வெள்ளையானை, சர்வதேசப் பரிசு- கடிதங்கள்

வெள்ளையானை,சர்வதேசப்பரிசு, பிரியம்வதா

அன்புள்ள ஜெ

பென் அமெரிக்கா உங்கள் வெள்ளையானை நாவலை மொழியாக்கத்திற்கான சர்வதேசப்போட்டியில் தெரிவுசெய்திருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். என்னுடைய ஆதர்ச நாவல் அது.அதிலுள்ள பல அடுக்குகள் போகிறபோக்கில் கதையோட்டமாக வந்துசெல்கின்றன. ஆகவே இங்கே அவை கவனிக்கப்படவில்லை. அதில் ஷெல்லியின் டேன்ஸ் மெகாபிர் என்னும் கவிதைக்கும் முதல் தொழிலாளர்புரட்சி அழிக்கப்படுவதற்கும் உள்ள ஒற்றுமை, அந்த நிகழ்வு கொஞ்சம் அகன்றதும் ஒரு கோயிலில் குதிரைவீரர்கள் சூழல் இருக்கும் கல்மண்டபம் போல ஆவது எல்லாமே ஒரு அதிநவீன நாவலின் குறியீட்டு அழகியல் கொண்டவை.இந்தியப்பஞ்சங்களில் ஆங்கிலேய ஆட்சியின் பங்கு என்ன என்பது இன்றுவரை உலக அளவில் பெரிதாகப் பேசப்படவில்லை. இனி பேசப்படலாம். அந்நாவல் தேர்வு செய்யப்பட்ட போது மொத்தமாக நம் சூழலில் இருந்த அமைதியைப் பற்றிச் சொன்னீர்கள். ஆனால் அது இயல்பானதுதான். நானும் மீடியாவில்தான் இருக்கிறேன். இங்கே அரசியல் வம்பு. சினிமா தவிர எதுவும் எவருக்கும் தெரியாது. வாழ்த்துக்கள்

ஶ்ரீராம் மகாதேவன்

*

அன்புள்ள ஜெ,

வெள்ளையானை அமெரிக்க பென் அமைப்பால் தேர்வுசெய்யப்பட்டதை அறிந்து நிறைவடைந்தேன். தொடர்ச்சியாக உங்கள் நாவல்கள் வெளிவரவிருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது . உங்களுக்கு மிகச்சிறந்த மொழியாக்கம் வாய்த்துள்ளது. அறம் மொழியாக்கம் அற்புதமாக இருந்தது. தமிழிலக்கியத்தை இந்தியச் சூழலில் முன்வைத்துப் பேச இன்றைக்கு ஆளே இல்லை. கல்யாணராமன் மொழியாக்கம் செய்தவை எல்லாமே சிறந்த மொழிநடை கொண்டவை. அவை போதிய அளவுக்கு கவனிக்கப்படவில்லை. அதைவிட சுமாரான இந்தி நாவல்கள் பெற்ற கவனம் அவற்றுக்கு அமையவில்லை. அதையும் மீறி மொழியாக்கங்கள் கவனம்பெற இந்த விருதுகள் உதவக்கூடும்

செந்தில்ராஜ்

*

முந்தைய கட்டுரைமலேசியப் பயணம்
அடுத்த கட்டுரைபங்கர்வாடி – வெங்கடேஷ் சீனிவாசகம்