளிவருவதுபோல எல்லா கொண்டாட்டமும் கனவிலேயே நிகழ்கிறது. அதுவும் ஒரு பேரின்பநிலைதானோ?
ரோவநேமியில் உள்ள ஒரு மெக்டொனால்ட்ஸ் கடை உலகின் வடக்கு எல்லையிலுள்ள மெக்டி என தன்னை விளம்பரம் செய்துகொள்கிறது. ஆர்ட்டிக் வட்டத்தில் இருக்கிறோம் என்பதே ஒருவகை பதற்றமான கிளர்ச்சியை உருவாக்குவது. சென்ற நூற்றாண்டில் நம் நாட்டில் இருந்து ஒருவர் ஆர்ட்டிக் வட்டத்திற்குள் நுழைவதென்பது எத்தனை அடிதான ஒன்றாக இருந்திருக்கும்
சாண்டா கிளாஸ் ஊரில் கிறிஸ்துமஸ் தாத்தா இருக்கிறார். அவரைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்ள ஐம்பது யூரோ கட்டணம். ஏறத்தாழ ஐந்தாயிரம் ரூபாய். அதற்கு மிகப்பெரிய வரிசை. நாங்கள் செல்லவில்லை. ஃபின்லாந்து, ஐஸ்லாந்து பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட ஊர்கள் கிறிஸ்துமஸ் தாத்தா அங்கேதான் பிறந்தார் என அறைகூவுகின்றன. அவர் புனைவுக்கதாபாத்திரம் என்பதும் அனைவருக்கும் தெரியும்.
சாண்டாகிளாஸ் கிராமத்தில் உள்ள கேளிக்கைகளில் முக்கியமானவை இரண்டு. ரெயிண்டீர் இழுக்கும் வண்டியில் அரைகிலோமீட்டர் சுற்றிவரலாம். ஹஸ்கி என்னும் நாய் இழுக்கும் பனிச்சறுக்கு வண்டியில் அரைகிலோமீட்டர் சுற்றி வரலாம். அருண்மொழியும் அஜியும் சைதன்யாவும் ரவியின் மகள் கிளாராவும் ரெயிண்டீர் இழுக்கும் வண்டியில் ஏறி சுற்றிவந்தனர். இழுப்பது ரெயிண்டீர் என்னும் உணர்வு அளிக்கும் கிளர்ச்சிக்கு அப்பால் அதில் சிறப்பாக என்ன உள்ளது என்று தெரியவில்லை. ஆனால் நாம் ஒரு ஸாமி ஆகி ஆர்ட்டிக் பனிவெளியில் செல்வதாகக் கற்பனைசெய்துகொள்ளலாம். பெரும்பாலான சுற்றுலா அனுபவங்கள் கற்பனையும் இணைந்தால்தான் சுவாரசியமானவை.
நான் ரவியின் மனைவி அர்ச்சனாவுடன் ரெயின்டீர் பண்ணைக்குள் சென்று அவற்றை பார்த்தேன். அவற்றின் பெரிய கொம்புகள் அச்சமூட்டுபவை. கொம்பிலோ முகத்திலோ எக்காரணம் கொண்டும் தொடக்கூடாது. பிற இடங்களில் தொடலாம், கொஞ்சலாம். கருகிப்போன பனிப்பாசி போன்ற எதையோ கையில் தந்தனர். அதை அவற்றுக்கு உணவாகக் கொடுக்கலாம். ஆர்வமாக வந்து பிடுங்கி தின்றன. கோடையில் அவற்றை காட்டில் திறந்துவிடுவார்களாம். குளிர்காலத்தில் மூத்த ரெயிண்டீர் மற்றவற்றை திரட்டிக்கொண்டு அதுவே முகாமுக்கு வந்து சேரும். இங்கே குளிர்ப்பாதுகாப்பும், உணவும் உண்டு என்பது அவற்றுக்கு தெரியும்.
ஓர் ஆல்ஃபா ஆண் அப்பால் செருக்குடன் படுத்திருந்தது. அதை நெருங்க முடியாது. அங்கிருந்து ஆட்டுக்கடாவில் எழும் கெச்சைநாற்றம் அடித்தது. பாதிக்குமேல் குட்டி ரெயிண்டீர்கள். இரண்டு ரெயிண்டீர்கள் பனிவெள்ளை நிறம். அந்நிறம் மிக அரிதானது. மற்றவை நாய்ச்செம்மை அல்லது வைக்கோல்செம்மை அல்லது சாம்பல்நிறம் கொண்டவை. அவற்றின் முடி மென்மையானது அல்ல. தொட்டுப்பார்த்தால் சாக்குபோல சொரசொரப்பானது. நாக்கால் பசுபோல நம்மை நக்குகின்றன. மூக்கைச் சுளித்து ஓர் ஓசையையும் எழுப்பின.
ஹஸ்கி மேல் பயணம் செய்ய அஜிக்கு மனமில்லை. “நாயெல்லாம் பாவம்” என்று சொல்லிவிட்டான். ஆகவே ஒருமுறை அக்கிராமத்தைச் சுற்றிவந்தோம். எல்லாரும் காபி சாப்பிட்டனர். நான் ஒரு ரெயிண்டீர் சூப் சாப்பிட்டேன். அந்த மண்ணுடன் ஓர் உறவு உருவாகவேண்டுமே. அங்கிருக்கும் பரிசுப்பொருள் கடையும், அருகே உள்ள வடதுருவத்தின் தபால்நிலையமும் புகழ்பெற்றவை. அங்கிருந்து ஊருக்கு வாழ்த்து அட்டைகள் அனுப்பலாம். இப்போது முகநூல் பதிவு போடுவதுபோல ஒரு பழக்கமாக அக்காலத்தில் இருந்திருக்கிறது.
அதன்பின் ஒருமணி நேரத் தொலைவில் இருக்கும் ஒரு விலங்குக் காட்சியகத்திற்குச் சென்றோம். குளிர் ஏறி ஏறிவந்தது. அங்கே செல்ல மணி மூன்று கடந்துவிட்டது. நான்கரைக்கு மூடிவிடுவார்கள். ஒன்றரை மணிநேரம் அந்த விலங்குநிலையத்தைச் சுற்றிவந்தோம். மரத்தாலான பாதை அமைத்து அதைச் சுற்றிவர ஏற்பாடு செய்திருந்தார்கள்.
அங்கே முதன்மையாக பார்க்கவேண்டியது சைபீரியப் பனிக்கரடி. ஆனால் அது மாலைக்குள் தன் குகைக்குள் புகுந்துவிட்டது. அதன் ஆழ்துயில் பருவம் தொடங்கிவிட்டது. தூங்கும் நேரம் கூடிக்கூடி வரும். ஒரு கட்டத்தில் முழுமையாகவே தூங்க ஆரம்பித்துவிடும். அதைப் பார்க்க முடியவில்லை. நான் ஏற்கனவே அட்லாண்டாவிலும் சிங்கப்பூரிலும் பனிக்கரடியை பார்த்திருக்கிறேன். அதன் அளவு திகைக்க வைக்கும். ஒரு மாருதி காரைவிட பெரியது. அட்லாண்டாவின் விலங்ககத்தில் செயற்கையாக உறைபனிச்சூழலை உருவாக்கியிருந்தனர். அந்த வெப்ப (?)நிலை இங்கே இயற்கையாக இருந்தது.
எல்க், ரெயிண்டீர், மாபெரும் சைபீரியப் பன்றிகள் ,மான்கள் , பலவகையான சைபீரிய ஆந்தைகள், சைபீரிய பருந்துகள் ஆகியவற்றைப் பார்த்தோம். எல்லாமே பெரிய உருவம் கொண்டவை. பனிக்குள் ஊடுருவும் பார்வையும் உண்டு. ஆந்தைதான் சைபீரியாவின் முக்கியமான பறவை என நினைக்கிறேன். வெண்ணிற உடலுடன் பனியோடு பனியாக அமர்ந்திருந்தது. அவை எவற்றை உண்ணும் என்று யோசித்தால் அருகிலேயே விடை. சிறிய எலிகள் காட்சிக்கு இருந்தன. ஆண்டுதோறும் குட்டிபோட்டு பெருகிக்கொண்டே இருப்பவை.
பனிபொழிந்து மூடிய மரங்களின்மேல், எண்ணைக்காகிதம் போல மெல்லொளி கொண்ட வானில் ரேவன்கள் என்னும் பெரிய காகங்கள் சுற்றிவந்தன. அங்குள்ள நம்பிக்கைப் படியேகூட அவை எதிர்மறையான உணர்வுநிலைகளை உருவாக்குபவை. நமக்கு காகம் என்பது உற்சாகமான பறவை. ஆனால் திரைப்படங்கள் வழியாக ரேவன்கள் பற்றிய அச்சமும் விலக்கமும் நம்முள் உருவாக்கப்பட்டுள்ளது. அவற்றுக்கு அடிப்படையானவை ஸ்வீடிஷ் ஃபின்னிஷ் திகில்நாவல்கள். அவற்றுக்கு அடிப்படையானவை அந்நிலத்தின் தொன்மங்கள். அந்தச் சாம்பல் நிற வானில் அவை ஓசையே இல்லாமல் பறப்பது டிராக்குலா உலகில் நுழைந்துவிட்ட அனுபவத்தை அளித்தது
நாங்கள் திரும்புவதற்குள் இருட்டிவிட்டது. விளக்கொளியை அடையாளம் வைத்து திரும்பி வரவேண்டியிருந்தது. நான்கரைதான் பொழுது. மீண்டும் தங்குமிடத்திற்கு வந்தபோது ஆறரை மணி. ஆனால் நள்ளிரவின் இருட்டு. அன்று இரவு படுத்ததுமே கடுந்தூக்கம். அவ்வளவு உடற்களைப்பு. குளிர்நிலங்களில் குளிருடன் போராடவே உடலாற்றல் செலவழிகிறது. மாமிசம் உண்பது அங்கே ஏன் அவ்வளவு தேவையாக இருக்கிறது என்று தெரிந்தது. மதுவும்.
அன்று இரவுதான் நான் ஃபின்லாந்து என்னும் நிலத்தில் இருக்கும் உணர்வையே முழுமையாக அடைந்தேன். தமிழ்விக்கியில் ஃபின்லாந்து பற்றிய குறிப்புகளை வாசித்தேன்.
பின்லாந்தின் தேசியக் காவியம் கலேவலா. வைக்கிங்குகளுக்கும் ஃபின்லாந்து மக்களின் தொன்மங்கள் பற்றிய வாய்மொழிக்காவியம் அது. 1835-ல் மொழியியலாளரும், நாட்டாரியலாளருமான எலியாஸ் ரொன்ரோத் (Elias Lönnrot) அதை மீட்டு எடுத்து அச்சேற்றினார். அக்காவியம் தமிழில் உதயணன் மொழியாக்கத்தில் வெளியாகியுள்ளது. அதில் ஃபின்னிஷ் அறிஞர் அஸ்கோ பர்ப்போலா எழுதியிருக்கும் நீண்ட முன்னுரை ஃபின்லாந்தின் பண்பாட்டை அறிந்துகொள்ள மிக உதவியானது.
ஃபின்லாந்து தமிழகத்துக்கு அணுக்கமானது என்று சொன்னால் சிலர் ஆச்சரியப்படலாம். பின்லாந்தின்ஹெல்சிங்கி பல்கலையில் தமிழுக்கான ஆய்விருக்கை இருந்தது. உதயணன் அங்குதான் வேலைபார்த்தார். அஸ்கோ பர்ப்போலா தமிழறிஞர். இந்தியவியல் அறிஞர். 2010 ஆம் ஆண்டில் செம்மொழி மாநாடு கோவையில் நடந்தபோது அவர் அதில் தலைமை ஏற்றிருந்தார்.
மறுநாள் காலையிலேயே கிளம்பவேண்டும். செல்வதற்குள் அந்த உறைந்த ஆற்றை மீண்டும் சென்று பார்க்கவேண்டும் என்று தோன்றியது. பனி மேலும் மேலும் விழுந்து கனமான படலமாக தரையை மூடியிருந்தது. உலகிலுள்ள வண்ணங்களை எல்லாம் எவரோ வழித்து எடுத்துவிட்டதுபோல. வரைந்தவனுக்குச் சலிப்பு வந்துவிட்டது போல. இந்த வெண்மைமேல்தான் அத்தனை வண்ணங்களும் பூசப்பட்டிருந்தனவா?
அறு வெண்பனிப்பரப்பாக தெரிந்தது. அதன்மேல் சில கோடுகள் புதிதாக விழுந்திருந்தன. நான் வீசிய கற்கள் அப்படியே பனியில் பாதி புதைந்து அமர்ந்திருந்தன. நான் வீசிய ஒரு குச்சி பனியாலானதாக மாறி ஆற்றுப்பரப்பில் படிந்திருந்தது. இனி பிப்ரவரி முடிவதுவரை அவை அங்கேயே இருக்கும். அசைவின்மையின் நாட்கள்.
ரோவநேமிக்கு எதற்காக வந்தோமோ அது நடைபெறவில்லை. அரோரா தென்படவில்லை. அரோரா தேடுவதென்பது உண்மையில் ஒரு வேட்டை. அதை ரேடியோவில் அறிவித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆண்டில் சில நாட்களில், குளிர்காலத்திற்கு முன்னர்தான் அது தென்படுகிறது. நாங்கள் கிளம்பிய மறுநாள் அங்கிருந்து நூறு கிலோமீட்டருக்கு அப்பால் தென்பட்டது. நாங்கள் அறிவிப்பை எதிர்பார்த்து இரவெல்லாம் காத்திருந்த பின் தூங்கிவிட்டோம்
ஏன் அரோரா தென்படவில்லை என அடுத்தடுத்த நாட்களில் தெரிந்தது. ஆர்ட்டிக் நாடுகளில் இம்முறை மிக முன்னரே குளிர்காலம் தொடங்கிவிட்டது. கடுமையான பனிப்பொழிவு நவம்பர் இறுதியிலேயே வந்துவிட்டது.