தாமஸ் ஹிட்டோஷி புரூக்ஸ்மா – தமிழ் விக்கி
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்
தாமஸ் புரூக்ஸ்மா போல முழுவதும் மகிழ்ச்சியாலான மனிதரை நான் இப்போதுதான் முதல் முறையாக பார்க்கிறேன். தமிழ் விக்கி பக்கத்தில் அவரது புகைப்படத்தை பார்க்கையில் ’’ஒரு வெளிநாட்டு இளைஞர்’’ என்று மட்டும் தோன்றியது. இதுவரை வாசித்திருந்த அனைத்து தமிழ் மொழிபெயர்ப்புகளை காட்டிலும் அவரது திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்புகள் அனைத்தும் மிக எளிமையாக பொருள் சொன்னது. இரண்டு வரி குறளை பொருள் சிதையாமல் ஆங்கிலத்தில் கொண்டு வந்திருப்பது மாபெரும் பணி என்பது அதை வாசித்தால் மட்டுமே உணர முடியும்
சில நாட்களுக்கு முன்பு தாமஸ் புரூக்ஸ்மாவுடனான மெய்நிகர் உரையாடலில் அவரை சந்தித்து உரையாடினோம்., முழுக்க முழுக்க மகிழ்ச்சியாலானவர். முகமும் கண்ணும் மூக்கும் எல்லாம் எப்போதும் மலர்ந்து சிரித்தபடியே இருக்கும் ஒருவரை நான் அதுவரை கண்டதில்லை. அவரது தமிழ் அத்தனை அழகு. தமிழறியாதவர்களின் மழலைத்தனமின்றி, அவரது இதயத்திலிருந்து அவர் உணர்ந்து தமிழ் பேசுவதையும் தமிழ் மொழிமீது அவருக்கிருந்த உள்ளார்ந்த மதிப்பும் காதலும் ஆச்சர்யமூட்டின, கொஞ்சம் குற்றஉணர்வும் இருந்தது அவரளவுக்கு எனக்கு தமிழ் மீது அத்தனை காதல் இல்லையே என்று.
ஆர்வமுள்ள சிறுவனை போல கேள்விகளுக்கு காத்துக்கொண்டிருக்கிறார் ஒவ்வொரு கேள்விக்கும் உடனே பதிலளித்து விடாமல் கண்களை மூடி கேள்வியை சரியாக கிரகித்து பின்னர் தன் நினைவுகளுக்குள் மூழ்கி முத்தெடுத்தது போல பொருத்தமான பதில்கள் சொன்னார்
தமிழ்மொழி பயில்கையில் கடினமாக இருந்தென்றாலும் அம்மொழியின் மீதுள்ள பிரியத்தினல் அதை கற்றுத் தேர்ந்த தாகவும் தமிழுக்கு நன்றியுள்ளராக இருப்பதாகவும் சொன்னது சிறப்பு
’தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யென பெய்யும் மழை’’ உள்ளிட்ட திருக்குறளின் கருத்துக்களனைத்திலும் ஒரு மொழிபெயர்ப்பாளராக அவருக்கு உடன்பாடுள்ளதா / என்பதற்கு அவர் சொன்ன விளக்கமும் மிக சிறப்பு. ’’அப்பெரும் படைப்பை அணுகுகையில் தங்களது சொந்த கருத்துக்களை அப்பால் வைத்துவிட்டு அணுகுவது நல்லது என்றும் , அந்த கொழுநன் என்பதை அப்படியே பொருள் கொள்ள வேண்டியதில்லை அது இணையராக இருக்கலாம் ஆசிரிய மாணவ உறவாக இருக்கலாம், அந்த குறள் சொல்வது ஒரு உறவில் அவசியம் இருக்க வேண்டிய அர்ப்பணிப்பை ’’என்றார். உண்மையிலேயெ அசந்து போனேன்
அந்த பதில் ஒரு புதிய திறப்பு ஒரு படைப்பை முறையாக அணுக அவர் உண்மையில் அன்று எங்களுக்கு பயிற்சி அளித்தார் என்று சொல்ல வேண்டும்
ஒளி நிரம்பிய ஆளுமை அவர். அவரது உள்ளொளிதான் அத்தனை பிரகாசித்திருக்கிறது. இந்த உரையாடல் நிகழ்ச்சி அல்லாது அவரை நாங்கள் இத்தனை அணுக்கமாக அறிந்து கொண்டிருக்க முடியாது. தமிழ் விக்கியில் இடம்பெற்றிருக்கும் தாமஸ் புரூக்ஸ்மா போன்ற மிக முக்கிய மிக நேர்மையான படைப்பாளிகளை அதுபோல அறிமுகப்படுத்தியது மிக மிக சிறப்பு. உங்களுக்கும் ஆஸ்டின் செளந்தருக்கும் இதன் பொருட்டு தனித்த நன்றிகள்
அன்புடன்
லோகமாதேவி