அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். அமெரிக்க வாழ்க்கையில் குழந்தைகளைப் பற்றிய கனவுகள் (ஆமாம் அந்த ஹார்வர்ட் படிப்பு, டாக்டராவது) சிதைவுறவிருக்கும் தருணங்களை , எனக்கு முன்னர் இங்கு செட்டிலாகிவிட்ட நண்பர்களின் உரையாடலில், அவர்களது அனுபவங்களில் இருந்து கிடைக்கும். அதில் முக்கியமாக, வெள்ளிக்கிழமை மாலைகளில் அனைவரும் வெகுசீக்கிரம் கிளம்பி சென்றுவிட, எனது பங்களாதேஸ் நண்பரும் நானும், தோளில் கணினிப் பையை மாட்டியவண்ணம் பேசும் தருணங்களில், அவர் சொல்லும் வாழ்வியல் அனுபவங்கள். அதில் சில பதட்டமான சம்பவங்களும் இடம்பெறும். அவருக்குத் தெரிந்த நண்பரும் மனைவியும் சொந்த மகனால் சுடப்பட்டதை ஒரு நாள் பகிர்ந்தார். அவர்கள் மகனின் ஒருபாலுறவு சமாச்சாரத்தை ஏற்றுக்கொள்ளாததால், நடந்த சம்பவம் அது.
இங்கே LGBTQ பற்றித் தெளிவாக புரிந்துகொள்ள அத்தனை தகவல்களும் கிடைக்கும் நாட்டில் வாழ்கிறோம். எந்த நடிகன், எந்த நிறுவனத்தின் தலமை நிர்வாக அதிகாரி Gay, எந்த நடிகை லெஸ்பியன் என்பது வெளிப்படை. நீண்ட நாள் திருமணமாகி சந்தோஷமாக இருக்கும் தம்பதிகள் என்று பத்திரிகைகள் வெளியிடும் புகைப்படங்களில் ஒருபாலினத்தில் மணந்துகொண்டவர்களின் படங்கள் இருக்கும். உடன் பணிபுரிபவர்கள் வெளிப்படையாக தனது ஒருபாலின மணம்பற்றி பேசுகிறார்கள். நிறுவனம் நடத்தும் விழாக்களுக்கு, உங்களது கணவனை அல்லது மனைவியை அழைத்து வாருங்கள் என்று சொல்வதற்குப் பதிலாக, உங்களின் Significant other என்று politically திருத்தமாக சொல்வார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும், தனக்கென வரும்பொழுது ஏன் ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறோம்.
குழந்தை, படிப்பு, கல்யாணம் கடந்து, வேறுவிதமான உரையாடல்கள் இருப்பதில்லை. வளர்ந்த நாடாக இருந்தாலும், பள்ளி / கல்லூரிக்குச் செல்லும் பெண்ணுக்கும் சரி ஆணுக்கும் சரி பாலியல் தொந்தரவுகள் உண்டு. முகம் சுண்டி வீடு வரும் குழந்தைகளிடம் மதிப்பெண்கள், அடுத்து என்ன என்ற பேச்சுக்களைத் தவிர வேறு இருப்பதில்லை. ஒருபாலுறவு மன நிலையை இயற்கையால் நிந்திக்கப்பட்ட குழந்தைகளைப் பற்றிய புரிதல்களை வளர்த்துக் கொள்வதில் எந்தவிதமான முயற்சிகளும் இல்லை. இந்தியப் பண்பாடு இதை ஏற்றுக்கொள்ளாது என்று இந்தியப் பண்பாட்டில் ஆராய்ச்சி செய்தவர்கள் போல் ஒரு மனநிலை.
நான் பதின்ம வயதில் இருக்கும்பொழுது, பொதுவாசகனாக எழுதிய ஒரு கவிதை உண்டு. அதில் தான் விரும்பும் பெண்ணிடம் காதலைச் சொல்பவனிடம், அந்தப் பெண் அவனது அண்ணனைக் காதலிப்பதாக முடித்திருப்பேன். இப்பொழுது எழுதினால், அந்தப் பெண் அவனது அக்காவைக் காதலிப்பதாக சொல்வாள் என்று எழுதுவேன் என்று சொல்லி நண்பர்களை ஒருபாலுறவு சம்பந்தமான உரையாடல்களுக்குள் உள்ளிழுப்பேன். இருபத்தைந்து முப்பது வயதுக்குட்பட்டவர்கள், பரவாலேயே அங்கிள் நீங்கள் முற்போக்காக யோசிக்கிறீர்கள் என்று அவர்கள் எனக்கு மேலும் பல புரிதல்களை கொடுக்கும் விஷயங்களை பகிர்ந்துகொள்வார்கள். குழம்பும் மனநிலையில் தற்கொலைக்குச் செல்லும் குழந்தைகளைக் காப்பாற்றும் Trevor Project பற்றியெல்லாம் அவர்களிடம்தான் கற்றுக்கொண்டேன். இதே கவிதையை இலக்கியம் வாசிக்காத பெற்றோர்களிடம் சொன்னால், முகத்தில் ஒரு முகச்சுளிப்புதான் மிஞ்சுகிறது.
‘ஒருபாலுறவு’ நூலில் எஸ் என்பவரின் கடிதத்திற்கு, தங்கள் பதிலில் //என்றாவது இந்தியாவிலிருந்து ஐரோப்பா அல்லது அமெரிக்காவுக்கு செல்லமுடியும் என்றால் இந்தச் சமூகத்திற்கான முகமூடி தேவை இல்லை. அங்கே நீங்கள் இயல்பாக இருக்கலாம். அதற்காக முயலுங்கள் இயலவில்லை என்றால் இங்கே இன்னொருவராக நீடியுங்கள்// என்று கூறியிருப்பீர்கள். நிலைமை அங்கே இருப்பதைவிட பரவாயில்லை. புரிதல் மேம்பட, ஓரினச்சேர்க்கை பற்றிய விவாதங்கள் தொடரவேண்டும். நண்பர்களுக்கு நீங்கள் சொன்ன பதில்களில் உள்ள நுண்மையான விஷயங்கள் உரையாடல்களில் இடம்பெற்று, சமூகம், மற்ற உறவுகளைப்போலவே, ஒருபாலுறவையும் இயல்பாக ஏற்றுக்கொள்ளவேண்டும்.
– ஒருபால் புணர்ச்சிக்கான உந்துதல் என்பது இயற்கையானது. எல்லா உயிர்களிலும் காணப்படுவது என்று அறிவியல் பூர்வமாக நிறுவப்பட்டு முப்பதுவருடங்கள் கூட ஆகவில்லை.
– இந்துப் பண்பாடு ஓரினச்சேர்க்கை போன்றவற்றை பரிவுடன் மட்டுமே அணுகியிருக்கிறது என்பதற்கு நூற்றுக்கணக்கான நூலாதரங்களைக் காட்டமுடியும்.
மற்றவர்கள் பேசக்கூசும் விஷயத்தை, நண்பர்களின், சமூகத்தின் நலன் கருதி பதில் எழுதி, விவாதித்து நூலாகத் தொகுத்து, வெளியிடும் உங்களுக்கும் விஷ்ணுபுரம் பதிப்பகத்திற்கும் நன்றி.
மானுடம் சிறக்க, பரிசாக கொடுக்கும் நூல்களின் வரிசையில், ‘ஒருபாலுறவு’ நூல் நிச்சயம் இடம்பெறவேண்டும்.
அன்புடன்,
ஆஸ்டின் சௌந்தர்