விஷக்கன்னி – வெங்கி

குறிஞ்சிவேலன் தமிழ் விக்கி

விஷக்கன்னி இணைய நூலகம்

அன்பின் ஜெ,

நலம்தானே?

கடந்த சில வாரங்களாக நேஷனல் புக் டிரஸ்டின் தமிழ் மொழிபெயர்ப்பு நாவல்களை வாசித்துக்கொண்டிருக்கிறேன் (archive.org தளத்தில் மின்னூல்கள் கிடைத்தன).

சமீபத்தில் குறிஞ்சிவேலன் ஐயா மொழிபெயர்த்த பொற்றேக்காட்டின் “விஷக்கன்னி” வாசித்தேன். இரண்டு நாட்கள் அந்த மலபார் மலைக் காடுகளில் சுற்றியலைந்த உணர்வு.

நாவலின் அந்த முப்பதாம் அத்தியாயத்தை நிதானத்துடன் வாசித்து முடித்து கடந்து செல்ல முடியவில்லை. ஒருவகை அமைதியின்மையும், வெற்றிடமும் உள்ளுக்குள் உருவாகி அடிப்படை வாழ்வு பற்றிய கேள்விகளால், எண்ணங்களால் தவிப்புற்று வாசிப்பை மூடிவைத்து சிந்தனையின் சங்கிலியில் சிக்கி, மீண்டு, மறுபடி வாசிப்பு துவங்க இடைவெளி தேவைப்பட்டது. ஒரு நல்ல எழுத்து மனதில் என்னவெல்லாம் நிகழ்த்துகிறது?.

நாவலில் நுழைவதற்கான சரியான வாசலை/மனத்தயாரிப்பை/விழைதலை ஓ.என்.வி. குரூப்பின் சிறப்பான முன்னுரை தந்தது.

சுதந்திரம் அடைவதற்கு முன்பு கேரளம் மூன்று ஆட்சிப் பகுதிகளைக் கொண்டிருந்தது. திருவிதாங்கூர், கொச்சி எனும் இரு நாடுகளும், சென்னை மாகாணத்தின் பிரிவாக மலபார் மாவட்டமும் இருந்தது. சுதந்திரத்திற்கு முந்தைய ஆண்டுகளில் திருவிதாங்கூர் பகுதியைச் சேர்ந்த பாவப்பட்ட சில விவசாயிகள் தங்களிடமிருந்த சொற்ப உடைமைகளை விற்று மூட்டை கட்டிக்கொண்டு வடக்கு பிரதேசமான மலபாரிலுள்ள வயநாடன் மலைப் பிரதேசத்திற்கு குடியேறத் தொடங்கினார்கள். அங்கே மனிதக் காலடிச்சுவடுகள் பதியாத செழிப்பான பள்ளத்தாக்குகள் அவர்களுடைய யாக பூமியாயிற்று. செழிப்பும் செல்வமும் ஈட்டும் பிரகாசமான கனவுகளும் எதிர்பார்ப்புகளும் மனங்களில். கொடுங்குளிரும், மலேரியாவும், காட்டு விலங்குகளும் ஒன்று சேர்ந்து வியூகம் அமைத்து அவர்களை எதிர்த்தன. அந்த சவாலை ஏற்று பயிர் செய்யும் மகத்தான யாகத்தினுள் புகுந்தார்கள். ஆனால் பலரும் அந்த யாகத்திலேயே எரிந்து சாம்பலாகிவிட்டார்கள். மனோகரமான அந்த மலைக்காட்டுச் சரிவுகளில் இயற்கையின் தயாளத்தையும், கொடூரத்தையும் அவர்கள் ஒருசேரக் கண்டார்கள்

தமிழ் மொழிபெயர்ப்பு அபாரம். குறிஞ்சிவேலன் ஐயாவை அன்புடனும், நன்றியுடனும் மனதில் நினைத்துக் கொண்டேன்.

மேற்கு மலைக்காடுகளில் முதல் தலைமுறையின் இருப்பிற்கான/வாழ்தலுக்கான போராட்டங்கள் அறிய துக்க இழை ஒன்று மனதை தொந்தரவு செய்தவாறே இருந்தது. நுண்ணிய அவதானிப்புகளில் காடுகளின் விவரணைகளும், மனிதர்களின் இயல்புகளும், இயற்கையும் பொற்றேகாட்டின் எழுத்தின் மாயத்தில் மனதில் ஆழமாய் உள்நுழைந்தன. வேர்பிடிக்கப் பரிதவிக்கும் ஆன்மாக்களின் நூறு நூறு வாழ்க்கைக் கதைகள்.

ஃபாதராக விரும்பும் பதினேழு வயது இளைஞன் அந்தோணி, அந்தோணியின் சித்தப்பா செரியான், முல்லைப்பூமாலை போல் புன்னகைக்கும் பதின்பருவத்து ஆனிக்குட்டி, கடின உழைப்பாளி மரியம், மரியத்தின் கணவன் சோம்பேறி மாத்தன், மரியத்தின் மகள் மேரிக்குட்டி, அந்தோணியின் மேல் ஆசைப்படும் மாதவி, மாதவியின் மேல் மோகம் கொள்ளும் வர்க்கி, மலபாரில் தாக்குப்பிடிக்க முடியாமல் மைசூருக்கு ஓடி அங்கு ஓட்டல் தொழில் நடத்தும் வரீதுகுஞ்ஞு, பட்லாம் எஸ்டேட்டின் பால், தறமூட்டில் சாக்கோ, குஞ்சாண்டி, டீக்கடை சாக்கோச்சன், மந்திரவாதினி கரிம்பாத்தி கும்பா, மீன் பிடிக்க நஞ்சு காய்ச்சும் காட்டுவாசிகளான கரிம்பாலர்கள்… என எளிதில் மறக்கமுடியாத கதாபாத்திரங்கள்.

முப்பதாம் அத்தியாயம் புதிதாகக் கட்டப்பட்ட அழகான அந்த பங்களாவின் உணவறையில் ஆரம்பிக்கிறது. பங்களாவைச் சுற்றிலும் பசுமையான புல் தரை. பல வண்ணங்களில் பூச்செடிகள். செல்வம் ஒளிரும் அலங்காரத்தில் அறைகள். உணவு மேஜையில் உயர்தர ஒயினும், பல்வேறு வகையான சுவை உணவு வகைகளும். காட்சியை அப்படியே இரண்டு மைல் தொலைவில் குன்றின் சரிவிலிருக்கும் தொம்மனின் குடிசைக்குக் கொண்டு செல்கிறார் பொற்றேகாட். தொம்மன் கஞ்சி காய்ச்ச, மழையில் நனைந்த அடுப்புடன் போராடிக் கொண்டிருக்கிறான். அருகில் ஒரு பாயில் இரண்டு குழந்தைகள் கைகால்களை அகற்றி நிர்வாணமாக மல்லாந்து கிடக்கிறார்கள்.

ஓராண்டிற்கு முன்புதான் தொம்மன் திருவிதாங்கூரிலுள்ள ஆரக்குழை என்ற இடத்திலிருந்து மலபாருக்கு வந்தான். ஊரில் சொத்து அத்தனையும் விற்று 700 பிரிட்டிஷ் ரூபாய்கள் எடுத்துக்கொண்டு அவனும், தம்பி செரியானும், அவன் மனைவியும், நான்கு குழந்தைகளுமாக மலபாருக்கு வந்தார்கள். வந்த நான்கு மாதங்களுக்குள் மூத்த குழந்தை ஜுரம் கண்டு இறந்துவிட்டது. அடுத்த இரண்டு மாதத்தில் தம்பி செரியானும் மலேரியாவினால் இறக்கிறான். சென்ற மாதம் ஒரு குழந்தையைப் பெற்றுவிட்டு அவன் மனைவியும் இறந்தாள். பயிர்களையெல்லாம் பன்றி புகுந்து நாசமாக்கி எல்லாமே நஷ்டமாகிவிட்டன. கடனும் ஏற்பட்டுவிட்டது. ஆகாரத்திற்கும் வழியில்லை. அவனுக்கும் மலை ஜுரம் பிடித்திருக்கின்றது. இளங்குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கூட யாருமில்லை. நான்கு வயது இட்டூப்பிற்கும் ஜுரம் தொடங்கி இருக்கிறது. இனிமேல் அவர்களும் இங்கே கிடந்து சாகமுடியாது. அதனால் திரும்பவும் சொந்த ஊருக்கே செல்லவேண்டும். யாரும் உதவுவதாக இல்லை. அவனுக்கு உதவி செய்யக்கூடியவர்களும் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறார்கள்.

கடைசி முயற்சியாக பணம் கேட்டுப் பார்க்கலாம் என்று ஆறு வயது ஔசேப்பையும், நான்கு வயது இட்டூப்பையும் அழைத்துக்கொண்டு நான்கு மாத கைக்குழந்தையை தோளில் தூக்கிக்கொண்டு மழையில் நடந்து அந்த பங்களாவிற்கு வருகிறான் தொம்மன். உதவி கிடைக்கவில்லை. நிலைத்திருந்த மழையின் பேரோசையில், தொம்மன் தன் குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு தன் குடிசைக்கு – அந்தகாரத்திற்கு…நிச்சயமற்ற தன்மைக்கு…பயங்கரத்துக்கு… – திரும்புகிறான்.

அத்தியாயம் இப்படி முடிகிறது…

மாதா கோயிலின் கட்டிட வேலை பாதி முடிவதற்கு முன்பே அதன் அருகில் உள்ள மயானத்தின் பரப்பளவை அதிகரிக்க வேண்டியதாயிற்று. மரணத்தின் கூட்டல் குறியைப்போல அங்கே சிலுவைகள் அதிகரிக்கத் தொடங்கின. ஒரு புதிய மரச் சிலுவையின் கீழே தொம்மனும், அதற்கு அருகில் உள்ள சிறிய சிலுவையின் கீழே இட்டூப்பும் புதையுண்டு கிடந்தார்கள். தொம்மனின் கைக்குழந்தையை காட்டு நரி கடித்து இழுத்துக்கொண்டு போய்விட்டது. சிரங்கு பிடித்த ஔசேப்பை, சள்ளிப்பரப்பன், மாரிக்குன்னில் உள்ள அனாதை இல்லத்தில் சேர்த்துவிட்டார்.

குறிஞ்சிவேலன்

நாவலை முடித்துவிட்டு பொற்றேகாட் பற்றியும், தமிழ் விக்கியில் குறிஞ்சிவேலன் ஐயா பற்றியும், இணையத்தில் குறிஞ்சிவேலன் ஐயாவின் சில நேர்காணல்களையும் வாசித்துக்கொண்டிருந்தேன். அந்த விஷக்கன்னியின் பூமியிலிருந்து வெளிவர வெகுநேரம் பிடித்தது.

வெங்கி

முந்தைய கட்டுரைகீழ்ப்படிதல் மனித இயல்பா?
அடுத்த கட்டுரைகனவு இல்லம், கடிதம்