ஜெ,
இலக்கிய அரங்குகளில் நான் படைப்பாளி அல்ல… விமர்சகனும் அல்ல… நாடக விழாவில் நாடகத்துடன் எந்த வகையிலும் தொடர்பற்றவன்… இப்படி எல்லா அரங்குகளிலும் பார்வையாளனாகவே இருக்கிறேனே..,, எனக்கான அரங்கு எது?
சந்தோஷ்
*
அன்புள்ள சந்தோஷ்
இந்த வினா எல்லா இளம்பருவத்தினருக்கும் எழுவது. இதற்கான முதற்பதில் நீங்கள் எதில் முழுமையாக இருக்கிறீர்கள் என்பது. எண்ணிப்பாருங்கள். தமிழக மக்கள்தொகையில் பத்தாயிரத்தில் ஒருவரே எந்த கலையிலக்கியச் செயலிலாவது ஈடுபாடும் தொடர்பும் கொண்டவர்கள். அந்தச் சிறிய வட்டத்திற்குள் ஒருவர் வந்துசேர்வதென்பதே மிகமிக அரிதான செயல். பெரும்பாலும் தற்செயல். அதற்கே ஒருவர் மகிழவேண்டும். நன்றிசொல்லவேண்டும்
உள்ளே வந்தபின் அதை எப்படி முன்னெடுக்கிறீர்கள். எந்த களத்தில் உளம் ஒன்றுகிறீர்கள். எங்கே முழுமையாக உங்களை அளிக்கிறீர்கள். அது அடுத்தபடி. அவ்வாறு அளித்து, பங்காற்றி, தன் அடையாளத்தையும் இடத்தையும் வென்றபின் கேட்கவேண்டிய கேள்வி இது.
பொதுவாக இருவகையினர் உண்டு. ஒன்று, இரண்டாம்கட்டத்தவர். அவர்கள் ஏதேனும் பங்காற்றியிருப்பார்கள். வாய்ப்புகள் தற்செயலாக, அல்லது பிரதிநிதித்துவம் காரணமாக வரும். அடையாளமும் அமையும். இரண்டு, முதல்நிலையினர். அவர்கள் எதையும் தேடிச்செல்லவேண்டியதில்லை. எல்லாமே அவர்களை தேடிவரும். ஏனென்றால் அவர்கள் செயல்படும் துறைகளில் அவர்களே முதன்மையானவர்கள். அவர்கள் இல்லாமல் அத்துறைகளின் எந்த அவையும் பொருளுள்ளதாகாது.
இரண்டாம் வகையினர் அடையாளம் தேடுவதில்லை. வாய்ப்புகளை பொருட்படுத்துவதில்லை. தன் இடம் பற்றி கவலைகொள்வதில்லை. அவர்கள் தங்களுக்கு உகந்த களத்தில் செயலாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். பிறிதொன்றே இல்லாமல், முழுமையான தன்னளிப்புடன். அவர்களின் இன்பம் என்பது அந்த செயலில் இருப்பதே ஒழிய அதன் ;வெற்றி;யில் அல்லது அது அளிக்கும் ‘அடையாளத்தில்’ இருப்பது அல்ல.
ஐன்ஸ்டீன் வேலைசெய்யவில்லை, அவர் கடைசிவரை விளையாடினார் என்பார்கள். வேலை செய்வதென்பது ஆற்றலை செயற்கையாக வெளிப்படுத்துவது. விளையாடுவது என்பது ஆற்றலை வெளிப்படுத்துவது இயல்பாக நிகழ்வது. ஆற்றல் வெளிப்படுவதே அதில் இன்பம் என்றாகிறது. அவ்வாறு செயல்படுபவர்களே எத்துறையிலும் முதல்வர்கள். அவர்களை எவரும் ஏற்க வேண்டியதில்லை. மதிக்கவேண்டியதில்லை. அவர்கள் கண்கூடாகவே சாதனையாளர்கள். எந்த மறுப்பும் அவர்களை ஏதும் செய்யாது.
முதல் தொடக்கம் என்பது ஒன்றில் முழுக்கவே இறங்குவதுதான். பெரும்பற்றுடன் ஈடுபடுவது.ஓர் அறிவியக்கத்தின், செயலியக்கத்தின் பெருக்கில் தன்னை வீசிக்கொள்வது. ஒவ்வொன்றையும் வெளியே நின்று அரை அக்கறையுடன் வேடிக்கை பார்ப்பவர்கள், வம்பு மட்டுமாகவே அணுகுபவர்கள் ஒருபோதும் அவ்வியக்கத்தில் இடம்பெற முடியாது.
ஆக, நீங்கள் கண்டடையவேண்டியது உங்கள் களம் என்ன என்று மட்டுமே. எல்லாவற்றையும் செய்துபாருங்கள். எதில் முழுமையாக உங்கள் உள்ளம் படிகிறது என்று கவனியுங்கள். எங்கே முற்றிலும் ஒன்றிச் செயலாற்ற முடிகிறது என்று கவனியுங்கள். அதன்பின் அதைமட்டுமே செய்யுங்கள். செயலே இன்பம் என கொள்ளுங்கள். அதிலேயே இருங்கள்.அதுவே நிறைவுற்ற வாழ்க்கை.
செயலின் விளைவுகளை எண்ணினால் அச்செயல் ஒருபோதும் இன்பம் அளிக்காது. அச்செயல் யோகம் என அமையவேண்டுமென்றால் அச்செயலும் செய்பவனும் ஒன்றென்று ஆகும் தருணங்களால் ஆனதாக இருக்கவேண்டும் செய்பவனின் வாழ்க்கை. பிற அனைத்தும் தொடர்ந்து வரும்
ஆம், கீதையேதான்.
ஜெ