பெண்கள்!

பென் அமெரிக்கா போட்டியில் வெள்ளையானை விருது பெற்றதை ஒட்டி பல வாழ்த்துக்கள் வந்தன. பெரும்பாலும் மலையாள, கன்னட எழுத்தாளர்களிடமிருந்து. சுவாரசியமான ஒரு கடிதம் ஒரு பெண் எழுதியிருந்தது. அவர் அந்நாவலை பிரியம்வதா என்னும் பெண் மொழியாக்கம் செய்திருந்ததைப் பற்றி ஆச்சரியப்பட்டிருந்தார்.

யோசித்துப் பார்த்தால் ஆச்சரியமான விஷயம்தான் அது. இன்று நான் முன்னெடுக்கும் எந்த அறிவுச்செயல்பாட்டிலும் முதற்பெரும் விசை பெண்கள்தான். எழுதுபவர்கள், மொழியாக்கம் செய்பவர்கள், இதழ் நடத்துபவர்கள், விழாக்களை ஒருங்கிணைப்பவர்கள். சுசித்ராவின் மொழியாக்கத்தில்தான் என் நாவல்கள் தொடர்ந்து வரவிருக்கின்றன.  

சில ஆண்டுகளுக்கு முன்பு நான் பெண்களை இழிவுசெய்துவிட்டதாகச் சொல்லி ஒரு மாபெரும் மனு தயாரிக்கப்பட்டது. ஏராளமான பெண்கள் அதில் கையெழுத்திட்டிருந்தனர். அம்பை அதை ஒருங்கிணைத்தார். அதை அம்பை ஒருங்கிணைத்ததில் எனக்கு மனக்குறையும் இல்லை. அம்பையின் இயல்பு அது. போலியான ஓரு வேகம் அவரிடம் என்றும் உண்டு. அதை முன்பு இடதுசாரிபெண்ணியமாக முன்வைத்தார்.  

(மாதவிக்குட்டி (கமலா தாஸ்) இஸ்மத் சுக்தாய் என பலரிடம் அது இருந்தது. அவர்களை கலைஞர்களாக ஆக்கியது அதுவே. அதே இயல்புதான் அம்பையை  தமிழின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவராக  ஆக்குகிறது.  சமநிலை கொண்ட இலக்கியக்கலைஞர் ஒருவர் இருக்க முடியாது)

அம்பையிடம் என் வருத்தம் என்னவென்றால், போகிற போக்கில் இந்து நாளிதழில் எழுதிய கட்டுரையில் ஆண் எழுத்தாளர்கள் எல்லாரும் பெண் எழுத்தாளர்களிடம் வழிபவர்கள் என்று சொன்னவர் அதேமூச்சில் என் பெயரையும் சேர்த்துவிட்டார். எனக்கு அப்பழக்கம் இதுவரை இல்லை. அதனால் நான் அத்தகையவன் அல்ல என்று சொல்ல வரவில்லை. நான் எதைச்செய்வேன் என எனக்கே தெரியாது. இதுவரை இல்லை.

அம்பை ஒருங்கிணைத்த அந்த மனுவே அபத்தமானது. நான் பெண்களை பற்றி இழிவாக எதையும் சொல்லவில்லை. அதை பலமுறை விளக்கியும்விட்டேன். ஆனால் ஓர் அவதூறாக அதை முன்னெடுக்கிறார்கள் சிலர். பெண்கள், அவர்கள் பெண்கள் என்னும் நிலையை ஒரு சலுகையாக எடுத்துக்கொண்டு, அல்லது பெற்றுக்கொண்டு, தங்களை முன்னிறுத்தலாகாது என்று மட்டுமே சொன்னேன். இப்போதும் என் நிலைபாடு அதுவே.

அன்று என் தரப்பை விளக்கி எழுதும்போது இப்படிச் சொன்னேன்.   

இன்று எழுதவரும் பெண்கள்  இலக்கியத்தரம், மதிப்பீடு பற்றி எந்த வினா எழுந்தாலும் ‘நாங்கள்லாம் எவ்ளவு கஷ்டப்பட்டு எழுத வந்தோம் தெரியுமா?’ என்னும் குரலை பதிலாக வைக்கிறார்கள். ‘நீ ஆண், நீ அப்படித்தான் சொல்லுவாய், அது ஆணாதிக்கம். நாங்கள் எழுதுவதை நாங்கள்தான் மதிப்பிடுவோம்’ என்கிறார்கள். ஆண்களும் இங்கே பலவகையான வாழ்க்கைநெருக்கடிகள் நடுவே, போராட்டங்கள் நடுவேதான் எழுதுகிறார்கள். தூக்குமேடைக்குமுன் நின்றுகூட எழுதியிருக்கிறார்கள். அறிவுச்சூழலில் சலுகைகளே இல்லை.

பெண்கள் சொல்லும் சாக்குகள் எல்லாமே தோல்விமனநிலை சார்ந்த நிலைபாடுகள். எந்த அறிவியக்கத்தின் மதிப்பீட்டிலும் நிலைகொள்வேன் என்று சொல்லும் செருக்கே அறிவுச்செயல்பாட்டாளருக்கு உரியதாக இருக்கமுடியும். எந்த அவைக்கும் நம்பிக்கையுடன், பிரியத்துடன் சென்று அமர்பவனே அறிவுத்தளத்திற்கு மெய்யான பங்களிப்பாற்றுபவன். முன்ஜாமீன்கள் எடுத்துக்கொண்டு  எழுதவருபவன் அல்ல

அறிவுத்திமிரும், அதற்கான நிமிர்வும் கொண்ட  பெண்கள் எதிர்காலத்தில் வருவார்கள். எந்த சலுகையும் வேண்டாம் என்று சொல்லும் தன்னிமிர்வு கொண்டவர்கள். ஆண்களுக்கு எதிர்நிலையே பெண்ணியம் என புரிந்துகொள்ளும் அபத்தம் இல்லாதவர்கள். எதிர்ப்புச் சிந்தனை என்பது எதிர்க்கப்படுவதன் அடிமை என்னும் உண்மையை உணர்ந்தவர்கள். எந்த எதிர்நிலையும் இல்லாமல் தங்கள் ஆன்மிகத்தை, கலையை முன்வைப்பவர்கள். அவர்களின் எதிர்ப்புகூட அவர்கள் சென்றடைந்த நேர்நிலை வாழ்க்கைப்பார்வையின் விளைவாகவே இருக்கும்

இன்று அத்தகைய பெண்களின் ஒரு நிரையை விஷ்ணுபுரம் வட்டம் சார்ந்து உலகமெங்கும் கண்டடைய, திரட்ட  முடிந்திருக்கிறது என்பதை என் பெருமிதங்களில் ஒன்றாக நினைக்கிறேன். அவர்களின் புரவலர் அல்ல நான். அவர்களுக்காக எதையுமே செய்வதில்லை. அவர்களுடன் விவாதித்துக்கொண்டே இருக்கிறேன், எல்லா கருத்துநிலைச் செயல்பாட்டாளர்களிடமும் விவாதிப்பது போல.  இன்று இந்த பெண்கள் அறிவியக்கத்தில், சேவைத்தளத்தில் ஆற்றும் சாதனையை, இனி ஆற்றவிருப்பதை எளிதில் எவரும் செய்துவிட முடியாது. தமிழ் விக்கி தளமே அவர்களின் பங்களிப்பால் நிலைகொள்வதுதான்.

ஒரு பெண் என்னிடம் சொன்னது இது. திரும்பத் திரும்ப ‘நீ பெண்’ என நினைவுறுத்திக்கொண்டே இருக்கும் சூழல் இங்கில்லை. இங்கே எவரும் பெண்களிடம் வழிவதில்லை, கரிசனம் காட்டுவதுமில்லை. இங்கே எல்லாரும் சமம்தான். ஒவ்வொருவரும் கூடுமானவரை கறாராகவே மதிப்பிடப்படுகிறார்கள். அதுவே அறிவியக்கத்தின் இயல்பான செயல்பாடாக இருக்கமுடியும். கருத்துச்சூழலில் எப்போதுமே ஒரு ‘வனநியாயம்’ உண்டு. அதில் ஆணும் பெண்ணும் வேறுபாடு இல்லை. அந்த சூழலே தகுதியானவர்கள் அனைவரும் இங்கே வந்துசேர வழிவகுக்கிறது. இன்று அம்பை அந்தரங்கமாகவேனும் இங்குள்ள பெண்களின் சாதனையை உணர்வார் என நினைக்கிறேன்.

முந்தைய கட்டுரைதூசி
அடுத்த கட்டுரைசோமலெ