நீல பத்மநாபன், கடிதம்

நீல பத்மநாபன்

அன்பு ஜெ,

வணக்கம்.நலம் விழைகிறேன்.

அதிகாலையில் மழைபெய்கிறது. மூன்று மாதங்களாக இப்படிதான். பெரும்பாலும் காலையில் எழுந்ததும் மதியம் சாயுங்காலம் என்று மழை இயல்பாகிவிட்டது. மழையின் சலசலப்பிற்கு இடையே சேவல் ஒன்றின் கம்பீரமாக குரல். கிச்கிச்சென்று சிட்டு்குருவிகள். மிக சன்னமான நான் வாசிக்கும் அறையின் தலைக்கு மேல்  சன்னலில் அருகில் பால் கரக்கும் ஓசை தனித்து கேட்கிறது. [பசுவை வயலிற்கு ஓட்டிச்செல்லும் வழியில் அவசரத்திற்கு குழந்தைப்பால் கேட்டிருப்பார்கள்] பசுவின் பாலும் ஒரு வகையில் மழை தானே. உடன் எழுத்தாளர் நீல.பத்பநாபனின் விக்கிப்பக்கம்.

கல்லூரியின் இறுதிஆண்டு மற்றும் கல்லூரி முடித்த ஆண்டில் பள்ளிகொண்டபுரம்,தலைமுறைகள்,தேரோடும்வீதி மற்றும் இலையுதிர்காலம் நாவல்களை தொடர்ந்து வாசித்தேன். கல்லூரி நூலகத்தில் முதலிரண்டு நாவல்கள். ஊர்நூலகத்திலிருந்து எடுத்த அடுத்த இரண்டு நாவல்கள். தேரோடும் வீதி நாவலை மட்டும் மறுபடி மறுபடி என்ட்ரி போட்டு மிக மெதுவாக வாசித்தேன். அம்மாச்சி ஊரின் சிறு நூலகத்திலிருந்து எடுத்தேன். அம்மாச்சியுடன் இருமாதங்கள் தங்கயிருக்க வேண்டியிருந்தது. வயல்காட்டில் தனித்த வீடு. அந்த ஊருக்கு முதலாக நிற்கும் நூலகத்தில் இருபது ரூபாய் அளித்து நூலகஅட்டை வாங்கிக்கொண்டேன். தேரோடும் வீதி அதன் தன்மையால் நம்மையும் மிக மெல்ல வாசிக்க வைத்துவிடும். இது ஒரு மாயம் தான். ஆனால் எனக்கு அந்த காலகட்டத்தில் அந்த நிதானமான சலிப்பும் நீண்ட யாதார்த்தள வாசிப்பும் தேவையாக இருந்தது.

எனக்கு பள்ளிகொண்டபுரம் மிகவும் பிடித்தநாவல். அதன் மொழிநடை வசீகரிப்பது. திருவனந்தபுரம் ஒரு கனவு போல விரியும்.

இந்த நான்கு நாவல்களின் தொடர்ந்த வாசிப்பு அவற்றுடன் இருந்த ஒரு ஆண்டும் மிக நிதானமான ஆளாக மாறினேன். தலைமுறைகள் _இரணியல் ஆசிரிய இளைஞனின் வாழ்வு,பள்ளிகொண்டபுரம்_ நொய்மையான உடல் மனம் கொண்ட கணவனின் ,தந்தையின் வாழ்வு,தேரோடும் வீதி_ ஒரு எழுத்தாளன் பொறியாளனின் நீண்ட வாழ்வு,இலையுதிர் காலம்_ முதியவர்களின் வாழ்க்கை .அந்த வயதில் அதிர்ச்சி தந்த நாவல். சொல்லப்போனால் முதுமையை அந்தரங்கமாக உணர்ந்து புரிந்து கொண்டு அவர்களை அணுக ,நேசிக்க அவர்களும் குழந்தைகள் என அந்த வயதில் உணர உதவியது. நான் அம்மாச்சியுடன் நெருக்கமான நாட்கள் அவை. அடுத்த பத்து ஆண்டுகள் எங்களுக்குள் ஒருவித ‘ப்ரியநட்பு’ இருந்ததற்கு இந்த நாவல் ஏதோ ஒரு காரணம் என்று நினைக்கிறேன். மிகச் சிறிய நாவல். நம் மனதை எங்கேயோ சூட்சுமமாக மாற்றிப்போடும். எல்லாம் எதார்த்தம் என்று காட்டும். முதியவர்களின் சிக்கல்களை கண்டு முகம் சுழிக்க வைக்காது. அதை புரிந்து கொள்ள முயற்சி செய்வோம். பள்ளிகொண்டபுரமும் அப்படித்தான்.

ஒரு வகையில் மத்தியதர ஆண்களை புரிந்து கொள்ள உதவியது. நம் மனதில் கல்லூரி காலகட்டத்தில் உள்ள நாயக பிம்பத்திற்கு மாற்றான அசல் மனிதர்கள். இந்த அசல் மனிதர்களை நேசிக்க அவர்களின் இயலாமையை ரசிக்கவும் ,அப்படித்தான் என்று ஏற்றுக்கொள்ள முடியும்.

இதை எல்லாம் கடந்து யாதார்த்தவாத நாவல்கள் என்றாலும் அதன் ‘மலையாள டச்’ உடைய மொழி கவித்துவமானது. அந்த கவித்துவம் ஒரு வாசகியாக என்னை மலர வைத்துகொண்டே இருந்தது.

ஒரு எழுத்தாளரின் பல்வேறு காலகட்டத்தில் எழுதப்பட்ட நான்கு நாவல்களை தொடர்ந்து வாசிக்க கிடைத்ததும், அந்த வயதில் வாசித்ததும் எனக்கான ஆசி என்றே இப்போதும் தோன்றுகிறது. மழை இன்னும் நிற்கவில்லை. தொடர் மழைக்கான முதல் குடை அவரின் எழுத்துக்கள் என்று தோன்றுகிறது.

அன்புடன்,

கமலதேவி.

முந்தைய கட்டுரைநூறுநாற்காலிகள், கடிதம்
அடுத்த கட்டுரைநான்காம் தமிழ்ச்சங்கம்