அதிமானுடரின் தூக்கம், கடிதங்கள்

அதிமானுடரின் தூக்கம்

அன்புள்ள ஜெ

அதிமானுடரின் தூக்கம் பற்றிய கட்டுரையை வாசித்தேன். எனக்கு உங்களிடம் பிடித்த அம்சமே இதுதான். ஒருபக்கம் கடுமையான யதார்த்தவாதப் பார்வை கொண்டவர். அறிவியல், நடைமுறை இரண்டையும் முன்வைப்பவர். அவற்றின்மேல் நின்றபடி ஒரு பெரிய இலட்சியவாதத்தையும் சலிக்காமல் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். அந்த இலட்சியவாதத்தை ஒரு வெற்றுப்பேச்சாக இல்லாமல் நடைமுறையாகவே சொல்கிறீர்கள்.

கரு. சிதம்பரம்

***

அன்பு ஜெ

இத்தலைப்பை அதிமானுடரின் துக்கம் என்று முதலில் வாசித்தேன். அதுவும் சரிதானே. டெஸ்லா நீட்ச்சே வின் வாழ்க்கை எத்தனை துயர் மிக்கது என நாம் அறிவோம். குறிப்பாக இவ்விருவரின் இறுதி காலங்கள்.

இன்றைய மருத்துவ கூறுகள் மூலம் பார்த்தால் இருவரும் நரம்பியல் பிரச்சனை கொண்டவர்களே. டெஸ்லாவின் சுயசரிதையில் தன் சிறுவயது முதலே பல காட்சிகள் அவர் கண் முன் தன்னிச்சையாக விரியும் என குறிப்பிட்டுள்ளார். அவர் வளர வளர அக்காட்சிகளும் வளர்ந்தன. ஒரு கட்டத்தில் அவரால் ஒரு முழு நகரத்தையும் கண் முன்னாள் விரித்தெடுக்க முடிந்திருக்கிறது என எழுதுகிறார். அவரின் பல கண்டுபிடிப்புகளுக்கான வடிவமைப்பை பேப்பரில் செய்யவில்லை கண் முன்னே கண்டிருக்கிறார். நவீன மருத்துவம் இதை அதிமானுடம் என சொல்லாது மூளையின் அசாதாரண ரசாயன மாற்றத்தால் ஏற்படும் உருவெளித்தோற்றம் என்றே கூறும்.

இவர்களின் வாழ்க்கை என இன்று எஞ்சியிருப்பது இவர்களின் வெற்றிகள் மற்றும் ‘tortured artist’ என்ற என்றும் ஈர்ப்பு கொண்ட படிமத்தினால். இரவு வானை வெட்டி செல்லும் மின்னலென இன்று அவர்கள் வரலாற்றில் ஒரு கணமென இருக்கிறார்கள். மின்னலின் அக்கணத்திற்கு முன்னும் பின்னும் இருளே.

எனினும் காலம் தோறும் மானுடன் அடைந்து விரித்து விரித்து வாழ நினைப்பது அந்த ஒரு கணத்தில் தானே. ஒரு கணமேனும் அதிமானுடன் என உணரத்தானே மானுடனின் விழைவு. அவ்விழைவு இல்லையேல் மானுட வாழ்வின் அர்த்தம்தான் என்ன.

அருவ ஓவியக்கலையின் முன்னோடிகளில் ஒருவரான கண்டின்ஸ்க்கி தன் ஓவியங்களில் கையொப்பமாகயிட்டது மேல்நோக்கிய ஒரு முக்கோணம். அது குறிப்பது என்றென்றும் மேலே மேலே என விழையும் மானிட அறிவை. சுடரென ஒளிரும் அவ்வறிவு ப்ரோமீத்தியஸ் நமக்களித்த தீ அல்லவா. அத்தீ சுடர்விட்டு மேல்நோக்கியே பரந்தெழும். ஒரு கணத்தில் எம்பி காலமின்மையை தொட்டுவிடப்பார்க்கும்.

பலஇரவுகள் கடந்து மறையும். ஒரு கணத்தில் வெட்டி சென்ற மின்னல் ஒளி நினைவில் என்றும் இருக்கும்.

ஸ்ரீராம்

***

முந்தைய கட்டுரைஆயிரம் ஊற்றுக்களின் அழகியல்-கடிதம்
அடுத்த கட்டுரைவெள்ளையானை,சர்வதேசப்பரிசு, பிரியம்வதா