அறைக்கலன் -அவதூறு

கலைச்சொல்

பேட்டியில் மறைந்து போன சொற்களை மீண்டும் கொண்டு வந்தேன் என சொன்ன பின்தான் அறைகலன் பற்றிக்கூறி இருக்கிறீர்கள். இந்த சொல்லை நீங்கள் உருவாக்கியதாகக் கூறவில்லை. இது நினைவுப் பிழை அல்ல ஒப்புக் கொள்ளல் பிழை. மிதமிஞ்சிய சமூக ஊடக உலாவிகளின் காய்ச்சல் உங்களுக்கும் தொற்றி விட்டது.

கிருஷ்ணன் ஈரோடு

*

நண்பர் கிருஷ்ணன் இந்த மின்னஞ்சலை அனுப்பியிருந்தார் நான் இப்போது பின்லாந்தில் Rovaniemi என்ற ஊரில் உறைநிலைக்கு கீழே 11 பாகை குளிர் சூழ இருக்கிறேன். மின்னஞ்சல்களைப் பார்க்க நேரமில்லை. அருஞ்சொல் பேட்டியை முழுசாக பார்க்க முடியவில்லை. அது நேர் உரையாடலாக தன்னியல்பாக நடந்தது. பேசிய விஷயங்கள் எனக்கு சரியாக நினைவிலும் இல்லை. ஆகவே வாட்ஸப்பிலும் மின்னஞ்சலிலுமாக நான் அறைக்கலன் என்ற வார்த்தையை உருவாக்கியதாக அப்பேட்டியில் நானே சொல்லியிருப்பதாக பலர் சொன்னபோது இருக்கலாம் என்று நானும் நினைத்தேன்.

கிருஷ்ணன் சொல்வது போல அது நினைவுப்பிழை அல்ல, ஏற்பு பிழை. இப்போது அந்தப் பேட்டியைப் பார்த்தால் அதில் நான் அச்சொல்லை உருவாக்கியதாக எங்குமே சொல்லவில்லை. மாறாக சீவகசிந்தாமணியிலிருந்து ‘ஊழ்கம்’ என்ற சொல்லையும் பழைய மரபிலிருந்து ‘அறைக்கலன்’ என்ற சொல்லையும் எடுத்து பயன்படுத்தியிருப்பதாகத்தான் அந்தப்பேட்டியில் சொல்லியிருக்கிறேன். மரபிலிருந்த சொல்லை மறுபடியும் புழக்கத்திற்கு கொண்டுவந்ததற்கு உதாரணமாக அச்சொற்களை சொல்லியிருக்கிறேனே ஒழிய அதை நான் உருவாக்கியதாக கூறவில்லை.

அப்படி என்றால் ஏன் முந்தைய குறிப்பில் அதை சொன்னேன். உண்மையில் சமூக வலைதளங்களில் உலவும் நாலைந்து நண்பர்கள், அதாவது என்மேல் நல்லெண்ணம் கொண்டவர்கள், எனக்கு மின்னஞ்சல் வழியாக அதை தெரிவித்தார்கள். நான் ஏன் அப்படி சொன்னேன் என்று கேட்டார்கள். ஆகவே ஒரு அவசர விளக்கமாக அதை எழுதினேன். இப்போது அந்த நண்பர்களை மின்னஞ்சலில் தொடர்புகொண்டு “நான் அப்படி சொல்லவே இல்லையே நீங்கள் எதை நம்பி என்னிடம் அப்படி கேட்டீர்கள்? நீங்கள் அந்தப்பேட்டியை முழுக்க பார்த்தீர்களா?” என்று கேட்டேன். அவர்களும் அந்தப்பேட்டியை முழுக்க பார்க்கவில்லை என்றார்கள். அவர்கள் அனைவருமே பெருமாள் முருகன் என்ற ஒரு நபர் மட்டுமே நம்பகத்தன்மை கொண்டவர், அவர் சொன்னதனால் நான் சொல்லியிருப்பேன் என்று நம்பியிருக்கிறார்கள். மற்ற திமுக அல்லக்கைகளை அவர்கள் பொருட்படுத்தவில்லை.

நான் சொன்னேன்…

“அண்மையில் மிக நம்பத்தகாதவராகவும், காழ்ப்புகள் மட்டுமே கொண்டவராகவும் மாறியிருப்பவர் பெருமாள் முருகன்தான் இன்று மனுஷ்யபுத்திரனுக்கு இருக்கும் நம்பகத்தன்மை கூட பெருமாள் முருகனுக்கு கிடையாது. அப்படிப்பட்ட ஒரு நபர் கூறியதை ஒட்டி எப்படி நீங்கள் இதை என்னிடம் கேட்கலாம்? ஓராண்டுக்கு இனிமேல் நாம் நண்பர்களாக இல்லாமல் இருப்போம். உங்கள் நம்பகத்தன்மையை நிரூபித்தபின் நாம் நண்பர்களாக இருப்போம்” என்றேன். அதன்பின் அவர்கள் மீண்டும் வருந்தி கடிதமிட்டார்கள். எப்போதுமே முதல்கட்ட சீற்றத்திற்கு பிறகு நண்பர்களிடம் இசைந்துவிடுவது எனது வழக்கம். சரிதான் விட்டுவிடுவோம். யாரோ எதையுமே படிக்கவோ எழுதவோ சிந்திக்கவோ தெரியாத ஒரு வெற்று அரசியல் கூட்டம் உருவாக்கும் ஓசைகள். அதற்காக நாம் நட்பை இழக்க வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் நண்பர்கள் அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்கவேண்டும்.

சமூக ஊடக வெளியில் கூச்சலிட்டுக்கொண்டிருக்கும் இந்த கும்பல் தன்னிச்சையாக கூடியதல்ல. இது ஓர் அரசியல் இயக்கத்தின் ஊடக அணி. எழுத்தாளர்களின் மேல் கட்சிகளின் ஊடக அணிகள் நடத்தும் இந்த அவதூறுத் தாக்குதல் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. வாசகர்கள் அதைப்பற்றி சற்று விழிப்புடன் இருக்க வேண்டியிருக்கிறது.

எண்ணிப்பாருங்கள், வெண்முரசு போன்று ஒரு பிரம்ம்மாண்டமான ஒரு படைப்பு இங்கே நிகழ்ந்திருக்கிறது. அது நிறைவுற்றபோது தமிழில் எந்த சமூக வலைதளம், எந்த இணைய ஊடகம் அதைப்பற்றி ஒரு வரி செய்தியாவது போட்டது? ஆனால் இவர்கள் உருவாக்கும் இந்த முற்றிலும் அடிப்படைகள் அற்ற அவதூறுக்கு பத்துக்கும் மேற்பட்ட இணைய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. தினமலர் நாளிதழ் உட்பட இச்செய்தியை வெளியிட்டிருக்கிறது. எங்கு வரை கொண்டு சேர்க்க இவர்களால் இயல்கிறது! இந்த அவதூறை அவர்கள் சில லட்சம் பேரிடம் கொண்டு சேர்த்திருப்பார்கள். அவர்களிடம் பதில் சொல்ல நமக்கு ஊடகம் இல்லை. ஆனால் குறைந்தபட்சம் நாமாவது இதை தெளிவுபடுத்தியிருக்கவேண்டும். நமக்கு நாமேயாவது நிதானத்துடனும் தெளிவுடனும் இருந்தாகவேண்டும்.

வெண்முரசு நூல் ஒன்று – முதற்கனல் செம்பதிப்பு

வெண்முரசு நூல் எட்டு – காண்டீபம் செம்பதிப்பு

வெண்முரசு நூல் ஒன்பது – வெய்யோன் செம்பதிப்பு

வெண்முரசு நூல் பத்து – பன்னிரு படைக்களம் செம்பதிப்பு

வெண்முரசு நூல் பதினொன்று – சொல்வளர்காடு செம்பதிப்பு

வெண்முரசு நூல் பன்னிரண்டு – கிராதம் செம்பதிப்பு

வெண்முரசு நூல் பதின்மூன்று – மாமலர் செம்பதிப்பு

வெண்முரசு நூல் பதினான்கு – நீர்க்கோலம் செம்பதிப்பு

வெண்முரசு நூல் இருபது – கார்கடல் செம்பதிப்பு

வெண்முரசு நூல் இருபத்து மூன்று – நீர்ச்சுடர் செம்பதிப்பு

வெண்முரசு நூல் இருபத்து நான்கு – களிற்றியானை நிரை செம்பதிப்பு

வெண்முரசு நூல் இருபத்தைந்து – கல்பொருசிறுநுரை செம்பதிப்பு

வெண்முரசு நூல் இருபத்தாறு – முதலாவிண் செம்பதிப்பு

முந்தைய கட்டுரைஇலக்கியமும் நவீன இலக்கியமும்
அடுத்த கட்டுரைசோழர் பாசனம் – கடிதம்