டி.பி.ராஜீவனின் இறுதிக் கவிதை
டி.பி.ராஜீவன் கவிதைகள்
அன்புமிக்க ஜெயமோகன்
போன வாரம் இசை, நான், இன்னும் சில நண்பர்களும் கோழிக்கோடு வரை ஓரு பயணம் போகலாமென தீர்மானித்த பொழுது, ராஜீவன் சாரை பார்க்கலாம் என தீர்மானித்தோம். அவரை தொடர்பு கொள்ள முயற்சிக்க, மஞ்சள் காமாலை காரணமாக மருத்துவமனையில் இருக்கிறார் என்றார்கள். பயணத்தை மாற்றி கொச்சின் போய் விட்டு வரும் வழியில் பட்டாம்பி போய் பி.ராமனை வீட்டில் பார்த்து விட்டு திரும்பினோம்.
அப்பொழுதும் உரையாடலுக்குள் வந்து போனார் ராஜீவன்.
முன்பொரு முறை பி.ராமன் பேசும் பொழுது “ராஜீவனை என் தனிப்பட்ட அவதானிப்பில் பிரதானமாய் கவிஞர் என்றே சொல்வேன். ஒரு வாசியில் தான் அவர் நாவல் பக்கம் போனார். பின் பத்தாண்டுகளுக்கு பின் கவிதை பக்கம் திரும்பினார்”
இன்று காலை பி.ராமனிடம் அதையே மறுபடியும் சொன்னார் கூடுதலாக “அவர் திரும்பி வந்த பின் எழுதிய மனோகரமானவை. பத்து நாடகளுக்கு முன் பேசும் பொழுது, வரவிருக்கும் அவர் கவிதை தொகுப்பின் அட்டை குறித்து பேசிக் கொண்டிருந்தார்” என்றார்.
2005 வாக்கில் டி.பி.ராஜீவனை கோழி கோடு பல்கலைக்கழக குடியிருப்பில் மேல சேரியில் நாங்கள் அவரை பார்க்க போன பொழுது அவர் இல்லை. மழையோடு நாங்கள் சிறிய குன்றுகளின் கீழே சேலாரிக் திரும்பினோம். அப்பொழுது எனது வீடு அங்கிருந்தது. இப்பொழுதும் அந்த குன்றுகள் அங்கு தான் இருக்கும். மழை பெய்யவும் வாய்ப்பிருக்கிறது. ராஜீவன் மாத்திரம் இல்லை.
உங்கள் தளத்தின் வழியாக அவர் எனக்கு அறிமுகம். பின்னதாக அவரின் இரண்டு நாவல்களும் இயக்குனர் ரஞ்சிதால் இயக்கப்பட, அவை இரண்டும் என் ஆதர்ச திரைப்படஙகள்.
பாலேறி மானிக்கம் ஓரு பாதிரா கொல பாதகம், கே டி என் கோட்டூரின் எழுத்தும், ஜீவிதமும் இரண்டு நாவல்களும் பாலேறி மானிக்கமாகவும், ஞானாகவும் திரைப்படமாகின. அவை குறித்து நான் எழுதவும் செய்தேன்.
பாலேறி மானிக்கத்தை தமிழில் மொழி பெயர்ப்பது தொடர்பாக ராஜீவன் சாரிடம் தொலை பேசியில் பேசும் பொழுது செய்யலாம் என்றார். அவர் மகள் பார்வதி சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் படிப்பதாகவும், அவரை பார்க்க வரும் பொழுது சந்திக்கலாம் என்றார். அந்த சந்திப்பு நிகழவேயில்லை. விரலிடுக்கில் நழுவிப் போகின்றன வாழ்வின் சாத்தியஙகள்.
அவரின் காய்கறிகளின் முயல் கவிதை எப்பொழுதும் என் ஓர்மையிலிருக்கிறது. நேற்று முழு தினமும் ராஜீவன் ஓரு வலி. போல நாள் முழுக்க நீடித்துக் கொண்டேயிருந்தார்.
மலையாள இயக்குனர் ரஞ்சித்தின் இனை இயக்குனரும்/ நடிகருமான சங்கர் ராமகிருஷ்னன் எப்பொழுதும் டி.பி.ராஜீவனை எனக்கு தோற்றத்தில் நினைவுபடுத்துவார். ராஜீவன் வாழ்க்கையை யாராவது சினிமாவாக்கினால் இவரை அதில் நடிக்க வைக்கலாம் என விளையாட்டாய் நினைத்துக் கொள்வேன்.
போன வாரம் பார்க்கலாம் என்று நினைத்தவர் இந்த வாரம் நினைவாய் மாத்திரம் எஞ்சுகிறார்.
பாலேறி மானிக்கம் திரைப்படத்தில் அவரும் ரஞ்சித்தும் சேர்ந்து வசனமெழுதியிருப்பார்கள். கவித்துவமான வசனங்கள். பாலேறியில் பிராந்தனாய் திரியும் ஒருவனைக் குறித்து சொல்கையில் “இவன் தான் பாலேறியின் அபோத குமாரன்” என்றொரு வசனம் உண்டு. ராஜீவனும் ஓரு அபோத குமாரன் என்றே தோன்றுகிறது. போதத்தின் உச்சத்தில் வரும் அபோதம். பித்தான கலையின் வழி எழுந்து வரும் அபோதம்.
அருமையான கவிதைகளையும், நாவல்களையும் தந்த அவரிடம் என்ன சொல்ல. “போய் வாருங்கள் சார் உங்களின் புகழை இன்னும் கொஞ்ச காலம் பாடி விட்டு நாங்கள் வருகிறோம்” என்றே இத் தருணத்தில் சொல்லத் தோன்றுகிறது சார்.
அன்புடன்
சாம்ராஜ்