தூக்கம் பற்றி எழுதியது ‘கண்பட்டிருக்கும்’ போல. இரண்டுநாட்களாகச் சரியாக தூக்கமில்லை. இரவு பன்னிரண்டு மணிக்கு படுப்பேன். ஒரு மணி நேரம் தூக்கம். விழித்துக்கொள்வேன். பின்னர் விடியற்காலை வரை தூக்கமில்லை.
நான் தூக்கம் விழித்துக்கொண்டால் உடனே எழுந்துகொள்வேன். எதையாவது எழுதவோ படிக்கவோ தொடங்குவேன். தொடர்ச்சியாக ஏதேதோ படித்து தள்ளினேன். பெரும்பாலும் வேதாந்த நூல்கள். முனி நாராயணப் பிரசாத் எழுதியவை.
ராஜீவனின் நினைவுகள்தான் காரணம். அவருடைய சாவு என்னால் பதினைந்து நாட்களுக்கும் மேலாக எதிர்பார்க்கப்பட்டதுதான். உண்மையில் அது விடுதலை. அவர் தொடர்ந்து அவஸ்தைப் பட்டுக்கொண்டிருந்தார். சாவை எவ்வகையிலும் அஞ்சவுமில்லை. சிகிழ்ச்சை செய்து பார்ப்போம், சரியானால் நல்லது என்னும் மனநிலைதான் இருந்தது.
ஆகவே சாவுச்செய்தி பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. நவம்பர் 2 ஆம் தேதி மாலை கே.சி.நாராயணன் வீட்டுக்கு வந்திருந்தார். நீண்டநாளாயிற்று அவர் இங்கே வந்து. என்னுடன் இரண்டுநாட்கள் இருக்கவேண்டும் என்று சொன்னார். பரசுராம் எக்ஸ்பிரஸில் மாலை எட்டு மணிக்கு வந்தார். அவரை ரயில்நிலையம் சென்று அழைத்துவந்தேன்.
அவருடன் சாப்பிட்டு பேசிச் சிரித்துக் கொண்டிருக்கும்போதே பலர் அனுப்பிய செய்திகள் வந்துகொண்டிருந்தன. ராஜீவன் நிலை மோசமாகிக்கொண்டே இருந்தது. இரவு 10 மணிக்கு செய்தி வந்தது. அதை கே.சி.நாராயணனிடம் சொல்லவில்லை. அவர் தூங்கச் சென்றுவிட்டார்.
கே.சி.நாராயணன் இருந்தமையால் அச்செய்தியை கடக்க முடிந்தது. அவருடன் 3 ஆம் தேதி திருக்கணங்குடி (திருக்குறுங்குடி) ஆலயம் சென்றுவந்தேன். அங்கே எங்களைத் தவிர எவருமில்லை . மழையின் ஈரமும் இருட்டும் நிறைந்த கல்மண்டபங்களில் அலைந்தோம். ஈரம் பரவிய ஒளியால் மூடப்பட்ட குளத்தையும் ஒற்றைப்பனைமரத்தின் தனிமைத்தவத்தையும் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தோம்.
நான்காம் தேதி கே.சி.நாராயணனுடன் சுசீந்திரம் சென்று வந்தேன். சுசீந்தீரம் பரபரப்பான ஆலயம். நகருக்கு அண்மையில் இருப்பதனால். ஆனால் அங்கும் காசிவிஸ்வநாதரின் ஆலயம் அமைதியில் மூழ்கி தனித்திருந்தது.
இரண்டாம்தேதி இரவில் படுத்ததும் ஓர் அழைப்பு. எடுத்தால் பி.ராமன். ‘ராஜீவனைப் பற்றிய செய்தி பிழையானது. அவரை திருவனந்தபுரம் கொண்டு சென்றிருக்கிறார்கள். அதைத்தான் எவரோ தவறாகச் சொல்லிவிட்டிருக்கிறார்கள்’ என்றார். ஆறுதலும் பின்னர் மகிழ்ச்சியின் எக்களிப்பும்.
விடியற்காலையில் அடுத்த விழிப்பில் திகைப்பு உருவானது. மெய்யாகவே அழைப்பு வந்ததா? செல்பேசியை எடுத்துப் பார்த்தேன். எந்த அழைப்பும் இல்லை. அது கனவுதான். உள்ளம் போடும் நாடகங்கள்.
ராஜீவனை பற்றி கே.சி.நாராயணனுடன் கூடுமானவரை ஒன்றும் பேசவில்லை. இலக்கியம், மற்றும் நினைவுகள். ஆற்றூர் ரவிவர்மா, எம்.கோவிந்தன், பி.கே.பாலகிருஷ்ணன் அனைவருமே எனக்கும் அவருக்கும் பொதுவாக தெரிந்தவர்கள். இச்சந்திப்பு என்பது இருவருக்கும் கடந்தகாலத்தில் வாழ்வதுதான்
நவம்பர் 5 காலையில் கே.சி.நாராயணனை ரயில் ஏற்றி விட்டேன். சட்டென்று டி.பி.ராஜீவனின் நினைவு வந்து சூழ்ந்துகொண்டது. அறுபது கடந்தபின் இனி இச்செய்திகளுக்கு தயாராகத்தான் இருக்கவேண்டும். நாமே ஒரு செய்தியாக நண்பர்களைச் சென்றடைவது வரை.
வீடு திரும்பி அருண்மொழியுடன் பேசிக்கொண்டிருந்தேன். என்றுமே அவளுடைய குன்றாத உற்சாகம் எனக்கான பிடிமானம். எனக்கு அவளை பார்த்துச் சலிப்பதுமில்லை. இவ்வுலகம் அவள் வழியாக என்னைப் பற்றியிருப்பது போலிருந்தது.
மேலே வந்து தமிழ் விக்கிக்கான ஒரு பதிவை எழுதலானேன். மெல்லமெல்ல முற்றாக அடங்கி அமைதியானேன். இன்றிரவு நன்றாகத் துயில்வேன்.
திருக்கணங்குடியில் ஒரு காலபைரவர் சன்னிதி உண்டு. அருகே இருந்த ஏதோ ஆலயத்தில் எஞ்சிய சிலையை உள்ளே கொண்டு தனி ஆலயமாக நிறுவியிருக்கிறார்கள். பெருமாள்கோயிலில் பைரவர். அவ்வாலயத்தின் ஓர் அமைப்பு காரணமாக பைரவர் முன் எரியும் மூன்று தீபங்களில் தலையருகே உள்ள சுடரும் காலருகே உள்ள சுடரும் தத்தளித்து அலைந்தாடும். நடுவே உள்ள சுடர் அசையவே அசையாது. மலரிதழ்போல் நின்றிருக்கும்