கலைச்சொல், அவதூறு, கடிதம்

வெள்ளை யானை, உலகளாவிய இலக்கியப்போட்டியில் வெற்றி

அறைக்கலன் -அவதூறு

அன்புள்ள ஜெ,

இணையவெளியின் விவாதங்களை தவிர்க்க முடியாமல் பார்க்க நேரிட்டது. பெரும் சோர்வு உருவானது. பெரும்பாலான  இணையக்குறிப்புகளில் நீங்கள் அறைக்கலன் என்ற ஒரே ஒரு சொல்லைகண்டுபிடித்ததாகச் சொன்னீர்கள் என்றும் அது பொய் என்றுநிரூபித்துவிட்டார்கள்என்றும்தான் எழுதியிருந்தார்கள். அதற்கு ஆயிரம் நக்கல்கள், நையாண்டிகள். நீங்கள் என்ன சொன்னீர்கள் என்று எவருக்கும் தெரியாது. 

அந்த பேட்டியை எவரும் பார்க்கவில்லை. வெட்டி காட்டப்பட்ட 20 செகண்ட் நேர காணொளி தவிர எதையும் எவரும் பார்க்கவில்லை. எவருக்கும் நீங்கள் வெண்முரசு என ஒரு பெரும் நாவல் தொடர் எழுதியிருப்பதும், அது தூய தமிழில் அமைந்திருப்பதும், சமகால இலக்கிய வரலாற்றில் ஒரு மாபெரும் சாதனை அது என்றும் தெரியாது.

இவர்கள் இப்படி என்றால் பத்திரிகைகளின் தரம் அதைவிட கீழாக உள்ளது. இந்த இணைய வம்புகளை அவர்கள் செய்தியாக எழுதுகிறார்கள். ஒரு பத்திரிகைக் குறிப்பில்கூட வெண்முரசு என ஒரு நாவல்தொடரை நீங்கள் எழுதிய செய்தியே இல்லை.  அறைக்கலன் என்ற ஒரே ஒரு சொல்லை ஜெயமோகன் அவரே கண்டுபிடித்தார் என சொன்னார் என்றுதான் செய்தி போடுகிறார்கள் .

நான் தேடித்தேடிப் பார்த்தேன். அமெரிக்காவின் பென் அமைப்பு ஒரு சர்வதேச போட்டியில் உங்கள் நாவலை தேர்வுசெய்திருப்பது எவ்வளவு பெரிய செய்தி. தமிழுக்கே பெருமை தேடித்தந்த செய்தி. இதுவரை ஒரு தமிழ் நாவலும் அந்த போட்டியில் வென்றதில்லை. தென்னிந்தியாவிலேயே வென்ற முதல் நாவல் அது. ஏறத்தாழ முந்நூறு நாவல்கள் உலகம் முழுக்க இருந்து வெளிவந்துள்ளன. அதில்  வெள்ளையானை தேர்வாகியிருக்கிறது. ஒரே ஒரு செய்திக்குறிப்பு கூட இல்லை. இணையப்பத்திரிக்கைகள், தினமலர், தினத்தந்தி, தமிழ் ஹிந்து எதிலும் ஒரு சிறு குறிப்புகூட இல்லை. 

அறைக்கலன் பற்றி நீங்கள் சொல்லாததை திரித்து அவதூறு செய்தபோது ஆளாளுக்கு கருத்து சொன்ன எந்த எழுத்தாளரும் இதைப்பற்றி ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. ஒரு சம்பிரதாய வாழ்த்து கூட இல்லை.

இங்கே என்ன நடந்துகொண்டிருக்கிறது என்றே தெரியவில்லை. இந்த அற்பக்கூட்டத்தின் நடுவே நீங்கள் சிறுமைப்பட்டுக்கொண்டிருக்கிறீர்கள். மிகப்பெரிய சோர்வு உருவானது.

எம்.ராஜேந்திரன்

அன்புள்ள ராஜேந்திரன்,

இது எதிர்பார்க்கக்கூடியதுதான், இப்படித்தான் நூறாண்டுகளாக இங்கே நடைபெறுகிறது.

சோர்வடைய ஏதுமில்லை. இந்த புழுதியைக் கடந்து நாம் செய்வதெல்லாமே சாதனைகள். காலம் கடந்து நிலைகொள்ளவிருப்பவை இவையே. ஆறுமாதம் முன்பு தமிழ் விக்கி சார்ந்து எவ்வளவு வசைகள், அவதூறுகள் எழுந்தன. இன்று தமிழ் விக்கி எந்த இடத்திற்கு வந்துள்ளது!. இன்றைய தமிழ்ப் பண்பாட்டுத் தளத்தின் மகத்தான தொகுப்பு அது. ஒரு முறை, ஒரு பதிவை வாசிப்பவர்களுக்கே அது தெரியும். இதோ பென் பரிசு வரை நம்மிடம் உள்ளவை சாதனைகள் மட்டுமே. அவற்றை மட்டுமே நம் கணக்கில் வரலாறு பதிவுசெய்யும்.

இந்த விவாதங்களை நாம் எப்படி எதிர்கொள்ளவேண்டும்? ஒருபோதும் தகுதியற்றவர்களுக்கு பதில் சொல்லக்கூடாது.  இதையெல்லாம் வாசிப்பவர்களில் 90 சதவீதம்பேர்  எளிய அறிவுத்திறன் கொண்டவர்கள், அவர்கள் வம்புகளில் மட்டும் ஈடுபட்டு அப்படியே இளித்துவிட்டு கடந்து செல்வார்கள். எஞ்சியோர் இதில் உண்மையில் நிகழ்வதென்ன என்று உணரும் அடிப்படை அறிவும் நுண்ணுணர்வும் கொண்டவர்கள். அவர்களில் சிலர் இப்படித்தான் என்னைப்பற்றியோ விஷ்ணுபுரம் அமைப்பு பற்றியோ அறிந்துகொள்வார்கள். தேடி வந்து சேர்வார்கள். நம்மிடமுள்ள அனைவருமே இப்படி வந்தவர்கள்தான்நீங்கள் கூட.

பெரிய இலக்குகள் நம்மை இயக்கட்டும். பெருமரங்களுக்கு நெருப்பும் நன்மையையே பயக்கும்.

ஜெ

முந்தைய கட்டுரைஅறைக்கலன், வெண்முரசில் இருந்ததா?
அடுத்த கட்டுரைமத்துறு தயிர், ரமீஸ் பிலாலி