ரத்தசாட்சி

வெந்து தணிந்தது காடு, அதற்குப் பின் பொன்னியின் செல்வன். பொன்னியின் செல்வன் அலை இன்னும் அடங்கவில்லை. அதற்குள் இன்னொரு படம்.

இதன் மூலக்கதை மட்டும்தான் நான். கமல்ஹாசனின் நண்பரும் ராஜ்கமல் தயாரிப்புநிறுவனத்தில் ஒருவருமான மகேந்திரன், ராஜ்கமல் நிறுவனத்துடன் தொடர்புள்ள டிஸ்னி இருவரும் தயாரிக்கிறார்கள். ரஃபீக் இஸ்மாயில் இயக்குகிறார். ரத்தசாட்சி என பெயரிடப்பட்டுள்ளது.

சென்ற வாரம் டிஸ்னியும் ரஃபீக்கும் என் அறைக்கு வந்து போஸ்டர்களைக் காட்டினார்கள். நான் அதுவரை ஏதோ சிறிய படம் என நினைத்திருந்தேன். ஒரு பெரிய படத்துக்கான உழைப்பும் செலவும் செய்யப்பட்டுள்ளது இதற்கு.

ரத்தசாட்சி என்னும் கருத்துருவம் கிறிஸ்தவ மதம் சார்ந்தது. ஒரு கொள்கைக்கு தன் ரத்தத்தால் சாட்சியாதல். கிறிஸ்தவப் புனிதர்களை ரத்தசாட்சிகள் என்று சொல்வது வழக்கம். அச்சொல்லை கேரளத்தில் கம்யூனிஸ்டுகள்தான் அதிகமும் பயன்படுத்துகிறார்கள். இது ஒரு ரத்தசாட்சியின் கதை.

இக்கதைக்கு ஆதாரமான நிகழ்வுகளை 1991ல் தர்மபுரி -திருப்பத்தூர் சாலையில் ஒரு சிற்றூரில் ஒரு நாட்டார்ப்பாடகி பாடிக்கேட்டேன். ரத்தத்தால் எழுதப்பட்ட கதை அது. அந்தப் பெண்மணியின் குரலில் இருந்து நவீன இலக்கிய மொழிக்கு உருமாறி வந்தமைந்த கதை. நவீன சினிமாவாக இன்னொருவரிடம் சென்று சேர்ந்துள்ளது.

என்னைப் பற்றிய ஒற்றைவரி அறிதல் கொண்டவர்களுக்கு திகைப்பாக இருக்கும். என் கதைகளை வாசித்தவர்களுக்கு இயல்பாகவும் தெரியும். இலக்கியவாதியாக நான் என்னை ஒரு தொன்மையான குலக்கதைப் பாடகன் (bard) என்றே எண்ணிக்கொள்பவன், ஒரு சூதன், ஒரு பாணன். கதைகளுக்கு என்னை ஒப்புக்கொடுப்பதே என் வழக்கம். கதைகள் வாழ்விலிருந்து எழுகின்றன. மக்கள் மொழியில் வாழ்கின்றன. நான் அவை என் மேல் படர்ந்தேற அனுமதிக்கிறேன்.

யானை டாக்டரும், நூறு நாற்காலிகளும், கோட்டியும் அப்படிப்பட்ட கதைகளே. ஓநாயின் மூக்கும் துணையும் பலிக்கல்லும் அப்படிப்பட்ட கதைகளே. அவை என் வழியாக நிகழ்பவை. இலக்கியம் என்பது ஒரு வகை சூழ்ச்சி என நம்பும் எளிய அரசியல் உள்ளங்களுக்குப் புரியாதது இந்த உருமாற்ற நிலை. அந்த உருமாற்றம் நிகழாமல் எத்தனை கருத்தியல் தூண்டுதல் அடைந்தாலும் கலை உருவாவதில்லை. அந்த உருமாற்றத்தை நிகழ்த்திக் கொண்டவன் தன்மேல் பெருமிதம் கொண்டிருப்பான், தன்னைமீறியவற்றின்மேல் பக்தியும் கொண்டிருப்பான்.

அறம் வரிசைக் கதைகளில் ஒன்றாக எழுதிய கதை கைதிகள். முதல்வடிவில் சரியாக வரவில்லை. பின்னர் அதில் ஒரு குருவி வந்ததும் சரியாகியது. வெண்கடல் தொகுப்பில் இடம்பெற்றது.

ரஃபீக் இஸ்மாயிலுக்கும் தயாரிப்பு அணிக்கும் வாழ்த்துக்கள்.

ஜெயமோகன் நூல்கள்

வெண்கடல் வாங்க  

வெண்கடல் மின்னூல் வாங்க

முந்தைய கட்டுரைஅஞ்சலி, விழி.பா.இதயவேந்தன்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர். போகன் சங்கர்