வெள்ளை யானை, உலகளாவிய இலக்கியப்போட்டியில் வெற்றி

வெளியே உறைநிலைக்கு கீழே எட்டு பாகை குளிரில் வெண்பனி பொருக்குகள் உதிர்ந்துகொண்டிருக்கையில், இரவு பதினெட்டு மணி நேரம் நீளம் கொண்டதாக இருக்கையில், ஆர்ட்டிக் வட்டத்தில் Rovaniemi எனும் ஊரில் அமர்ந்து இச்செய்தியை வாசிக்கையில் ஒரு மனநிறைவு ஏற்படுகிறது. உலகளாவிய இலக்கிய போட்டி ஒன்றில் ’பென் அமெரிக்கா’(PEN America) என்னும் அமைப்பு வெளியிடுவதற்காக தெரிவு செய்த பதினொரு நாவல்களில் பிரியம்வதா மொழிபெயர்ப்பில் ’வெள்ளை யானை’ தெரிவு செய்யப்பட்டுள்ளது. பென் வரலாற்றில் தெரிவு செய்யப்பட்ட முதல் தென்னிந்திய நாவல் இதுவே.

வெள்ளை யானை முழுமையாக மொழிபெயர்க்கப்படவில்லை. அதன் சுருக்கமும் முதல் இரு அத்தியாயங்களும் மட்டுமே மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவற்றின் அடிப்படையிலேயே இத்தெரிவு நடந்துள்ளது. முதலிரு அத்தியாயங்களிலேயே அதன் இலக்கியத்தரமும் மொழியின் கூர்மையும் அவர்களுக்கு புலப்பட்டிருக்கின்றன. நாவல் அவர்களாலேயே வெளியிடப்படும். உலகளாவிய வாசகர்களுக்கு கொண்டு செல்லப்படும். மிக விரைவிலேயே ஒரு இந்திய – அமெரிக்க தயாரிப்பு திரைப்படமாகவும் இந்நாவல் வெளிவர உள்ளது பேச்சு வார்த்தைகள் நிகழ்ந்துகொண்டுள்ளன.

என்னுடைய படைப்புகள் தொடர்ச்சியாக உலக வாசகர்களை சென்றடைய தொடங்கியுள்ளன. இன்னும் ஐந்தாண்டுகளில் பெரும்பாலும் முக்கியமான எல்லாப்படைப்புகளும் ஆங்கிலத்தில் உலக வாசகர்களுக்காக கிடைக்கத் தொடங்கிவிடும். பாதி வேடிக்கையாகவும் பாதி நம்பிக்கையுடனும் நான் எப்போதும் சொல்லும் ஒரு வரி உண்டு. என்னுடைய படைப்புகளை ஒருவர் நல்ல ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் அதை உலகின் எந்த இலக்கியப் போட்டிக்கும் அனுப்பலாம், எந்த பதிப்பகத்துக்கும் அனுப்பலாம். ஒருபோதும் அவை நிராகரிக்கப்படாது. ஏனெனில் இன்று எனக்கு நிகராக எழுதிக்கொண்டிருப்பவர்கள் உலக அளவிலேயே மிக மிக குறைவானவர்கள். அடிப்படை இலக்கிய பயிற்சி கொண்ட எவருக்கும் ஓரிரு அத்தியாயங்களிலேயே அவற்றின் தரம் புரிந்துவிடும்.

ப்ரியம்வதாவின் மொழி பெயர்ப்பு அழகியது, நவீனத்தன்மை கொண்டது. மிக இயல்பாக என்னுடைய படைப்புகளின் அழகை ஆங்கிலத்திற்கு கடத்துகிறது. ஓர் இணை ஆசிரியராகவே அவர் எனக்கு செயல்படுகிறார். தொடர்ந்து குமரித்துறைவி ஏழாம் உலகம் ஆகியவை ஆங்கிலத்தில் வெளிவர உள்ளன. இவற்றை தனிப்பட்ட வெற்றியாக நான் கருதவில்லை. மாறாக தமிழ் இலக்கியத்திற்கு ஓர் உலகளாவிய அங்கீகாரமாகவே கருதுகிறேன். ஏனெனில் இங்கிருந்து படைப்புகள் இங்குள்ள அரசியல் செயல்பட்டாளர்களாலோ சமூக சேவையாளர்களாலோ மொழிபெயர்க்கப்படுகின்றன. அவர்களுக்கு இலக்கியத்தரம் என்பது புரிவதில்லை. உகந்த கருத்துகள் என்பதையே அவர்கள் இலக்கியத்துக்கான அளவுகோல்களாகக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே எளிமையான சமூகசீர்திருத்த, முற்போக்கு கருத்து கொண்ட நாவல்களே இங்கிருந்து சென்றிருக்கின்றன. இவை மட்டுமே இங்குள்ளன என்ற எண்ணமும் உலகளாவ உள்ளது. அவ்வெண்ணம் மாற இந்த மொழியாக்கங்களால் இயலலாம். தமிழ் நவீன இலக்கியம் மீது மேலும் கவனம் விழலாம் .

https://pen.org/literary-awards/grants-fellowships/announcing-the-2023-pen-america-literary-grant-winners/

வெள்ளை யானை – வம்சி

முந்தைய கட்டுரைஎன்றுமுள்ள கனவுகளில் இருந்து…
அடுத்த கட்டுரைதங்கப்புத்தகம், கடிதம்