ஆ.ராசா, ஸ்டாலின், ராஜராஜசோழன்- கடிதம்

அன்புள்ள ஜெ,

சில நாட்களுக்கு முன் ஆ.ராசா ராஜராஜ சோழன் வெறிபிடித்த சாதி ஆதிக்கவாதி, தமிழகத்தில் பார்ப்பனியம் வேரூன்ற காரணமாக அமைந்தவன், தமிழ் விரோதி என்றெல்லாம் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அப்போது இணையத்தில் அதை ஆதரித்து ஏராளமானவர்கள் எழுதியிருந்தார்கள். நான் தனிப்பட்ட முறையில் பார்த்தபோது அவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் மதவெறிக்கு அரசியல் சாயம் பூசிக்கொண்டு முன்வைப்பவர்கள்.

இப்போது தமிழக அரசு ராஜராஜனின் பிறந்த நாளை அரசுவிழாவாகக் கொண்டாடும் என அறிவித்திருக்கிறது. ராஜராஜன் தமிழர்களின் அடையாளம் என சொல்கிறது. இது பொன்னியின் செல்வன் படத்தின் மாபெரும் வெற்றியின் அடையாளம். இந்த ஆண்டு சதய விழாவுக்கு மக்கள் சாரிசாரியாகக் கிளம்பிச் செல்கிறார்கள். நானும் இரண்டு நாட்களாக பார்க்கிறேன். எந்த திமுக ஆளும் வாய் திறந்து முதல்வரை எதிர்க்கவில்லை. அ.ராசா சொன்னதுதான் சரி என்று சொல்லவில்லை.

இவர்களெல்லாம் முகநூலில் கொள்கைக்குன்றுகளாக வேஷம் போட்டுக்கொள்பவர்கள். திமுகவின் எதிரி என இவர்களே எவரையாவது லேபில் செய்துவிட்டால் அதன்பிறகு அவருடன் எவரும் அன்னம் தண்ணி புழங்கக்கூடாது என்று சொல்பவர்கள். சரி, ஆ.ராசா ஸ்டாலினின் முடிவைப்பற்றி என்ன சொல்கிறார்? அதுவும் மௌனம்தான்.

இங்கே நடக்கும் இந்த வம்புகளின் அரசியலைக் கூர்ந்து பார்க்க வேண்டும். ஆதித்த கரிகாலனை கொன்றது பிராமணர்கள் என்பதைச் சொல்லிக்கொண்டே இருப்பவர்களுடைய உள்நோக்கம் என்ன? ராஜராஜசோழனும் அக்கொலைக்கு உடந்தை என்று காட்டி, அவருடைய புகழை அழிப்பதுதான். அது தமிழருக்கு எதிரான மனநிலைதான். இது ஒரு நீண்டகாலச் சதி. ’ராஜராஜ சோழன் பிராமண் ஆதரவாளன். அவனுக்காக அவனுடைய அண்ணனை பிராமணர்கள் கொன்றனர். அவன் அவர்களை விடுவித்தான்’ – இதுதான் நமது மாமன்னனைப் பற்றி இவர்கள் கட்டிவிடும் கதை.

ராஜராஜன் கல்வெட்டு வழியாகவே நமக்கு ஆதித்த கரிகாலனின் கொலை  தெரியவருகிறது. இந்தக்கொலைக்கு பாண்டியநாட்டு ஆதரவாளர்களான பிராமணர்கள் உள்ளிட்ட ஒரு குழு காரணமாக இருந்திருக்கலாம். அன்றெல்லாம் பிராமணர்களுக்கே எங்கும் செல்லும் உரிமை இருந்தது. ஆகவே அவர்கள் கொலைக்கு உதவியிருக்கலாம். அதற்கு அவர்கள் பாண்டிய நாட்டின்மேல் கொண்ட பற்றும், மறைந்த பாண்டிய அரசன்மீதான விசுவாசமும் காரணமாக இருந்திருக்கலாம்.

அன்று தமிழகம் என்ற எண்ணம் இல்லை. சோழர்களுக்கு பாண்டியர்கள் அன்னிய நாடுதான். அன்றைக்கு பாண்டியநாட்டில் இருந்து வேறெந்த சாதியும் சோழநாட்டுக்குள் குடியேற முடியாது. வேளாண் குடிகளும் போர்க் குடிகளும் மண்ணில் வேரூன்றியவர்கள். மண்சார்ந்த அடையாளம் கொண்டவர்கள். அன்றைக்கு எவருமறியாமல் பாண்டியநாட்டு பிரஜைகள் சோழநாட்டுக்குள் செல்லமுடியாது. வெவ்வேறு ஊர்களுக்குச் சென்றுகொண்டிருந்தவர்கள் பிராமணர்கள்தான். ஆகவே பாண்டிய நாட்டிலிருந்து ஒரு குழுவை சோழநாட்டுக்கு அனுப்பி பகைமுடிப்பது என்றால் பிராமணர்களையே அனுப்பமுடியும்.

இந்த விஷயம் இந்தியா முழுக்கவும் இருந்தது. இந்தியா முழுக்க உளவறிதல் பிராமணர்கள் அல்லது பிராமணர்களாக வேஷம்போட்டவர்களைக் கொண்டுதான் செய்யப்பட்டது. அல்லது சாமியார் வேஷம் போடவேண்டும். சுதந்திரப்போராட்ட காலம் வரைக்கும்கூட இதுதான் நடந்தது. அயலூரில் இருந்து ஒருவர் குடிபெயர்ந்து வந்தால் பிராமணர்கள் என்றால் மட்டுமே சந்தேகம் வராது. பிராமணர்களிலேயே வேள்விகள் செய்யாத பிராமணர்கள் உண்டு. போர் புரியும் பிராமணர்கள் உண்டு. அவர்களை வேளாப்பார்ப்பார் என பழைய நூல்கள் சொல்கின்றன.

அப்படி ஒரு பிராமணக்குழுவுக்கு ஆதித்த கரிகாலன் கொலையில் தொடர்பு உண்டு என்று பின்னாளில் கண்டடையப்பட்டிருக்கலாம். அதுவும் வெறும் சந்தேகமாகவே இருந்திருக்கலாம். ஓரிரு சான்றுகள் கிடைத்திருக்கலாம். அன்று பிராமணர்களை அரசன் கொல்ல முடியாது. அது அரசர்கள் காட்டிய பாகுபாடு அல்ல. மக்களின் நம்பிக்கை. பிராமணர்களை கொன்றால் மழை பெய்யாது என்னும் எண்ணம் இருந்தது. பிரம்மஹத்தி பாவம் வரும் என்று நம்பினர்.  ஆகவே ஆதித்த கரிகாலன் கொலையில் சம்பந்தமுள்ளவர்கள் நாடுகடத்தப்பட்டனர். இருநூறு வருடம் முன்புகூட தமிழகத்தில் அதுதான் நடைமுறை.(வைசியர்களும் தண்டனையாகக் கொல்லப்படவில்லை. அவர்களின் சொத்துக்கள் பிடுங்கப்பட்டன. அதை அர்த்தசாஸ்திரம் சொல்கிறது. அதை அரசியல்வாதிகல் எவரும் சொல்வதில்லை)

கேரளத்திலும் இந்த நாடுகடத்தல் தண்டனைதான் பிராமணர்களுக்கு அளிக்கப்பட்டது. அதைப்பற்றி அ.கா.பெருமாள் எழுதியிருக்கிறார். நாடுகடத்தப்படும் பிராமணர்கள் புழுக்கப் பிராமணர் என அழைக்கப்பட்டனர். அவர்களின் நெற்றியில் பழுக்கக் காய்ச்சிய இரும்பால் புழுக்கப் பிராமணர் என்ற முத்திரை குத்தி நாடுகடத்தப் படுவார்கள். ஆனால் இது பிராமணர்களுக்குக் கொடுமையான தண்டனை. இதை அஞ்சி தற்கொலை செய்வதுண்டு. அப்படி சுசீந்திரம் கோயிலில் ஒரு நம்பூதிரி தற்கொலை செய்துகொண்டார். அதன் பிறகுதான் சுவாதித் திருநாள் மகாராஜா அந்த தண்டனையை ரத்துசெய்தார். ஏனென்றால் புழுக்கப் பிராமணனுக்கு எந்த பிராமண அதிகாரமும் அடையாளமும் இல்லை. அவனை அடிமையாகப் பிடிக்கலாம். விற்கலாம். உடனே அவன் அடிமையாக ஆகிவிடுவான். இதெல்லாம்தான் சரித்திரம். இதெல்லாமே புத்தகங்களில் உள்ளது.

இது எதுவும் தெரியாமல் ஒரு கூட்டம் முகநூலில் ராஜராஜசோழன்தான் ஆள்வைத்து ஆதித்தகரிகாலனைக் கொன்றிருக்கலாம் என்ற அளவுக்கு புகையை கிளப்பிக்கொண்டே இருந்தது. அப்பட்டமான தமிழர் வரலாறுத் திரிப்பு. தமிழர்மேல் காழ்ப்பு.

தமிழ்வரலாற்றை உலகமெங்கும் கொண்டுசென்று சேர்த்த பொன்னியின் செல்வன் சினிமா பற்றி எவ்வளவு காழ்ப்பு கக்கப்பட்டது. எத்தனை அவதூறுகள். எவ்வளவு திரிப்புகள். பலபேருக்கு ராஜராஜன் என்றாலே எரிந்தது. அது உண்மையான வரலாறு அல்ல, கல்கி பொய் சொல்கிறார், ராஜராஜசோழன் சாதிவெறியன் கொலைகாரன் என்று கத்திக்கொண்டே இருந்தார்கள்.

இன்றைக்கு அவர்கள் எல்லாம் வாயைப்பொத்திவிட்டார்கள். தமிழக முதல்வருக்கு நன்றி.

ஆர். சிவசண்முகபாண்டியன்

முந்தைய கட்டுரைதத்துவம், மதம் – கடிதம்
அடுத்த கட்டுரைவைக்கம் முகமது பஷீர்