பின் தொடரும் நிழலின் குரல் வாங்க
பின்தொடரும் நிழலின் குரல் மின்னூல் வாங்க
அன்புள்ள ஜெ
எதற்கு இலக்கியம் படிக்கிறோம் என்ற கேள்வி அடிக்கடி வருவதுண்டு. எனக்கும் அதற்குப் பதில் சொல்லத் தெரியாமல்தான் இருந்தது. பொழுதுபோக்குக்காக வேறேதாவது செய்வதைவிட வாசிப்பது மேல், அவ்வளவுதான் நான் சொல்வது வழக்கமாக இருந்தது.
ஆனால் அண்மையில் பின்தொடரும் நிழலின் குரல் வாசித்து முடித்தது வேறொரு பதிலை அளித்தது. வாழ்க்கையைப் புரிந்துகொள்ளவும், வாழ்க்கையை நடத்தவும் இலக்கியம் உதவும். எல்லாருக்கும் உதவுமா என்றால் சொல்லமுடியவில்லை. ஆனால் கொஞ்சம் சிந்திக்கும் வழக்கம் உடையவர் என்றால் அவருக்கு உதவும். ஏனென்றால் சிந்திப்பவர்கள் சிக்கிக்கொள்ளும் ஏராளமான முட்கள் இங்கே உண்டு.
நான் சமூகவலைத்தளத்தில் புழங்கிய நாட்களில் கண்ட ஒன்று உண்டு. எத்தனை நட்புடன் இருந்தாலும் ஒருவருடன் நாம் அரசியல்ரீதியாக முரண்பட்டால் எதிரி ஆகிவிடுவார். சீக்கிரமே கடுமையான காழ்ப்பு உருவாகிவிடுகிறது. அப்படியானால் அதுவரை இருந்த அன்பு என்ன ஆகிறது? கொள்கையும் கோட்பாடும் அவ்வளவு பெரிய நஞ்சை உண்டு பண்ணுமா?
நானே அதேபோல அரசியல்காழ்ப்புகளில் சிக்கி பத்தாண்டுகளை செலவிட்டவன். ஒரு அர்த்தமும் இல்லை. அரசியல்வாதிகள் மிகப்பெரிய பயத்தை உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள். எங்களை நம்பு, நாங்கள் இல்லையேல் எல்லாமே அழிந்துவிடும், நாங்களே காவல் – இதைத்தான் எல்லாருமே சொல்கிறார்கள். இதை நம்பி நாம் நிரந்தரமான பதற்றத்திலும் சந்தேகத்திலும் கொதிப்பிலும் இருந்துகொண்டிருப்போம்.
அந்தச் சூழலில் நான் வாசித்தது பின்தொடரும் நிழலின் குரல். எனக்கு அது ஒரு பெரிய அனுபவம். வாழ்க்கை அனுபவத்தைவிட தீவிரமானது. அரசியல், கோட்பாடு எல்லாவற்றையும் கடந்து வாழ்க்கையின் நிதர்சனத்தைப் பார்க்க உதவியது. அந்த நிதர்சனத்தில் நின்றபடி இலட்சியவாதத்தைப் பார்க்கவும் கற்பித்தது.
நான் இதுவரை வாசித்த நூல்களில் இதைப்போல என்னை வழிநடத்தும் நூல் வேறு கிடையாது. நிறைய வாசித்தவன், கொஞ்சம் எழுதியுமிருக்கிறேன். நன்றி
எஸ்