டி.பி.ராஜீவனின் இறுதிக் கவிதை
அஞ்சலி, டி.பி.ராஜீவன்
அன்புள்ள ஜெ,
டி.பி.ராஜீவன் மரணச்செய்தி அறிந்து வருந்தினேன். அவரை விஷ்ணுபுரம் விழாவில் பார்த்திருக்கிறேன். அவருடைய கவிதைகளிலுள்ள நையாண்டியும் அதன் வழியாகவெளிப்படும் பார்வையும் மிக ரசனைக்குரியவை.
டி.பி.ராஜீவனை போல பல மலையாள எழுத்தாளர்களை இங்கே அறிமுகம் செய்திருக்கிறீர்கள். ஏராளமான அஞ்சலிகள் கண்ணில் பட்டன. இதேபோல கன்னட தெலுங்கு கவிஞர்கள் நமக்கு அறிமுகமாகவில்லை.
நீங்கள் குற்றாலம் ஊட்டி ஒகேனேக்கல் பகுதிகளில் நடத்திய தமிழ் மலையாள கவியரங்குகளின் பயன் என்ன என்று இப்போது உணரமுடிகிறது. அந்நாட்களைப் பற்றிய நினைவுகளே அபாரமாக இருக்கின்றன
ஏன் அதைப்போன்ற அரங்குகளை இப்போது நடத்த முடியாது? நீங்கள் முயற்சி செய்யலாமே?
செல்வராஜ்
*
அன்புள்ள செல்வா
இன்று இரண்டு விஷயங்கள் தடையாக உள்ளன. ஒன்று, குடி. இன்று எந்த கவிதைச் சந்திப்பும் கவிதை ஒரு சொல்கூட பேசப்படாமல் வெறும் குடிக்கேளிக்கையாகவே மாறிவிடும். அதாவது கவிதை எழுதும் பத்துபேர் சேர்ந்து குடிக்க நாம் இடம் ஏற்பாடு செய்து கொடுப்பது மட்டும்தான் அது.
இன்னொன்று, அன்று நான் நடத்திய அரங்குகள் அருண்மொழிக்கு கிடைத்த ‘இன்சென்டிவ்’ காசில் நடத்தப்பட்டவை. கவிஞர்கள் சொந்தச் செலவில் வந்தனர். இன்று பயணப்படி மட்டுமல்ல, ஊதியமும் எதிர்பார்க்கிறார்கள்.
இன்று அன்றிருந்த தீவிரம் எங்குமில்லை. சமூகவலைத்தளங்கள் இன்றைய கவிஞனுக்கு போலியான ஒரு மிதப்பை அளிக்கின்றன. அதுவே போதுமென நினைக்கிறான். (ஆத்தா நான் வைரலாயிட்டேன்!)
சமூக வலைத்தளங்கள் உருவாக்கிய இன்னொரு மனநிலை, அதை நீங்களே கண்கூடாகப் பார்க்கலாம். எந்த ஒரு நேர்நிலை முயற்சியையும் சமூகவலைத்தளங்களில் புழுப்போல பெருகியிருக்கும் உதிரிகள் வசைபாடி, திரித்து, கசப்பை கொட்டி ஒட்டுமொத்தமான எதிர்மனநிலைக்கு இட்டுச்செல்கிறார்கள். பல கவிஞர்களும் அச்சூழலில் கும்மியடிப்பவர்களாக மாறியிருக்கிறார்கள்.
அன்றுபோல உற்சாகமான, நம்பிக்கையான ஒரு கவிஞர் சந்திப்பை இன்று ஒருங்கிணைப்பது கடினம். தமிழகத்தில் எங்குமே அப்படி ஒரு சந்திப்பு நிகழாத நிலை உள்ளது. கேரளத்தில் பெருநிறுவனங்களே ஒருங்கிணைக்கின்றன.
ஜெ