சுடர்களின் மது, வாங்க
கவிதைகள் எழுதப்பட்ட காலம் தொட்டே எப்போதும் எல்லோராலும் ரசிக்கப்படும் விரும்பப்பட்டும் வந்த வண்ணமே தான் இருக்கின்றன. ஆரம்ப காலத்தில் இருந்து இப்போது வரை கவிதையின் முகங்கள் மரபுக் கவிதை புதுக்கவிதை உரைநடை கவிதை ஹைக்கூ என பலவாறு மாறி வந்திருக்கின்றதே தவிர கவிதைக்கான ‘கரு’க்கள் இன்னும் ஊற்று நீர் போல் சுரந்து கொண்டே தான் இருக்கின்றது. வாசகனின் ரசனையை பொறுத்து அவனது கவிதை வாசிப்பின் தன்மையானது மரபோ, புதுமையோ, உரைநடையோ என தனித்துவம் கொள்கின்றது.
இன்றைய காலகட்டத்தில் கவிதைகள் நவீனமடைந்து வாசிப்பவர்களை எளிதில் கவரும் வகையில் மிகவும் புழங்கும் வாழ்வியலை, நிகழ்வுகளை எடுத்துச் சொல்லும் கவிதைகளாக உருமாற்றம் பெற்று வந்த வண்ணம் இருப்பதாக நான் கருதுகின்றேன்.பொதுவாக கவிதைகளை அதிகம் படிக்கும் பழக்கம் எனக்கு இல்லை என்றாலும், எழுத்தாளர்கள் பலர் அறிவுறுத்தியதற்கு இணங்க சில கவிதை தொகுப்புகளை அல்லது கவிஞர்களை தேடி பிடித்து படிக்கும் பழக்கத்தை மட்டும் தற்சமயம் கைவசம் கொண்டுள்ளேன்.
அதன்படி கல்யாண்ஜி, நா.முத்துக்குமார், பிரான்சிஸ் கிருபா, மதார், இசை, நரன், ச.துரை, ஆனந்தகுமார் ஆகியோரை வாசித்து வருகின்றேன். இந்த வரிசையில் தற்போது என்னை ஆட்கொண்ட கவிஞன் இராயகிரி சங்கர். நம் நிகழ்காலத்தில் எத்தனையோ நிகழ்வுகளை, நாமும் அந்நிகழ்வுகளும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் வருடிக் கொண்டு காலத்தை ஓட்டிச் செல்கிறோம். அப்படி கடந்த சென்ற, காணுகின்ற சம்பவங்களை கவித்துவமாக ரசிக்கும்படி வார்த்தைகள் வாயிலாக ஓவியம் தீட்டி செல்கின்றார்கள், கவிஞர்கள்.
கவிஞர் இராயகிரி சங்கர் அவரது ‘சுடர்களின் மது’ (கிண்டிலில் கிடைக்கிறது), எனும் கவிதை தொகுப்பை வாசிக்கையில் அவருக்கே உரிய பாங்கில், அவர் கண்ட அனுபவித்த, கேட்ட பல நிகழ்வுகளை சொற்கள் கொண்டு கவி வடிவங்கள் ஆக்கி உள்ளார் என்பதனை அறிய முடிகிறது.
இராயகிரி சங்கரின் கவிதைகளில் யதார்த்தம் நிரம்பி வழிகிறது. காதல், காமம், பசி, ஏக்கம் பரிதவிப்பு, துக்கம், வன்மம், நகைச்சுவை என பல்வேறு தளங்களில் நம்மை இட்டுச் செல்கின்றார். சில கவிதைகள் வாசிக்கும் பொழுது நமக்காகவே எழுதியது போன்ற ஒரு உணர்வை ஏற்படுகிறது வாசிக்கும் வாசகர்கள் அனைவருக்கும் அவ்வாறு தோன்றவும் செய்யலாம் என கருதுகிறேன்.
இந்த தொகுப்பில் உள்ள 51 கவிதைகளிலும் ஏதோ ஒரு தனித்துவம் நிரம்பியுள்ளதாகவே எனக்கு தோன்றுகிறது. காதல் கவிதைகள் பெரும்பாலும் இத்தொகுப்பில் இருப்பினும் அவை வெவ்வேறு ரசனைகளை கொடுக்கிறது. சில கவிதைகள் வாழ்வின் தத்துவத்தை பேசுவதாக தோன்றுகிறது.
கணவனின் புகுந்த வீட்டின் பாதிப்பில் இருந்து விடுவித்துக் கொண்டு பிறந்த வீடு வரும் பெண்ணின் விடுதலையையும் அவள் தாயின் பரிதவிப்பையும் காட்டும் கவிதையும், இட்லி புராணத்தை கூறும் கவிதையும் எதார்த்தம். மெழுகு சிலை மனிதர் பற்றிய கவிதை இக்கால வாழ்வியல் நிதர்சனம். குமாரியக்கா கவிதை 400 பக்கங்கள் நாவலுக்கான கதைக்கரு… இப்படி ஒவ்வொரு கவிதையினுள்ளும் ஏதோ ஒரு சிறப்பு உள்ளதாய் தோன்றுகிறது.
கவிஞர் இராயகிரி சங்கரின் முதல் கவிதை தொகுப்பாக இது இருக்கலாம் என்று கருதுகின்றேன். அதற்கான குழந்தைத்தனங்கள் ஆங்காங்கே காணவும் செய்கின்றது. எனினும் சில தவிர்த்து ஒட்டுமொத்தமாய் பார்க்கையில் கவிஞர் இராயகிரி சங்கரின் ‘சுடர்களின் மது’ கவிதை தொகுப்பினை ஓர் சிறந்த நல்படைப்பு என உறுதியாய் சொல்லலாம்.
கலை கார்ல்மார்க்ஸ்
திருவாரூர்
*