பனிநிலங்களில்- 2

பனிநிலங்களில்- 1

ஐரோப்பிய நகர்களில் பார்ப்பதற்குரியவை என நான்கு உண்டு. ஒன்று, அங்குள்ள தேவாலயங்கள். இரண்டு, அருங்காட்சியகங்கள். மூன்று ஆற்றங்கரை. நான்கு, நகர்ச்சதுக்கம். ஐரோப்பா முழுக்க அவை மிகமிகச் சிறப்பாகப் பேணப்படுகின்றன. பல நகர்களில் அவை மேலோட்டமான பார்வைக்கு ஒன்றுபோலிருக்கும். ஆற்றங்கரைகள் கூட விளிம்பு கட்டப்பட்டு, நன்கு பேணப்பட்ட மரங்களுடன் முன்பு பார்த்தவை போலிருக்கும்.

ஆனால் கொஞ்சம் ஆர்வமும், பண்பாடுசார்ந்த வாசிப்பும் இருந்தால் அவை அந்நகர் பற்றிய ஒரு சித்திரத்தை அளித்துவிடும். எந்த ஊரையும் கொஞ்சம் தெரிந்துகொண்டு பார்க்கவேண்டும். ஆனால் முற்றிலும் தகவல்களால் நம் மண்டையை நிறைத்துக்கொள்ளாமல் புதிய அவதானிப்புகளுக்கு இடமும் விடவேண்டும்.

ஸ்டாக்ஹோமில் நாங்கள் இரண்டு அருங்காட்சியகங்களைக் கண்டோம். நகரில் ஐம்பதுக்கும் மேல் அருங்காட்சியகங்கள் உள்ளன, எங்களுக்கு இருந்தது இரண்டே நாட்கள்தான். அத்துடன் ஸ்டாக்ஹோமின் குளிர்காலத்தில் ஒரே நாளில் பல இடங்களைச் சுற்றிப்பார்க்கவும் முடியாது. குளிர் மிக எளிதாக களைப்படையச் செய்துவிடும்.

அருங்காட்சியகங்களை நுணுக்கமாகப் பார்க்கவேண்டும் என்றால் ஒருநாளில் இரண்டு அருங்காட்சியகங்களுக்குமேல் பார்ப்பதும் உகந்தது அல்ல. அருங்காட்சியகங்களின் ஒவ்வொரு பொருளுக்கும் நீண்ட வரலாறுண்டு. அவற்றை முழுமையாகத் தெரிந்துகொள்வதென்பது ஒரு நூலை படிப்பதுபோல. நாம் தமிழக அருங்காட்சியகங்களையே பெரும்பாலும் பார்த்திருப்பதில்லை.

மாமன்னர் குஸ்தாவ் வாசா சிலை

நார்டிக் அருங்காட்சியகம் Nordic Museum ஸ்டாக்ஹோம் நகரின் மையத்திலேயே உள்ளது. 1873ல் ஸ்வீடிஷ் மானுடவியல் ஆய்வாளர் ஆர்தர் ஹேஸிலியஸ் (Artur Hazelius) இதை அமைத்தார். இப்போதுள்ள கட்டிடம் ஐசக் குஸ்தாவ் க்ளாஸன் (Isak Gustaf Clason) என்ற பொறியாளரால்  1926ல் கட்டப்பட்டது.

இந்த அருங்காட்சியகம் ஐரோப்பியச் சிற்பக்கலையின் சிறந்த மாதிரிகளில் ஒன்று. முகப்பு எடுப்பு சிவப்பான மணற்கற்களைச் செதுக்கி அடுக்கி எழுப்பப்பட்டது. ஐரோப்பாவின் நுண்ணுணர்வுகளில் முக்கியமானது மாபெரும் கட்டிடங்களை மிகச்சிறப்பாக பார்வையிடுவதற்குரிய வகையில் முகப்பில் இருக்கும் திறந்தவெளி. இந்தியாவில் பெரும்பாலான கோபுரங்களை எங்கு நின்றாலும் சரியாகப்பார்க்க முடியாது

ஓங்கிய நுழைவாயிலும், உச்சியில் கும்மட்டமும் கொண்ட கட்டிடம். சுவர்களில் புடைத்தெழுந்த தேவதை முகங்கள். பிடரிமயிர் பட்டைகள் கொண்ட சிம்மங்கள். உயரந்து எழுந்து செல்லும் படிகள். சிவப்புக்கல்லால் ஆன கட்டிடங்களுடன் வெண்கல கைப்பிடிகளும் குமிழ்களும் சட்டங்களும் அற்புதமாக இணைந்துகொள்கின்றன.

உள்ளே பருமனான தூண்களின்மேல் எழுந்த வளைவான விதானங்கள் இணைந்து கூரையாகின. கல்வளைவே வலுவான கூரையாக ஆகிறது. டச்சு செல்வாக்கு கொண்ட டேனிஷ் கட்டிடமுறை எனப்படுகிறது.தமிழகத்திலும் வடக்கன்குளம் போன்ற பழைமையான தேவாலயங்களில் இக்கட்டுமானம் உண்டு.

இத்தகைய கட்டிடங்களைப் பார்க்கையில் எல்லாம் தோன்றும் ஓர் எண்ணம் உண்டு. கல்லும் சுதையும் செங்கல்லும் மரமும்கூட நீடிக்கும் கட்டுமானப்பொருட்கள். சிமிண்ட் அரைநூற்றாண்டை கடப்பதில்லை. நம்முடைய பெரிய நினைவுக்கட்டிடங்களை சிமிண்டில் கட்டுவது வீண். சிமிண்ட் ஒரு தலைமுறைக்காலம் வாழ்வதற்குரிய வீடுகளைக் கட்டுவதற்கே உரியது.

முகப்புக் கூடத்தில் ஸ்வீடனின் மாமன்னர் குஸ்தாவ் வாசாவின் மாபெரும் சிலை. அருகே பனிக்கட்டிகளாலான உலகை கண்ணாடியாலும் வெவ்வேறுவகை ஒளிச்சிதறல்களாலும் உருவாக்கியிருக்கின்றனர். பனிப்பரப்புகளில் விளையாடுபவர்கள் கறுப்புக் கண்ணாடிகளில்லாமல் செல்வதில்லை. அங்கேயே வாழும் மக்களின் கண்களே இடுங்கலானவை, குறைவான ஒளியை உள்ளே விடுபவை.

ஸ்வீடன் நிலத்தில் சென்ற ஆயிரம் ஆண்டுகளாக திகழ்ந்த வாழ்க்கையின் சித்திரத்தை உருவாக்கும் வீட்டு உபயோகப்பொருட்கள், கருவிகள், போர்க்கலங்கள், வீட்டு மாதிரிகள் என பார்த்துக்கொண்டே சென்றோம். இவற்றை மிகக்கூர்ந்து பார்க்கமுடியாது, அருங்காட்சியகத்தில் அதற்கு பொழுதில்லை. ஆனால் பார்த்துச்செல்லும்போதே ஒரு கனவு போல ஒரு வாழ்க்கைச்சித்திரம் நம்முள் உருவாகிறது.

பொருட்களுக்கு சட்டென்று குறியீடாக, படிமமாக மாறும் இயல்பு உண்டு. ஒவ்வொரு பொருளையும் நம் அகம் அடையாளமாக அர்த்தப்படுத்திக் கொண்டேதான் இருக்கிறது. ஆகவே அருங்காட்சியகங்கள் எந்த எழுத்தாளனுக்கும் மிக முக்கியமானவை. அவை ஒரு சமூகத்தின் ஆழுள்ளத்தின் காட்சிவடிவம் போன்றவை. படிமக்களஞ்சியங்கள்.நான் சென்ற நாற்பதாண்டுகளாக அருங்காட்சியகங்களை இந்தியாவிலும் வெளியிலும் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். அவை என் கனவுக்கும் புனைவுக்கும் அளித்த கொடை என்ன என்பதை மதிப்பிடவே முடியாது.

அங்கிருந்த ஒவ்வொரு பொருளிலும் குறிப்புணர்த்தப்பட்டது குளிர்தான்.ஸ்வீடனின் பண்பாட்டை உருவாக்கியதே பனிதான் என்று பட்டது. பனிச்சறுக்கு வண்டிகள், பனியிலும் செல்லும் மென்மரக் குடைவுப் படகுகள். இல்லப்பொருட்கள் பெரும்பாலானவை மென்மரத்தாலானவை. உலோகங்கள் குளிர்ந்து பனிபோல ஆகிவிடுவதனால் மரக்கரண்டிகள், மரத்தாலான தட்டுகள் பிரியத்துக்குரியவையாக இருந்துள்ளன. சிப்பிகளை பொருத்தி உருவாக்கப்பட்ட அழகிய சூப் கரண்டிகளைக் கண்டேன்.

ரெயிண்டீர், மான்கள், எல்க்குகள் போன்றவை அன்றைய வாழ்க்கையின் அடித்தளங்கள். மிக வளர்ந்து வலுவான பேரரசாக ஆனபின்னரும்கூட ஸ்வீடனின் வாழ்க்கையில் வேட்டைச்சமூகத்தின் இயல்புகள் ஓங்கியிருந்தன.  உணவு என்பது பெரும்பாலும் இறைச்சியே. ஆடை என்பது தோல் மற்றும் மென்மயிர். கருவிகள் பெரும்பகுதியும்  கொம்புகளும் எலும்புகளும்  கொண்டு செய்யப்பட்டவை. இங்கே நிலம் வேளாண்மைக்குரியதாக இருக்கும் காலம் ஆறுமாதம்தான். ஆனால் குளிர்நிறைந்த பெருங்காடுகள் செறிந்த நிலம் இது. முடிவில்லாமல் விலங்குகள் கிடைக்கின்றன. அறுவடை என்பதே வேட்டைதான். இன்றும் வேட்டைக்கு நிபந்தனைகளுடன் அனுமதி உள்ளது.

ஸ்வீடனின் தொல்குடிகள் ஸாமி பழங்குடியினர். ஃபின்லாந்திலும் ரஷ்யாவின் சில பகுதிகளிலும் வாழ்கின்றனர். அவர்கள் உண்மையில் ஆர்ட்டிக் பகுதியின்ல் உருவானவர்கள் அல்ல. தெற்கிலிருந்து வெவ்வேறு படையெடுப்புகளால் வடக்கே துரத்தப்பட்டு ஆர்ட்டிக் வெளியில் வாழ்வதற்கு தங்களை தகவமைவு செய்துகொண்டவர்கள். அவர்களின் இல்லங்கள், கணப்புகள், ஆடைகள், ஆயுதங்கள் ஆகியவற்றின் மாதிரிகள் அருங்காட்சியகத்தில் உள்ளன. டென்மார்க்கின் வடக்கே இன்றும் ஏறத்தாழ அதே வாழ்க்கையில் அவர்கள் இருக்கிறார்கள்.

அருங்காட்சியகப் பொருட்கள் வழியாகவே இன்றைய ஸ்வீடன் வரை ஒரு கலாச்சாரப் பயணத்தை மானசீகமாக நடத்த முடியும். பதினைந்தாம்  நூற்றாண்டின் ஒரு பிரபுவின் விருந்து அறை வெள்ளியாலான தட்டுகள், கரண்டிகள், உணவுப்பொருட்களுடன் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதன் அருகிலேயே பதினெட்டாம் நூற்றாண்டின் அரசவிருந்தின் மேஜை.

சட்டென்று ஸ்வீடன் மிகச்செல்வ வளம் மிக்க நாடாக ஆகிவிட்டிருப்பதை ஒவ்வொரு பொருளிலும் வந்த மாற்றம் வழியாகக் காணலாம். வெள்ளி, தங்கம், அருங்கற்கள், சீனப் பீங்கான்கள். அப்படியே பத்தொன்பதாம் நூற்றாண்டு இல்லம். அருகிலேயே 1960 களின் ஓர் இல்லம். வரலாறு பொருட்களின் வழியாக காலம் பெருகி ஓடுகிறது.

ஸ்வீடனின் வரலாற்றில் முக்கியமான ஓர் அருங்காட்சியகமாக கருதப்படுவது வாசா அருங்காட்சியகம் (Vasa Museum)  1626-1628  ல் ஸ்வீடனின் மாமன்னர் குஸ்தாவ் அடால்ஃபஸ் ( Gustavus Adolphus ) ஸ்வீடனின் கடல்வல்லமையின் வெளிப்பாடாக ஒரு பெரும் போர்க்கப்பலை உருவாக்கினார். டென்மார்க்கின் தச்சர்கள் வரவழைக்கப்பட்டு அது அமைக்கப்பட்டது. அந்தக்கப்பல் கட்டப்படும்போதே அதன் பொறியியல் குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டன. அது வழக்கத்திற்கு மாறாக இரண்டு அடுக்கு பீரங்கி வாய்கள் கொண்டது. அதன் உயரத்திற்கு தேவையான அளவுக்கு அகலம் கொண்டிருக்கவில்லை. (பார்க்க வாசா வரலாறு)

அந்தக் கப்பல் ஆகஸ்ட்10, 1628ல் இல்  கடலில்   இறக்க நாள் குறிக்கப்ப்பட்டது. அரசர் கடற்கரைக்கு வந்தார்.ஞாயிற்றுக்கிழமை மாதாகோயிலுக்குச் சென்றபின் ஏறத்தாழ பத்தாயிரம் பேர்  கடற்கரையில் கூடினர். கப்பல் பிரார்த்தனைக்கு பின் கடலில்  செலுத்தப்பட்டது.

ஆனால் அஎளிய அலையிலேயே கப்பல் ஊசலாட தொடங்கியது .பாய்கள் விரிக்கப்பட்டதும் கப்பல் ஒருபக்கமாகச் சாய்ந்தது. பீரங்கித்துளைகளின் கீழ் அடுக்குகள் வழியாக நீர் உள்ளே பெருகி வந்தது. கப்பல் அத்தனைபேர் கண்ணெதிரே மூழ்கியது. கப்பலில் இருந்த பெரும்பாலானவர்களை கரையில் இருந்து சென்ற மீனவர்கள் காப்பாற்றினர். ஆனாலும் கிட்டத்தட்ட இருபதுபேர் அதனுடன் சேர்ந்து மூழ்கினர்.

அக்கப்பலில் இருந்த ஐம்பது வெண்கலப் பீரங்கிகள் 1700 களிலேயே எடுக்கப்பட்டுவிட்டன. 105 அடி ஆழத்தில் கரையோரமாக கடலுக்குள் அப்படியே   சேதமடையாமல் இருந்தது. 1961ல் அதை மீட்டெடுக்கும் முயற்சி தொடங்கப்பட்டு  படிப்படியாக  வெளியே கொண்டு வந்தார்கள்.

அதை வெளியே கொண்டுவந்த விதம் விரிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. கப்பலின் அடியில் அடிநிலச் சேற்றில் சுரங்கப்பாதை உருவாக்கப்பட்டு அதன்வழியாக ஆழ்நீச்சலாளர்கள் சென்று இரும்பு வடங்களை செலுத்தினர். பின்னர் மின்தூக்கிகளால் கப்பல் படிப்படியாக மேலே கொண்டுவரப்பட்டது. மிக அபாயகரமான இந்தப் பணியில் எந்த விபத்தும் நிகழவில்லை. நீரின் எடையால் கப்பல் உடையவுமில்லை.

வாசா கப்பல்தளம் (Wasavarvet) அழைக்கப்பட்ட இடத்தில்  ஒரு காட்சிப்பொருளாக அக்கப்பல் நின்றிருந்தது. 1988ல் ல் அது தாமிரத்தகடுகளால் மேற்கூரையிடப்பட்ட மாபெரும் கட்டிடம் ஒன்றுக்குள் கொண்டு வந்து நிறுத்தப்பட்டுள்ளது. இன்று அது ஓர் அருங்காட்சியகம். நடுக்காலகட்டக் கப்பல் ஒன்றை எந்த சேதமும் இல்லாமல் முழுமையாகவே பார்ப்பதற்கான வாய்ப்பு அதுதான்.

வாசா போர்க்கலம் 226 அடி நீளமும் 172 அடி உயரமும் ஏழு அடுக்குகளும் கொண்டது.  பொன்னியின் செல்வனில் காட்டப்படும் சோழர்களின் கப்பலின் அதே வடிவம். முந்நூறு போர்வீரர்கள் அதில் பயணம் செய்ய முடியும். அந்தக் காலத்துக் கப்பல்களில் மிக அதிகமான பீரங்கிகளை ஏற்றும் அமைப்பு கொண்டது அது. நீள்வட்ட வடிவம். கிண்ணம் போன்ற கலக்குவை. மேலே இரண்டு பாய்மரங்களில் நான்கு அடுக்குகளாகப் பாய்கள்.

குஸ்தாவ் அடால்ஃபஸ் தன்னை ரோமாபுரி அரசர்களின் வழித்தோன்றலாக எண்ணிக்கொண்டவர்.  ஆகவே கப்பலில் ரோமாபுரி மன்னர்க்ள் நீரோ, கலிகுலா போன்றவர்களின் சிற்பங்கள் உள்ளன. பழைய வைக்கிங் தொன்மங்கள் சார்ந்த சிற்பங்கள். ஏராளமான சிங்க முகங்கள். இச்சிற்பங்கள் பண்டைய பரோக் பாணியில் செந்நிறமும் பொன்னிறமுமாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தன

அன்று ஸ்வீடனின் முதன்மை எதிரி போலந்துதான். போலந்தில் ஓர் அரசக்குடிமகனை இழிவுசெய்யவேண்டுமென்றால் இருக்கைக்கு அடியில் செல்லவைத்து நாய்போல குரைக்கச் செய்வார்கள். அதன்பின்னரே அவனுக்கு மரணதண்டனையில் இருந்து மன்னிப்பு வழங்கப்படும். மாலுமிகள் மலம்கழிக்கும் இடத்தில் அவ்வாறு ஒரு போலந்து அரசகுடியினர் பெஞ்சுக்கடியில் மண்டியிட்டு அமர்ந்திருக்கும் சிற்பம் உள்ளது.

நான்கு அடுக்குகளாக அமைந்துள்ள பால்கனிகளில் இருந்து அந்தக் கப்பலை பார்க்க முடியும். முதல் பார்வைக்கு சிறிது என தோன்றும். கீழிறங்கிச் சென்று பார்த்தால் அதன் பேருருவம் மூச்சடைக்கச் செய்யும். மேலிருந்து மீண்டும் பார்த்தால் ஒரே பார்வையில் அது கண்ணுக்குத் தெரிந்து சிறிது என தோன்றும்.

கீழே அக்கப்பலில் மூழ்கியவர்களின் எலும்புகள் மீட்கப்பட்டு, மண்டையோடுகளைக் கொண்டு அவர்களின் முகங்கள் வடிவமைக்கப்பட்டு சிலைகளாக நிறுவட்டப்பட்டுள்ளன. ஒரு பெண் உட்பட 15 பேர்.செத்தவர்கள் சங்கடமான முகபாவனைகளுடன் அறியாத நமது காலத்தை பார்த்துக்கொண்டிருந்தனர்.

பலவகையிலும் டைட்டானிக்கை நினைவூட்டியது அக்கப்பல். அதுவும் ஓர் ஆணவவெளிப்பாடு. முதல் மிதத்தலிலேயே மூழ்கியது. பின்னர் கண்டடையப்பட்டது. சென்ற நூற்றாண்டுகளில் இதைப்போன்ற மரக்கலங்கள் உலகம் முழுக்க கடலில் அலைந்தன. பெரும்பாலானவை போர்களில் எரிந்து மூழ்கின. எஞ்சியவை பழுதடைந்து உடைக்கப்பட்டன. அந்த மரக்கலத்தின் நிமிர்வைப் பார்க்கையில் அதிலுள்ள கனவும் ஆணவமும் வியப்பூட்டின. மறுகணமே கடலை எண்ணும்போது அந்த மரக்கலம் ஒரு சிறு சருகுக்கு நிகரானது என்ற எண்ணமும் வந்தது.

குஸ்தாவ் அடால்ஃபஸின்  பெருமிதம் அக்கப்பல். அது மூழ்கியது அவருக்கு பெரிய அடியாக இருந்திருக்கும். அத்துடன் அவர் அழிந்திருக்கக்கூடும். ஆனால் அவ்வாறு நிகழவில்லை. ஸ்வீடனின் கடற்படையை பெருக்கி, ஒருங்கிணைந்த ஸ்வீடனை உருவாக்கியவராகவே அவர் வரலாற்றில் இடம்பெறுகிறார். நீண்டகாலம் (1594–1632) ஆட்சிசெய்த ஸ்வீடிஷ் மன்னர்களில் ஒருவர். வாசா கப்பல் என்பது ஒருங்கிணைவின்மையின் குறியீடாக இன்று இலக்கியச் சொல்லாடலில் இடம்பெற்றுவிட்டது.

உண்மையில் இப்படி ஒரு மூழ்கிய கப்பலை காட்சிப்பொருளாக்கி, கிட்டத்தட்ட கேலிப்பொருளாக்கி, ஸ்வீடன் அடைவது என்ன? முன்னோரின் பெருமையை செயற்கையாக உருவாக்கிக் கொள்வதன் இழிவில் இருந்து அது இதனூடாக தப்பிக்கிறது. உண்மையை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் துணிவை அடைகிறது. தொழில்நுட்பம் என்பது தொடர்ச்சியான பிழைகளைதலே என தனக்குத்தானே சொல்லிக் கொள்கிறது.

தாழ்வுணர்ச்சி அற்ற, தன்னம்பிக்கையால் உருவான ஒரு சமூகத்தாலேயே கடந்தகாலச் சரிவுகளையும் இழிவுகளையும் நிமிர்வுடன் எதிர்கொள்ள முடியும். அப்போதுதான் அது நிகழ்காலத்தை சிறப்பாக எதிர்கொள்ள முடியும்.  இந்தியாவில் நாம் இரு அதீதநிலைகளில் உலவும் மக்கள். முன்னோர் மீதான அதீத போற்றுதல், அதீத தூற்றுதல். நம் பார்வை யதார்த்தத்தைச் சந்திப்பதே இல்லை.

(மேலும்)

 

முந்தைய கட்டுரைசாரு நிவேதிதா – வாழ்வும் கலையும். அய்யனார் விஸ்வநாத்
அடுத்த கட்டுரைகார்த்திக் புகழேந்தியின் ‘கல்மனம்’