வெந்து தணிந்தது காடு, 50 நிகழ்வு

வெந்து தணிந்தது காடு ஐம்பதாவது நாள் வெற்றிக் கொண்டாட்டம் 9-11-2022 அன்று சென்னை சத்யம் சினிமா அரங்கில் மாலை 6 மணிக்கு நிகழ்கிறது. அதற்குள் இன்னொரு படம் (பொன்னியின் செல்வன்) வெளிவந்து அதுவும் மாபெரும் வெற்றியடைந்துவிட்டது. இரண்டு மாதங்களுக்குள் காலம் நெடுந்தொலைவு சென்றுவிட்டதுபோல.

இன்று நானே ஒரு சாதாரணப் பார்வையாளனாக வெந்து தணிந்தது காடு படத்தை ஒடிடி தளத்தில் பார்த்தேன். எப்போதும் எடுத்த படத்தில் எடுத்தவர்களுக்கு பிழைகளும், பிசிறுகளும் கண்ணுக்குப்படும். இப்போதும்தான். ஒரு சினிமாவை எழுத்தில் இருந்து காட்சியாக ஆக்குவது பல படிகளாக நிகழ்வது. கோப்பைக்கும் வாய்க்கும் இடையே நிகழும் சமர் அது. எண்ணியதில் ஒருபகுதியே படத்தில் இருக்கும்.

ஆனால் இப்போது பார்க்கையில் எனக்கு படம் இன்னும் பிடித்திருக்கிறது. வழக்கமான சினிமாவுக்குரிய ஒரே புள்ளியை பல திருப்பங்களுடன் வளர்த்துச் சென்று பரபரப்பான கிளைமாக்ஸில் முடியும் கதையோட்டம் கொண்டது அல்ல. நாவல் போல பல புள்ளிகளை தொட்டுச் செல்கிறது. ஆகவே ஒற்றைப்படையான அதிவேகம் இல்லை. அதேசமயம் தொடர்ச்சியாக ஓடும் ஒரு வாழ்க்கைச் சித்திரம் உள்ளது. படிப்படியாக விரிகிறது. இதன் கிளைமாக்ஸ் ’தெரியாது’ என்னும் ஒற்றைச் சொல்தான். அது முத்துவின் விதி அவனில் உருவாக்கிய மாற்றத்தைச் சொல்லிவிடுகிறது.

பொதுவாக இன்று சினிமா பார்ப்பது என்பது பலவகையான மனநிலைகளில் நிகழ்கிறது. நாம் எந்தவகை சினிமாவுக்கு தயாராக இருந்தோம் என்பது சினிமா பார்ப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. நாம் படத்துடன் கூடவே ஒரு கதையை நாமும் உருவாக்கிக் கொண்டே செல்கிறோம். அதைக்கொண்டே சினிமாவை புரிந்துகொள்கிறோம். நாம் ஒரு படத்தை எதிர்பார்ப்பதில், நம் கதையை உருவாக்குவதில் அந்த சினிமா பற்றிய பேச்சுக்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. அத்துடன் பலவகையான கோபங்கள், கசப்புகளும் சேர்ந்துகொள்கின்றன. பெரும்பாலும் படங்களை கவனமில்லாமலேயே பார்க்கிறோம்.

ஆனால் கொஞ்சம் பிந்தி ஒரு படத்தைப் பார்க்கையில் அதன் மீதான நம் எதிர்பார்ப்புகள் இல்லாமலாகி எளிய மனநிலைக்கு வந்துவிடுகிறோம். அப்போது எந்தப் படமும் அதன் சரியான முகத்தை காட்டும். இப்போது படம் பார்த்துவிட்டு எழுதுபவர்கள் ஆரம்பத்தில் எழுதியவர்களைவிட மேம்பட்ட புரிதலுடன் இருப்பது அப்படித்தான். ஆரம்பத்தில் படத்தை பிழையாகப் புரிந்துகொண்டவர்களெல்லாம் நிறையப் படம் பார்த்து சட்டென்று படம் பற்றி முடிவுக்கு வந்துவிடுபவர்கள்.

இன்று பார்ப்பவர்கள் இது ‘கேங்ஸ்டர்’ படம் அல்ல என புரிந்துகொள்ள முடியும். வெறிகொண்ட பழிவாங்குதல் மற்றும் சாகசங்களின் கதை அல்ல. வன்முறை இதில் ஒரு பெருந்துன்பமாகவே சொல்லப்பட்டுள்ளது. ஒரு களியாட்டமாக அல்ல. பெரும்பாலும் உண்மையான நிழல் உலகின் கதை. ஒரு துப்பாக்கியே பெரிய விஷயமாக இருக்கும் அடித்தள நிழல் உலகின் சித்திரம். அங்கிருப்பவர்களுக்கு உண்மையில் தலைக்குமேலே என்ன நடக்கிறதென்றே தெரியாது. ஆகவே அதெல்லாம் கதையிலும் இல்லை.

அந்த உலகில் மாட்டிக்கொள்ளும் ஒருவனின் கதை. அதிலிருந்து வெளியேறத் துடிப்பவன். வெளியேற முயற்சி செய்யும் போதெல்லாம் மேலும் மாட்டிக்கொள்கிறான். அந்த விதி இரண்டுபேரை இரண்டு பக்கமாகக் கொண்டுசெல்கிறது. ஒருவனை கொலைகாரனாக்குகிறது. இன்னொருவனை வேறொருவனாக்குகிறது. அந்த விதி அவர்களுக்கு உள்ளேயே, அவர்களின் தனிக் குணமாகவே உள்ளது. அவர்கள் அதைத்தான் செய்திருக்க முடியும்.

ஒரு கமர்ஷியல் சினிமாவின் டெம்ப்ளேட்டுக்குள் நிற்கும், ஆனால் கமர்ஷியல் சினிமாவில் சாதாரணமாக எழுதப்படாத பல தருணங்களைக் கொண்ட படம் இது. அதை தொடர்ச்சியாகப் பல்லாயிரம் பேர் உள்வாங்கி ரசிப்பது நிறைவளிக்கிறது. ஒருநாளுக்கு சராசரியாக இருபது கடிதங்கள் இன்றும் வந்துகொண்டிருக்கின்றன.

இந்த வெள்ளிவிழாவில் அது நிறைவூட்டும் ஓர் அனுபவம்.

முந்தைய கட்டுரைஅதிமானுடரின் தூக்கம்
அடுத்த கட்டுரைவெண்முரசின் நாகங்கள்