இலக்கியத்தை அறிந்துகொள்ள…

நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் மின்னூல் வாங்க

நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் நூல் வாங்க

ஜெயமோகன் நூல்கள் வாங்க

நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் என்ற  நூலை எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்படி ஏற்பட்டது என்று எண்ணிப்பார்க்கிறேன். 1998 விஷ்ணுபுரம் வெளிவந்திருந்தது. அதன் மீதான விமர்சனங்கள்  தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. பெரும்பாலானவை அரசியல் ரீதியான எதிர்விமர்சனங்கள். 2000க்குப் பிறகு தான் உண்மையில் விஷ்ணுபுரத்திற்கு சரியான வாசக எதிர்வினைகள் வரத்தொடங்கின. உடனடியாக வாசித்து கருத்து சொல்பவர்கள் பெரும்பாலும் எதிர்மறை எண்ணங்களுடன் படிப்பவர்கள். அரசியல் ரீதியான செயலூக்கம் கொண்டவர்கள். ஒரு எதிர்க்கருத்தை உடைத்து நொறுக்கி தங்கள் கொள்கை மீதான விசுவாசத்தைக் காட்டிக்கொள்ள வேண்டுமென்ற முனைப்பு கொண்டவர்கள்.

ஆனால் ஒன்று தெரிந்தது. விஷ்ணுபுரம் சட்டென்று சிற்றிதழ் சார்ந்த இலக்கிய வட்டத்தை விட்டு வெளியே சென்றுவிட்டது. அதன் வாசகர்களாக அமைந்தவர்கள் பெரும்பாலானவர்கள் சிற்றிதழ் உருவாக்கிய நவீனத்துவம் சார்ந்த மனநிலை கொண்டவர்கள் அல்ல. அவர்களுக்கு உண்மையிலேயே பண்பாட்டுச் சிக்கல்கள், ஆன்மீக வினாக்கள் இருந்தன. அவர்களின் தலைக்குமேல் கோபுரங்கள் எழுந்து நின்றிருந்தன. அவற்றிலிருந்து தெய்வங்கள் கீழே பார்த்துக்கொண்டிருந்தன. அந்த மாபெரும் வெளியை என்ன செய்வதென்று அவர்கள் திகைத்துக்கொண்டிருந்தபோது விஷ்ணுபுரம் அவர்களுக்கு வழி காட்டியது. அவர்களைத் தங்களைத் தாங்களே மதிப்பிடவும், தங்களை விரிவாக்கிக்கொள்ளவும், கண்டடையவும் வழியமைத்துக் கொடுத்தது. நான் அந்த வாசகர்களை நோக்கி உரையாட விரும்பினேன்.

1990 முதல் தமிழிலக்கியத்தில் ஒரு திருப்புமுனை எழத்தொடங்கியிருந்தது. முதலில் ஐராவதம் மகாதேவன் ஆசிரியராக இருந்த தமிழ்மணி இதழ் இணைப்பு நவீன இலக்கியத்தை பொது வாசகர்களுக்கு அறிமுகம் செய்தது. பின்னர் கோமல் சுவாமிநாதனின் சுபமங்களா, அதன் பிறகு இந்தியா டுடே மாலன் மற்றும் வாசந்தியின் ஆசிரியத்துவத்தில் நவீன இலக்கியத்தை பரவலாக கொண்டு சென்று சேர்த்தது. ஒரு புதிய தலைமுறை வாசகர்கள் உள்ளே வந்தனர். அவர்களுக்கு நவீன இலக்கியம் பற்றி எந்த அறிமுகமும் இருக்கவில்லை. கல்கியிலிருந்து சுஜாதா வழியாக சாண்டில்யனுக்கு வந்து இலக்கியத்தை படிக்கத்தொடங்கியவர்கள். இலக்கிய மதிப்பீடுகள் பற்றி இலக்கிய வரலாறு பற்றி அவர்களுக்கு சுருக்கமாக எடுத்துச் சொல்ல விரும்பினேன்.

இன்னொரு பக்கம் அன்று உருவான வெவ்வேறு இலக்கிய அரங்குகளில் நவீன இலக்கியத்தின் மரபையோ அதன் நெறிகளையோ அறியாமல் மிக மேலோட்டமாக ஓரிரு கோட்பாட்டு நூல்களைப் படித்துவிட்டு வந்து வெறும் குழப்பங்களையே கருத்துகளாக முன்வைக்கும் சிலர் எழுந்து வந்திருந்தனர். இன்று திரும்பிப் பார்க்கையில் அவர்கள் உருவாக்கிய பாதிப்பு என்பது எதுவுமே இல்லை. அவர்கள் தங்களைத் தாங்களே தோற்கடித்து கேலிக்குரியவர்களாக்கி விலகிச் சென்றதைத் தவிர என்று தெரிகிறது. ஆனால் அன்று அவர்கள் ஒரு தீய விளைவை உருவாக்கிவிடக்கூடும் என்ற அச்சம் இருந்தது. ஆகவே முறையாக எது இலக்கியமோ அதை அறிமுகம் செய்யவேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது.

இலக்கிய கொள்கைகளின் அறிமுகம், இலக்கிய அழகியலின் அறிமுகம், இலக்கிய வரலாறு, இலக்கிய நூல்களின் பரிந்துரைப்பட்டியல் ஆகியவை அடங்கிய ஒரு நூலை எழுதினேன். அத்தகைய ஒரு நூல் தமிழுக்கு புதிதுமல்ல. க.நா.சுவின் ‘படித்திருக்கிறீர்களா?’ அப்படிப்பட்ட ஒன்று. சுந்தர ராமசாமி நூலாக வெளியிடவில்லை என்றாலும் உருட்டச்சு நகலெடுத்து வைத்திருந்த நூல்பட்டியல் ஒன்று சிற்றிதழ் சார்ந்த வாசகர்களிடையே புழக்கத்தில் இருந்தது. உண்மையில் இலக்கிய மதிப்பீடுகள் இந்தப்பட்டியலின் வகையாகத்தான் நிலை கொண்டிருந்தன. எவற்றை படிக்க வேண்டும், எவை முதன்மைப்படுத்தப்பட வேண்டும் என்று அந்தப் பட்டியல்கள்  கூறின. பட்டியல்கள் என்பவை வெறும் பட்டியல்கள் அல்ல. எப்போதும் அதை ஒட்டி ஒரு விவாதமும் இருக்கிறது. பட்டியல்களை விட அந்த விவாதங்கள் தான் மேலும் வழிகாட்டியாக அமைகின்றன.

நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் சுந்தர ராமசாமி உருவாக்கிய பட்டியலின் தொடர்ச்சி. வேதசகாயகுமாரின் சிறுகதை வளர்ச்சி பற்றிய நூல் அதற்கு இன்னொரு முன்னோடிப் படைப்பு. முதல் பதிப்பை காவ்யா பதிப்பகம் வெளியிட்டது. ஆனால் மிக அதிகமான பிழைகளுடன் மிக அவசரமாக அச்சிடப்பட்ட அந்த நூல் ஒரு முறை புரட்டிப் பார்த்த பின் திரும்பி எண்ணிப்பார்க்கவே கூசும் அளவுக்கு என்னைச் சோர்வில் ஆழ்த்தியது. பின்னர் தமிழினி வசந்தகுமார் அந்நூலை சிறப்பாக வெளியிட்டார். அப்போது அதை மேலும் தரவுகள் சேர்த்து விரிவாக்கினேன். உயிர்மை, கிழக்கு ஆகிய பதிப்பகங்கள் அதை வெளியிட்டிருக்கின்றன.

இந்நூலின் எல்லை என்பது 2000. அதற்குப்பின் நிகழ்ந்த இலக்கிய வளர்ச்சிகள் பற்றி இந்நூல் கூறவில்லை. உண்மையில் இந்நூலை அடுத்த இருபதாண்டுகளின் இலக்கிய வளர்ச்சியை உள்ளிட்டு விரிவாக்கியிருக்க வேண்டும். அப்படி ஓர் எண்ணம் இருந்தது. ஆனால் வெவ்வேறு வேலைகளில் சிக்கிக்கொண்டு அதை முழுமைப்படுத்த முடியாத நிலையிலிருக்கிறேன். எனினும் இன்றைய வாசகர்களுக்கு தமிழில் இதுவரை என்ன நடந்துள்ளது என்பது பற்றிய ஒரு புரிதலாக இந்நூல் பங்களிப்பாற்றும் என்று தோன்றுகிறது. நவீன இலக்கியத்தில் இதுகாறும் உருவாகிவந்த வாசிப்பு முறை மற்றும் இலக்கிய நம்பிக்கைகள் பற்றிய ஒரு புரிதலையும் இது அளிக்கும். வரும் ஆண்டுகளில் இதை மேலும் முழுமைசெய்யவேண்டும் என்னும் எண்ணம் என்னுள் உள்ளது.

சில நாட்களுக்கு முன்பு நியுஜெர்சியில் கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வாளரான ரிச்சர்ட் டைலரைப் பார்த்தபோது அவர் என்னுடைய நூல்களில் படிக்க மிகுந்த ஆர்வத்துடன் இருப்பது நவீனத்தமிழிலக்கிய அறிமுகமே என்று சொன்னார். இந்நூல் சிற்றிதழ் சார்ந்து வாசிக்கவும் எழுதவும் வருபவர்களுக்காக உருவாக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலும் கல்வித்துறையாளர்களாலேயே இது பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஏனெனில் தமிழில் நவீன இலக்கியத்தை ஒட்டுமொத்தமாக தொகுத்துப்பார்க்கும் பிறிதொரு நூல் தமிழில் எழுதப்படவில்லை. இதற்கு முன்னோடி நூல் இல்லை என்பது போலவே இதற்கு வழி நூல்களும் இல்லை என்பதும் வியப்புக்குரியதுதான். அந்த தனித்தன்மையே இந்நூலை மீண்டும் மீண்டும் மறுபதிப்பு செய்ய வைக்கிறது என்று நினைக்கிறேன். இது வாசகர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

ஜெ

14.06.2022

சுந்தர ராமசாமி

வாசந்தி

முந்தைய கட்டுரைகொல்லிப்பாவை
அடுத்த கட்டுரைரத்தசாட்சி- முன்னோட்டம்