மலைவிளிம்பில் நிற்பது – கடிதம்

ஐந்து நெருப்பு வாங்க

ஐந்து நெருப்பு மின்னூல் வாங்க

அன்புள்ள ஜெ

இன்று ஒரு நண்பர் அனுப்பிய இணைப்பு வழியாக உங்களுடைய மலைவிளிம்பில் என்னும் கதையை வாசித்தேன். என்ன ஒரு கதை. திகைப்படைந்துவிட்டேன். முதலில் கதை சொல்ல வருவதே புரியவில்லை. சுழற்றி அடித்தது. ஒரு கொலைக்கு முந்தைய கணம். அதற்கு வந்துசேர்ந்த பலவகையான வழிகள், அதற்குப்பிறகு இருக்கும் பலவகைப்பட்ட வழிகள் ஆகியவை அனைத்தும் ஒரே கணத்தில் விரிகின்றன.

வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் இப்படித்தான். வந்துசேர்ந்த வழிகளும் செல்லும் வழிகளும் பலவகையானவை. இப்படித்தான் மொத்த வாழ்க்கையும். என்னைப்போல தொழில்செய்பவர்களுக்கு அது புரியும். கதையை யோசித்து யோசித்து இன்னும் முடிக்கவில்லை. இப்படி ஒரு கதை தமிழில் எழுதப்பட்டிருக்கிறது என்பதையே என்னால் நம்பமுடியவில்லை. இருபது வருடங்களாக வாசிப்பவன் நான். நான் தமிழில் வாசித்த அற்புதமான கதை இதுதான்.

ஆனால் இந்தக்கதையைப்பற்றி பரவலாக எவரும் எதுவும் சொல்லவில்லை. இதை வாசிக்க ஒரு மொனோடொனஸ் வாழ்க்கையில் இருப்பவர்களால் முடியாது. அவர்கள் சாமானியமாக இதை ஒரு கொலைக்கதை என்று சொல்லி கடந்துவிடுவார்கள். இதை வாசிக்கவேண்டுமென்றால் ஒரு அனுபவம் சொல்கிறேன். இருபதுகோடி ரூபாய் ஒப்பந்தம் பற்றி முடிவு எடுக்கவேண்டும். வெற்றிதோல்வி சமம் சமம். தோற்றால் பாப்பர் ஆகவேண்டும். நடுத்தெரு. வென்றால் இன்னொரு இரண்டுகோடி. முடிவை ஒருநாளுக்குள் எடுக்கவேண்டும்.

உடம்பிலே எல்லா நரம்புகளும் அப்படியே இழுத்து நிற்கும் நிலை. அந்தக்கதையில் அப்படி பலவரிகள். முகத்தில் ரத்தக்குழாய்கள் புடைத்து  எறும்பு ஊர்வதுபோல தினவை அளித்தன என ஓர் இடம் வருகிறது. அது நேரடியனுபவமாக அடைந்த ஒருவருக்கே இந்தக் கதை புரியும். அந்த கணத்தை மட்டும்தான் கதை சொல்கிறது. என்ன ஆகிறது என்று சொல்லவில்லை. அந்தக் கணம்தான் முக்கியம். அதைப்போன்ற கணங்களை ஒன்றாய்ச் சேர்த்தால் அதுவே வாழ்க்கை என அறிந்திருந்தால் கதையை புரிந்துகொள்ளலாம்.

எஸ்.கே

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருது விழா தங்குமிடம் பதிவு 2022
அடுத்த கட்டுரைஅரங்க. சீனிவாசனின் காந்தி காதை