தமிழ்விரோதிகளின் பட்டியலில் ஓர் இடம்

கருப்பங்கிளர் சு.அ.ராமசாமிப் புலவர்

அன்புள்ள ஜெ

தமிழ்விக்கி பக்கங்களை படிப்பதுதான் இன்றைக்கு என்னுடைய முக்கியமான வாசிப்பு. இதற்குள் அந்த ஃபார்மேட் பழகிப்போய் சரளமாக வாசிக்க முடிகிறது. அதிகமும் பழந்தமிழ் அறிஞர்களைத்தான் வாசிக்கிறேன். அவ்வாறு வாசிக்கையில்தான் பல விஷயங்கள் திகைப்பூட்டுகின்றன. கருப்பங்கிளர் ராமசாமிப் புலவர் எவ்வளவு பெரிய அரும்பணி ஆற்றியிருக்கிறார். அவருடைய வரிசை இல்லாவிட்டால் பல தமிழறிஞர்கள் காணாமலேயே போயிருப்பார்கள். வறுமையில் இருந்தபடி அந்தப்பணியைச் செய்திருக்கிறார். தமிழ் தமிழ் என்று பேசும் கூட்டம் அவர் பெயரை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நீங்கள்தான் தமிழ் விக்கி வழியாக வரலாற்றில் அவரை நிறுத்துகிறீர்கள்.

ஆனால் இணையத்தில் எங்கே பார்த்தாலும் தமிழர் விரோதி, தமிழரை இழிவுசெய்கிறவர் என்று உங்களைப் பற்றி எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். கொஞ்சம் பொருட்படுத்தியபடி எழுதிய எழுத்தாளர்கள்கூட இந்த அற்பத்தனத்தையே செய்துகொண்டிருக்கிறார்கள். அது தினமும் கண்ணுக்குப் படும்போது ஆயாசமாக இருக்கிறது. அதை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

ரா. முருகானந்தம்

 

அன்புள்ள முருகானந்தம்,

அபிதான சிந்தாமணியை தொகுத்த ஆ.சிங்காரவேலு முதலியார், அகராதி உருவாக்கிய எஸ்.வையாபுரிப் பிள்ளை, கலைக்களஞ்சியம் எழுதிய பெரியசாமி தூரன் எல்லாம் எப்படி எதிர்கொள்ளப்பட்டனர்? வசைகள் அவமதிப்புகள் கேலி கிண்டல். தமிழர்விரோதி என்னும் பட்டம். அந்த வரிசையில் ஓர் இடமே நான் கனவுகாண்பது. அவர்களைப்போன்ற ஒரு மகத்தான தமிழ் விரோதி ஆவது.

இந்த வசைகளும் காழ்ப்பும் ஒரு பொதுமனநிலை. நமக்கு ஏதோ மனச்சிக்கல் உள்ளது. அறிவுச்செயல்பாடுகள் நமக்கு பெரிய அளவில் அச்சத்தை அளிக்கின்றன. நம் எழுத்தாளர்கள் கவிஞர்கள்கூட பெரும்பாலும் அந்த அற்ப மனநிலையில் இருப்பவர்களே. பொருட்படுத்தாமல் நம் பணியைச் செய்யவேண்டியதுதான். அதைச் செய்வதிலுள்ள இன்பமே முக்கியமானது.

ஜெ

ஆ.சிங்காரவேலு முதலியார்

எஸ்.வையாபுரிப் பிள்ளை

பெரியசாமி தூரன் 

 

முந்தைய கட்டுரைஈழத்துப் பூராடனார்
அடுத்த கட்டுரைவிரியும் கனவுகள்- விஷ்ணுபுரம் 2022