தெளிவத்தை ஜோசப் – விக்கி
அன்பின் ஜெ,
நலம்தானே?
இன்று (நவம்பர் 6, ஞாயிறு) தமிழ் மொழிச் செயற்பாட்டகம் (ACTL – Activity Centre for Tamil Language) ஏற்பாடு செய்திருந்த தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கான நினைவேந்தல் இணைய நிகழ்வில் கலந்து கொள்ளும் பேறு கிடைத்தது. நிகழ்வு பற்றிய தகவலை நண்பர் சாண் தவராஜா மும்பை இலக்கியக்கூடத்தின் வாட்ஸப் குழுவில் பகிர்ந்திருந்தார். நிகழ்வு சிறப்பாய் அமைந்தது.
நிகழ்வை மஹ்ரூஃப் ஃபவ்சர் ஒருங்கிணைத்தார். ஜோசப் எனும் பேராளுமையை நன்கறிந்த, அவருடன் கலந்து பழகிய, நெருக்கமான நண்பர்கள் – ஆசிரியர், எழுத்தாளர் கந்தப்பொல தாமரை யோகா, எழுத்தாளர் பிரமிளா பிரதீபன் (“விரும்பித் தொலையுமொரு காடு” – யாவரும் பதிப்பகம்), எம். சிவலிங்கம், கனடாவிலிருந்து செல்வம் அருளானந்தம் ஆகியோர் அவ்வன்பாளுமையுடனான தங்கள் நினைவுகளை நெகிழ்வுடன் பகிர்ந்து கொண்டார்கள். ஜோசப்பின் முதல் தொகுப்பு (“நாமிருக்கும் நாடே”) கொண்டுவந்த வைகறை நித்யானந்தன் முத்தையா ஜோசப் ஐயாவின் படைப்புகள் குறித்தும், சார்ந்து முன்னெடுக்க வேண்டிய சில பணிகள் குறித்தும் உரை நிகழ்த்தினார். தஞ்சைத் தமிழ் பல்கலையில் தெளிவத்தை ஜோசப் அவர்களின் படைப்புகளை முன்வைத்து முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டிருக்கும் இலக்கியா நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்.
ஜோசப்பின் கணக்காளர் பணி நாட்களின் சில அனுபவங்களையும், ஜோசப்பின் எழுத்துகளால் அவர் பணிபுரிந்த தோட்டத்தில், மேலிருந்து உண்டான அச்சுறுத்தலையும், ஜோசப் எழுதிய “புதிய காற்று” ஈழத் தமிழ் திரைப்படத்தில் (1975) ஜோசப் தனக்குத் தந்த “மாயாண்டி” கதாபாத்திரத்தைப் பற்றியும் பகிர்ந்துகொண்டார் சிவலிங்கம். ஜோசப் தன் எழுத்தாளத் தோழமைகளுக்கு எழுதித்தந்த அணிந்துரைகளை மட்டுமே இணைத்து ஒரு தொகுப்பாகக் கொண்டுவரலாமென்றார். மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் துவக்கத்தையும், அதன் செயல்பாடுகளையும் சுருக்கமாகக் குறிப்பிட்ட அவர் வீரகேசரியும் அம்மன்றமும் இணைந்து அறுபதுகளில் நடத்திய நான்கு சிறுகதைப் போட்டிகள் பற்றியும் முதல் போட்டியில் முதல் பரிசு பெற்ற ஜோசப் (“பாட்டி சொன்ன கதை”; அடுத்த போட்டியிலும் அவர்தான் முதல் பரிசு “பழம் விழுந்தது” சிறுகதைக்கு) பின்பு அப்போட்டிகளின் நடுவரானதையும் சுவாரஸ்யத்துடன் உரையில் தெரிவித்தார். துறவி விஸ்வநாதன் மூலமாக ஜோசப் கொண்டுவந்த 35 மலையகச் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு பற்றியும், ஜோசப்பின் “மலையகச் சிறுகதை வரலாறு” நூலின் முக்கியத்துவத்தையும், இலங்கையின் பல பிரதேச் எழுத்தாளர்களின் 55 சிறுகதைகள் கொண்ட “உழைக்கப் பிறந்தவர்கள்” தொகுப்பைப் பற்றியும் எடுத்துரைத்தார்.
பிரமிளாவின் பேச்சும், அருளானந்தம் அவர்களின் உரையும் உணர்வுமயமானதாய் இருந்தது.
பதினைந்து/பதினேழு எழுத்தாளர்களைக் கூட்டி வந்து திண்டுக்கல் காந்தி கிராமப் பல்கலையிலும், மதுரை தமிழ்ச்சங்கத்திலும் மலையக இலக்கிய விழாக்கள் நடத்தியிருக்கிறார் ஜோசப். வரும் 2023 ஜனவரியில் கூட தஞ்சைத் தமிழ்ப் பல்கலையில் “மலையகம் 200” என்ற தலைப்பில் ஒரு இலக்கிய விழாவை திட்டமிட்டிருந்திருக்கிறார் (தன் 87-ம் வயதில்). ஆனால் அதற்குள் அச்சுடர் அணைந்தது.
இந்நினைவேந்தல் நிகழ்வு மனதுக்கு நிறைவாய் இருந்தது ஜெ. தெளிவத்தை தோட்டத்து ஜோசப்பின் அன்பை, ஆளுமையை இன்னும் அண்மையில் நெருங்கமுடிந்தது. நிகழ்ச்சி ஏற்பாடு செய்த நண்பர்களுக்கும், உரை நிகழ்த்திய ஆளுமைகளுக்கும் நன்றியும் அன்பும்.
வெங்கி