அறைக்கலன், வெண்முரசில் இருந்ததா?

அறைக்கலன் -அவதூறு

வணக்கம் ஜெ,

உங்களது அருஞ்சொல் ஊடகத்தில் வந்த உரையாடலை பலர் வெட்டிப் பரப்பிக் கொண்டு இருந்தனர். அப்போதே முழு காணொளியை பார்த்தேன் அதில் மறைந்து போன வார்த்தைகள் வெண்முரசு வழியாக மீண்டும் புழக்கத்திற்கு வந்தன என்று நீங்கள் சொன்னதைப் புரிந்து கொண்டேன். ஆனால் வெண்முரசிலிருந்து விக்சனரிக்கு வந்தது என்பதை மட்டும் மறுத்து வந்தேன்.

நேற்று வெண்முரசு நாவலில் உள்ள கலைச் சொற்களைச் சேகரிக்கும் பொருட்டு உருபனியல் பகுப்பி (Morphological parser) கொண்டு 1.3805 கோடி சொற்களையும் திரட்டி ஒரு சொல்லடைவை உருவாக்கினேன். அப்போது தான் ஒரு அதிர்ச்சி கிடைத்தது. வெண்முரசு நாவலில் எங்கும் அறைக்கலன் என்ற சொல் கிடைக்கவில்லை. இதில் ஏதேனும் பிழை ஏற்பட்டுள்ளதா அல்லது நினைவுப் பிழையா என்று குழப்பம் ஏற்படுகிறது. எத்தனையோ புதிய சொல்லாட்சிகள் இந்த அடைவில் கிடைக்கிறது. ஆனால் அறைக்கலன் என்ற சர்ச்சை  இதைக் கெடுத்துவிடுகிறது. வாய்ப்பிருந்தால் உங்கள் கருத்தினை அறியத் தரலாம்.

https://tech.neechalkaran.com/2022/11/venmurasu-concordance.html

அன்புடன்,

நீச்சல்காரன்

neechalkaran.com

அன்புள்ள நீச்சல்காரன்,

நான் மொழியியலாளன் அல்ல. தமிழில் கலைச்சொல்லாக்கத்தை ஓர் அறிவுச்செயல்பாடாகச் செய்தவர்கள் அருளி, மணவை முஸ்தபா போன்றவர்கள்.  

நான் தனித்தமிழியக்கத்தின் மேல் ஆர்வம் கொண்டவன்முப்பதாண்டுகளாக. நவீன இலக்கியக் களத்தில் இருந்துவந்த தனித்தமிழியக்க மறுப்பு போக்குக்கு எதிரான நிலைபாட்டை தொடர்ச்சியாக முன்வைத்து வந்தவன். அதற்குக் காரணம் எம்.கோவிந்தன். அவர் தனித்தமிழியக்கத்துக்கு நிகரான பச்சைமலையாளம் அல்லது நாட்டுமலையாளம் என்னும் இயக்கத்தை கேரளத்தில் உருவாக்க முயன்றவர். அது அங்கே வெல்லவில்லை. ஆனால் நான் அவர் மரபினன். (ஆகவே மலையாளத்திலும் கூடுமானவரை சம்ஸ்கிருதம் கலக்காமலேயே எழுதுவேன். அது அங்கே மிகமிகக் கடினம். ஆனால் எனக்கான நடையை அதுவே உருவாக்கி அளித்தது)

நான் புனைகதை எழுதுபவன். புனைகதை எழுதும்போது நம் ஆழ்நினைவில் உள்ள சொற்களஞ்சியம் தொட்டு எழுப்பப்படுகிறது. என் நினைவில் இருந்து எழும் சொற்களையே பயன்படுத்துகிறேன். அவ்வண்ணம் சொற்கள் இல்லை என்றால் இயல்பாகவே சொற்களை உருவாக்குகிறேன். கொற்றவை, வெண்முரசு ஆகிய நாவல்களிலும் கட்டுரைகளிலும் நான் உருவாக்கிய கலைச்சொற்கள் அவ்வண்ணம் உருவாகி வந்தவை. திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை அல்ல. ஆகவே எவை நான் உருவாக்கியவை என நான் தொகுத்துக்கொள்ளவில்லை. பிறர் தொகுக்கும்போது பார்த்து தெரிந்துகொள்கிறேன். எழுதும்போது ஒருவகை கூர்நினைவுநிலை உருவாகிறதென்பது இலக்கியவாதிகளுக்கு தெரியும். அப்போது நாம் எழுதுவதை நாமே திரும்பச் சென்று வாசித்துத்தான் அறிய முடியும்.

அறைக்கலன் என்னும் சொல்லை நான் 1988லேயே பயன்படுத்தியிருப்பதை ஒரு நண்பர் கடிதம் வழியாகத் தெரிவித்தார். வெண்முரசில் பயன்படுத்தியதாகச் சொன்னது வேறொரு நண்பர் ஒருமுறை என்னிடம் சொன்னதை ஒட்டித்தான். வெண்முரசில் இல்லை என்பதும் புதிய செய்திதான். உங்கள் தொகுப்பு போல வெண்முரசின் கலைச்சொற்கள், புதிய கலைச்சொற்கள் பெரிய தொகுதிகளாக வேறுபலரின் முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ளன.  

ஜெ

***

வெண்முரசு நூல் ஒன்று – முதற்கனல் செம்பதிப்பு

வெண்முரசு நூல் எட்டு – காண்டீபம் செம்பதிப்பு

வெண்முரசு நூல் ஒன்பது – வெய்யோன் செம்பதிப்பு

வெண்முரசு நூல் பத்து – பன்னிரு படைக்களம் செம்பதிப்பு

வெண்முரசு நூல் பதினொன்று – சொல்வளர்காடு செம்பதிப்பு

வெண்முரசு நூல் பன்னிரண்டு – கிராதம் செம்பதிப்பு

வெண்முரசு நூல் பதின்மூன்று – மாமலர் செம்பதிப்பு

வெண்முரசு நூல் பதினான்கு – நீர்க்கோலம் செம்பதிப்பு

வெண்முரசு நூல் இருபது – கார்கடல் செம்பதிப்பு

வெண்முரசு நூல் இருபத்து மூன்று – நீர்ச்சுடர் செம்பதிப்பு

வெண்முரசு நூல் இருபத்து நான்கு – களிற்றியானை நிரை செம்பதிப்பு

வெண்முரசு நூல் இருபத்தைந்து – கல்பொருசிறுநுரை செம்பதிப்பு

வெண்முரசு நூல் இருபத்தாறு – முதலாவிண் செம்பதிப்பு

முந்தைய கட்டுரைஸ்வீடன் வானொலி, நூலகம்
அடுத்த கட்டுரைகலைச்சொல், அவதூறு, கடிதம்